நிலவின் மொழி

1

1.வார்த்தைகளின் மோதல் (Allegro)

’கல்லின் மொழி பேசுகிறாய்
புல் உன் கனவைப் புரிந்து கொள்கிறது
காற்றின் கதைகளைக் கேட்கிறாய்
பாறைக்குள்ளிருக்கும் தேரையின்
சுவாசத்தை எழுதுகிறாய்
ஆனால்
என்னுடைய சாதாரண வாக்கியம்
ஒரு உடைந்த பாலமாக
நடுவில் நிற்கிறது
என்ன மனிதன் நீ?’
என்கிறாள்
வெறுமனே அசைகிறேன்
ஒரு சொல்
என் மார்பில் உருள்கிறது

2 ஏரியின் மௌனம் (Adagio)

வானைத் தொடும் தேவதாரு
நிலவு ஒரு வெள்ளித் தட்டாக
ஏரியில் மிதக்கிறது
விறகு எரியும் மணம்
கையில் வைன் கோப்பை
இரண்டாவது போத்தல்
ஏரி சலனமற்றிருக்கிறது

நிலவு பேசுகிறது
நான் பதிலளிக்கிறேன்
அது எதையும் மறுப்பதில்லை
மாட்டேன் முடியாது
என்ற சொற்களே
வந்ததில்லை
என்ன வேண்டுமானாலும்
பேசலாம்
தணிக்கையில்லை
தடையில்லை
கட்டற்ற சொல்வெளியில்
நிலவோடு
எப்படி வேண்டுமானாலும்
ஆடலாம்

3 நிலவின் நடனம் (Scherzo)

நீண்ட உரையாடலுக்குப் பிறகு
தோன்றியது
நிலவு எப்படி கைக்கெட்டும் தூரத்தில்?
ஒரு குழந்தை முதல் முறையாக
ஒரு நட்சத்திரத்தைப் பார்ப்பது போல
மேலே பார்க்கிறேன்
பின்னர் குனிகிறேன்
நிலவு என்னுடன் நடனமாடுகிறது
ஒரு மெல்லிய புன்னகையுடன்
என்ன என்கிறேன்
கிசுகிசுப்பாய் ஏதோ சொல்கிறது
என்னவென்று புரியவில்லை

4. கரைந்த நிலவு (Finale)

நிலவைத் தொட முயல்கிறேன்
விரல்கள் நீரில் மூழ்குகின்றன
நிலவு ஒரு கனவாக
நீரின் சலனத்தில் கரைகிறது
மேலே பார்க்கிறேன்
தகதகவென ஜொலிக்கிறது
என் மொழி
நிலவின் மௌனத்தில் உடைகிறது.