ஒரு வேண்டுகோள்


என்னோடு தொடர்பில் இருக்கும், உறவில் இருக்கும், நட்பில் இருக்கும் எல்லா நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்.  

யாரும் என்னோடு எது பற்றியும் சூடாக விவாதிக்காதீர்கள்.  குரலை உயர்த்திப் பேசாதீர்கள்.  தொலைபேசியிலோ, நேரிலோ, குரல் செய்தியிலோ இந்த வேலையைச் செய்ய வேண்டாம்.  உங்களுக்கு ஏதேனும் மாற்றுக் கருத்து இருந்தால் என்னை விட்டு விலகி விடுங்கள்.  என்னிடம் அது பற்றி விவாதிக்காதீர்கள்.  

விவாதித்தால் எனக்கு நெஞ்சு வலி வருகிறது.  அந்த வலி ஓரிரண்டு நாட்களுக்குத் தொடர்கிறது.  இது எனக்கு மரணத்தை உண்டு பண்ணலாம்.  மரணம் எனக்கு ஒரு பொருட்டே அல்ல.  ஆனால் இப்போது எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது.  உல்லாசம், தியாகராஜா, அசோகா, 1857, வீடு, ம்யாவ் என்று நான் எழுத வேண்டிய நாவல்கள் வரிசை கட்டி நிற்கின்றன.  அதோடு, என் நாவல்களை நான் சர்வதேச அளவில் கொண்டு செல்ல வேண்டிய பணியும் இருக்கிறது.  

வாசகர் வட்டத்தில் ஒரு அன்பர் பெரும் பிரச்சினையை உண்டு பண்ணிக்கொண்டிருந்தார்.  அவர் வந்தாலே கலவரம்தான்.  சில ஆண்டுகளுக்கு முன் நாங்கள் பதினோரு பேர் இமயமலைப் பகுதிக்குச் சென்றிருந்த போது அந்தப் பதினோரு பேரில் அவரும் ஒருவராக இருந்தார்.  லேயிலிருந்து நாங்கள் கார்கில் செல்ல வேண்டும்.  அன்றைய இரவு அந்த நண்பர் வழக்கம்போல் ஒரு கலவரம் செய்தார்.  நான் மறுநாள் காலையே லேயிலிருந்து விமானம் பிடித்து தில்லி வந்து அங்கிருந்து சென்னை வந்து விட்டேன்.  அந்தக் கலவர நண்பரை வாசகர் வட்டத்திலிருந்து நீக்கி விட்டார் சீனி.

அடுத்தாற்போல் வந்தார் ஒரு இளைஞர்.  என்னைப் போலவே இசை ரசிகர்.  வாசகர் வட்டத்தில் என்னைத் தவிர்த்து ஒரே இசை ரசிகர் அவர்தான்.  அதனால் எனக்குப் பெரும் மகிழ்ச்சி.  அதோடு, அவர் என்னை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்கு சில காரியங்களைச் செய்தார்.  அதை வாசகர் வட்டத்தில் உள்ள வேறு யாராலுமே செய்ய முடியவில்லை.  சீனியாலும், சீனியைப் போலவே படு சூட்டிகையான ஶ்ரீயாலுமே செய்ய இயலாத வேலை அது.  ஆனாலும் அந்த இளம் நண்பர் என்னைக் கத்த வைத்துக்கொண்டே இருந்தார்.  அது எனக்குத் தொடர்ந்து நெஞ்சு வலியை உண்டுபண்ணிக்கொண்டேயிருந்தது.  

இங்கே ஒரு விஷயம் சொல்கிறேன்.  என்னுடன் மாற்றுக் கருத்து கொண்டிருப்பவர்களில் சீனிதான் முதல்.  என்னுடைய நூறு கருத்துக்களில் அவர் தொண்ணூறு கருத்துக்களை ஒப்புக்கொள்ள மாட்டார்.  ஆனால் இந்தப் பதினேழு ஆண்டுகளில் ஒரு முறை கூட அவர் என்னைக் கத்த விட்டதில்லை.  ஆவேசமூட்டியதில்லை.  இந்த வித்தையை ஏண்டா மற்ற யாரும் கற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்?  மிகவும் எளிதான விஷயம்.  சீனி தன்னுடைய கருத்தை ஏற்கச் சொல்லி என்னை வற்புறுத்துவதில்லை.  மற்றவர்கள் வற்புறுத்துகிறார்கள்.  அதனால் நான் கத்துகிறேன்.  நெஞ்சு வலி வருகிறது.

இப்போது இன்னொரு நண்பர்.  என் மீது அதீத பிரியம் கொண்ட அவருக்கும் எனக்கும் நூற்றுக்கு நூறு விஷயங்களிலுமே மாற்றுக் கருத்துதான்.  ஆனால் என்ன பிரச்சினையென்றால், அவருடைய கருத்தை ஏற்கச் சொல்லி என்னை வற்புறுத்துகிறார்.  ஏற்காவிட்டால் குரலை உயர்த்துகிறார்.  சண்டை பிடிக்கிறார்.  இதுவரை என் வாழ்வில் யாருமே என் முன்னால் குரல் உயர்த்திப் பேசியதில்லை.  கத்தியதில்லை.  ஒரே ஒரு முறை ஒரு அதிகாரி என்னை இடியட் என்று திட்டியபோது அவனை அடிக்கப் போய் விட்டேன்.  அப்போது நான் பயில்வான் போல் இருந்ததால் என் அடியில் அவன் செத்திருப்பான்.  நான் கொலைக்குற்றவாளியாக சிறை சென்றிருப்பேன்.  அந்த அபத்தத்தைத் தவிர்ப்பதற்காக நான் வேலையை ராஜினாமா செய்தேன்.  (இப்போது நான் கனிந்து விட்டேன்.  வன்முறையில் ஈடுபடுவதில்லை என்றாலும், கத்துவதைத் தவிர்க்க முடியவில்லை.  கத்தினால் நெஞ்சுவலி.)

இதோடு அந்த நண்பரோடு நூறு முறை கலவரம் நடந்திருக்கிறது.  நூறு இல்லாவிட்டால் ஐம்பது முறை இருக்கும்.  ஐம்பதுக்குக் குறையாது.  ஒவ்வொரு முறையும் தொலைபேசியே வெடித்து விடுகிறாற்போல் கத்துவார்,  நானும் என் இருதயமே கிழிந்து விடுகிறாற்போல் கத்துவேன்.  எனக்கும் சண்டை போடவும் ஆவேசமாகக் கத்தவும் ஆசைதான்.  ஆனால் நெஞ்சு வலி வந்து உயிர்ப் பயத்தை ஏற்படுத்தி விடுகிறதே, கண்மணிகளா!  என்ன செய்யட்டும்.  நானும் அந்த நண்பரிடம் என்னிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள் என்று பலமுறை கெஞ்சிக் கேட்டுக்கொண்டு விட்டேன்.  ஆனாலும் மாதம் ஒருமுறை சண்டையும் வாக்குவாதமும் ஆவேசக் கூச்சலும் தொடர்ந்துகொண்டே இருககிறது.  நெஞ்சு வலியும் தொடர்கிறது.  

சென்ற டிசம்பரில் பெங்களூருக்கு இலக்கிய விழாவில் கலந்து கொள்ள வந்தேன். மறுநாள் காலை 10 மணி அளவில் என்னுடைய உரை இருந்தது. அதுவும் ஆங்கிலத்தில் பேச வேண்டும். ஆங்கிலத்தில் பேசுவது எனக்கு இயல்பானது அல்ல. அதற்கு முந்தின நாள் இரவு 12 மணி அளவில் அந்த நண்பரிடம் இருந்து ஆறு ஏழு வாய்ஸ் மெசேஜ் வந்தது. எல்லாமே ஆவேசக் கூச்சல்தான். நான் அதற்கு பதில் மெசேஜ் கொடுக்கவில்லை. கூக்குரல் எழுப்பவில்லை. நண்பரின் ஆவேசக் கூச்சலை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிட்டேன். ஏனென்றால், மறுநாள் என்னுடைய உரை. அதுவும் ஆங்கில உரை. 

ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு நான் பெங்களூர் வந்தபோது மீண்டும் அந்த  நண்பருடன் வாக்குவாதம். அவருடைய குரல் மிகவும் உயர்ந்திருந்தது. ஆவேசமாக இருந்தது. பெரும் சண்டை. பெரும் கலவரம். என் குரலும் உயர்ந்தது. ஆவேசமானது. வழக்கம்போல் நெஞ்சு வலியும் வந்தது. அவராகவேதான் இந்த உரையாடலை, இந்தக் கலவரத்தைத் தொடங்கினார்.

இந்த முறை வந்த நெஞ்சு வலி இரண்டு நாட்களாக இன்றளவும் தொடர்கிறது. நான் வந்த வேலை உல்லாசம் நாவலை முடிப்பது. அதுவும் ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன். அந்த வேலையில் எனக்கு உதவி செய்வதற்காக நான் தங்குமிடத்திற்கு ஸ்ரீ வந்தாள். காலை 11 மணி அளவில் வந்தவள் இரவு 10 மணி வரை – சரியாக 11 மணி நேரம் – அமர்ந்த இடத்திலேயே அமர்ந்து வேலை செய்து கொண்டே இருந்தாள் ஸ்ரீ. அவளுடைய வேலைக்கு உதவி செய்வதற்காக நானும் அவள் பக்கத்திலேயே அமர்ந்திருந்தேன். நான் தங்குமிடத்தில் மேஜை நாற்காலி இல்லாததால் இருவரும் தரையிலேயே அமர்ந்திருந்தோம். நான் எந்த வேலையும் செய்யவில்லை. வெறுமனே அவளுக்கு அருகில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தேன். 11 மணி நேரம் தரையில் அமர்ந்திருந்ததால் கால்கள் வலி பின்னி எடுத்தன. அதற்கு மேல் ஸ்ரீ அவள் வீட்டுக்குச் சென்று காலை நான்கு மணி வரை அந்தப் பணியை தொடர்ந்ததாக மறுநாள் சொன்னாள். நான் 11 மணிக்கு அவள் வீட்டுக்குச் சென்று மாலை 5 மணி வரை தொடர்ந்து அந்தப் பணியை செய்தோம். 

ஐந்து மணிக்குத்தான் உல்லாசம் வேலை முடிந்தது. அவ்வளவு நேரமும் என் நெஞ்சு வலி தொடர்ந்துகொண்டேதான் இருந்தது. முந்தின நாள் நடந்த கலவரத்தினால், ஆவேசக் கூச்சலினால் கிடைத்த பரிசு!  

ஒவ்வொரு கலவரம் நடக்கும் போதும் ஒரு மாத காலம் நண்பரும் நானும் பேச்சு வார்த்தை இல்லாமல் இருப்போம். ஆனால் இந்த முறை நெஞ்சு வலி இரண்டு நாள் தொடர்ந்ததால் இனிமேல் அந்த நண்பருடன் எந்தப் பேச்சு வார்த்தையும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன். ஏனென்றால், இது ஒரு தீராத பிரச்சனையாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது என் உயிர்ப் பிரச்சனை. எனக்கு என்னுடைய வேலைகள் முடிந்தாக வேண்டும். இம்மாதிரியான கலவரங்களில் நான் ஈடுபடக்கூடாது. 

பொதுவாக நான் திரில்லர் படங்களைக்கூட பார்ப்பதில்லை. பார்த்தால் நெஞ்சு வலி வருகிறது. மரண வீடுகளுக்குச் செல்வதில்லை. சென்றால் துக்க மிகுதியால் நெஞ்சு வலி வருகிறது. யாரோடும் வாக்குவாதம் செய்வதில்லை. கத்துவதில்லை. கத்தினால் நெஞ்சு வலி வருகிறது. ஆனாலும் என் நண்பர்கள் சிலர் என்னிடம் வாக்குவாதம் செய்து என்னைக் கத்த வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதிலும் இந்த நண்பர் அடிக்கடி என்னிடம் குரலை உயர்த்திப் பேசுகிறார். என்னிடம் இதுவரை என் வாழ்நாளில் யாருமே குரல் உயர்த்திப் பேசியதில்லை, அவந்திகா உட்பட. அவந்திகா என்னைக் கத்த வைப்பது உண்டு. ஆனால் அவள் ஒருபோதும் கத்தியதில்லை. 

என்னை சில நண்பர்கள் கத்த வைப்பது உண்டு. ஆனால் அந்த நண்பர்கள் ஒருபோதும் என்னிடம் கத்தியது இல்லை. ஆனால் இந்த நண்பர் மட்டும் அடிக்கடி என்னிடம் குரல் உயர்த்திப் பேசி அவரும் கத்தி என்னையும் ஆவேசக் கூச்சலிட வைக்கிறார். அதனால் வரும் நெஞ்சு வலியால் எனக்கு உயிர்ப் பயம் ஏற்படுகிறது. அதனால்தான் அந்த நண்பருடன் இனி எந்தப் பேச்சு வார்த்தையும் வைத்துக் கொள்வதில்லை என்று முடிவு செய்து இருக்கிறேன். 

நான் எந்த ஒரு தனிமனிதருக்கும் உரிமையானவன் அல்ல. அது யாராக இருந்தாலும் சரி. நான் ஒரு சமூகச் செயல்பாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். என்னுடைய எழுத்து சமூகத்துக்கானது. நான் சமூகத்துக்கு உரியவன். உங்கள் ஒருவருக்கு உரிமை ஆனவன் அல்ல. எனவே இதுபோல் என்னிடம் வாக்குவாதம் செய்து என்னைக் கத்த வைப்பது என்னுடைய சமூகச் செயல்பாட்டுக்கு நீங்கள் செய்யும் அநீதி என்று கருதுகிறேன். 

திரும்பவும் சொல்கிறேன், நான் உங்கள் ஒருவருக்கு உரியவன் அல்ல. என்னிடம் கத்துவதற்கோ, வாக்குவாதம் செய்வதற்கோ, ஆவேச கூச்சல் போடுவதற்கோ உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. 

என்னிடமே வித்தை கற்றுக் கொண்டு எனக்கே அதிகாரியாக மாறுவதை நான் இனிமேல் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதாக இல்லை. பிரச்சனை இதுதான்- என்னை நெருங்குபவர்களை நான் தோழனாக எண்ணி தோளில் கை போடுகிறேன். அவர்களும் என்னைத் தோழனாக எண்ணி என் தோள் மீது கை போடுகிறார்கள். தவறில்லை. ஆனால் காலப்போக்கில் அவர்கள் எனக்கு அதிகாரியாக மாறி என் தலை மேல் ஏறி உட்கார்ந்து கொள்கிறார்கள். நான் என்ன எழுத வேண்டும், என்ன எழுதக்கூடாது என்பதைத் தீர்மானிப்பவர்களாக மாறுகிறார்கள். 

சமீபத்தில் நடந்த கலவரத்தில் நண்பர் கூறிய இரண்டு விவகாரங்களைத் தருகிறேன். ஒன்று, ஸ்ரீயோடு நீங்கள் பழகுவது பெரிய பிரச்சனையில் முடியும்; அப்போது நான் உங்களைப் பாதுகாக்க வரமாட்டேன் என்றார் நண்பர். பெரிய பிரச்சனை என்பது Me too என்று நினைக்கிறேன். அது என் யூகம். வேறு என்ன பிரச்சனை இருக்க முடியும்? 

இப்படித்தான் சீனியுடன் பழகுவது பற்றியும் பல நண்பர்கள் பலவிதமான பிராது செய்தார்கள்; செய்து கொண்டிருக்கிறார்கள். நண்பரிடம் சொல்லிக் கொள்கிறேன்- எனக்குப் பிரச்சினை வந்தால் அதைக் காப்பாற்றும் உயரத்தில் நீங்கள் இல்லை.. என்னை என்னால் காப்பாற்றிக் கொள்ள முடியும்.  என்னைக் காப்பாற்றுவதற்கு நீங்கள் ஒன்றும் கடவுள் அல்ல. 

மேலும் ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் நான் பலருடன் பழகுகிறேன். செல்வகுமார், ராஜா, சுரேஷ் ராஜமாணிக்கம், சீனி, ஶ்ரீ, ரூபா ஸ்ரீ, ஷ்ருதி, ஸ்ரீராம், சக்திவேல், ரகு என்று பல நண்பர்கள் உண்டு. அவர்கள் என்னைப் பார்த்துக் கொள்கிறார்கள். 

நீங்கள் என்னைக் காப்பாற்றுவீர்கள் என்பதற்காக உங்களுடைய தலையாட்டி பொம்மையாக நான் மாற முடியாது. நான் யாரோடு பழக வேண்டும், யாரோடு பழகக் கூடாது என்று நீங்கள் எனக்கு உத்தரவு இட முடியாது. மேலும் என்னைக் காப்பாற்றுவதற்கு என் குருநாதர் மகா பெரியவர் எப்போதும் இருக்கிறார். அதோடு, மற்றவர்கள் காப்பாற்றும் அளவுக்கு நான் எந்த குற்றச் செயலிலும் ஒருபோதும் ஈடுபட்டதில்லை, ஈடுபடவும் மாட்டேன். என் வாழ்நாள் முழுவதுமே நான் மற்றவர்களின் விஷயத்தில் குறுக்கிட்டதே இல்லை. 

நண்பரின் இன்னொரு குற்றச்சாட்டு – சமீபத்திய சென்னை புத்தக விழாவின்போது ஒரு இளம் பெண் என்னைக் கட்டி அணைத்தபடி நின்று கொண்டிருந்தார். அது பல நிமிடங்கள் தொடர்ந்தது. இது என்ன ஐரோப்பாவா? எத்தனையோ பேர் என்னிடம் புகார் செய்தார்கள். அப்போதெல்லாம் நான்தான் உங்களைக் காப்பாற்றினேன் என்றார் நண்பர். 

அதாவது, பொது இடத்தில் நான் நாகரீகம் காக்க வேண்டும், பொது இடத்தில் பெண்கள் என்னைக் கட்டி அணைக்க அனுமதிக்கக் கூடாது என்பது நண்பரின் உத்தரவு அல்லது ஆசை. இதுபோல் நண்பரே, நீங்கள் தயவுசெய்து ஜக்கி வாசுதேவிடம் சென்று சொல்லுங்கள். அந்த ஆன்மீகவாதியைக் கட்டி அணைக்காத ஆண்களோ பெண்களோ இல்லை. 

அதேபோல் மற்றொருவர் கமல்ஹாசன். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 32 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி கமலிடம் “எனக்கு உங்களை முத்தமிட ஆசை” என்றார். கமல் அதற்கு அனுமதி வழங்கினார். 

எல்லோர் முன்னிலையிலும் தமிழ்நாடே பார்த்துக் கொண்டிருக்கும் அந்த நிகழ்ச்சியில் அந்தப் பெண்மணி கமலை கன்னத்தில் முத்தமிட்டார். விஷயம் அது அல்ல. முத்தமிட்டு விட்டு அவர் சொன்னார், “நான் கமல் சாரை முத்தமிடும்போது நீங்கள் இந்த இடத்தில் இருக்கக் கூடாது, வெளியே செல்லுங்கள் என்று என் கணவரிடம் சொல்லி விட்டு வந்தேன்.” 

கமலை கட்டியணைக்காத ரசிகைகளே இல்லை. ஆக, சினிமா நடிகரையும் ஆன்மீகவாதியையும் கட்டி அணைத்தால் இது ஐரோப்பாவா அமெரிக்காவா என்று கேட்க மாட்டீர்கள். ஒரு எழுத்தாளனுக்கான விழாவில் – ஒரு புத்தக விழாவில் – ஒரு பெண் ஒரு எழுத்தாளனைக் கட்டி அணைத்தால் உங்களுக்கு எங்கே வலிக்கிறது நண்பரே? ஆன்மீகவாதிக்கும் சினிமா நடிகருக்கும் கொடுக்கும் சுதந்திரத்தை எழுத்தாளனுக்கு ஏன் தர மறுக்கிறீர்கள்? 

என்னைக் கட்டியணைத்த அந்தப் பெண், “ஒரு மன நோயாளியாக ஆகி இருக்கவேண்டிய நான் உங்களுடைய ஸீரோ டிகிரி நாவலைப் படித்து என் மன ஆரோக்கியத்தையும் வாழ்வையும் திரும்பப் பெற்றேன்” என்று சொல்லி அழுதுதான் என்னை கட்டிப்பிடித்து அழுதார்.  

அப்படிச் செய்த ஒரு பெண்ணை நான் தள்ளிவிட்டு விடவா? ஏண்டா ஆஷாடபூதி மூடர்களே! அந்தப் பெண் என்ன ஒரு அறையிலா என்னைக் கட்டிப்பிடித்தார்? 

இதுபோலெல்லாம் என்னிடம் பேசுவதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? சினிமா நடிகரைக் கட்டிப்பிடித்தால் அது சினிமா ரசனை! எழுத்தாளனைக் கட்டிப்பிடித்தால் அது ஆபாசமா? 

என்ன பிரச்சனை என்றால், இந்த நண்பர் இன்னொரு நண்பரிடம் குரலை உயர்த்திப் பேசியபோது அந்த நண்பர் “இப்படி எல்லாம் என்னிடம் குரல் உயர்த்தாதீர்கள்” என்று வன்மையாகக் கண்டித்தார். உடனடியாக இந்த நண்பரும் அதிலிருந்து அந்த நண்பரிடம் குரலை உயர்த்திப் பேசுவதை நிறுத்திவிட்டார். ஆனால் நான் இப்படி எல்லாம் கண்டிக்கவில்லை என்பதாலேயே என்னிடம் குரல் உயர்த்திப் பேசுகிறார் நண்பர்.

எனவே மீண்டும் சொல்கிறேன். என்னிடம் யாரும் விவாதிக்க வர வேண்டாம். குரலை உயர்த்திப் பேச வேண்டாம். ஆவேசமாகச் சண்டை போட வேண்டாம். அப்படிச் செய்வதாக இருந்தால் அவர்களை என் நட்பு வட்டத்திலிருந்து தீர்மானமாக விலகி விடுவேன். ஏனென்றால், செய்வதற்கு எனக்கு ஏராளமாக வேலை கிடக்கிறது. 

இன்னொன்று- இதையெல்லாம் எழுதுவதால் நான் இன்னாரைப் பற்றி சமூகவெளியில் எழுதி அசிங்கப்படுத்தி விட்டேன் என்று என் மீது புகார் சுமத்தக்கூடாது. ஏனென்றால், நான் என் வாழ்க்கையில் நடந்ததைத்தான் எழுதுகிறேன். எனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உயிர்ப்பயம் உண்டாகும் அளவுக்கு என்னிடம் கூச்சலிட்டு விட்டு என்னையும் கூச்சல் போட விட்டு விட்டு, “இதை எழுதக்கூடாது” என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. 

என் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை நான் எழுதிக்கொண்டேதான் இருப்பேன். எழுத வேண்டாம் என்று உங்களுக்குத் தோன்றினால் என்னிடம் சம்பவம் செய்யாதீர்கள். சம்பவம் செய்தால் எழுதுவேன். அதை யாராலும் தடுக்க முடியாது. ஏனென்றால், விஷயம் உங்களைப் பற்றியது அல்ல. என் வாழ்வில் நடக்கும் சம்பவம் இது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். 

உதாரணமாக சீனியோடு 17 ஆண்டுகளாக பழகி வருகிறேன். அவரைப் பற்றி நான் அவதூறாக இதுவரை ஒரு வார்த்தை எழுதியது இல்லை. ஏனென்றால், அவர் என்னிடம் சம்பவம் செய்ததில்லை. 

“சாரு, நீங்கள் அதை செய்யக்கூடாது, இதை செய்யக்கூடாது, ப்ளாக்ல இருந்து இதை எடுத்து விடுங்கள், அதை நீக்கி விடுங்கள்” என்று சீனி எனக்கு ஒருபோதும் உத்தரவிட்டது இல்லை. ஒருபோதும் அவர் என்னைக் குற்ற உணர்வில் ஆழ்த்தியது இல்லை. இருந்தால் சீனியைப் போல் இருங்கள். இல்லாவிட்டால் என்னிடமிருந்து ஒதுங்கி நில்லுங்கள்.

கொசுறு:  அடுத்த ஆண்டு புத்தக விழாவில் என்னை அதிகமான பெண்கள் கட்டியணைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.