இன்று காலை பெருமாள் சொன்ன விஷயம் சுவாரசியமாக இருந்ததால் இதையும் நாவலில் சேர்க்கலாம் என்று பார்க்கிறேன். எனக்கு சுவாரசியம், உங்களுக்கு அசுவாரசியமாகவும் இருக்கலாம். கடந்து விடுங்கள்.
பெருமாளுக்கு அன்பு என்றால் பிடிக்காது. ஏனென்றால், அவன் மீது அன்பு செலுத்துபவர்களால்தான் அவன் மன உளைச்சல் அடைகிறான். பெரிய உதாரணம், வைதேகி. அவள் அவன் மீது கொண்டிருக்கும் அளப்பரிய அன்பினால்தானே அவனைக் குடிக்கக் கூடாது என்றும், கொக்கரக்கோவுடன் சேராதே என்றும் வம்பு பண்ணுகிறாள்? அப்படி பெருமாள் மீது அன்பு கொண்டவனாக இருந்தான் விஷால் என்ற நண்பன். வயது இருபத்தைந்து. நல்ல படிப்பாளி. அவன் இருந்தது பெருமாளுக்கு பெரிய பலம். ஒரு கட்டத்தில் அவன் நட்பைத் துண்டித்து விட்டான் பெருமாள். விஷாலிடம் கேட்டால் ”நான்தான் துண்டித்தேன், பெருமாள் துண்டிக்கவில்லை” என்பான். எல்லாமே உண்மைதான். அவரவர் பார்வைக்குத் தகுந்தாற்போல் தோற்றம் தரும் மாயம் கொண்டது உண்மை.
பெருமாள் கடந்த முப்பது ஆண்டுகளாக வைதேகிக்கு தினமும் இரண்டு மாதுளம்பழம் உரித்துக் கொடுக்கிறான். இது என்ன சாதாரண விஷயம் என்று நினைக்கிறீர்களா? மாதுளை தீர்ந்து விட்டால் உடனடியாக வாங்க வேண்டும். தீர்ந்து விட்டதா, இன்னும் இருக்கிறதா என்ற விஷயம் உங்கள் மூளைப் பதிவில் இருந்துகொண்டே இருக்க வேண்டும். ஒருநாள் நீங்கள் மாதுளை வாங்க மறந்து போனீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள், மறுநாள் வைதேகி சொல்வாள், இன்று காலை சிறுநீருக்குப் பதிலாக ரத்தம் வந்தது பெருமாள்.
ஐயோ, என்னம்மா இது?
அது ஒன்றுமில்லை. நேற்று நீ மாதுளை உரித்துக் கொடுக்கவில்லை அல்லவா, அதனால்தான்.
போச்சுடா. வருடம் 365 நாளும் உரித்துக் கொடுத்தாலும் ஒரே ஒரு நாள் மறந்து போனீர்கள் என்றால், மரணக்குழிதான். அதனாலேயே பெருமாள் சென்னையில் இருக்கும் நாட்களிலெல்லாம் தவறாமல் மாதுளையை உரித்து வைத்து விடுவான். (ஆனால் பெருமாள் வெளிநாடு போனால் திரும்பி வர ஒரு மாதமோ இருபது நாளோ ஆகும், அத்தனைக் காலமும் வைதேகி மாதுளையைத் தொட்டிருக்கவே மாட்டாள். உரித்துச் சாப்பிட சோம்பேறித்தனம்.) மாதுளையை உரித்து உரித்து பெருமாளின் பத்து நகக்கணுக்களும் சாக்கடையில் ஊறும் பெருச்சாளியின் தோலைப் போல் ஆகிக் கிடக்கின்றன. அவன் உடம்பில் உள்ள அத்தனை உறுப்புகளும் – பிருஷ்டம் உட்பட – பிறந்த குழந்தையின் கன்னங்களைப் போல், பஞ்சுக் கால்களைப் போல் இருந்தாலும் விரல் நுனிகள் மட்டும் சாக்கடைப் பெருச்சாளியின் தோல் மாதிரிதான் ஆகி விட்டது. அதை விடுங்கள். (புத்தக விழாவில் அவனைச் சந்திக்க நேர்ந்தால் கை விரல்களைக் காண்பிக்கச் சொல்லிப் பாருங்கள். பெருமையுடன் காண்பிப்பான்.)
மாதுளை பெருமாளுக்கும் பிடித்த பழம்தான். ஆனால் ஒருநாள் கூட சாப்பிட்டதில்லை. யார் உரித்துக் கொடுப்பது? நீங்கள் சுலபமாகச் சொல்லி விடுவீர்கள், நீயே உரித்துச் சாப்பிடேன் என்று. சொல்வது சுலபம். அது அது அந்தந்த இடத்தில் இருந்து பார்த்தால்தான் தெரியும்.
மது அருந்தும் போது செல்வா எல்லா பழங்களையும் உரித்து வைப்பார். அதில் மாதுளையும் இருக்கும். அப்போது அவன் சாப்பிட மாட்டான். அப்போது அவனுக்கு வைன் அருந்துவதில்தான் கவனம். வேறு எதிலும் நாட்டம் காணாது. அப்படிப்பட்ட வாழ்க்கையில் பெருமாளுக்கு மாதுளை உரித்துக் கொடுத்த ஒரே ஆத்மா விஷால்தான். வைதேகி தன் பேரனை கவனித்துக் கொள்ள மூன்று மாதம் மும்பை சென்றிருந்தபோதுதான் அந்த வரலாற்றுச் சம்பவம் நடந்தது. விஷாலும் சென்னைதான் என்பதால் அலுவலகம் முடிந்ததும் பெருமாள் வீட்டுக்கு வந்து விடுவான். அப்படியே பேச்சுவாக்கில் மாதுளையும் உரித்துக்கொடுப்பான்.
அதில் ஆச்சரியம் என்னவென்றால், உரித்து வைத்த மாதுளையில் ஒரு சுளையைக் கூட அவன் எடுத்துக்கொள்ள மாட்டான். எவ்வளவு வற்புறுத்தினாலும் எடுக்க மாட்டான். நீங்க சாப்பிடுங்க பெருமாள். நீங்க சாப்பிடுங்க பெருமாள்.
அப்படிப்பட்டவனைத்தான் தன் வாழ்விலிருந்து துண்டித்தான் பெருமாள். காரணம்? அன்பு.
பெருமாள் மீது அவன் கொண்டிருந்த அன்பினால் அவன் அடிக்கடி சொல்வது, வைதேகியை விவாகரத்து செய்து விடுங்கள்.
அவனைப் புரிந்து கொள்ள முடிகிறது. பெருமாள் பப்பு, ஸோரோ என்ற இரண்டு நாய்களை வளர்த்த போது – அவன் வளர்க்கவில்லை, வழக்கம்போல் அவன் மகனும் வைதேகியும் அவன் தலையில் கட்டிய குழந்தைகள் அவைகள் – அவனுடைய பல தோழிகள் பப்புவும், ஸோரோவும் சீக்கிரம் சாக வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள். ஒருத்தி அவைகளை நேரில் பார்த்தால் கொன்றே போடுவேன் என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.
காரணம், பெருமாளின் நேரத்தை அந்த இரண்டு செல்லங்களும் சாப்பிட்டுக்கொண்டிருந்தன. இதற்கு மேல் எழுத மாட்டேன். பெருமாளின் மற்ற நாவல்களை வாசியுங்கள், அதில் இருக்கும்.
இன்னொன்றும் சொன்னான் விஷால். இந்தப் பூனைகளையெல்லாம் கொண்டு போய் மெரீனா பீச்சில் விட்டு விடுங்கள். ஒன்றும் செத்து விடாது. அங்கே இருக்கும் மீன் கடைகளில் அவைகளுக்கு நிறைய மீன் கிடைக்கும். சொல்லப் போனால் இங்கே இருப்பதை விட அங்கே அவை நன்றாகத்தான் இருக்கும்.
சரி, நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் இருப்பவர். ஆனாலும் தப்பிதமாக முதல் பிரசவத்திலேயே நான்கு குழந்தைகள் பிறந்து விட்டன. உடனே நாலையும் கொன்று விடுவீர்களா? அல்லது, பீச்சில் கொண்டுபோய் போடுவீர்களா? பூனைகளும் அப்படித்தானே?
நாம் எடுத்துக்கொண்ட பொறுப்புக்காக நம் உடல், பொருள், ஆவி, தன்மானம் எல்லாவற்றையும் இழக்கத் தயாராக இருக்க வேண்டும் அல்லவா?
பூனைகளை பெருமாள் வளர்க்கவில்லை. வைதேகியால் அவன் முதுகில் போடப்பட்ட சிலுவை. ஆனாலும் சுமந்துதானே தீர வேண்டும்?
பெருமாளுக்கு மிக நன்றாக ஞாபகம் இருக்கிறது. கல்யாணம் ஆன புதிதில் ”நாம் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளலாமே அம்மு?” என்றான் பெருமாள்.
வேண்டாம்ப்பா, நீ ஒரு எழுத்தாளன். உன் நேரமெல்லாம் குழந்தைக்குச் செலவாகும். ஸ்கூலில் சேர்ப்பதற்கு வேறு நாய் படாத பாடு பட வேண்டும். பணம் வேறு எக்கச்சக்கமாக செலவாகும். உன் நேரத்தையும் பணத்தையும் எழுத்துக்காகவே செலவு செய்.
வார்த்தை பிசகாமல் ஞாபகம் இருக்கிறது பெருமாளுக்கு.
அப்படி இருந்தவள்தான் இன்று இருபத்திரண்டு பூனைகளுக்காக அவன் தெருவில் நின்று யாசகம் பெற்று வளர்க்கும் சூழலை ஏற்படுத்தியிருக்கிறாள்.
இது விஷயமாக கொக்கரக்கோவும் கடுங்கோபத்தில்தான் இருக்கிறான். கொக்கரக்கோவை அதிர்ச்சி கொள்ளச் செய்தது ஒரு குறிப்பிட்ட சம்பவம்.
பெருமாளுக்கு அடிக்கடி தோன்றும், இந்த எழுபது வயதில் இத்தனை பூனைகளுக்காக தெருத்தெருவாகப் பிச்சை எடுத்து வாழும் வாழ்க்கை நமக்குத் தேவையா? பிறந்ததிலிருந்து இருபத்தைந்து வயது வரை பேரரசன் வாழ்க்கை. அதற்குப் பிறகும் முப்பத்தைந்து வயது வரை அதே பேரரசன் வாழ்க்கைதான். வைதேகியுடன் வாழ ஆரம்பித்த பிறகும் பப்பு, ஸோரோ வரும் வரை நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அதற்குப் பிறகுதான் பிச்சைப் படலம். இப்போது இருபத்திரண்டு பூனைகளுக்கு உணவு கொடுக்க வேண்டிய கட்டாயம். மகாபெரிய ஞானியான தியாகராஜரே தன்னுடைய முதிய வயதில் எத்தனைக் காலத்துக்கு நான் உப்பு புளி மிளகாயைப் பிச்சை எடுத்து வாழ்வது என்று சலித்துப் போய் பாடுகிறார். தஞ்சாவூர் மஹாராஜா பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்தும் அதைத் தன் இடக்கையால் மறுத்துத் தள்ளி விட்டு, உஞ்ச விருத்தி செய்து வாழ்வதே தன் தர்மமெனக் கொண்ட தியாகராஜருக்கே ஒரு கட்டத்தில் சலிப்பு வந்து விட்டதென்றால், பெருமாள் எம்மாத்திரம்?
ஒரு நெருங்கிய நண்பர் அவனிடம் “ஏதாவது உதவி வேண்டுமானால் கேளுங்கள்” என்றார். பொதுவாக தனிப்பட்ட முறையில் பெருமாள் யாரிடமும் பொருளுதவி கேட்கும் வழக்கமில்லை. ஆனால் நண்பர் இப்படிக் கேட்டு விட்டதால் அவன் தன் தேவையைச் சொன்னான். ”பூனை உணவுக்கு மாதாமாதம் எக்கச்சக்கமாக செலவாகிறது. உங்களால் முடிந்த அளவு அதில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். சிரமம் என்றால் இதைப் பொருட்படுத்த வேண்டாம்.”
வாய்ஸ் மெஸேஜாக அனுப்பியிருந்தான். அந்தச் சமயத்தில் வைதேகி ஒரு பணிப்பெண்ணின் மகன் படிப்புக்காக 45000 ரூ. கட்டணம் கட்டியிருந்தாள். “ங்கோத்தா, நான் இங்கே பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறேன். நீ ஊருக்கு தர்மம் செய்து கொண்டிருக்கிறாயா?” நினைத்துக்கொண்டான். சொல்ல முடியாது. சொன்னால் பிரளயம் உண்டாகும். பிரளயத்தில் பாதிக்கப்படப் போவது பெருமாள்தான். வைதேகிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நாயின் மேல் கல்லெறிந்து விட்டு, நாய் குரைக்கும்போது அமைதியாக இருந்து விடுவாள் வைதேகி.
“பணம் பணமென்று பணப் பிசாசாகவே மாறி விட்டாய் பெருமாள். பழைய பெருமாள் இல்லை இப்போது.”
இந்தக் கல்லடி போதாதா? எட்டூருக்குக் கேட்பது போல் கத்த ஆரம்பிப்பான் பெருமாள். வைதேகியிடமிருந்து எந்த சப்தமும் வராது.
45000 ரூபாயையும் வைதேகியே பணிப்பெண்ணின் மகன் படிக்கும் பள்ளிக்குப் போய்தான் கட்டி விட்டு வந்தாள்.
கட்டி முடித்த அந்த மாதமே வேலையை விட்டு நின்று விட்டாள் பணிப்பெண்.
“என்னம்மா இது, இப்போதுதானே நாப்பத்தஞ்சாயிரம் ரூபாய் கட்டினேன்? இப்படி வேலையை விட்டு நின்றால் என்ன அர்த்தம்?”
“என்ன ஆண்ட்டி செய்வது? சூழ்நிலை அப்படி. வேலைக்குப் போகாதேங்கிறார் வீட்டுக்காரர்.”
“நீ செய்வது நியாயமா அம்மா?”
“நீங்க ஃபீஸ் கட்டினது உங்களுக்குத்தானே ஆண்ட்டி நல்லது? உங்களுக்குத்தானே புண்ணியம் சேரும்?”
அடி செருப்பால என்று நினைத்துக்கொண்டான் இந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த பெருமாள்.
அந்தச் சமயத்தில்தான் பெருமாள் தன் நண்பருக்கு அனுப்பிய வாய்ஸ் மெஸேஜை அப்படியே வைதேகிக்கு அனுப்பி வைத்தான்.
அந்த வாய்ஸ் மெஸேஜைக் கேட்டுக் கொலை வெறியாகி விட்டாள் வைதேகி.
அது எப்படி நீ எனக்கு அதை அனுப்பலாம்?
”நான் இங்கே இப்படி ஊம்பிக்கொண்டிருக்கிறேன், நீ கர்ண வள்ளல் வேலை செய்கிறாயா? அதனால்தான் அனுப்பினேன்.” சொல்லவில்லை. நினைத்துக்கொண்டான்.
அதோடு நிறுத்தியிருந்தால் இந்தச் சம்பவத்தை எழுதியிருக்க மாட்டேன். பெருமாளிடம் வைதேகி மேலும் சொன்னாள்.
“ஆமாம், நீ இப்படி மூணு தங்கச் சங்கிலிகளைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு பணம் கேட்டால் எவன் கொடுப்பான்? சங்கிலியை அவிழ்த்துப் போட்டு விட்டு கேள், கொடுப்பார்கள்.”
அந்தக் கணத்தில்தான் பெருமாள் தன்னுடைய முப்பதாண்டு குடும்பத்தேர் வாழ்வில் முதல் முதலாக வைதேகியை வெறுத்தான். ”ஏன்டி, எழுபது வயதில் உன்னுடைய பூனைகளுக்காக நான் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறேன். உன் பையன் மரீன் எஞ்ஜினியர். மாதம் பத்து லட்சம் சம்பாதிக்கிறான். அவன் வேலைக்குப் போய் இந்தப் பதினைந்து வருடங்களில் எனக்கு ஒரு பைசா தந்தது இல்லை. நீ எனக்கு எப்படிப் பிச்சை எடுக்க வேண்டும் என்று கற்றுத் தருகிறாயா?”
நினைத்துக்கொண்டான். சொல்லவில்லை. வைதேகியின் இந்த வசனத்தைக் கேட்டுத்தான் கொக்கரக்கோவும் கொலைவெறி ஆனான்.
மறுநாள் வைதேகிக்கு ஜுரம். ஒரு வாரம் படுக்கையிலேயே கிடந்தாள். ஏன் மனக்கிலேசம் அடைந்தோம் என்று வருத்தப்பட்டான் பெருமாள். அவன் அவளைப் பற்றி ஜுவாலை கொள்ளும்போதெல்லாம் அவளுக்கு உடம்புக்கு வந்து விடுகிறது. இனிமேல் நீர்மை பயில வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.
சென்னையைப் பொருத்தவரை இங்கே உள்ள உழைக்கும் வர்க்கம் லூயிஸ் புனுவலின் விரிதியானா படத்தில் வரும் விளிம்புநிலை மனிதர்கள் மாதிரிதான். ஒரு வித்தியாசமும் இல்லை. ஒரு உதாரணம் சொல்கிறேன். பெருமாளும் வைதேகியும் அடையாறுக்குக் குடிபெயர்ந்த பிறகு நடந்தது.
இந்த அடுக்குமாடிக் கட்டிடத்தில் ஒன்பது குடும்பங்கள். காவலுக்கு ஒரு செக்யூரிட்டி. நேபாளி. டோக்ரா என்று பெயர். டோக்ரா தன் குடும்பத்தோடு கீழ்த்தளத்தில் வசிக்கிறார். குடும்பம் என்றால், அவர் மனைவி, முப்பது வயது மகன், மகனின் மனைவி, இரண்டு பேரப் பிள்ளைகள். இந்த ஆறு பேரில் டோக்ரா மட்டும்தான் ஊதியக்காரர். மற்ற அனைவரும் ஓசியில் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
ஏன் ஓசி என்கிறேன் என்றால், பெருமாள் வீட்டில் பெருமாள்தான் இன்னமும் பாத்திரம் தேய்க்கிறான்.
ஆஹா, பாத்திரம் தேய்க்கும் கதை குறுக்கிட்டு விட்டதா? சரி, அதை முடித்து விட்டுத்தான் மற்ற கதைகளுக்குப் போக முடியும்.
மேற்கத்திய நாடுகளிலேயே புழங்கிக்கொண்டிருக்கும் பெருமாளின் நண்பர் ஒருவர் பெருமாள் இப்படி அடிக்கடி தான் பாத்திரம் தேய்ப்பது பற்றிப் புலம்புவது குறித்து ஒரு விஷயம் சொன்னார். “நீங்கள் சொல்வது மேற்கத்தியர்களுக்கு வேடிக்கையாக இருக்கும். ஏனென்றால், அங்கேயெல்லாம் பாத்திரம் தேய்ப்பதற்கு பணியாளர்கள் வைப்பதில்லை. அவரவர்களேதான் அந்தக் காரியங்களை செய்கிறார்கள். ஏன், பில் கேட்ஸ், எலான் மஸ்க் போன்றவர்கள் கூட அவர்களேதான் பாத்திரம் தேய்க்கிறார்கள். அதனால் நீங்கள் சொல்லும் துயரக் கதை அவர்களுக்குப் புரியவே புரியாது.”
எலான் மஸ்குக்கெல்லாம் பாத்திரம் தேய்ப்பது ஒரு பொழுதுபோக்கு. அல்லது, அது தியானம் செய்வது போல. ஆனால் பெருமாள் பாத்திரம் தேய்ப்பது விறகு வெட்டுவது போல, கல் உடைப்பது போல. ஒரு நண்பர் பெருமாளிடம் சொன்னார், சமூகம் உங்களை – ஒரு கலைஞனை – விறகு வெட்ட வைத்திருக்கிறது என்று. சமூகம் மட்டுமல்ல, வைதேகியும் சேர்ந்துதான் அவனை விறகு வெட்ட வைத்திருக்கிறார்கள். வேண்டுமென்றே செய்யவில்லை. அவளுக்கு எல்லாமே படு சுத்தமாக இருக்க வேண்டும். அவளிடம் வரும் பணிப்பெண்கள் யாருமே அப்படிச் செய்வதில்லை. வைதேகி செய்யும் கெடுபிடிகளைப் பார்த்து துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி விடுகிறார்கள். இட்லி தட்டைக் கழுவிக் கொடுப்பார்கள், இட்லி போடும்போது பார்த்தால் தட்டில் பழைய இட்லித் துணுக்குகள் ஒட்டிக் கொண்டிருக்கும். அதுவும் காய்ந்து போன நிலையில் இருப்பதால் சிமெண்ட் மாதிரி தட்டோடு பிடித்துக்கொண்டிருக்கும். திரும்பவும் தேய்க்கச் சொல்லிக் கொடுப்பான் பெருமாள். இட்லி வெந்து விட்டதா என்று ஸ்பூனால் குத்திப் பார்ப்பான் இல்லையா, அந்த ஸ்பூனின் காம்புப் பகுதியில் இட்லி அப்படியே காய்ந்து கிடக்கும். குழம்பு வைக்க மண் சட்டிதான் உபயோகப்படுத்துவது. அந்த சட்டியில் குழம்பு ஒட்டிக்கொண்டிருக்கும். கரண்டியிலும் அப்படித்தான். சோறோ குழம்போ ஒட்டிக்கொண்டிருக்கும். வீட்டைப் பெருக்கித் துடைப்பதும் அந்த லட்சணத்தில்தான். இத்தனைக்கும் மற்ற வீடுகளில் கொடுக்கும் சம்பளத்தை விட இரண்டு மடங்கு சம்பளம். ம்ஹும். மூன்று மடங்கு, நான்கு மடங்கு கொடுத்தாலும் இப்படித்தான் வேலை செய்வார்கள். ஒரே மாதத்தில் அனுப்பி விடுவாள்.
ஆமாம், உங்கள் வீடுகளில் கால்மிதியை எப்படி சுத்தப்படுத்துவீர்கள்? வீட்டில் உள்ள ஐந்து கால்மிதிகளையும் வெந்நீரில் ஊறப்பட்டு பிரஷ் பண்ணித் துவைக்கிறாள் வைதேகி. கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் ஆயிற்று. ஆள் ஆடிப்போய் விட்டாள். பெருமாளாக இருந்தால் செத்தே போயிருப்பான். பல பணிப்பெண்கள் இந்தக் கால்மிதி துவைக்கும் காரியத்தைக் கண்டே ஓடி விட்டார்கள்.
பெருமாள் சொல்வதைக் கேட்டு எனக்கு ஒன்றும் புரியவில்லை. சரி, ஒரு கள ஆய்வு செய்யலாம் என்று ஆனந்தியைக் கேட்டேன். எங்கள் வீட்டில் பணிப்பெண்தான் துவைக்கிறாள் என்றாள். ஏன், வாஷிங் மெஷினில் போட முடியாதா என்று கேட்டேன். அதில் போட்டால் மெஷின் கெட்டு விடும் என்றாள். பிறகு செல்வாவைக் கேட்டேன். அவரோ வாஷிங் மெஷினில் போடுகிறோம் என்றார். ஆனந்தி சொன்ன விவரத்தைச் சொன்னேன். இல்லை, அதற்கென்று மெஷினிலேயே ஒரு mode உள்ளது என்றார். அப்படியானால் அது ஆனந்திக்குத் தெரிந்திருக்குமே, அவள் மெஷின் கெட்டு விடும் என்கிறாளே என்றேன். இருங்கள், வீட்டில் கேட்டுச் சொல்கிறேன் என்று கேட்டுச் சொன்னார். கேட்ட விவரம் என்னவென்றால், மெஷினில் போட்டால் மெஷின் கெட்டுவிடும் என்பது உண்மைதான். கம்பெனிக்காரர்களே அடிக்கடி நேரில் வந்து கால்மிதியை மெஷினில் போட வேண்டாம் என்றுதான் சொல்கிறார்களாம். அதனால் செல்வா வீட்டில் பாதி நாள் மெஷினிலும் பாதி நாள் கையிலுமாகத் துவைக்கிறார்களாம். துவைப்பது பணிப்பெண்தான். கால்மிதி துவைப்பதற்கு மட்டும் தனிக்காசு.
சரி, இதெல்லாம் வேலைக்காகாது என்று கொக்கரக்கோவை அழைத்துக் கேட்டேன். அவன் அசகாய சூரன். ஒரு மாதம் பயன்படுத்தி விட்டு தூக்கியெறிந்து விடுவானாம். அதிலும் பலவிதமான கால்மிதிகள் உள்ளனவாம். சில கால்மிதிகளை உதறிப் போட்டால் போதுமாம்.
இது என்னடா புதுக்கணக்கு என்றேன்.
இதோ பார், ஒரு கால்மிதி விலை இருபது ரூபாயிலிருந்து இருநூறு ரூபாய் வரை கிடைக்கிறது. ஆக, ஐந்து கால்மிதி ஒன்று முப்பது ரூபாய் என்று வாங்கினால் 150 ரூ. 75000 ரூ. மாத வாடகை கொடுக்கும் வீடுகளில் மாதம் 150 ரூபாய் கால்மிதிக்கு செலவு செய்ய முடியாதா? நூற்றி ஐம்பதுக்கு வாங்கி உபயோகித்து விட்டு ஒரு மாதம் முடிந்ததும் தூக்கிப் போட்டு விட வேண்டியதுதானே? செய்ய மாட்டார்கள். கால்மிதியைத் துவைத்துத் துவைத்துத்தான் பயன்படுத்துகிறார்கள். எப்பேர்ப்பட்ட மூடர்கள்! கால்மிதியைத் துவைப்பதற்கான சோப்பு செலவு, அதைத் துவைப்பதற்கு ஆகும் உழைப்பும் நேரமும் என்று எத்தனை விரயம் தெரியுமா? உயர் நடுத்தர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு கீழ் மத்தியதர வர்க்கத்தின் மனோபாவம்…
சரிதான், கொக்கரக்கோ அவன் போடும் ஜட்டியையே ஒருமுறை போட்டு விட்டுத் தூக்கி எறிந்து விடுகிறான். முப்பது நாட்களுக்கு முப்பது ஜட்டி. ஒரு ஜட்டி விலை முப்பது ரூபாய். அதுவும் Sale சமயத்தில் வாங்கினால் இருபத்திரண்டு ரூபாய்தானாம். வக்காளி, என்னமா வாழறாண்டா!
விஷயம் என்ன தெரியுமா? புத்திசாலித்தனம்தான். ஒரு காலகட்டத்தில் பெருமாள் தன் குழந்தைக்காக கிணற்றிலிருந்து வாளி மூலம் தண்ணீர் சேந்தி – மேலே சகடை கூட இல்லை என்பதால் வாளியை கீழேயிருந்து மேல்நோக்கி இழுக்க வேண்டும், அப்போது அவன் வயது முப்பதுதான் என்றாலுமே அவனுக்கு அது தாங்க முடியாத வேதனை – குழந்தையின் மலத்துணி இருபது முப்பது உருப்படிகளைத் துவைத்துக் காயப்போடுவான். பிறந்த குழந்தை என்பதால் எல்லாமே கழிசலாக இருக்கும். இதை நான் ஒரு பத்தியில் எழுதி விட்டேன். இதன் கொடுமை எப்படியிருக்கும் என்று நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். அதே காலகட்டத்தில் அவன் சேர்ந்து வாழ்ந்த பெண்ணின் தூரத்துணியையும் துவைத்துப் போடுவான். ஏனென்றால், அவளுக்கு தூரமாகும் போது ஜுரமும் சேர்ந்து வரும். ஜுரத்தோடு தண்ணீரில் நின்றால் ஜன்னி வந்து விடும் என்று அவன்தான் தூரத்துணி துவைத்துப் போடுவான்.
இதெல்லாம் கொடூரமான வாதைதான். ஆனால் பெருமாளின் மடத்தனம்தானே இந்தக் கொடூரத்துக்குக் காரணம்? பீத்துணிக்கு டயாபர் இருக்கிறது; தூரத்துணிக்கு சானிடரி நாப்கின் இருக்கிறது. ஆனால் வாசகர்களே, நான் இப்போது எழுதுவதை நீங்கள் நம்ப வேண்டும். நம்பியே ஆக வேண்டும். அந்த இரண்டு வேலைகளையும் செய்து கொண்டிருந்த காலகட்டத்தில் பெருமாளுக்கு டயாபர் பற்றியும் தெரியாது, சானிடரி நாப்கின் பற்றியும் தெரியாது. அவன் அப்படித்தான். விட்ஜென்ஸ்டைனின் மொழி, தர்க்கம் பற்றிய கோட்பாடுகள் பற்றி மணிக்கணக்கில் பேசுவான். ஆனால் டயாபர் என்ற ஒன்று இருக்கிறது, சானிடரி நாப்கின் என்ற ஒன்று இருக்கிறது என்று அவனுக்குத் தெரியாது. மட்டுமல்லாமல் இதெல்லாம் நடந்தது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு.
ஆகக் கடைசியில் பாத்திரம் தேய்க்கும் வேலை பெருமாளிடமே வந்து சேர்ந்தது. ஹலோ மேற்கத்தியப் பெருமான்களே, ஒரு ஆள் தன் வீட்டுப் பாத்திரத்தைத் தேய்த்துக் கொள்வதில் என்ன பிரச்சினை என்றுதானே கேட்கிறீர்கள்? உங்களால் அதைப் புரிந்து கொள்ளவே முடியாது.
ஆஸ்கார் வைல்ட் இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார். அப்போது அவருக்கு விதிக்கப்பட்ட பணி காற்றாலையைச் சுற்றுவது. அந்த வேலை கிட்டத்தட்ட செக்கிழுப்பதைப் போன்றது. சிறையிலிருந்து வெளியே வந்து இரண்டே ஆண்டுகளில் செத்து விட்டார். அப்போது வயது அவருக்கு நாற்பத்தாறு. சினிமா ஹீரோவைப் போல் இருந்த அவரை பிரிட்டிஷ் சிறைவாசம் உருக்குலைத்துப் போட்டு விட்டது. இதே காற்றாலையை பில் கேட்ஸோ எலான் மஸ்க்கோ ஜாலிக்காக சுற்றுகிறார்கள் என்றால் அதையும் இதையும் ஒப்பிட முடியுமா?
கிட்டத்தட்ட நூற்றைம்பது பாத்திரங்கள். அதில் மண் சட்டிகள் வேறு. மண் சட்டியைப் பற்றுப் போக தேய்ப்பதற்குள் பெருமாளுக்கு நாக்கில் நுரை தள்ளி விடும். தேய்த்து முடிப்பதற்கு ஒன்று அல்லது ஒன்றரை மணி ஆகும். சமயங்களில் களைப்பு மிகுதியால் முழங்கால்கள் துவண்டு சரிந்து விழுந்திருக்கிறான்.
ஐயா, மேற்கத்தியப் பெருமான்களே, இங்கே இந்தியாவில் எழுபது வயது வரை உயிரோடு இருப்பதே பெரிய சாகசம். பெருமாள் எழுபதைத் தாண்டிக்கொண்டிருக்கிறான். இங்கெல்லாம் ஐம்பத்தைந்திலேயே பொசுக் பொசுக்கென்று ஹார்ட் அட்டாக் வந்து மேலே கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள். எழுபது வரை உயிரோடு இருக்கும் அதிர்ஷ்டசாலிகள் உயிரைக் குஞ்சில் பிடித்துக்கொண்டு நடைப்பிணம் போல் உலவிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஒன்றரை மணி நேரம் பாத்திரம் தேய்ப்பது உங்களுக்கு சாதாரண காரியம் போல் தோன்றினால் நான் என்ன செய்யட்டும்?
மேற்கத்திய வாழ்க்கையும் இந்திய வாழ்க்கையும் ஒன்றா, சொல்லுங்கள்? அங்கே வாழ்நாள் பூராவும் ஆரோக்கியமான உணவும் திரவமும் கிடைக்கின்றன. இங்கே அப்படியா? உணவாகக் கிடைக்கின்ற எல்லாமே விஷம். திரவமோ கொடுவிஷம். திருப்பதி லட்டிலேயே மாட்டுக் கொழுப்பு கலப்படம் என்கிற போது சாமான்யனின் உணவெல்லாம் எம்மாத்திரம்? தொண்ணூறு வயதில் நீங்கள் சுருட்டு குடித்துக்கொண்டு பியரும் கையுமாக அலைகிறீர்கள். இங்கே அதையெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது.
மட்டுமல்லாமல் இங்கே எதற்கெடுத்தாலும் சூத்தடிதான். ஒருசில சம்பவங்களைச் சொல்கிறேன்.
பெருமாளுக்கு Prada Foundationஇலிருந்து ஒரு புத்தகப் பார்சல் வந்தது. அதில் பெருமாளின் ஒரு சிறுகதையும் இடம் பெற்றிருக்கிறது. ஆயிரம் பக்க புத்தகம். 117 யூரோ விலை. தொகுப்பில் சல்மான் ருஷ்டி போன்ற பிரபலங்களின் கதையும் உண்டு. பெருமாள் கண்ணாயிரம் பெருமாள் என்ற பெயரில் எழுதுவதால் முகவரியில் கண்ணாயிரம் பெருமாள் என்று குறிக்கப்பட்டிருக்கிறது. பார்சல் கஸ்டம்ஸ் துறைக்குப் போனது. ஏன் போனது என்று தெரியவில்லை. உள்ளே என்ன தங்கமா இருக்கிறது? கஸ்டம்ஸில் பெருமாளின் ஆதார் கார்ட் கேட்கிறார்கள் என்று ஃபெடக்ஸ் நிறுவனம் தகவல் அனுப்பியது. பெருமாள் ஆதார் கார்டை அனுப்பினான். ஆனால் அதிலோ பெருமாளுக்கு அவன் நைனா வைத்த அறிவழகன் என்ற பெயர் இருந்த்தால் அது செல்லாது என்று சொல்லி விட்டார்கள். இதெல்லாம் இத்தனை சுலபமாக நடக்கவில்லை. ஃபெடக்ஸிலிருந்து பெருமாளுக்கு சுமார் இருநூறு தொலைபேசி அழைப்புகள் வந்தன.
வணக்கம். நான் ஃபெடக்ஸிலிருந்து பேசுகிறேன். கண்ணாயிரம் பெருமாளோடுதானே நான் பேசிக்கொண்டிருக்கிறேன்?
ஆமாம்.
உங்களுக்கு இத்தாலியிலிருந்து ஒரு பார்சல் வந்திருக்கிறது. அதன் எண், 123456789101112131415. சரிதானே?
ஆமாம்.
அந்த பார்சலில் கண்ணாயிரம் பெருமாள் என்று இருக்கிறது. ஆனால் நீங்கள் அனுப்பிய ஆதார் கார்டில் வேறு பெயர் இருக்கிறது. காரணம் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?
இரண்டுமே நான்தான். நான் ஒரு எழுத்தாளன். கண்ணாயிரம் பெருமாள் என்ற பெயரில் எழுதுகிறேன். அறிவழகன் என்பது என் நைனா வைத்த பெயர். அந்தப் பெயரில்தான் ஆதார் கார்ட் எடுக்கப்பட்டிருக்கிறது.
சரி, நல்லது. கண்ணாயிரம் பெருமாள் என்பதற்கு ஒரு ஆதாரம் காட்டி விடுங்கள் போதும். அரசுச் சான்றிதழ் இருந்தால் நலம்.
கண்ணாயிரம் பெருமாள் என்பது நான்தான் என்பதற்கு அரசுச் சான்றிதழ் எதுவும் இல்லை. நான் எழுதியுள்ள நூற்று முப்பது புத்தகங்கள்தான் சாட்சி. வேண்டுமானால் புத்தகத்தின் அட்டையை அனுப்புகிறேன்.
ஸாரி, அது செல்லாது. வேறு ஆதாரம் தாருங்கள். அரசுச் சான்றிதழாக இருந்தால் வேலை சுலபமாக முடிந்து விடும்.
அது எனக்கு சாத்தியமில்லை. ஏனென்றால், கண்ணாயிரம் பெருமாள் என்ற பெயருக்கு என்னிடம் அரசுச் சான்றிதழ் இல்லை.
அப்படியானால் ஒன்று செய்யுங்கள். நீங்கள்தான் அறிவழகன் என்பதை விளக்கி டெபுடி கமிஷனர் கஸ்டம்ஸுக்கு ஒரு கடிதம் அனுப்புங்கள்.
சரி.
கொஞ்சம் சுருக்கமாக எழுதி விட்டேன். இந்த உரையாடல் சுமார் பதினைந்து நிமிடங்கள் நடக்கும்.
இந்த உரையாடல் நடந்து ஒரு அரை மணி நேரத்தில் இதேபோன்ற இன்னொரு அழைப்பு. திரும்பவும் இதே உரையாடல்.
அது முடிந்து ஒரு அரை மணி நேரத்தில் இதே போன்ற இன்னொரு அழைப்பு. திரும்பவும் இதே உரையாடல்.
இப்படியே அரை மணி நேரத்துக்கு ஒரு அழைப்பு.
அதற்குள் ஒரு ஐம்பது மின்னஞ்சல் வந்திருக்கும். இதே விஷயம்தான்.
மண்டையிடி தாங்க முடியாமல் விஷயத்தை விளக்கி டெபுடி கமிஷனர் கஸ்டம்ஸுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினான் பெருமாள்.
அது முடிந்து ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் தொலைபேசி அழைப்பு.
வணக்கம். நான் ஃபெடக்ஸிலிருந்து பேசுகிறேன். கண்ணாயிரம் பெருமாளோடுதானே நான் பேசிக்கொண்டிருக்கிறேன்?
ஆமாம்.
உங்களுக்கு இத்தாலியிலிருந்து ஒரு பார்சல் வந்திருக்கிறது. அதன் எண், 123456789101112131415. சரிதானே?
ஆமாம்.
அந்த பார்சலில் கண்ணாயிரம் பெருமாள் என்று இருக்கிறது. ஆனால் நீங்கள் அனுப்பிய ஆதார் கார்டில் வேறு பெயர் இருக்கிறது. காரணம் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?
இதோ பாருங்கள் மேடம். இதோடு இப்படி எனக்கு ஐம்பது தொலைபேசி அழைப்புகள் வந்து விட்டன. நானும் கஸ்டம்ஸ் அதிகாரிக்கு எழுதி விட்டேன். என்னை ஆளை விடுங்கள்.
ஓ, எழுதி விட்டீர்களா, சரி.
அரை மணி நேரம் கழித்து மீண்டும் தொலைபேசி அழைப்பு.
வணக்கம். நான் ஃபெடக்ஸிலிருந்து பேசுகிறேன். கண்ணாயிரம் பெருமாளோடுதானே நான் பேசிக்கொண்டிருக்கிறேன்?
ஆமாம்.
உங்களுக்கு இத்தாலியிலிருந்து ஒரு பார்சல் வந்திருக்கிறது. அதன் எண், 123456789101112131415. சரிதானே?
இதோ பாருங்கள் மேடம். நேரடியாக விஷயத்துக்கு வருவோம். உங்கள் நேரமும் மிச்சமாகும். என் நேரமும் மிச்சமாகும். நான் டெபுடி கமிஷனர் கஸ்டம்ஸுக்கு என் பெயர் மாற்றம் பற்றி எழுதி விட்டேன்.
யெஸ் சார். அங்கேதான் பிரச்சினை. நீங்கள் வெறுமனே விளக்கக் கடிதம்தான் எழுதியிருக்கிறீர்கள். அது செல்லாது. எங்கள் போர்ட்டலுக்குள் வந்து அதில் எழுத வேண்டும்.
அது எப்படி என்று சொல்வீர்களா?
கால் மணி அவகாசத்தில் அந்த விஷயம் பெருமாளுக்கு படிப்படியாக விளக்கப்படுகிறது. அவனும் அவர்கள் சொன்னபடி அவர்களின் போர்ட்டலில் எழுதி அனுப்புகிறான்.
அரை மணி நேரத்தில் திரும்பவும் அழைப்பு.
வணக்கம். நான் ஃபெடக்ஸிலிருந்து பேசுகிறேன். கண்ணாயிரம் பெருமாளோடுதானே நான் பேசிக்கொண்டிருக்கிறேன்?
ஆமாம்.
உங்களுக்கு இத்தாலியிலிருந்து ஒரு பார்சல் வந்திருக்கிறது. அதன் எண், 123456789101112131415. சரிதானே?
ஹலோ, ஹலோ. நிறுத்துங்கள். நான் ஃபெடக்ஸ் நிறுவனம் சொன்னபடி உங்கள் போர்ட்டலிலேயே கஸ்டம்ஸ் அதிகாரிக்குக் கடிதம் எழுதி விட்டேன்.
அது விளக்கக் கடிதம்தான். ஆனால் அது மட்டும் போதாது. ஒரு வெள்ளைக் காகிதத்தில் நாங்கள் சொல்லியிருக்கும் வடிவத்தில் இன்னொரு கடிதம் எழுத வேண்டும்.
எங்கே உங்கள் வடிவம்?
அனுப்பியிருக்கிறோம். உங்கள் மின்னஞ்சலைப் பாருங்கள்.
பார்த்தான். இருந்தது. அதில் உள்ளபடி எழுதி அவர்களின் போர்ட்டலில் சொருகப் பார்த்தால் அது போகவில்லை. அளவைச் சிறிதாக்க வெண்டும். பிறகு கொக்கரக்கோவைப் பிடித்தான் பெருமாள். டீம்வியூவரில் வந்து ஒரு மணி நேரம் போராடிய பிறகுதான் ஃபெடக்ஸ் போர்ட்டலில் அந்தக் கடிதத்தைச் சொருக முடிந்தது.
அதற்குப் பிறகும் ஒரு நூறு தொலைபேசி அழைப்பு வந்திருக்கும். எல்லாம் மேலே சொன்ன மாதிரி உரையாடல்தான்.
இதுவரை மொத்தம் நூற்றைம்பது தொலைபேசி அழைப்புகள். இருநூறு மின்னஞ்சல்கள். ஒவ்வொரு மின்னஞ்சலிலும் இன்னொரு விஷயமும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒவ்வொரு நாளுக்கும் இத்தனை ரூபாய் தாமதக் கட்டணம் கட்ட வேண்டும். புத்தக விலையே பத்தாயிரம் ரூபாய். அநேகமாக தாமதக் கட்டணம் ரெண்டு மூணு ஆயிரம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறான் பெருமாள். (இந்த நாவல் அச்சுக்குப் போவதற்குள் விஷயம் தெரிந்து விடும். இதுவரை பார்சல் வரவில்லை.)
பெருமாளுக்குப் பைத்தியம் பிடிக்காதது பெரிய ஆச்சரியம்.
இது இப்படியா? இன்னொரு கதையைக் கேளுங்கள்.
பெருமாள், வைதேகி மற்றும் பூனைப் பட்டாளம் எல்லாம் அடையாறுக்குக் குடி பெயர்ந்ததா? அகர்வால் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் என்ற நிறுவனம்தான் வீட்டுச் சாமான்களை சாந்தோமிலிருந்து அடையாறுக்குக் கொண்டு வந்தது. வீடு மாற்றிய கதையை விளக்கமாக பிறகு சொல்கிறேன். இப்போது அகர்வால் கதை மட்டும். மும்பையிலிருந்து சென்னைக்கு மோகன் குடும்பம் குடி பெயர்ந்த போது அகர்வால் மூலம்தான் வந்தார்கள். அகர்வால் நிறுவனம் மிகவும் திறமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சாந்தோமிலிருந்து அடையாறுக்கு சாமான்கள் வந்து சேர்ந்தன. மொத்தம் நாற்பத்தைந்து காகிதப் பெட்டிகள். புத்தகங்களே இருபத்தைந்து டப்பாக்கள்.
எல்லாம் பிரித்து அடுக்கியாயிற்று. ஒரு பொருள் தொலையவில்லை.
அவ்வளவுதானே?
அவ்வளவுதான்.
ஆனால் இது இந்தியாவாயிற்றே? அத்தனை சுலபமாக முடியுமா?
பெட்டிகளாக இருந்த அட்டைகள் நாற்பத்தைந்தையும் அகர்வால் நிறுவனத்திடம் திருப்பித் தர வேண்டும். ஒரு ஃபோன் அழைப்பில் முடிய வேண்டிய காரியம். திருப்பித் தராவிட்டால் ஒவ்வொரு அட்டைக்கும் இத்தனை ரூபாய் என்று நாம் செலுத்த வேண்டும். ஒரு அட்டை நூறு ரூபாய் என்றாலும் நாலாயிரத்து ஐநூறு இல்லையா?
வைதேகி ஃபோன் போட்டாள். இதோ வருகிறோம் என்றார்கள்.
திரும்பவும் ஃபெடக்ஸ் கதைதான். எப்போது ஃபோன் போட்டாலும் இதோ வருகிறோம்.
மேற்கத்தியப் பெருமான்களே, வைதேகி அகர்வால் நிறுவனத்துக்குக் குறைந்த பட்சம் நூறு ஃபோன் போட்டாள். ஒரு வாரம். இதோ வருகிறோம். இதோ வருகிறோம். இதோ வருகிறோம். ஒரு கட்டத்தில் சகட்டுமேனிக்குத் திட்ட ஆரம்பித்தாள். அப்போதும் இதோ வருகிறோம்.
மும்பை அலுவலகத்துக்குத் தொடர்பு கொண்டு புகார் செய்தாள். பலன் இல்லை.
பத்து நாட்கள் ஆயிற்று. இதோ வருகிறோம். இதோ வருகிறோம்.
கடைசியாக வைதேகி ஒன்று சொன்னாள். இதோ பாருங்கள். இன்று மாலைக்குள் வராவிட்டால் அத்தனை அட்டைகளையும் தூக்கிக் குப்பைத்தொட்டியில் போட்டு, அதை ஃபோட்டோ பிடித்து பத்திரிகையில் போடுவேன்.
மாலையே வந்து விட்டார்கள்.
எப்படி? அது ஒன்றுமில்லை. அட்டைகளில் அகர்வாலின் புகைப்படமும், அகர்வால் நிறுவனத்தின் பெயரும் பெரிதாகக் கொட்டை எழுத்துக்களில் போட்டிருக்கும். அது வெளியே வந்தால் விஷயம் நாறி விடும் அல்லவா, அதுதான் மேஜிக்.
வைதேகி கிட்டத்தட்ட அரைப் பைத்தியம் ஆகி விட்டாள். பிச்சைக்காரக் காசு நாலாயிரத்து ஐநூறு ரூபாய்க்காகவா இப்படி என்றான் பெருமாள். ஆரம்பத்திலேயே தூக்கிக் குப்பையில் போட்டிருக்கலாமே?
அது எப்படி? நூறு ரூபாய் என்பவர்கள் அப்புறம் இருநூறு என்று சொல்லி நம் கழுத்தை அறுத்தால் ஒன்பதாயிரம் அல்லவா அழ வேண்டும் என்றாள் வைதேகி. அதுவும் சரிதான். பணத்தோடு போகாது. வக்கீல் நோட்டீஸ் அது இது என்று தாலியறுப்பான்கள்.
இந்தியாவில் எங்கே திரும்பினாலும் இதே கதைதான்.
பெருமாளின் பர்ஸ் தொலைந்து விட்டது. ஆக்ஸிஸ் வங்கி டெபிட் கார்டுக்காக இதோடு ஏழெட்டு முறை போய் வந்து விட்டான். மூன்று மாதம் ஆகிறது. இன்னும் கொடுக்கவில்லை. ஐசிஐசிஐயில் மூன்று நாளில் கொடுத்து விட்டார்களே என்று பெருமாள் சொன்னபோது, அந்த ஆக்ஸிஸ் வங்கி குமாஸ்தா “உங்கள் செல்வாக்கில் எனக்கு ஐசிஐசிஐயில் ஒரு வேலை போட்டுக் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள் சார்” என்கிறான். விளையாட்டாக அல்ல. சீரியஸான குரலில் சொன்னான்.
இப்படி எல்லாவற்றுக்கும் லோல் பட்டுக்கொண்டிருக்கும் ஒரு தேசத்தில் உடல் ரீதியாகவும் செக்கிழுக்க வேண்டும் என்றால், அதுவும் எழுபது வயதில், அதை உங்களால் புரிந்து கொள்ள முடியாதா மேற்கத்திய பெருமான்களே!
பாத்திரம் தேய்ப்பது மட்டும் அல்ல, எல்லா எடுபிடி வேலையும் பெருமாள்தான். இதற்கெல்லாம் ஒரு பணிப்பெண் கிடையாது. சாந்தோம் வீட்டின் கீழ்த்தளத்தில் ஒரு மூன்று பெண்மணிகள் குடியிருப்பைச் சுத்தம் செய்யும் பணியில் இருக்கிறார்கள். ஆளுக்கு அரை மணி நேரத்தில் ஜோலியை முடித்து விட்டு நாள் பூராவும் வம்பு பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் வந்து பாத்திரம் தேய்த்துக் கொடுத்தால் பத்தாயிரம் ரூபாய் கூட கொடுக்கத் தயாராக இருந்தான் பெருமாள். மற்ற வீடுகளில் பாத்திரம் தேய்க்க இரண்டாயிரம் ரூபாய்தான். வீடும் துடைத்தால் மூவாயிரம். அந்தப் பெண்மணிகளில் ஒருத்தர் கூட பாத்திரம் தேய்க்கத் தயார் இல்லை. இது வரை சரி. ஆனால் பெருமாள் வீடு மாற்றிய போது ஃப்ரிட்ஜை எங்களுக்குக் கொடுங்கள், மேஜையை எங்களுக்குக் கொடுங்கள், நாற்காலியை எங்களுக்குக் கொடுங்கள் என்று பங்கு போட வந்து விட்டார்கள். நகையையும் பட்டுப் புடவையையும்தான் கேட்கவில்லை. அச்சு அசலாக விரிதியானா படம்தான்.
சரி, அடையாறு வந்தார்களா? டோக்ரா என்ற நேப்பாலி காவலர். அவர் வீட்டில் மூன்று தண்டச் சோறு. மனைவி, மகன், மருமகள். இந்த மூவரில் ஒருத்தர் கூட பெருமாள் வீட்டுப் பணிகளுக்கு வரத் தயார் இல்லை. அடையாறில் எங்கு திரும்பினாலும் பணிப்பெண்கள்தான். காரணம், பெருமாள் குடியிருக்கும் காந்தி நகர் மேல்தட்டு மனிதர்கள் வசிக்கும் பகுதி. எல்லாம் தனி வீடுகள்தான். மேல்தட்டு மனிதர்கள் ஒரு வேலை செய்ய மாட்டார்கள். இங்கேயே பக்கத்து வீட்டில் ஐந்து பணிப்பெண்கள். ஒரு பணிப்பெண் சமையல். ஒருத்தர் வீடு துடைத்து பாத்திரம் தேய்க்க. ஒருத்தர் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள. இன்னும் இரண்டு பேர் இன்னும் இரண்டு பணிகளுக்கு.
ஆனால் பெருமாளுக்கு மட்டும் பணிப்பெண் கிடைக்கவில்லை. இன்னமும் அவனேதான் பாத்திரம் தேய்த்துக்கொண்டிருக்கிறான்.
வந்த புதிதில் டோக்ரா வந்து வைதேகியிடம் அழுதார். ஸ்டவ் வேலை செய்யாமல் போய் விட்டது. நாங்கள் ஆறு பேர். சமைப்பதற்கு ஸ்டவ் இல்லை. ஸ்டவ் வாங்கிக் கொடுத்தால் எங்கள் வயிறு நிரம்பும். இல்லாவிட்டால் குழந்தைகளும் பட்டினி கிடக்க வேண்டியிருக்கும்.
உடனே டோக்ராவை கடைக்கு அழைத்துக்கொண்டு போய் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு ஸ்டவ் வாங்கிக் கொடுத்தாள் வைதேகி.
ஆனாலும் பாத்திரம் தேய்க்க ஆள் இல்லாமல் பெருமாள்தான் தேய்த்துக்கொண்டிருக்கிறான்.
அதை விடுங்கள். சாந்தோமிலிருந்து வைதேகி மணி ப்ளாண்டும் இன்ன பிற மூலிகைச் செடிகளும் கொண்டு வந்திருந்தாள். அதற்குத் தண்ணீர் ஊற்றுவது கூட வைதேகிதான். டோக்ரா வீட்டின் நாலு தடியர்களில் ஒருத்தர் கூடத் தண்ணீர் ஊற்றுவதில்லை. வைதேகி ஊற்றும்போது “நான் ஊற்றுகிறேன்” என்று முன்வருவார்கள். வைதேகி தருவதில்லை. ”ஊற்றுவதாக இருந்தால் நான் வருவதற்கு முன்பே ஊற்றியிருக்க வேண்டும்” என்றாள். வந்து இரண்டு வாரம் ஆயிற்று. இன்னமும் வைதேகிதான் தினமும் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்கிறாள்.
இதெல்லாம் பரவாயில்லை.
இரண்டு நாட்களுக்கு முன் டோக்ரா பெருமாளிடம் வந்து “என் செல்ஃபோன் கெட்டுப் போய் விட்டது, புதிது எட்டாயிரம் ஆகும், நீங்கள் தயவுசெய்து கொடுத்தால் நான் மாதாமாதம் ஐநூறு ரூபாய் என்று திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்றார். மேடத்திடம் சொல்கிறேன் என்று தப்பி விட்டான் பெருமாள். மேடத்திடமும் கேட்டாராம். மேடம் பதில் எதுவும் சொல்லவில்லையாம்.
ஒரு விஷயம் கவனித்தான் பெருமாள். சென்னையில் உள்ள தொழிலாளர் வர்க்கத்திடம் பேச்சுக் கொடுக்கக் கூடாது. கொடுத்தால் சூத்தைக் காண்பி, சொருகுகிறேன் என்கிறார்கள்.
பெருமாள் ஜப்பான் போவதற்காக புகைப்படம் எடுக்கப் போனான். புகைப்படக்காரர் அவனைப் பார்த்து விட்டு, “நீங்கள் வித்தியாசமாக இருக்கிறீர்களே சார், என்ன வேலை செய்கிறீர்கள்?” என்றார். பெருமாளும் கிளுகிளுத்துப் போய் எழுத்தாளன் என்றான். பிறகு கொஞ்ச நேரம் இருவரும் உலக நடப்பு பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
புகைப்படத்தை ட்ராவல் ஏஜெண்ட்டிடம் கொடுத்த போது அது சரியான காகிதத்தில் பதிவு செய்யப்படவில்லை என்று ரத்தாகி விட்டது. பிறகு ஏஜெண்டுக்கு மின்னஞ்சல் அனுப்பி அதை அவரே பிரதி எடுத்துக்கொண்டார்.
அன்று மாலை புகைப்படக்காரரிடமிருந்து பெருமாளுக்கு அழைப்பு வந்தது. என் பையனுக்கு ஒரு வேலை வாங்கித் தாருங்கள். இந்த ஒரு வாரத்தில் இதுவரை இருபது ஃபோன் பண்ணி விட்டார். பெருமாள் அவரை ப்ளாக் பண்ணவில்லை. ஃபோனையும் எடுக்கவில்லை.
இன்னொரு நாள். பெருமாளின் நண்பர் ராஜேஷ்வர் பெருமாளின் போக்குவரத்துக்காக ஒருநாள் கார் அனுப்பியிருந்தார். ராஜேஷ்வர் ட்ராவல்ஸ் நடத்துகிறார். அந்த ட்ரைவர் பெருமாளுடன் சிநேகமாகப் பேசினார். பெருமாளும் சிநேகமாகப் பேசினான். பொதுவாக அவன் யாருடனும் எதுவும் பேசுவதில்லை. அதிலும் டிரைவர்களிடம் வாயே திறக்க மாட்டான். அன்று விதிவிலக்காகப் பேசினான்.
அன்று மாலை அந்த டிரைவரிடமிருந்து ஃபோன். என் அண்ணன் பையனுக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுங்கள்.
அப்படிக் கேட்டதில் கூடத் தப்பில்லை. ஆனால் அன்றிலிருந்து தினமும் இரண்டு ஃபோன். பெருமாள் அவரை ப்ளாக் பண்ணவில்லை. ஃபோனை எடுக்காமல் விட்டான்.
இப்படி திரும்பின இடமெல்லாம் சூத்தடி பட்டுக்கொண்டு எழுபது வயதில் பாத்திரம் தேய்க்கிறேன் என்றால் மேற்கத்திய பெருமான்களுக்குப் புரியவில்லை. ஆனால் நீங்கள் எழுதும் கதைகளையெல்லாம் மட்டும் நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும், கொண்டாட வேண்டும், இல்லையா? அந்த காஃப்கா என்னடாவென்றால், அவன் கதாநாயகன் ஒரு பூச்சியாக மாறி விட்டானாம். அவன் தன் அறையை விட்டு வெளியில் வருவதற்கே காஃப்கா பத்து பக்கம் அறு அறு என்று அறுத்துத் தள்ளியிருக்கிறான்.
இந்த உம்பர்த்தோ எக்கோ என்னடாவென்றால், ஒரு தேவாலயத்தின் கதவில் உள்ள ஓவியங்களை பத்து பக்கம் வர்ணிக்கிறான். (நேம் ஆஃப் தெ ரோஸ்).
இந்த ஜப்பானிய ஹாருகி முராகாமி என்னடாவென்றால், ஒரு பெண் டாக்ஸியில் செல்வதையும் டாக்ஸிக்காரன் மேற்கத்திய சங்கீதம் கேட்பதையும் பதினைந்து பக்கம் வர்ணிக்கிறான். ஆனால் இங்கே ஒருத்தன் ஆஸ்கார் வைல்ட் காற்றாலையைச் சுற்றியது போல பாத்திரம் தேய்த்துக்கொண்டிருக்கிறான் என்றால் நக்கல் புண்டை, ம்?
***
நண்பர்களே, இன்று 5000 வார்த்தைகள் எழுதினேன். 3500 வார்த்தைகளை உங்கள் வாசிப்புக்கு வைக்கிறேன். இது பிடித்திருந்தால் சன்மானம் அனுப்புவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
சந்தா மற்றும் நன்கொடை அனுப்புவதற்கான விவரம்:
ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566
பெயர்: ராஜா
***
வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:
வங்கி விவரம்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai
***