மனுஷா ப்ரபானி திஸாநாயகவின் வர்ண மேகங்களிடையே இருந்து… என்ற இந்த நெடுங்கதையைத் தமிழில் ரிஷான் ஷெரீபின் மொழிபெயர்ப்பில் வாசித்த போது எனக்கு இரண்டு எண்ணங்கள் தோன்றின. தமிழில் இத்தனை தீவிரமான erotic எழுத்தை இதுவரை நான் எதிர்கொண்டதில்லை. அதுவும் ஜனன உறுப்புகளின் பெயர் பதியாமல். இரண்டாவது, இத்தனை தீவிரமான எழுத்தை அதே வீரியத்துடன் தமிழில் கொண்டு வந்த ரிஷான் ஷெரீபின் லாவகம்.
இதை வாசிக்கும்போது இன்னொரு லத்தீன் அமெரிக்கச் சிறுகதை ஞாபகம் வந்தது. அந்தக் கதைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்றாலும் உள்ளீடாக ஏதோ ஒன்று அதற்கும் இதற்கும் இடையே ஓடுகிறது. உருகுவாயைச் சேர்ந்த Armonia Somers என்ற பெண் எழுத்தாளர் எழுதிய The Fall என்ற சிறுகதை. அந்தக் கதையை சுருக்கமாக நான் மொழிபெயர்த்திருக்கிறேன்.
சிங்கள இலக்கிய உலகம் இப்படி ஒரு கதைக்கு இடமளிக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். இந்த நெடுங்கதை பற்றிய விவாதங்கள் உருவானால் அது நமது இலக்கியச் சூழலுக்கும் பயனளிப்பதாக இருக்கும்.
