சாரு நிவேதிதா ஐரோப்பிய சினிமா – அறிமுக பயிற்சி பட்டறை பாண்டிச்சேரியில் நடத்துகிறார். லௌகீக வாழ்வில் சாரு, தான் ஒரு “ஸ்மார்ட்” அல்ல என்று பலமுறை எழுதியிருக்கிறார். ஐயா லௌகீக வாழ்வில் எப்போதும் லேட் பிக் அப் தான். ஒரு சாதாரண அல்ப விஷயத்தைக் கிளிப்பிள்ளைக்குச் சொல்லிக் கொடுப்பது சொல்லிக் கொடுத்தாலும் சரியாகத் தவறாகச் செய்வார். ஆனால் இப்படித் தவறாகச் செய்வதில் எப்போதும் தவறியதில்லை. அது ஒரு அருமையான மனப்பாங்கு என்று வையுங்கள். விமானப் பயணத்தின் போது மட்டுமே அவர் சரியான இடத்தில் இறங்கியிருக்கிறார். அதிலும் டேரக்ட் ஃபிலைட்டாக இருக்க வேண்டும். அதை விட முக்கியம் எமர்ஜென்ஸி விண்டோ வரிசையில் சீட் போட்டு இருக்கக் கூடாது.
எழுத்தில் சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் எல்லோரையும் செறாவால் விளாசி எடுப்பவர், நேர்ப்பேச்சில், நேரில் பழகுகையில் அடுத்தவர் ஆஸ் ஃபக் செய்துகொண்டிருந்தால் கூட உடனடியாக அவருக்குத் தெரிய வராது. சிரித்துக்கொண்டே அதை ரசித்துக்கொண்டு இருப்பார். பிறகு சாவதானமாக ஆய் போய் விட்டு கழுவும் போது கையில் ரத்தத்தைப் பார்த்துதான், ஆஹா நம்மை ஆஸ் ஃபக் செய்திருக்கிறார்கள் எனத் தெரியவந்து கொலைவெறியாகி சம்மந்தப்பட்டவரை பழிவாங்கத் திட்டம் போடுவார். வேறு என்ன ? பின் நவீனத்துவ “வாழ்தல் எப்படி?” கட்டுரை எழுதி அவரைப் போட்டுத் தாக்கிவிட்டோம் என சந்தோஷப்பட்டுக்கொள்வார். அன்னார், சாரு என்னைப் போட்டுப் பொளந்துவிட்டார் என பர்மனண்ட் மெண்டல் ஆகித் திரிவது தனிக்கதை. விசித்திரங்களைத் தன்னகத்தே கொண்டதுதானே யூனிவர்ஸ்?
லௌகீக வாழ்வில் இப்படி இருக்கும் சாரு நிவேதிதா தான் இலக்கியம் மற்றும் உலக சினிமா என வந்துவிட்டால் அதி புத்திசாலி ஆகி விடுவார். அரக்கன் அவதாரம் எடுத்துவிடுவார். இலக்கியம் மற்றும் சினிமாவில் ரசனை சார்ந்து, நுட்பம் சார்ந்து சாரு அளவுக்கு தமிழ்நாட்டில் நான் இன்னொருவரைக் கண்டதில்லை. குட்டி குட்டி “நுவான்ஸ்” கூட விடாமல் பிடித்து விடுவார். சினிமா விமர்சனம் எழுதுவதில் சாருவுக்கு பின்னாலும் , சாருவுக்கு அடுத்தும் மிக நீண்ட இடைவெளி நிலவுகிறது. இது அனைவருக்கும் வெளிப்படையாகக் கண்ணுக்குத் தெரியும் இடைவெளி. இங்கே எல்லோரும் இடைவெளியைக் கொண்டாடி மகிழ்ந்து இடைவெளியை உண்டாக்கியவனை புறந்தள்ளி விடுவார்கள். தன்னை ஒரு ஜெர்மன் சினிமா ப்ராடக்ட் எனச் சொல்லிக்கொள்பவர் சாரு நிவேதிதா. உலகில் எந்த ஒரு எழுத்தாளனும் தன்னை இப்படிச் சொல்லிக்கொள்ள மாட்டான் என நினைக்கிறேன். டால்ஸ்டாய் ப்ராடக்ட், காம்யூ ப்ராடகட், தஸ்தாவஸ்கி ப்ராடக்ட் என்றெல்லாம்தான் சொல்லிக்கொள்வார்கள். தன்னை ஒரு சினிமா ப்ராடக்ட் எனச் சொல்லிக்கொள்வது ஒரு எழுத்தாளனுக்கு அவமரியாதை என நினைப்பார்கள். ஏனெனில் எழுத்தாளன் என்பவன் தத்துவவாதிகளுக்கும் மேலே இருப்பவன். எந்த தர்க்கத்துக்கும் கட்டுப்படாதவன். எந்த தர்க்கத்துக்கும் கட்டுப்படாதவன் யார்? வேறு யார் கடவுள் தான். பெரும்பாலான எழுத்தாளர்கள் தங்களைக் கடவுளாகத்தான் நினைத்துக்கொள்வார்கள். சில கடவுளர்களுக்கு பக்த கோடிகளே இல்லாமல், யாருக்கும் அருள் பாலிக்க முடியாமல் ஒரு வேளை விளக்கு ஏற்றுவதற்கு கூட வசதி வாய்ப்பு இல்லாமல் கிடக்கிறது அல்லவா? அதற்காக அது கடவுள் இல்லை என்று ஆகி விடுமா? அதைப்போல சில எழுத்தாளர்கள் தனியாகக் காத்திரமாக இயங்கிக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் கூடத் தங்களை சினிமா ப்ராடக்ட் எனச் சொல்லிக்கொள்ள மாட்டார்கள். சாரு தன்னை இப்படிச் சொல்லிக்கொள்வதற்கு அதீத தன்னம்பிக்கை வேண்டும். மேலும் அப்பட்டமான உண்மைத்தன்மை வேண்டும். தன் வாழ்க்கை முழுவதையும் ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு, சாரு தன்னை இப்படிச் சொல்லிக்கொள்கிறார். அப்படிப்பட்டவர் ஐரோப்பிய சினிமா – ஒரு அறிமுகம் என்ற பயிற்சி பட்டறை நடத்துவது, மிக முக்கியமான நிகழ்வு.
சினிமா ரசனை மிகவும் தரம் தாழ்ந்து கிடக்கிறது. தமிழ் நாடு, இந்தியா என்றில்லை, உலக அலவிலேயே தற்போது சினிமா சீரழிவில் கிடக்கிறது. ஒரு பக்கம் சூப்பர் ஹீரோ படங்கள். இன்னொரு பக்கம் அனிமேஷன் குப்பைகள். இப்படித் திரும்பிப் பார்த்தால், வெப் சீரிஸ் கோஷ்டிகள் வாரம் ஒன்றைத் தூக்கிக்கொண்டு வருகிறார்கள். என்னடா எனப் பார்த்தால், க்ரைம், த்ரில்லர், சைக்கோ , அப்நார்மல் செக்ஸ் என ஒரு வட்டம் சுழன்றுகொண்டிருக்கிறது. யார் கொள்ளை அடிச்சது? யாரு கொலை பண்ணது? யார் யாரை எப்படிப் போட்டார்கள் என்பதையே கொஞ்சமும் சலிக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நல்ல ரசனையான, நம்மை மேம்படுத்தும் , சிந்திக்க வைக்கும் படங்கள் வருவதில்லையா எனில் , வந்துகொண்டுதான் இருக்கின்றன. இப்போதிருக்கும் அவசர உலகில், கமர்ஷியல் உலகில் எதுவும் கவனம் பெறுவதில்லை. இந்தப் பயிற்சிப் பட்டறையில், அதிகம் கவனம் பெறாத ஐரோப்பிய சினிமாக்கள் , பெரிய அளவில் வெளியில் தெரியாத ஐரோப்பிய சினிமா மேதைகளை சாரு அறிமுகப் படுத்துவார்.
நான் இந்தப் பயிற்சிப் பட்டறையைப் பற்றி இப்போதே விலாவாரியாகச் சொல்ல விரும்பவில்லை. சுருக்கமாகச் சொன்னால், ஐரோப்பிய சினிமாவை முன்வைத்து, ஒரு சினிமாவை எப்படி ரசிப்பது, எப்படி அணுகுவது, எப்படிப் புரிந்து கொள்வது என படம் வரைந்து பாகங்களைக் குறிப்பிடுவது போல க்ளிப்பிங்குகள் போட்டு விளக்குவார். மேலும் அந்த சினிமாவின் பின்னணி, அந்த இயக்குநரைப் பற்றிய விவரங்கள், இலக்கியத்துக்கும் அந்தக் குறிப்பிட்ட சினிமாவுக்குமான உறவு என்பதை எல்லாம் சுவாரசியமாக பகிர்ந்து கொள்வார். சினிமா எடுக்க விரும்புகிறவர்கள், சினிமாத்துறையில் இயங்கிக்கொண்டிருப்பவர்கள் மட்டுமல்லாமல், சினிமா ஆர்வலர்கள், நல்ல சினிமா பார்க்க வேண்டும், நம் சினிமா ரசனையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருப்பவர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். எப்படி கலந்துகொள்வது? நாள் நட்சத்திரம், தொடர்பு , கட்டணம் போன்ற விவரங்கள் விடியோவில் உள்ளன. முதல் கமெண்டை பார்க்கவும்.
***
