T.R. Vivek

என்னுடைய சிந்தனையின் போக்கிலேயே மாற்றம் உண்டாக்குகின்ற அளவுக்கு ஆளுமை கொண்ட நண்பர் ட்டி.ஆர். விவேக்.  ஆங்கிலப் பத்திரிகையாளர்.  என் கட்டுரைகள் ஆங்கிலத்தில் வெளியாவதற்கு முழுமுதல் காரண கர்த்தா இவர்தான்.  நேரில் பார்த்துப் பேசியதில்லை.  பொதுவாக ஆங்கிலத்தில் எழுதும், ஆங்கிலத்தில் இயங்கும் பல தமிழர்கள் என்னையும் என்னுடைய எழுத்தையும் மிகக் கேவலமாகவும் கீழ்த்தரமாகவும் எழுதுவதைப் பார்க்கும் போது இவர்களுக்கு நம் மீது என்ன கோபம் என்று நான் நினைப்பதுண்டு.  அவர்களுடைய எழுத்தில் என் மீதான அருவருப்பு மட்டுமே அதில் தெரியும்.  ஆங்கில இலக்கிய உலகில் என் ’முகத்திரை’யைக் கிழிக்க வேண்டும் என்ற ஆவேசத்தில் எழுதுவார்கள் அவர்கள்.  ஆனால் எனக்கோ முகத்திரையே கிடையாது.  நீங்கள் ஒரு மனிதனை என்னவெல்லாம் சொல்லித் திட்ட முடியுமோ அதையெல்லாம் நானே என்னுடைய அடையாளமாகச் சொல்லிக் கொள்பவன்.  சாரு ஒரு கோழை என்று நீங்கள் திட்டினால் ஐயோ என்னைப் போன்ற ஒரு கோழையை யாருமே பார்க்க முடியாது என்பேன்.  ஏதோ ஏட்டிக்குப் போட்டியாக அல்ல; பத்து ஆண்டுகளுக்கு முன்பே அதைப் பற்றி எழுதி எந்தெந்த சந்தர்ப்பங்களில் நான் கோழைத்தனமாக நடந்து கொண்டே என்று பட்டியலே இட்டிருப்பேன்.  திருடன், நயவஞ்சகன், பொய்யன் என்று நீங்கள் என்னை எப்படித் திட்டினாலும் அதை நானே முன்பே எழுதியிருப்பேன்.  திட்டுவதற்கு நீங்கள் வார்த்தை கண்டு பிடித்தால்தான் உண்டு.  இத்தகைய சூழலில் என் எழுத்தின் மீது பேரன்பு கொண்டு, என்னை ஆங்கில இலக்கிய உலகில் சேர்த்தே தீருவேன் என்று பிடிவாதம் கொண்டுள்ள விவேக்குக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்?  இதற்கெல்லாம் கைம்மாறு செய்ய முடியுமா என்ன?

பெரிய வேடிக்கை என்னவென்றால், ட்டி.ஆர். விவேக் எனக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் நீண்ட கடிதம் ஒன்று எழுதியிருக்கிறார்.  எனக்கு வரும் ஒவ்வொரு கடிதத்துக்கும் பதில் எழுதிவிடும் பழக்கமுடைய நான் அவருடைய கடிதத்தை எடுத்து வைத்து விட்டேன்.  பதிலே எழுதவில்லை என்று பின்பு நான்கு ஆண்டுகள் கழித்து அவரே சொன்ன பிறகுதான் தெரிந்தது.  விரிவாக எழுதலாம் என்று எடுத்து வைத்து விட்டேன் போலிருக்கிறது.

விவேக்கின் மற்றொரு சிறப்பான அம்சம் என்னவென்றால், அவருடைய செயல்பாடுகளின் அச்சாணியாக இருப்பது அறம்.  அறம் என்ற வார்த்தையின் சத்தம் இப்போதெல்லாம் அதிகமாகவே கேட்கிறது.  அறம் என்றால் அப்படி என்னதான் அர்த்தம்?  மனசாட்சி என்ன சொல்கிறதோ, அதைப் பின்பற்றுவதே அறம்.  ஆறு வயதுச் சிறுமியின் கழுத்தில் கிடக்கும் சங்கிலியைத் திருடு என்று மனசாட்சி சொன்னால் என்ன செய்வது என்று கேட்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.  மனசாட்சியை விற்று சமரசம் செய்து கொள்ளாமல் வாழ்வதே அறம்.  இன்னும் புரியும்படி சொன்னால், இன்றைய தினம் உறங்கும் போது எந்தத் தப்புக் காரியமும் செய்யவில்லை என்ற நிம்மதி ஏற்பட்டால் நாம் அறத்தின் வழி வாழ்கிறோம் என்று பொருள். அந்தணன் என்போன் அறவோன் என்பது வள்ளுவன் வாக்கு.  அந்தணன் என்றெல்லாம் போக வேண்டாம், அறம் வழுவாமல் வாழ்பவனே மனிதன் என்பதே என் கருத்து.  அப்படிப்பட்ட மனிதர்கள் எழுபது எண்பது ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்தார்கள்.  தி. ஜானகிராமன், தி.ஜ. ரங்கநாதன், சி.சு. செல்லப்பா, க.நா.சு. போன்றவர்கள் அறம் வழுவாது வாழ்ந்த பெரியோர் என்று சொல்லலாம்.  அதிலும் தி.ஜ.ர. ஒரு அற்புதம்.

அப்படிப்பட்ட அறம் பூண்டு வாழ்பவர் என் நண்பர் ட்டி.ஆர். விவேக்.  அவரிடமிருந்து நிறைய கற்கிறேன்.  சமீபத்தில் ஒருநாள் பி.ஜி. வுட்ஹவுஸ் பற்றி நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.  வுட்ஹவுஸ் இதுவரை நான் படித்ததில்லை.  உடனடியாகப் படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.  அதேபோல் மற்றொரு நாள்  Tom Wolfe பற்றி ஒரு மணி நேரம்.  டாம் வுல்ஃப் நியூ ஜர்னலிஸம் அமெரிக்காவில் அறுபது எழுபதுகளில் தோன்றிய ஒரு புதிய வகை எழுத்து.  நார்மன் மெய்லர் எல்லாம் இந்தப் பிரிவின் கீழ்தான் வருவார்கள்.  என்னுடைய நான் – லீனியர் சிறுகதைகளில் டாம் வுல்ஃபின் பாதிப்பை நீங்கள் காணலாம்.

விவேக் அடிக்கடி தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களைச் சொல்வார்.  எல்லாம் ஒரு மகத்தான நாவலின் அத்தியாயங்களாகத் தோன்றும்.  விவேக்குக்குக் காஃபி பிடிக்காது.  காஃபி என்றால் அலர்ஜி.  ஏன் என்று கேட்டால், அது ஒரு அட்டகாசமான நாவல்.  ஆனால் எல்லா லட்சியவாதிகளிடமும் உள்ள தன்னடக்கம் விவேக்கிடம் சற்று அதிகமாகவே உண்டு.  நானெல்லாம் என்னங்க நாவல் எழுதுறது என்று இழுப்பார்.  எனக்கும் அவர் சொல்வதைக் கேட்டு எழுதி பிளேஜியரிஸம் பண்ண மனசு இல்லை.  எழுதச் சொல்லி முடுக்கிக் கொண்டிருக்கிறேன்.  ஆங்கிலத்தில்தான் எழுதுவார்.  விவேக்கின் மற்றொரு விசேஷம், இந்தியாவில் தருண் தேஜ்பால் அளவுக்கு ஆங்கிலம் எழுதும் புனைகதை எழுத்தாளர் இல்லை என்றே சொல்லலாம்.  அவர் அனுப்பும் குறுஞ்செய்திகளைக் கூட டிக்‌ஷனரி வைத்துத்தான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.  வேண்டுமென்றே எழுதுவதில்லை.  அவருடைய ஸ்டைல் அப்படி.  விவேக் தருணை விட அழகாக ஆங்கிலம் எழுதக் கூடியவர்.  ஏன் ’தருணை விட’ என்று சொல்கிறேன் என்றால், விவேக்கின் ஆங்கிலத்தில் அழகும் கனமும் கூடவே ஒரு எளிமையும் உண்டு.  என்னுடைய துரதிர்ஷ்டம், விவேக் படு பிஸியான ஆள்.  அதனால் என்னுடைய எக்ஸைல் நாவலை அவரால் மொழிபெயர்க்க முடியாமல் போய் விட்டது.  அவர் மட்டும் மொழிபெயர்த்திருந்தால் செவ்வாய் கிரகத்தில் போய் குடியேறியிருப்பேன்.

விவேக் இப்போது http://newsable.asianetnews.tv/ என்ற செய்திப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்து வருகிறார்.  அதில்தான் அவ்வப்போது பத்தி எழுதி வருகிறேன்.  அதில் எழுதினால் ஒரு ஆச்சரியம் நிகழ்கிறது.  பணம் கொடுத்து விடுகிறார்கள்.  மேலும், வட இந்தியாவிலும் படிப்பதாக அங்குள்ள நண்பர்கள் சொன்னார்கள்.

இன்னொரு கிசுகிசு சமாச்சாரம்.  விவேக்குக்கு தருண் தேஜ்பாலை அறவே பிடிக்காது.

http://newsable.asianetnews.tv/