உலகின் மிகச் சிறந்த காதல் கதைகளில் ஒன்று

இன்று காலை நான்கு மணிக்கு எழுந்த கையோடு அராத்து அனுப்பியிருந்த ஒரு சிறுகதையைப் படித்தேன்.  ஒரு பத்திரிகையில் வெளிவரும் என்று சொல்லியிருந்தார்.  இப்படி ஒரு காதல் கதையை என் இலக்கிய அனுபவத்தில் படித்ததில்லை.  உலகின் மிகச் சிறந்த காதல் கதைகளில் இதுவும் ஒன்று எனத் திண்ணமாகச் சொல்வேன்.

அராத்து எழுத்தாளராகி விட்டார்.  முகநூல் இத்தனை பிரசித்தம் ஆவதற்கு முன்பு – ஏழெட்டு ஆண்டுகள் இருக்கும் – “நீங்கள் எந்தக் காலத்திலும் எழுத முடியாது” என்று அராத்துவிடம் சொன்னேன்.  ஏனென்றால், நாலு பக்கங்களை ஒருசேர தட்டச்சு செய்யும் பொறுமை அவரிடம் கிடையாது.  அவரும் நான் சொன்னதை மறுப்பே இல்லாமல் ஒத்துக் கொண்டார்.  பிறகுதான் முகநூல் வந்தது.  பத்தி பத்தியாகத் தட்டச்சு செய்து, குறுங்கதைகள் வெளியிட்டார்.  பிய்த்துக் கொண்டு போனது.  பொதுவாக நண்பர்கள் எழுதும் எதுவும் எனக்குப் பிடிக்காது.  ஆனால் அராத்துவின் குறுங்கதைகள் பிரமாதமாக இருந்தது.  நான் பாராட்டியதாலேயே இலக்கியவாதிகள் அவரை தீண்டத்தகாதோர் பட்டியலில் வைத்தார்கள்.  தொலைக்காட்சிகளிலேயே கூட அவரைப் பற்றி ‘சமூக ஆர்வலர்’ என்றே குறிப்பிட்டார்கள்.  சந்தோஷமாக இருந்தது.

ஆனால் சமீப காலமாக சிறுகதைகளில் ஒரு பாய்ச்சலை ஏற்படுத்த ஆரம்பித்தார்.  ஜெயமோகன் “நீ உருப்பட மாட்டாய்” என்று ஆசீர்வதித்தார்.  ஆஹா, அதைப் போன்ற ஆசீர்வாதம் வேறு உண்டா?  எனக்குப் பிடித்தால் ஜெயமோகனுக்குப் பிடிக்காமல் இருக்க வேண்டுமே?  ஜெயமோகனுக்குப் பிடித்திருந்தால்தான் பயந்திருப்பேன்.  நல்லவேளை, அப்படி நடக்காமல் கடவுள் காப்பாற்றினார்.

இந்த நிலையில்தான் இன்று அதிகாலையில் படித்த அராத்துவின் சிறுகதை.  காதல் கதை.   உலகின் மிகச் சிறந்த காதல் கதைகளில் ஒன்று இது.  அராத்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால் மிகப் பெரிய அளவில் கொண்டாடப்படுவார்.

அராத்துவிடம் ஒரு வேண்டுகோள்.  புகழ் உரைகள் தலையில் ஏறி விடக் கூடாது.  எந்தக் காலத்திலும் அகங்காரம் கூடாது.  சமுத்திர அலையின் ஒரு துளி நுரையே நாம் அனைவரும்.