ஸோரோ – 4

முடிந்தால் துக்க வீட்டுக்கு நேரில் செல்லுங்கள்.  அது பெரும் ஆறுதலாகவும் உதவியாகவும் இருக்கும்.  ஸோரோவின் உடலோடு தோட்டத்தில் ஒரு மணி நேரம் தனிமையில் அமர்ந்திருந்தேன்.  உறங்கிக் கொண்டிருந்த அவந்திகாவை எழுப்பி விஷயத்தைச் சொல்ல எனக்கு மனம் இல்லை.  அதிர்ச்சியாகி விடுவாள்.  ஒரு மணி நேரம் கழித்து மாடியிலிருந்து எழுந்து வந்து பார்த்துத் தெரிந்து கொண்டாள்.  துக்கத்தை அவளால் வெளிப்படுத்தக் கூட முடியவில்லை.  காரணம், என் நிலை அப்படி இருந்தது.

ஸோரோவின் உடலை என்ன செய்வது என்ற பிரச்சினை.  பல இடுகாடுகளில் வீட்டுப் பிராணிகளைப் புதைக்கும் வசதி இருந்தது.  ஆனால் இந்தியா.  வசதிகள் எல்லாம் காகிதத்தில்தான் இருக்கும்.  யாரைத் தொடர்பு கொள்வது? கொடுக்கப்பட்டிருந்த எண்களில் ஒருவரும் தொலைபேசியை எடுக்கவில்லை.  ராம்ஜியை அழைத்து விஷயத்தைச் சொன்னேன்.  அவர் முயற்சி செய்து கொண்டிருந்த போதே அந்திமழை அசோகன் என்னைத் தொடர்பு கொண்டு உடலை அடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்தார்.  அசோகனுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.  பிரபு காளிதாஸ் முகநூலில் பார்த்து நேரில் வந்து விட்டார்.  கையில் பணம் தேவைப்பட்டது.  என்னால் நிச்சயமாக ஏடிஎம் வரை நடந்து போயிருக்க முடியாது.  அவருடைய பைக்கில் போய் எடுத்துக் கொண்டு வந்தேன்.  கடைசி வரை என்னோடு இருந்தார் பிரபு.  ஸ்ரீராமும் முத்துக்குமாரும் பிறகு வந்தார்கள்.

அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.