if…

1

மீண்டும் இதே வாழ்க்கையை வாழ
வாய்ப்புக் கிடைத்தால்
தில்லி சென்றிருக்க மாட்டேன்
அரசுப் பணியில் சேர்ந்திருக்க மாட்டேன்
திருமணம் செய்திருக்க மாட்டேன்
ஆங்கிலம் கற்றுக்கொண்டு ஆங்கிலத்தில்
எழுதியிருப்பேனே ஒழிய
ஒருபோதும் தமிழில் எழுதியிருக்க மாட்டேன்
இரண்டாம் திருமணமும் செய்திருக்க மாட்டேன்
சொல்லப் போனால்
திருமண உறவிலேயே சிக்கியிருக்க மாட்டேன்
என் ஒப்புதல் இல்லாமல் செக்ஸ்
நிறுத்தப்பட்ட போது
ஒரு அடிமைபோல்
அதற்கு ஒப்புக்கொண்டிருந்திருக்க மாட்டேன்
அல்லது
உறவை ரத்து செய்திருப்பேன்
திரும்பவும் ஒரு காதலில் விழுந்திருக்க மாட்டேன்
திரும்பவும் என் ஒப்புதல் இல்லாமல்
செக்ஸ் நிறுத்தப்பட்ட போது
ஒரு அடிமைபோல்
அதற்கு ஒப்புக்கொண்டிருந்திருக்க மாட்டேன்
அல்லது
உறவை ரத்து செய்திருப்பேன்
எழுபது வயது வரை
முத்தமில்லா வாழ்க்கைக்கு
உடன்பட்டிருக்க மாட்டேன்
காதலி செய்த தவறுக்கெல்லாம்
ஓராயிரம் முறை மன்னிப்புக் கேட்டிருக்க மாட்டேன்
மோகினிக்குட்டியிடம் காதல் தெரிவித்திருக்க மாட்டேன்
நண்பனாகவே இருந்து துன்புறுத்திக்கொண்டிருந்திருப்பேன்
இனிமேல் செக்ஸ் வேண்டாம்
எனச் சொல்லும் மாதர் பக்கம்
திரும்பியே பார்த்திருக்க மாட்டேன்
கழுத்தறுபட்டு குருதி கொட்டிக்கொண்டிருந்தாலும்
எந்த மனிதருக்கும் உதவி செய்திருக்க மாட்டேன்
ஆரம்பத்திலிருந்தே விஸ்கிக்குப் பழகியிருப்பேன்
நாய் பூனைகளின் பக்கமே திரும்பியிருக்க மாட்டேன்
அப்படித் திரும்புகிறவர்களின் உறவையும் ரத்து செய்திருப்பேன்
(முயல் அணில் எலி குதிரை போன்றவற்றையும் இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்)

2

இது எல்லாவற்றையும் தவிர்த்து
ஒரு வாழ்க்கை கிடைத்திருந்தால்
அப்போதும்
ஒரு பழைய மேஜையில்
மங்கிய வெளிச்சத்தில்
அமர்ந்து
இதேபோல்
ஒரு ‘மாட்டேன் கவிதை’யை
நிச்சயமாய் எழுதியிருப்பேன்.