ஐரோப்பிய சினிமா அறிமுக நிகழ்ச்சியை ஏன் தவற விடக் கூடாது?

இந்த முறை நான் எந்தவித ப்ரமோஷன் வேலையும் செய்யவில்லை. என் நெருங்கிய நண்பர்களிடம் கூட நிகழ்ச்சிக்கு வருகிறீர்களா என்று தனிப்பட்ட முறையில் கேட்கவில்லை. என் குரலில் ஒரு காணொலியைத் தயார் செய்து அனுப்பினால் பலரையும் சென்று அடையும் என்று ராஜா சொன்னார். செய்யவில்லை. ஒரே ஒரு ப்ரமோஷன் வேலையில் கூட ஈடுபடவில்லை. காரணம், இந்த நிகழ்ச்சியில் நான் சொல்லப் போகும் விஷயங்களை ஐந்து லட்சம் ரூபாய் கட்டணம் கட்டி ஒரு அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில்தான் ஒருவர் கற்றுக் கொள்ள முடியும். ஏனென்றால், ஐரோப்பிய சினிமா பற்றி என் அளவுக்கு விஷயம் தெரிந்தவர்கள் உலக அளவிலேயே ஒரு ஐந்து பத்து பேர்தான் இருப்பார்கள். அவர்கள் உலகின் மிகப் பிரபலமான பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணி புரிவார்கள். நான்தான் இங்கே தனிப்பட்ட முறையில் வகுப்பு எடுக்கிறேன்.

வந்தவர்கள் பயன் பெறுவார்கள். வராதவர்களுக்கு நஷ்டம் எதுவும் இல்லை. கிடைக்காமல் போனது என்ன என்று தெரிந்தால்தானே நஷ்டம் கஷ்டம் எல்லாம்? இன்னொரு உதாரணம் சொல்வதானால், கல்கி, ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றவர்களை மட்டுமே படித்தவர்களுக்கு புதுமைப்பித்தனும், தி. ஜானகிராமனும், அசோகமித்திரனும் தெரியாமலே போனால் யாருக்கும் நஷ்டமில்லை என்கிறேன். எட்டு கோடி பேரில் நூறு பேர்தான் என் புத்தகங்களை வாங்குகிறார்கள் என்ற ஒரு சமூகத்தில் நான் வேறு எப்படி யோசிக்க முடியும், சொல்லுங்கள்?

ஆனால் ஒரு வேலையை எடுத்தால் அதை என்னை விட சிறப்பாகக் கடவுளால் கூட செய்ய முடியாது என்ற அளவுக்கு அதில் நான் சிரத்தை எடுத்துக் கொள்பவன். உதாரணமாக, நான் ஐஏஎஸ் தேர்வுக்குப் படித்தால் நான்தான் இந்தியாவிலேயே முதலாவதாக வருவேன். அதில் எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால் நான் செல்லும் விமானத்தை சரியாகப் பிடித்து சரியான இடத்தில் இறங்க வேண்டும் என்றால் அது என்னால் இயலாது. அதில் பல குளறுபடிகள் நடக்கும். அதனாலேயே நான் ஒரு நண்பரைக் கூட சேர்த்துக் கொள்வது வழக்கம்.

ஆனால் சீனி சொல்வதை என்னால் ஒரு சதம் கூட ஒப்புக் கொள்ள முடியாது. சீனியின் நல்லதிர்ஷ்டம்தான் அவருக்கு நான் நண்பனாக இருப்பது. என்னுடைய நண்பர்கள் செய்யும் காரியங்களைப் பார்த்தால் நான் சீனியை விட கெட்டிக்காரன் என்றே நினைக்க வேண்டியிருக்கிறது. அந்த அளவுக்கு சொதப்புகிறார்கள். கற்பனையே செய்ய முடியாத அளவுக்கு சொதப்புகிறார்கள். உதாரணமாக, எனக்கும் உங்களுக்கும் சேர்த்து வெப் செக் இன் செய்து விடுங்கள் என்று நண்பரிடம் சொன்னேன். அவர் ஒரு கம்பெனியில் மாதம் நாலு லட்சம் சம்பளம் வாங்குகிறார். மிக உயர்ந்த பதவி. வெப் செக் இன் சாத்தியம் இல்லை என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார். எனக்கு நம்பிக்கை வரவில்லை. சீனியிடம் சொன்னேன். ஒரு நிமிடத்தில் வெப் செக் இன் முடிந்தது. நண்பருக்கும் சேர்த்து செய்து விடுங்கள் என்றேன். கடுமையான கெட்ட வார்த்தையில் திட்டினார். என்னை அல்ல என்று சொல்ல வேண்டியதில்லை. என் நண்பர்கள் எல்லோருமே சொதப்புவதில் என்னை விட பயங்கரமாக இருக்கிறார்கள் என்பது ஏனோ சீனிக்குத் தெரியவில்லை.

மேலும், லௌகீக காரியங்களில் நான் சொதப்பல் பேர்வழியாக இருப்பதால்தான் இலக்கியத்தில் சூட்டிகையாக இருக்கிறேன் என்பதும் எனக்குத் தெரியும். மூளை அங்கே வேலை செய்தால் இங்கே சொதப்பி விடும். மட்டுமல்லாமல், மேற்கத்திய எழுத்தாளர்கள் பலரது அன்றாட வாழ்க்கையைப் பார்க்கும்போது நானெல்லாம் சீனியை விட கெட்டிக்காரன் என்று தோன்றுகிறது. அந்த்தோனின் ஆர்த்தோவின் வாழ்க்கை ஒன்றே போதும். அயர்லாந்து போகிறார் தலைவர். சுங்க அதிகாரியிடம் ஏதோ பிரச்சினை. அடித்து விடுகிறார். ஆர்த்தோவைப் பைத்தியம் என்று சொல்லி உள்ளே போட்டு விடுகிறார்கள். ஏழெட்டு ஆண்டுகள். ஐம்பது அறுபது மின் அதிர்ச்சி. வாழ்வே நாசம். ஒரே ஒரு கலாட்டாதான் காரணம்.

இரவு பகலாக ஐரோப்பிய சினிமா பார்த்துக்கொண்டிருக்கிறேன். எத்தனை பேர் கட்டணம் செலுத்தினார்கள் என்று பார்க்கக் கூட நேரம் இல்லை. கட்டணம் செலுத்தியவர்கள் அதற்கான சான்றைக் காண்பித்து விட்டு அரங்கத்தில் வந்து விடலாம். என்னிடமிருந்து பதில் வரவில்லை என்று எதிர்பார்க்க வேண்டாம். மாணவர்களும் அப்படியே. அடையாள அட்டையைக் காண்பித்தால் போதும்.

பத்தே பேர் வந்தால் கூட பயிற்சி வகுப்பு சர்வதேசத் தரத்தில் இருக்கும் என்பதை உறுதி செய்கிறேன்.

புதிய மாணவர்களாக இருந்தால் என் உரையைப் புரிந்து கொள்வதில் சிறிது சிரமம் இருக்கலாம். ஆனால் நான் பரிந்துரை செய்யும் திரைப்படங்களைத் திரும்பவும் பார்த்தால் நான் சொன்னதைப் புரிந்து கொள்ளலாம்.

ஐரோப்பிய சினிமா பற்றி ஒரு வருட காலம் ஒரு பல்கலைக்கழகத்தில் பாடம் எடுத்தால்தான் நான் சொல்ல வேண்டியதை சொல்ல முடியும். ஒரு நாளில் சமுத்திரத்தின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தை எட்டிப் பார்ப்பது போல்தான் காண்பிக்க முடியும். ஆனால் அதைப் பிடித்துக்கொண்டே நீங்கள் ஐரோப்பிய சினிமாவின் உள்ளே சென்று விடுவதும் சாத்தியமானதுதான்.

முந்நூறு பேருக்கு மதிய உணவு திட்டமிடப்பட்டிருக்கிறது. நேரில் வர முடியாதவர்களுக்குக் காணொலி அனுப்புகிறேன் என்று சொன்னேன். யாருமே கண்டு கொள்ளவில்லை. அமெரிக்காவிலிருந்து ஒரே ஒரு நண்பர்தான் பணம் அனுப்பினார். இதையெல்லாம் நான் இப்போது ஒரு ரொபாட் மாதிரியே பார்க்கப் பழகிக்கொண்டு விட்டேன். (ரோபோ என்பது தவறான உச்சரிப்பு. ரொபாட் என்பதே சரி)

குஸ்த்தூரீத்ஸா என்ற யூகோஸ்லாவிய இயக்குனர் பற்றியே ஒரு மாதம் பாடம் எடுக்கலாம். அவருடைய அண்டர்க்ரௌண்ட் என்ற படத்தை இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் எழுத்து எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது படம்.

கட்டணம் செலுத்துவதற்கான விவரம்:

தொலைபேசி எண்: 95975 00949

கட்டணம்: 2000 ரூ. மாணவர்களுக்கு: 1000 ரூ.

இடம்: மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி, பாண்டிச்சேரி

காலை பத்து மணியிலிருந்து மாலை ஆறு வரை.

charu.nivedita.india@gmail.com

ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்: ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai