திடீரென்று
கொஞ்ச நாளாய்
தனிமையுணர்வு
கிருமிபோல் உள்நுழைந்து
பல்கிப் பெருகி
குடைச்சல் கொடுத்தது
தற்கொலை உணர்வுகூட
தலைதூக்கிப் பார்த்தத
விஷயம் இதுதான்
எந்தத் தொலைபேசி அழைப்பும்
வரவில்லை
நானே அழைத்தாலும்
யாரும் திருப்பி அழைப்பதில்லை
தனித்திருந்தேன்
தனிமைக்குப் பழக்கமில்லை
பீதியுற்றேன்
மோகினிக்குட்டியைத்
தொந்தரவு செய்ய விரும்பவில்லை
கவிதைகளை வாட்ஸப்பில் அனுப்பி
ப்ளூ டிக் இல்லாமல்
மனம் வெதும்பித்
திரும்புவதோடு சரி
நண்பன் சொன்னான்
நமக்குள் சந்தேகமே வரக்கூடாதென்று
அதனால்
வெட்கத்தை விட்டு
வாட்ஸப்பில் செய்தி அனுப்பினேன்
எத்தனையோ முறை அழைத்திருக்கிறான்
பிஸி என்றே போயிருக்கிறது
’சந்தேகமில்லை
நீ
Do not disturbஐப் போட்டிருக்கிறாய்
சரி செய்’
என்று வந்தது வாட்ஸப் செய்தி
அவன் சொன்னது சரிதான்
ப்ளூ டிக் பஞ்சாயத்தில் கடுப்பாகி
Do not disturbஐப் போட்டிருக்கிறேன்
என் தோழியொருத்தி
இப்படித்தான் தனிமையில்
தற்கொலை செய்து கொண்டாள்
இப்போதுதான் புரிகிறது
இரண்டே வார்த்தைகள்
அவளைக் கொன்றிருக்கிறது