சங்கப் புலவர்கள் பிச்சைக்கோப்பைளோடு
மன்னன் அருகே நின்று
சொற்களைக் கோர்த்தனர்
பாரதி
சோற்றுக்காயின் உள்ளே
சூரியனை விதைத்தான்;
அதுவோ பசியில் வெடித்தது.
அவன் இறந்த பின்
அவன் முகம்
எல்லா வீதிகளிலும்
முண்டாசுடன் தொங்கியது
உயிரோடு இருந்தால்
கழுத்தில் கயிறு
செத்த பின்—
அதே கழுத்தில்
மலர்மாலை;
உயிருக்கு செருப்படி,
பிணத்துக்கு மாலை—
இரண்டுக்கும் நடுவில்
என் இனம்
ஒரு சடங்கு போல
கொடூரத்தைக் காபந்து பண்ணுகிறது
மரணம் இங்கே
ஒரு விழா,
உயிர் அவமானம்.
எனக்குக் கசப்பில்லை, நண்பா,
இந்தக் கவிதை
கண்ணீர் அல்ல;
எரியும் நாக்கு.
எதிர்ப்பின் குரல்—
காலத்தின் செவிகளில்
அறையும் பிளிறல்
கொண்டாட வேண்டுமென்றால்
இன்றே வா—
இன்னும் சூடாகவே இருக்கும்
என் உடலைத் தழுவு.
உன்னிடம் என் உயிரினும்
மேலானதோர் விஷயம் சொன்னேன்
உன்னிடமிருந்து பதில்—
ஒரு நீண்ட மௌனம்;
அது
என் உயிரின் மீது விழுந்த
கல்லடி.
பின் ஏன்
உயிர் பிரிந்த பின்
என் உடலை
சின்னமாக்க வேண்டும்?
மன்னிப்புக்கும்
மன்னிக்கப்படுவதற்கும்
இங்கே இடமில்லை.
மீண்டும் சொல்கிறேன்,
உரத்து—
என்னை அவமதித்தோர்
என் சாவுக்கு வராதீர்.
அது
என் உடலையும்
மீண்டும் கொல்வதுதான்.
மீறி வந்தால்—
ஆவியாய் வந்து
அட்டூழியம் பண்ணுவேன்