புத்தக விழா

நேற்று புத்தக விழாவுக்குச் சென்றிருந்தேன்.  இதையெல்லாம் புத்தக விழா என்று சொன்னால் அது அவமானம்.  mac மடிக்கணினியும் ஆப்பிள் ஐஃபோனும் வைத்திருக்கிறோம்.  ஆனால் புத்தகம் என்று வரும் போது குட்டம் வந்தவனின் ஓலைக் குடிசை போல் வாழ்வதில் நமக்கு எந்த முகச்சுளிப்பும் இல்லை.

என் ஆங்கிலப் புத்தகங்கள் ஒரு டஜன் கடைகளில் கிடைக்கின்றன.  என் வாழ்நாள் கனவு சாத்தியமானதில் எனக்கு எல்லையில்லா சந்தோஷம்.  இந்த ஆண்டு தான் ஆற்றாமை இல்லாத, நிராசைகள் இல்லாத, திருப்தியான ஆண்டாகத் தொடங்கியது.  மற்ற ஆண்டுகளின் துவக்கத்தில் என்னய்யா பெரிய நியூ இயர், நாம் நினைத்தது நடக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ, கடவுள் எப்போது கண்ணைத் திறப்பாரோ, எப்போது நமக்கு நல்ல மொழிபெயர்ப்பாளர் கிடைப்பாரோ என்று விரக்தியில் புலம்புவேன்.  ராம்ஜியும் காயத்ரியும் என் கனவை நனவாக்கி நல்லதொரு தொடக்கத்தைக் கொடுத்து விட்டார்கள்.  நன்றியெல்லாம் வெறும் வார்த்தை.  நன்றி என் மனதில் நிற்கும்.

புத்தக விழாவில் என் மனதைக் கவர்ந்த அடுத்த விஷயம், எஸ். ராமகிருஷ்ணனின் தேசாந்திரி பதிப்பகம்.  நுழைவாயிலுக்கு அருகே அவருடைய புத்தகங்கள் மட்டுமே கொண்ட அரங்கம்.  பார்க்கவே பரவசமாக இருந்தது.  எல்லா நூல்களையும் வாங்க எண்ணினேன்.  வீட்டில் இனிமேல் ஒரு புத்தகம் வைக்கக் கூட இடம் இல்லாததால் வாங்கவில்லை.   சி.சு.செல்லப்பாவிலிருந்து பலப்பல எழுத்தாளர்களும் அவர்களேதான் பதிப்பகம் தொடங்கி பதிப்பித்துத் தங்கள் புத்தகங்களை விற்றார்கள்.  உலகத்திலேயே சார்ல்ஸ் ப்யூகாவ்ஸ்கிக்கு மட்டும்தான் அவரது நண்பர்கள் ப்ளாக் ஸ்பாரோ என்ற பதிப்பகத்தைத் துவங்கி பெருமளவில் அவர் புத்தகங்களை உலகுக்குத் தெரியச் செய்தார்கள்.  இது வேறு எந்த எழுத்தாளருக்கு நடக்கவில்லை.  ஆனால் அது நடந்ததற்குக் காரணம், ப்யூக் நியூயார்க் நகரின் நடைபாதைகளில் வாழ்ந்தார், நம்மூர் நடைபாதைப் பிச்சைக்காரர்களைப் போல.

எஸ்.ரா.வின் அரங்கத்தைப் பார்த்த பிறகு எனக்கு சில யோசனைகள் தோன்றியது.  நான் இதுவரை சுமார் 70 நூல்களை எழுதியிருந்தாலும் அவை ஒரே இடத்தில் கிடைக்கவில்லை.  உயிர்மையில் ஐந்து தலைப்பு, கிழக்கு பதிப்பகத்தில் பத்து தலைப்பு.  அவ்வளவுதான்.  அந்திமழையில் அறம் பொருள் இன்பம் என்ற கேள்வி பதில் தொகுப்பு வெளியானது.  இந்த விஷயம் யாருக்குத் தெரியும்?  500 பிரதி விற்றிருக்கிறது.  இந்த நூல் என்னுடைய நூல்கள் மொத்தமாகக் கிடைக்கும் கிழக்கிலோ உயிர்மையிலோ வெளியாகியிருந்தால் 3000 பிரதிகள் விற்றிருக்கும்.  இதை நான் அந்திமழை நண்பர்கள் புத்தகமாகப் போட விரும்புகிறோம் என்று கேட்டபோதே தெளிவாகக் குறிப்பிட்டோம்.  புத்தக விழாக்களில் கிடைக்க வேண்டுமே, என்ன செய்வீர்கள் என்று கூடக் கேட்டேன்.  கிடைக்கச் செய்வோம் என்றார்கள்.  கிடைக்கவும் செய்கிறது.  ஆனால் எங்கே கிடைக்கும் என்று யாருக்கும் தெரியாது.  திரும்பவும் சொல்கிறேன்.  புத்தக விழாவில் அறம் பொருள் இன்பம் கி-டை-க்-கி-ற-து.  ஆனால் எங்கே கிடைக்கும்?  500 அரங்குகளிலும் தேடினால் ஒன்றிரண்டு அரங்குகளில் கிடைக்கும்.  அப்படி வெறி பிடித்த வாசகர்கள் எனக்கு 300 பேர் இருக்கிறார்கள்.  அவர்கள் வாங்கி விட்டார்கள்.

இதேபோல் என்னுடைய பல புத்தகங்கள் கொல்லப்பட்டு விட்டன.  நண்பர்களால்.  அவர்களுக்கு அப்படிப்பட்ட எண்ணமே இல்லை.  அவர்கள் நல்லவர்கள்.  நல்ல நோக்கங்களைக் கொண்டவர்கள்.  ஆனால் ஒரு எழுத்தாளனின் துயரம் அவர்களுக்குத் தெரியாது.  இதைப் படித்தவுடன் எனக்கு அந்திமழை அசோகனிடமிருந்து போன் வரும்.  என்ன பேசுவது?  அறம் பொருள் இன்பம் உயிர்மையில் வந்திருந்தால், கிழக்கு பதிப்பகத்தில் வந்திருந்தால் 3000 பிரதிகள் போயிருக்கும் என்பது மட்டுமே எதார்த்தம்.  இதைத்தானே நான் ஆரம்பத்திலேயே சொன்னேன்?

அந்திமழை நண்பர்கள் என் குடும்பம் என்பதால் பெயர் சொல்லி எழுதுகிறேன்.  பல புத்தகங்கள் இப்படிக் கொல்லப்பட்டு விட்டன.  ஒரு நண்பர், சினிமா புத்தகங்களை மட்டுமே வெளியிடுகிறார்.  உங்களுடைய ஏழு சினிமா நூல்களும் வேண்டும் என்று கேட்டார்.”அதை நான் கிழக்கில் கொடுக்கலாம் என்று இருக்கிறேன்.  என் நூல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்க வேண்டும்”என்றேன். அவர் சினிமா புத்தகங்கள் மட்டுமே ஒரே இடத்தில் இத்யாதி இத்யாதி.  நண்பர்கள் எதைக் கேட்டாலும் கொடுப்பேன்.  பத்து முறை மறுத்துச் சொன்னேன்.  பதினோராவது முறை மறுக்க முடியவில்லை.  முகத்தையே மறுத்தால்தான் அது முடியும்.  முகத்தை மறுப்பது என்றால் நட்பை மறுத்தல் என்று பொருள்.அவ்வாறு என்னால் மறுக்க முடியவில்லை.  நண்பர் மூன்று புத்தகங்களைப் போட்டார்.  அவை ஒரு புத்தகம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லை.  பத்திரிகை மாதிரி இருந்தது.  அது போகட்டும் என்று பார்த்தால் பக்கத்துக்குப் பத்து பிழை.  அச்சுப் பிழை கூட இல்லை.  வேறு மாதிரி பிழை.  சீலே என்று இருக்க வேண்டிய இடத்தில் ப்ரஸீல் என்று உள்ளது.  இது என்ன மாதிரியான பிழை என்றே தெரியவில்லை.

1982-இல் லத்தீன் அமெரிக்க சினிமா – ஓர் அறிமுகம் என்ற புத்தகத்திலிருந்து கோணல் பக்கங்கள் முதல் தொகுதி வரை நானே தான் அவந்திகாவின் நகைகளை விற்று என் நூல்களை அச்சடித்து, செல்லப்பா மாதிரியே முதுகில் அவற்றைச் சுமந்து விற்றேன்.  ஸீரோ டிகிரியும் அப்படித்தான்.  அதற்கு முன்னால் வந்த எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் நாவலும் அப்படித்தான்.  அப்போது நகை கொடுத்த பெண் வேறு பெண் என்பது மட்டுமே வித்தியாசம்.

பத்திரிகை நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.  எழுத்தாளர்களை ஆதரியுங்கள்.  அவர்களின் கட்டுரைத் தொடரை வெளியிடுங்கள்.  ஆனால் அவர்களின் நூல்களையும் உங்கள் பதிப்பகங்களிலேயே வெளியிடும் போது அந்த எழுத்தாளனைக் கொல்கிறீர்கள்.  விகடன் பிரசுரம் மூலம் என் மனம் கொத்திப் பறவை வந்தது.  4000 பிரதிகள் விற்றது.  உயிர்மையில் 3000 விற்கும்.  என்ன வித்தியாசம்?  விகடனில் வந்தாலே இவ்வளவுதான் என்கிறபோது அந்திமழையெல்லாம் எங்கே போவது?

அடுத்த புத்தக விழாவிலாவது என் நூல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதற்கு ஆவன செய்வேன்.

இந்தப் புத்தக விழாவில் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியிட்ட என் நூல்கள் கிடைக்கும் இடங்கள்:

Stall 671 – Emarald
667… Aries
435..Rhythm book
411, 412…Book affair
401…Book worms
249, 250…SriJaibhagavan
220, 221…Raintree publishers
183, 184…Leo

நூல்கள்:

Zero Degree (English)

Unfaithfully Yours (English)

To Byzantium : A Turkey Travelogue

MARGINAL MAN (English)

நிலவு தேயாத தேசம் (பயணக் கட்டுரை)