உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
திருமூலரின் மூன்றாம் தந்திரம், 13-ஆம் பிரிவில் (காயசித்தி உபாயம்) உள்ள பாடல் எண் 724
உடம்பை வளர்ப்பது சாதாரண காரியம்தான். அதே சமயம் சாதாரண காரியமும் அல்ல. இடைவிடாமல் உடம்பைப் பராமரித்துக்கொண்டே இருக்க வேண்டும். உங்களிடம் உள்ள ஒரு வாகனத்தைப் பராமரிப்பது போன்றதுதான் இது. நம் உடலும் ஒரு வாகனம்தான்.
இதற்கு நான் இரண்டு பேரை உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறேன். ஒருவர், யோகா குரு சௌந்தர். இன்னொருவர், சித்த மருத்துவர் பாஸ்கரன். இருவரையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
”அடுத்த முறை புவனேஸ்வரியிடம் சொல்லுங்கள். அந்த முறை உங்களின் உடையை பார்த்து எக்ஸலண்ட் என்று அந்த ஐரோப்பியன் சொல்லிச் சென்ற போது நானும் அருகில் இருந்தேன். அதே மாதிரி இன்னொரு சம்பவம் நாம் ஃப்யூஜி போகும் வழியிலும் ஒரு முறை நிகழ்ந்தது.”
இப்படி எழுதியிருப்பவர் தோக்யோவில் வசிக்கும் என் நண்பரும் எழுத்தாளருமான செந்தில்குமார்.

செந்தில்குமாரும் என்னைப் போலவே ஒரு ஹெடோனிஸ்ட். இரவு முழுவதும் நாங்கள் இருவரும் ஜப்பானிய பப்களில் நடனமாடுவதுண்டு. எழுத்தாளர்களில் செந்தில்குமார் அளவுக்குக் கொண்டாட்டமான ஒரு மனிதரை நான் கண்டதில்லை. கல்லூரியில் படிக்கும் மகன் இருக்கிறான். ஆனாலும் செந்தில்குமாரே ஒரு கல்லூரி மாணவனைப் போல்தான் இருப்பார்.
என்னை உடல் கேலி செய்யும் பிராமண நண்பர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்பதே நான் இதைத் திரும்பத் திரும்ப எழுதுவதன் காரணம். சாதியைச் சொல்லித் திட்டுகிறேன் என்று சொல்லாதீர்கள். தெளிவாகச் சொல்கிறேன். என்னை உடல் கேலி செய்யும் நண்பர்கள் அனைவரும் பிராமணர்களே. என் மனைவி உட்பட என்று சொல்கிறேன். அபிராமணர் ஒருத்தர் கூட என்னை இதுவரை உடல் கேலி செய்ததில்லை. எனக்கு புத்திமதி சொன்னதில்லை. ஏன் பிராமணர்கள் மட்டும் செய்கிறார்கள் என்பது பிராமண நண்பர்கள் தமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வியேயன்றி ”சாரு சாதியைச் சொல்லித் திட்டுகிறார்” என்று என் பக்கம் திரும்பக் கூடாது. நான் சாதியைச் சொல்லித் திட்டவில்லை. என் பிராமண நண்பர்களை நோக்கி ஒரு கேள்வி கேட்கிறேன். ஏன் நீங்கள் மட்டுமே அடுத்தவர் பற்றி உடல் கேலியில் ஈடுபடுகிறீர்கள்?
ஒரு எண்பது வயது பிராமணக் கிழவர் என் ஆடையலங்காரத்தைப் பார்த்து “யார் இது, பைத்தியம் மாதிரி?” என்று சொன்னார் என்று என்னிடம் சொல்லி, நான் மைலாப்பூர் அம்பி மாதிரி ட்ரெஸ் பண்ண வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயே புவனேஸ்வரி, உனக்கெல்லாம் எத்தனை கொழுப்பும் திமிரும் அஹங்காரமும் இருக்க வேண்டும்? இந்தத் திமிரை பிராமண சாதிதானே கொடுக்கிறது? அபிராமணர் ஒருத்தர் கூட என்னிடம் இப்படி அத்துமீறியதில்லையே?