பக்வாஸ்

என்னுடைய இரண்டு நண்பர்கள் – கமலுக்கு மிக மிக மிக  நெருக்கமானவர்கள் – கமலை ஒரு ஜீனியஸ் என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.  கமல்ஹாசனை இலக்கியம் படித்தவர் என்றும் பலரும் சொல்லி அறிவேன்.   நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது அவர் பேட்டியைப் படித்துத்தான் பிரக்ஞை என்ற பத்திரிகையையே படிக்க ஆரம்பித்து இலக்கியத்தின் பக்கம் நகர்ந்தேன்.  அப்படிப்பட்டவர் நம்முடைய குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் எல்லாம் ”நான் ஒரு கவிதை எழுதி இருக்கிறேன்” என்று சொல்லி நம்மிடம் காண்பிப்பார்கள் இல்லையா, அந்தத் தரத்தில் அபத்தக் களஞ்சியமாக உளறிக் கொட்டி அதை கவிதை என்று நம்பி கமல் பத்திரிகையாளர்களிடம் கொடுத்து அவையும் கமலின் புகைப்படத்துடன் பிரசுரமாகும். அப்போதெல்லாம் எனக்கு ’இவ்வளவு உயரத்தில் உட்கார்ந்திருப்பவருக்கு உலக இலக்கியம் கற்ற ஒருவருக்கு இப்படிப்பட்ட அசட்டுத்தனமெல்லாம் செய்யத் தோன்றுமா என்று நினைத்து வருத்தப்பட்டிருக்கிறேன்.  இதையெல்லாம் அவரிடம் அசட்டுத்தனம் என்று சொல்லக் கூட அவருக்கு ஒரு நண்பர் இல்லையா என்று ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.  இல்லை.  அவருக்கு யாருமே நண்பர்கள் இல்லை.  அதற்குக் காரணம் அவரே.  யாருமே அவரிடம் எதிர்மறையான கருத்துக்களை தெரிவிக்க முடியாது.  அதை அவர் விரும்பமாட்டார்.  கமலுக்கு எதிர்மறையான கருத்துக்கள் கொண்ட ஒருவர் சாருஹாசன்.  ஆனால் சாருஹாசனிடம் கமல் உரையாட மாட்டார்.  சாருஹாசன் பேசுவதை அவர் கேட்க மாட்டார்.

ஒருமுறை ஒரு கவிஞர் கமல்ஹாசனின் அழைப்பின் பேரில் பார்க்கச் சென்றார்.  கவிஞர் என்னுடைய மிக நெருங்கிய நண்பர்.  இப்போது போல் அவர் அப்போது அத்தனை பிரபலம் அல்ல.  கமலுடன் முதல் சந்திப்பு.  எனக்கு இந்த விஷயம் தெரியாது.  கவிஞரை காலை பதினோரு மணி அளவில் கைபேசியில் தொடர்பு கொண்டேன்.  அணைக்கப்பட்டிருந்தது.  அப்படி அதுவரை அவர் கைபேசி அணைக்கப்பட்டதில்லை.  மாலை நான்கு மணி வரை அணைக்கப்பட்டே இருந்தது.  படு ஆச்சரியத்துடன் அவரைச் சந்திக்க மாலையில் சென்றேன்.  கமலுடன் சந்திப்பு என்றார்.  ஐந்து மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம் என்றார்.  இலக்கணப் பிழை ஆயிற்றே என்றேன்.  என்ன என்றார் கவிஞர்.  பேசிக் கொண்டிருந்தார் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும் என்றேன்.  தலையைச் சிலுப்பிக் கொண்டே ஹாஹா என்று சிரித்தார் கவிஞர்.  ஆமாம், அவர் பேசினார், நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.  ஐந்து மணி நேரம்.  இப்படியே கமல் ஐம்பது மணி நேரம் கூடப் பேசக் கூடியவர்.  காரணம் அவர் தன்னை ஜீனியஸ் என்றும் தான் படித்ததை எல்லோருக்கும் சொல்ல வேண்டும் என்றும் நினைக்கிறார்.

இதைத்தான் ஃபாஸிஸம் என்று கருதுகிறேன்.  ஹிட்லர் மிகச் சிறந்த தேச பக்தர்.  தன் தேசத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தார்.  மோடியும் அப்படித்தான்.  ஒரு சிறிய அளவில் கமலும் அப்படியே.  கமலின் சிந்தனையில் தேசத்துக்கு விரோதமான எந்த எண்ணமும் இல்லை.  ஹிட்லரைப் போலவே.  ஆனால் அந்தக் கருத்துக்கள் அனைத்தும் தேசத்தைப் படுகுழியில் தள்ளக் கூடியவை.  ஏனென்றால், megalomaniacக்குகள் அனைவருமே தேசத்துக்கு நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு தேசத்தைப் படுகுழியில் தள்ளுபவர்களே.  இது போன்ற ஆட்களை விட எடப்பாடியும், பன்னீரும் தேவலாம்.  ஊழல் மட்டும்தான் செய்ய முடியும் அவர்களால்.  ஆனால் கமல் போன்றவர்கள் நல்லது செய்கிறேன் என்று சொல்லிப் படுகுழியில் தள்ளி விடுவார்கள்.  ஹிட்லர் நல்லது செய்கிறேன் என்று நினைத்துத்தானே அத்தனையும் செய்தான்?  மோடியும் பண மதிப்பு நீக்கத்தை நல்ல எண்ணத்தில்தானே செய்தார்?  மூன்று மாதம் 120 கோடி மக்களும் சந்தியில் நிற்கவில்லையா?  ஒரு தேசம் முழுவதையும் மூன்று மாத காலம் பைத்தியக்கார ஆஸ்பத்திரியைப் போல் மாற்றவில்லையா மோடி?  ஆனால் அதற்குப் பிறகும் எல்லோரும் நூறு கோடி இருநூறு கோடி என்று காகிதப் பணமாக வைத்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்?

இதையேதான் கமலும் செய்வார்.  அவரோடு யார் யார் இருக்கிறார்கள் என்று பாருங்கள்.  சிநேகன்.  இந்த ஆள் பிக் பாஸில் தன்னையே பிக் பாஸாக நினைத்துக் கொண்டவர்.  கமலை தெய்வம் என்று சொன்னவர்.  கமலைப் பார்த்ததும் கூழைக் கும்பிடு போட்டு தெய்வத்தைப் பார்த்து விட்டேன் என்று சொல்லி அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தவர்.  எனக்குத்தான் பரிசு கிடைக்கும்; அதில் நான் ஒரு நூலகம் கட்டுவேன் என்று உளறியவர்.  இப்படிப்பட்டவர்தான் கமல்.  இவர்கள் கட்டும் நூலகத்தில் என்ன புத்தகம் இருக்கும்?  வாழ்க்கைக்கு எந்த சம்பந்தமும் இல்லாத புத்தகங்களே அங்கே நிறைந்திருக்கும்.  அங்கே க.நா.சு. இருப்பாரா?  சி.சு. செல்லப்பா இருப்பாரா?  தஞ்சை ப்ரகாஷ், ஆதவன், அசோகமித்திரன் எல்லோரும் இருப்பார்களா?  மூச்.  இவர்கள் யாருமே அங்கே இருக்க மாட்டார்கள்.  திரும்பவும் கலாம்; திரும்பவும் வைரமுத்து; திரும்பவும் திருவள்ளுவர்.  இதுதான் அந்த நூலகம்.

கமலின் முதல் அரசியல் கூட்டத்தில் பாரதி கிருஷ்ணகுமாரைப் பார்த்தீர்களா?  இலக்கியக் கூட்டங்களில் சண்ட மாருதம் பொழிந்தவர்.  இங்கே கமலுக்கு முன்னால் என்னெத்த கண்ணையா மாதிரி ஆகி விட்டாரே?  பாரதி… மீசையை முறுக்கிக் கொண்டு நீ சொர்க்கத்திலிருந்து இந்தக் காட்சிகளையெல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறாயாடா என் தாத்தனே?

படித்தால் செரிக்க வேண்டும்.  ரத்தத்தில் கலக்காமல் அப்படி அப்படியே போய் விட்டது போல.  அல்லது, அந்தப் படிப்பெல்லாம் வெறும் விபரங்களாகவே தங்கி விட்டன.  இன்றைய உலகில் விக்கிபீடியாவை விட ஒரு மேதை இருக்க முடியுமா?  அப்படி ஒரு குட்டி விக்கிபீடியாவாக இருந்துதான் கமல் எல்லோரையும் பிரமிக்க வைத்திருக்கிறார் என்று தோன்றுகிறது.  நேற்றைய கூட்டம் அப்படித்தான் இருந்தது.  டி. ராஜேந்தர் கூட்டம் மாதிரி இருந்தது ஐயா!  வெட்கப்படுகிறேன்.  வெட்கப்படுகிறேன்.  உலக இலக்கியம் படித்தவன் என்ற முறையிலும் இத்தனை ஆண்டுகளாக கமல்ஹாசனை சஹ்ருதயர் என்று நினைத்ததற்காகவும் வெட்கித் தலைகுனிகிறேன்.

கமலை சந்தித்தார் அல்லவா என் நண்பர், கவிஞர், அப்போது காலை பதினோரு மணி.  திரும்பியது நான்கு மணி.  மதியம் சாப்பிட்டீர்களா என்று கேட்டேன்.

ஏன் கேட்டேன் தெரியுமா? எம்ஜியார் பற்றித் தெரியும் என்பதால் கேட்டேன்.  எம்ஜியார் ஒரு மனிதாபிமானி.  தன்னைத் தேடி வந்த யாருமே கை நனைக்காமல் வெளியே போகக் கூடாது என்பதை ஒரு மனிதன் தன் 30 வயதிலிருந்து சாகும் வரை பின்பற்றியிருக்கிறார்.  அதுவும் எப்பேர்ப்பட்ட சாப்பாடு.  மதியமும் இரவும் பிரியாணி.  சைவர்களுக்கு சைவ உணவு.  எம்ஜியாரின் பெயர் அத்தனை பிரபலமாகாத காலகட்டத்தில் – அப்போதுதான் அவர் ஹீரோவாக நடித்த முதல் படம் வந்திருந்தது – காரில் வந்து கொண்டிருந்த போது கடும் மழை.  சைக்கிள் ரிக்‌ஷாக்காரர்கள் கொட்டும் மழையில் நனைந்து கொண்டே செல்வதைப் பார்க்கிறார்.  மறுநாளே 5000 ரெயின் கோட்டுகளை வாங்கி சென்னையில் உள்ள அத்தனை ரிக்‌ஷாக்காரர்களிடமும் கொடுத்தார்.  இது கட்டுக்கதை அல்ல. செய்தி.

இந்தக் காலத்து ஹீரோக்கள் சோறு கூடப் போட மாட்டார்கள்.  இதை நான் சொல்லவில்லை.  உங்கள் தெருவில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களிடம் கேட்டுப் பாருங்கள்.  சொல்வார்கள்.  அதனால்தான் கவிஞரிடம் கேட்டேன், மதிய உணவு உண்டீர்களா?

கவிஞர் சங்கடத்துடன் நெளிந்தார்.  பேச்சைத் தவிர்க்கப் பார்த்தார்.  நான் விடவில்லை.  நீங்களும் மதிய உணவு உண்ணாமலேயா காலை பதினோரு மணியிலிருந்து மாலை நான்கு மணி வரை பேசிக் கொண்டிருந்தீர்கள் என்று திரும்பவும் கேட்டேன்.

கவிஞர்:  ஹீ, ஹீ, சாப்பிட்றீங்களான்னு கேட்டார்.

நான்:  ஹ்ம்ம், அப்புறம்?

கவிஞர்:  ஹீஹீ, நான் சாப்பிட்டுட்டேன்னு சொன்னேன்.

நான்: ஹ்ம்ம், அப்புறம்?

கவிஞர்:  அப்புறம் அவ்ளோதான்.

நான்:  அட என்னங்க நீங்க, தெளிவாச் சொல்லுங்க.  கமலும் பதினோரு மணியிலிருந்து நாலு மணி வரை சாப்பிடாமலே பேசிக்கிட்டிருந்தாரா?

கவிஞர்:  இல்லல்ல.  அவரு சாப்பிட்டாரு.

ஒருத்தர் கூச்சத்தின் காரணமாக சாப்பிட்டு விட்டேன் என்று சொன்னால் ஓகே சொல்லி விட்டு நாம் பாட்டுக்கு நம் வயிற்றை ரொப்புவதா?  ஒரு காமன்சென்ஸ் வேண்டாமா?  ஒருத்தரைப் பார்க்க வைத்துக் கொண்டா மதிய உணவை உண்பது?  அதிலும் காலை பதினோரு மணிக்கு வந்தவருக்கு – அதிலும் நீங்கள் அழைத்து வந்த ஒரு நண்பருக்கு – உணவு அளிப்பது உங்கள் கடமை இல்லையா?

ஒருத்தருக்கு மதிய உணவு கொடுப்பதால் கமல் ஒன்றும் ஏழையாகி விட மாட்டார்.  பக்கத்தில் உள்ள சாம்கோ உணவகத்தில் ஒரு மதிய உணவு ரூ. 200 தான்.  அது அல்ல விஷயம்.  கமலிடம் அடுத்தவரைப் பற்றிய சிந்தனையே இல்லை.  இப்படி ஒரு சிறிய விஷயத்தை – மிக மிகச் சிறிய விஷயத்தைப் புரிந்து கொள்ள முடியாதவரால் சமூகத்தை எப்படி புரிந்து கொள்ள முடியும் என்பதே என் அடிப்படைக் கேள்வி.

ஒருமுறை ஞானக்கூத்தன் பற்றிய ஒரு ஆவணப்படம் பார்த்தேன்.  படு மொக்கையான படு கேவலமான படம் அது.  ஞானக்கூத்தனுக்குப் பெருமை சேர்ப்பதாக நினைத்துக் கொண்டு ஒரு சின்ன பையன் எடுத்த அசட்டுத்தனமான படம்.  எடுத்தவருக்கு அனுபவம் இல்லை.  பாவம்.  மன்னித்து விட்டேன்.  ஆனால் அந்தப் படத்தில் மன்னிக்க முடியாத குற்றம் என்னவென்றால், ஞானக்கூத்தனைப் பற்றிப் பேசும் கமல் – அந்தப் படத்தில் – தன்னை ஞானக்கூத்தன் எப்படியெல்லாம் புகழ்ந்தார் என்பது பற்றியே 10 நிமிடம் பேசினார்.  (படமே ஒரு மணி நேரம்தான்).  கமல் கவிதை எழுதி ஞானக்கூத்தனிடம் கொடுத்தாராம்.  அதை ஞானக்கூத்தன் அருமையான கவிதை என்று பாராட்டினாராம்.  இது என்னய்யா கொடுமை?  நீங்கள் இத்தனை பெரிய ஆள்.  உலக நாயகர்.  திருவல்லிக்கேணி சந்து ஒன்றில் யாருக்கும் தெரியாதவராக வாழ்ந்து கொண்டிருந்த ஒரு கவிஞனை அழைத்து வந்து உங்களுடைய உலகப் படத்தில் பாட்டு எழுத வைத்திருக்கிறீர்கள்.  அவர் மனிதாபிமானி.  உங்கள் கவிதை பற்றி என்ன சொல்வார் என்று நினைக்கிறீர்கள்?  அசட்டுத்தனமாக இருக்கிறது என்று அவர் சொல்லியிருந்தால் அவர் முகத்தில் நீங்கள் முழித்திருப்பீர்களா மிஸ்டர் கமல்ஹாசன்?  தயவுசெய்து சொல்லுங்கள்.

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விஷயம்.  கமலின் படம் ஒன்று வெளியாகி இருந்தது.  ஒரு மட்டமான படம்.  அதைப் பற்றி ஒரு நடிகர் “ஐயோ, கொடுமையான படம்; உட்காரவே முடியவில்லை” என்று என்னிடம் சொன்னார்.  நான் அப்போதெல்லாம் வெகுளி.  அதை அப்படியே அந்த நடிகரின் பெயர் போட்டு எழுதி விட்wடேன்.  அந்த நடிகரை என்னிடம் அறிமுகப்படுத்திய இயக்குனரிடம் “Who is that bastard charu nivedita.  Ask him to remove that post.   நேரில் பார்த்தால் அந்த நாயை உதைக்காமல் விட மாட்டேன்” என்று என்னென்னவோ திட்டியிருக்கிறார்.  இயக்குனர் சொன்னார்.  உடனே அதை நீக்கி விட்டேன்.   நடிகர் சொன்னதை எழுதக் கூடாது என்று எனக்கு அப்போது தெரியவில்லை.  அதற்காக இத்தனை மட்டமான வசையையா வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.  அதிலிருந்து சினிமாக்காரர்கள் சொல்லும் எதையும் எழுதுவதில்லை.  ஆனால் விஷயம் என்னவென்றால், நடிகர் அதோடு வேறு ஒன்றையும் சொன்னாராம்.  கமலிடம் யாரும் அவர் படத்தை விமர்சிக்க முடியாது.  அப்படி விமர்சித்தால் அவர் தன் ஜென்ம விரோதி என்று நினைப்பார்.  என்னை அப்படி நினைத்து விட்டார்.  அதற்கு இந்த சாரு நிவேதிதா என்ற கபோதிப்பயல் தான் காரணம் என்று சொன்னாராம்.

கமலை யாரும் விமர்சிக்கக் கூடாது.  கமலின் படங்களையும்.  நான் தசாவதாரம் படத்தை விமர்சித்து எழுதினேன்.  பல கமல் ரசிகர்கள் (சாதா ஆட்கள் அல்ல; இயக்குனர்கள்) என் விமர்சனத்தை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியரை அழைத்துக் கண்டபடி திட்டினார்கள்.  என்னையும் சேர்த்தே.  பிறகு கமலும் அழைத்தார்.  பத்திரிகை ஆசிரியரை.

உங்களை அரை மணி நேரம் திட்டினார் என்றார் ஆசிரியர்.

என்ன திட்டினார், புரிந்த வரை சொல்லுங்கள் என்றேன்.

அது எப்படி, கமலைப் பற்றி அச்சு அசலாகச் சொல்கிறீர்கள் என்று கேட்டு விட்டு, ஒன்னுமே புரியல, ஆனா கடைசில சொன்ன ஒரே ஒரு வார்த்தை மட்டும் புரிந்தது என்றார்.

என்ன அந்த ஒரு வார்த்தை என்றேன் சிரித்தபடி.

சாரு கெட்டவர்.

இது கமல் என்னைப் பற்றிச் சொன்னது.  இதை இப்போது எழுதும் போது கூட சிரிப்பு வருகிறது எனக்கு.  அடக் கடவுளே, உங்கள் மீது மிகுந்த மதிப்பு கொண்டு, நீங்கள் இயக்கிய படத்தை அத்தனை சீரியஸாக விமர்சித்திருக்கிறேன், அதற்கு நன்றி சொல்லாமல் என்னைக் கெட்டவர் என்கிறீரே என்று சிரித்தேன்.  பரிதாபமும் கொண்டேன்.  அந்தப் படம் பற்றி நான் நினைத்ததையெல்லாம் அவர் அருகில் இருப்பவர்களும் நினைத்திருப்பார்கள்.  ஆனால் சொன்னால் அவர்களும் கெட்டவர்கள் ஆகி விடுவார்களே!

தனி மனிதனாக இருந்தால் இதையெல்லாம் நாம் ரசிக்கக் கூட செய்யலாம்.  ஆனால் அரசியலுக்கு வந்து நமக்கு முதல்வராகவும் ஆகப் போகிறாரே, அவர் இப்படி இருந்தால் அது ஃபாஸிஸத்தில் அல்லவா கொண்டு போய் சேர்க்கும்?

நேற்றைய கூட்டம் எனக்கு டி.ராஜேந்திரின் நட்சத்திர இரவு விழா போல் இருந்தது.  சே. அதில் கூட பல பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்திருக்கும். கமல் பேச்சு மரண மொக்கை.  கேஜ்ரிவால் ஒரு படி மேலே போனார்.  உங்கள் தெரு சுத்தமாக இருக்க வேண்டுமா. உங்கள் தெருவில் விளக்கு ஒழுங்காக எரிய வேண்டுமா?  கமலுக்கு ஓட்டுப் போடுங்கள்.

என் பக்கத்தில் அமர்ந்திருந்த அதிமுக அம்மாள் ஒருவர் என்னைப் பார்த்து, இதுக்கு ஒரு கவுன்சிலர் போதுமே சார் என்றார்.

இப்படி நக்கல் பண்ணும் அளவுக்கு இருந்தது கமலின் அரசியல் கூட்டம்.  திமுகவைத் துவக்கி அண்ணாதுரை பேசிய உரையை நினைத்துப் பார்க்கிறேன்.  மகாத்மாவின் அத்தனை பேச்சுக்களையும் நினைத்துப் பார்க்கிறேன்.  ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பேச்சுக்களை நினைத்துப் பார்க்கிறேன்.  பேசாமலேயே காரியங்களைச் செய்த ராஜாஜியையும் காமராஜரையும் நினைத்துப் பார்க்கிறேன்.  நம் தலையெழுத்து.  இந்த ஹீரோ நடிகர் வந்து யாரும் வசனம் எழுதிக் கொடுக்காமல் தானே வசனம் எழுதி வாய்க்கு வந்ததை உளறுவதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.

ஒரு ரசிகர் கேட்கிறார்.  இத்தனை நாள் எங்கே இருந்தீர்கள் கமல்?

(அதாவது, ஜெயலலிதா உயிரோடு இருந்த போதும், கருணாநிதி செயல்பட்டுக் கொண்டிருந்த போதும் என்ன செய்து கொண்டிருந்தீர் என்பது கேள்வி!)

அதற்கு இந்த superbrat சொன்ன பதில் என்ன தெரியுமா?

இதுவரை உங்கள் உள்ளத்தில் இருந்தேன்.  இப்போது உங்கள் இல்லத்தில் இருக்கிறேன்.

ஹேய், ஹேய், இது எல்லாம் ரொம்ப ஓவர் என்று என் மனம் கூக்குரல் இட்டது.

கமல் ஏன் அரசியலுக்குத் தகுதியற்றவர் என்பதற்கு என் காரணங்கள்:

அவருக்கு எதார்த்தம் தெரியாது.  அதனால்தான் நம் எல்லோரையும் கிராமங்களுக்குப் போகச் சொன்னார்.  கிராமத்துக்குப் போய் நக்குவதா?  கிராமத்தில் என்ன இருக்கிறது?  நகரத்தில் இருப்பது போன்ற கல்விக்கூடங்கள் உள்ளனவா?  அமெரிக்க ஆங்கிலம் பேசும் கமலின் இரண்டு பெண்களும் சேலத்துக்கு அருகில் உள்ள ஆட்டையாம்பட்டி கிராமத்திலா படித்தார்கள்?  அங்கே படித்திருந்தால் இப்படி இருக்க முடியுமா?  ஐயா, கமல்ஹாசனாரே, இந்தியாவில் கிராமம் வேறு, நகரம் வேறு.  உதாரணமாக, திமுக ஆட்சியில் வரலாறு காணாத மின்வெட்டு இருந்த போது சென்னையில் ரெண்டு மணி நேரம் மின்வெட்டு, சேலத்தில் ஆறு மணி நேர வெட்டு; சேலத்துக்கு அருகில் உள்ள ஆட்டையாம்பட்டியில் 16 மணி நேர வெட்டு.  இதுதான் கிராமம்.  நம்மவர் நம்மை கிராமத்துக்குப் போ என்கிறார்.

கொசுறு:  கமல் படத்துக்கு மேலே குறிப்பிட்ட கவிஞர் ஒரு பாடல் எழுதினார்.  காசு கொடுத்தாரா என்றேன்.   என்னங்க, எப்போ பார்த்தாலும் கமலை விமர்சிச்சிக்கிட்டே இருக்கீங்க என்றார் கவிஞர்.  கொடுத்தாரா இல்லையா?  இல்லை.

ஏன் இல்லை என்றால், கமல் படத்தில் பாட்டு எழுதுவதற்கு நீங்கள்தான் கமலுக்குக் காசு கொடுக்க வேண்டும்!  பின்னே?  அது எப்பேர்ப்பட்ட விஷயம்.  கமல் படத்துக்குப் பாட்டு எழுதுவதென்றால் சும்மாவா?  இதுவே எம்ஜியார் படத்துக்கு அந்தக் கவிஞர் முதல் பாட்டு எழுதியிருந்தார் என்றால் இன்றைய நிலையில் ஒரு லட்சத்தை வீட்டுக்கு அனுப்பி வைத்து இருப்பார்.  ஒரு பாட்டுக்கு ஒரு லட்சமா?  இல்லை.  அது எப்படி நடக்கும் என்றால், கவிஞரைப் பற்றித் தன் நண்பர்களிடம் விசாரிப்பார்.  அவர்கள் கவிஞரின் ’இடம்’ பற்றிச் சொல்லியிருப்பார்கள்.   ஆக, அந்த ஒரு லட்சம் அவர் எழுதிய பாடலுக்கு அல்ல; அவர் இதுகாறும் செய்து வந்த இலக்கியப் பணிகளுக்காக.

நேற்றைய கூட்டத்தைப் பற்றி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், ஹிந்தியில் நல்ல வார்த்தை இருக்கிறது.  பக்வாஸ்.  (bakwas)  தமிழில் பேத்தல்.