காமாக்னி

யோகா மாதிரி ஏதாவது
செய்து காமநோய்மையிலிருந்து
விடுபடேன் என்றாள் மோகினிக்
குட்டி

துன்பம் தரும் எதுவோ
அதைத் தூக்கியெறிவது
என் வழக்கம் எனத்
தொடர்ந்தாள்

பதினைந்து வயதில்
தேகத்தின் காமம்
ஆடைகளில் அடையாளமானபோது
அம்மா சொல்வார்கள்
உடம்புக்கு நல்லதில்லை
தம்பி என்று

மோகினிக்குட்டி,
சில நேரம்
என் தாயாக மாறுவாள்

ஒரு காலத்தில்
ரத்த அழுத்தம்
என்னைப் பிடித்து ஆட்டியது
யோகா அதை அடக்கியது
பக்க விளைவாக
கோபம் ஓடி ஒளிந்தது
இப்போது எது நடந்தாலும்
கோபம் வருவதில்லை

யோகா செய்து காமம்
விலக்கினால்
பக்க விளைவாக
எழுத்து அகன்று விட்டால்
விபரீதமாயிற்றே?

காமாக்னிதானே
என் எழுத்துக்கு உயிரென்றேன்
மோகினிக்குட்டியிடம்

அக்கினியை அடக்குவதன்
வழி தெரிந்தது போல்
ஒரு சிரிப்பு
சிரித்தாள் மோகினிக்குட்டி