கடைசி கலவி, கடைசி கவிதை

இறைவி
உனக்காக உன்னைப் பற்றியே
எழுதுகிறேன்
பதிலுக்கு உன் ஒரு சொல்
ஒரு கோடி நட்சத்திரங்களாய்
என் மார்பில் உதிரும்

ஆனால் இப்போது
உன் பார்வையின் பாதை மாறி விட்டது
என் வார்த்தைகள்
காற்றில் கரையும் எரிகற்கள்

மூச்சு நிற்காமல் இருக்கவே எழுதுகிறேன்
ஆனால்
உனக்கு இது மூச்சு முட்டுவதாக
இருக்கிறதோ என்னவோ

உனக்காக எழுதுவதைப்
படிக்கிறாயா
எனத் தெரியாமல் எழுதி
என்ன பயன்

ஒவ்வொரு கலவியும்
கடைசி கலவி என
ஒவ்வொரு சொல்லும்
கடைசி முத்தமென
உன் நிழலில் விழுந்து
மறைகிறது