சில தினங்களுக்கு முன்பு ஒரு உதவி இயக்குனர் தான் எழுதிய நாவல் ஒன்றை எனக்கு மின்னஞ்சல் செய்து இதைப் படித்துப் பார்த்து கருத்து சொல்லுங்கள் என்றார். நான் அதை குப்பையில் தள்ளி விட்டேன். அதற்கு அர்த்தம் அது குப்பை என்பது அல்ல. அது ஒரு உலக காவியமாகக் கூட இருக்கலாம். எனக்கு அதைப் படிக்கவெல்லாம் நேரமில்லை. அப்படியே நேரமிருந்தாலும் நான் ஏன் அதைப் படிக்க வேண்டும் என்று தோன்றியது.
இன்று எனக்குத் தெரியாத ஒரு எண்ணிலிருந்து ஒரு அழைப்பு. தெரியாத எண் என்றால் உடனே எடுத்து விடுவேன். ஆனால் இன்று அப்படி எடுக்க முடியவில்லை. நான் அழைத்தேன். அழைப்பு போகவில்லை. நாலைந்து முறை அழைத்தேன். ஒன்றும் நடக்கவில்லை. அரை மணி நேரம் கழித்து அழைத்தேன். அப்போதும் போகவில்லை. பிறகு அரை மணி கழித்து அவரே அழைத்தார்.
மின்னஞ்சலில் நாவல் அனுப்பியவர். அந்த நாவலைப் படிப்பதற்கு நான்தான் சரியான ஆள் என்று நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஏனென்றால், அது அவர் வளர்த்த செல்ல நாயைப் பற்றிய நாவல். சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் இது ஒரு எழுத்தாளனின் மீது செலுத்தப்படும் மிகக் கொடூரமான வன்முறை என்பது அந்தத் தம்பிக்குத் தெரிந்திருக்கவேயில்லை. இப்போது இதை அவர் படிக்கக் கூட மாட்டார். ஏனென்றால், அவர் என் எழுத்தை ஒரு வார்த்தை கூட படித்திருக்க மாட்டார். அது அவர் பேச்சிலேயே தெரிந்தது. படித்திருந்தால் அதைப் பற்றிப் பிரஸ்தாபித்திருப்பார். எக்ஸைல் படிக்கவில்லை. ராஸ லீலா படிக்கவில்லை. நாய்கள் பற்றியும் பூனைகள் பற்றியும் நூற்றுக்கணக்கான பக்கங்கள் எழுதியிருக்கிறேன்.
கற்பனை செய்து பாருங்கள். நான் அசோகமித்திரன் எழுதிக் குவித்த புத்தகங்களில் ஒன்றைக் கூட படித்ததில்லை. ஆனால் அவரிடம் போய் என் புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொல்கிறேன். எப்பேர்ப்பட்ட வன்முறை! ஆனால் அசோகமித்திரன் அந்தக் காலத்து ஆசாமி. படிப்பார்.
இந்த வன்முறை எப்படியிருக்கிறது என்றால், சாலையில் போகும் ஒரு பெண்ணைப் பார்த்து, “உன்னோடு படுக்க விரும்புகிறேன், வருகிறாயா?” என்று கேட்பதைப் போன்றது. பதிலுக்கு அவள் என்ன செய்வாள்?
தம்பியின் நாவல் இருநூறு பக்கத்துக்கு மேல் இருக்கிறது. அதற்கு நான் எத்தனை மணி நேரம் செலவு செய்ய வேண்டும்? எப்படி? ஓசி! தம்பிகளா, வேசியிடம் கூட ஓசியில் ஓள் போட முடியாது. அப்புறம் எப்படி ஒரு எழுத்தாளனை அணுகி இதைப் படித்துப் பாருங்கள் என்று கூசாமல் சொல்லத் தோன்றுகிறது?
தமிழ்ச் சமூகத்தில் எழுத்தாளன் என்றால் யார் தெரியுமா? சாலை ஓரத்தில் நின்று கொண்டிருப்பவன். யார் வேண்டுமானாலும் போய் அவன் வாயில் சாமானைப் போடலாம். கேள்வி கேட்பாரே இல்லை.
நான் ஒரு நாளில் என்னென்ன செய்கிறேன், எத்தனை மணி நேரம் தூங்குகிறேன், என்னவெல்லாம் செய்து தியாகராஜா நாவலை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்… இதில் எதுவாவது அந்த இளைஞருக்குத் தெரியுமா? ரஜினிகாந்திடம் போய் இந்த உரிமையை எடுத்துக் கொள்வீர்களா? அதை விடுங்கள். ஒரு இயக்குனரிடம் போய் உங்கள் படத்தைக் காண்பிப்பதற்கு நீங்கள் எத்தனை பாடு பட வேண்டும்? ஒரு உதவி இயக்குனர் சொன்னார், ஒரு பிரபல இயக்குனரிடம் போய் அவர் அலுவலகத்தில் நின்றாராம். அவர் பார்வை படும்படி. இரண்டு வருட காலம். தினம் தினம். அவர் இவரை முகத்தைக்கூட பார்க்கவில்லை. இரண்டு வருட காலம் சென்று ஒருநாள் நீ யார் என்று கேட்டிருக்கிறார். இவர் பதில் சொல்ல, இப்போது முடியாது என்று பதில் சொல்கிறார் இயக்குனர். முடியாது என்ற பதிலைப் பெறவே இரண்டு வருட காலம் தினம் தினம் போய் இயக்குனர் அலுவலகத்தில் போய் தவம் செய்திருக்கிறார்.
ஆனால் எழுத்தாளன் என்றால், இருநூறுக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட நாவலை அனுப்பி படித்துப் பார்த்து கருத்து கூறுங்கள். ஐந்து லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தினால்கூட இந்த வேலைக்கு இப்போது என்னிடம் நேரம் இல்லை.
சமூகம் இந்த அளவுக்கு நாறிக் கிடக்கிறது.
நீங்கள் நினைக்கலாம், தூக்கிப் போட்டு விட்டுப் போக வேண்டியதுதானே? இதற்கெல்லாம் ஏன் எதிர்வினை செய்கிறீர்கள்?
மேலே ஒரு உதாரணம் சொல்லியிருக்கிறேன். அதை மீண்டும் வாசியுங்கள். புரியும்.