யோகா குரு சௌந்தர் என்னைப் பற்றி எழுதியிருக்கிறார். அதன் இணைப்பு : https://barnasalai.blogspot.com/2025/11/blog-post_30.html?m=1&fbclid=IwY2xjawOaFYFleHRuA2FlbQIxMQBicmlkETFBNzJjMWpQMVdqbHc5Qk1rc3J0YwZhcHBfaWQQMjIyMDM5MTc4ODIwMDg5MgABHlL7qdMvcIluHuAx84H9mSRXi0RojxUwy76163CDGmzEpjWYMzt71Ua7atRE_aem_eF1w2tRBHjg3CxcyTdnokw
இந்தப் பதிவில் உள்ள ஒரு விஷயம் பற்றி இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது. அதாவது, என்னோடு பழகும் நண்பர்கள் பற்றி நான் கொஞ்ச காலத்தில் திட்டி எழுதி விடுகிறேன். இப்படி ஒரு கருத்து பலரிடமும் இருக்கிறது. இதற்கு நான் பல காலமாக பதிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனாலும், என் பதில் பற்றி யாருக்கும் கவலை இல்லை. தாங்கள் சொல்வதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இப்போது ’எல்லோரும் இன்புற்றிருக்க ஒரு வாழ்வியல் கையேடு’ குறுநாவலைப் படித்த பிறகு எல்லோரும் தங்கள் கருத்தை மீண்டும் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். ’இன்னாரையே திட்டி விட்டார், இனிமேல் என்ன சொல்ல இருக்கிறது?’
என்னால் வளர்ந்த ஒருவர் சாருவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எழுதினால் நான் திட்டுவேனா, இல்லையா என்பதுதான் என் கேள்வி. தூங்கும் நாயை ஏன் கல்லால் அடிக்கிறீர்கள்? கல்லால் அடித்தால் அது குரைக்குமா, இல்லையா?
மிஷ்கினும் நானும் நெருக்கமான நண்பர்களாக இருந்தோம். பிறகு அவரை நான் திட்டி எழுதினேன். நூறு பக்கக் கட்டுரை. நூறு பக்கம் திட்டும் அளவுக்கு நான் என்ன பண்ணினேன் என்று அவர் நண்பர்களிடம் கேட்டிருக்கிறார். பண்ணினதால்தான் திட்டினேன். தேகம் நாவல் வெளியீட்டு விழாவுக்கு அவரைப் பேச அழைத்தேன். பொதுவாக சினிமாக்காரர்கள் சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளில் போய் பேசுவதற்கு பதிலாகக் கண்ணீர் உகுப்பார்கள். யாருக்காக நிகழ்ச்சி நடக்கிறதோ அவரைப் பாராட்டு மழையில் மூழ்க வைப்பார்கள். ஆனால் இலக்கிய விழாவுக்கு வந்தால் மனதில் உள்ளதைப் பேசுகிறேன் என்று சொல்லி விட்டு எதையாவது குத்தி வைப்பார்கள். இன்னும் புத்தகத்தைப் படிக்கவில்லை என்றோ, எந்தப் புத்தகத்தையுமே நான் படித்ததில்லை என்றோ சொல்வார்கள். மிஷ்கின் படிப்பாளி. தேகம் நாவல் சரோஜாதேவி செக்ஸ் புக், இதை யாரும் வாங்கிப் படிக்காதீர்கள் என்றார். அது மட்டும் அல்ல. சாரு என்னைப் பார்க்க வந்தால் செக்ஸ் மட்டுமே பேசுவார் என்றார். முதல் வரிசையில் என் மனைவி அவந்திகா.
எப்படி திட்டாமல் இருப்பேன்? தேகம் செக்ஸ் புக் என்றால் அவர் நிகழ்ச்சியைப் புறக்கணித்திருக்க வேண்டும். அதைக் கூட நான் மன்னித்து விட்டேன். ஆனால் செக்ஸ் பேச்சு? நான் அவரை வாரம் ஒருமுறை சந்தித்து மாலை ஏழு முதல் காலை ஆறு வரை பேசிக்கொண்டிருப்பேன். தத்துவம், இசை, சினிமா, இலக்கியம் தவிர வேறு எதையுமே நாங்கள் பேசியதில்லை. செக்ஸ் குறித்து ஒரு நாள் கூட பேசியதில்லை. மிஷ்கின் அதற்கான மனிதர் அல்ல.
இன்னொரு இயக்குனர். ஒரு ஆண்டு காலம் அவருக்காக நான் கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் செய்து கொடுத்தேன். இரண்டு படங்கள். உபயோகப்படுத்திக் கொண்டு பணம் தரவில்லை. பெயரையும் போடவில்லை. ஒரு காட்சி எழுதிக் கொடுத்த அராத்து பெயரைப் போட்டார். அதிர்ச்சி அடைந்தேன். திட்டி எழுதினேன். பெயர் குறிப்பிட்டேனா என்று ஞாபகம் இல்லை.
ஒரு நெருங்கிய நண்பர் என்னைப் பார்த்து “நீங்கள் அவந்திகாவை அடித்திருக்கிறீர்களா?” என்று கேட்டார். நான் அவளை ஒரு தெய்வத்தைப் போல் ஆராதிக்கிறேன். அதனால்தான் அவளால் என்னைப் பிரிந்து ஒரு நாள் கூட இருக்க முடியவில்லை. தொடர்ந்து என் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டிருந்த போது அவள் சொன்னாள்: ”எத்தனை மிரட்டல் வந்தாலும் சரி, நான் இருக்கிறேன்.”
”நீ எழுத்தாளன் தானே? ஏன் என்று சொல்?”
”அன்புதான்.”
“அது மட்டும் அல்ல, நீ என் கடவுள்.”
முப்பத்திரண்டு ஆண்டுகள் என்னோடு வாழ்ந்த, அறுபத்தைந்து வயதுப் பெண்மணி இதைச் சொல்கிறாள். அதிலும் அன்பு நாவலைப் படித்து விட்டு.
அதை விடப் பெருமையான தருணம் என் வாழ்வில் ஏதும் இல்லை.
நண்பரின் அந்தக் கேள்வி பற்றி மறுநாள் ப்ளாகில் எழுதினேன். திட்டவில்லை. நெருக்கமாகப் பழகின பிறகும் இப்படியெல்லாம் கேட்கிறார்கள் என்பது போல் எழுதினேன். பெயர் போடவில்லை. ஏதோ கந்தசாமி, மாடசாமி என்று போட்டேன். அவருக்கும் எனக்கும் இன்னொரு பொது நண்பருக்கும் மட்டும்தான் இந்த விஷயம் தெரியும். உடனே மறுநாள் பொதுநண்பர், “அவர் உங்களுக்கு எத்தனை உதவி செய்திருக்கிறார், அவர் மிகவும் வருத்தப்பட்டார், அந்தப் பதிவை நீக்கி விடுங்கள்” என்றார்.
மறுத்து விட்டேன். ஏனென்றால், யாரிடம் என்ன பேசுவது என்ற பண்பு இருக்க வேண்டும். ரமண மகரிஷியிடம் போய் “சாமி, நீங்கள் கர மைதுனம் செய்வதுண்டா?” என்று கேட்பது எப்படியோ அப்படிப்பட்டதுதான் என்னிடம் வந்து மேற்கண்ட கேள்வியைக் கேட்பதும்.
ஏனென்றால், நான் அன்புமயமானவன். என்னைச் சுற்றிலும் அன்பின் அலைகளும், கருணையின் மணமும் மட்டுமே வீசிக்கொண்டிருக்கின்றன. தேன்கனிக்கோட்டை என்ற ஊருக்கு சமீபத்தில் சென்றிருந்தேன். அதுவே சிறிய ஊர். அதற்குப் பக்கத்தில் ஒரு வனத்தில் ஒரு கிராமம் இருந்தது. பத்து வீடுகள்தான் இருக்கும். ஏதோ பத்து நூற்றாண்டு பின்னோக்கிப் போய் விட்டது போல் இருந்தது. ஒரு புல்வெளியில் அமர்ந்தேன். ஒரு நாய் வந்து என்னருகே அமர்ந்து என் மடியில் தலை வைத்துக் கொண்டது. அதைப் பார்த்து இன்னொரு நாய் வந்தது. இப்படியே ஒரு இருபது நாய்கள் என்னைச் சூழ்ந்து வந்து அமர்ந்து கொண்டன. என் வாழ்வின் மறக்க முடியாத ஒரு தருணம் அது. ஒரு நண்பர் எல்லா நாய்களும் போன பிறகு புகைப்படம் எடுத்தார். அவர் எடுத்த போது நான்கு நாய்கள்தான் என்னோடு இருந்தன. இத்தனைக்கும் என்னிடம் அப்போது பிஸ்கட் கூட இல்லை. எத்தனை நாய்கள் இருக்கும் என்று அருகிலிருந்த ராஜாவிடமும் பாஸ்கரனிடமும் கேட்டேன். இருவருமே இருபது நாய்கள் இருக்கும் என்றனர்.
எல்லோரையும் திட்டிக்கொண்டிருந்தால் இப்படி மனிதர்களும் பிற ஜீவராசிகளும் என்னோடு பழகுவார்களா?
வளன் என்னை ஜீஸஸ் என்கிறான். ஆனால் ஜாலியான ஜீஸஸாம். யாரையும் துன்புறுத்தக் கூடாது என்பதே என் மதம். நேற்று ஒருவரை என்னுடைய உளறுவாய் புத்தியால் துன்புறுத்தி விட்டேன். ஆயிரம் முறை இறை சக்தியிடம் மன்னிப்புக் கேட்டேன்.
எப்போது திட்டுகிறேன்? என் மகன் வயது ஆள் எனக்கு புத்திமதி சொன்னால் திட்டுகிறேன். பார்த்து அளவாகக் குடியுங்கள் சார். ஒரு நண்பர். மறுநாளே அவரை ப்ளாகில் வைத்துப் போடு போடு என்று போட்டேன். பெயர் போடவில்லை. ஆனாலும் பொதுவெளியில் வைத்து அசிங்கப்படுத்தி விட்டேன் என்ற சொல்தான் கிடைத்தது. குடி பற்றியோ எழுத்தாளர்கள் பற்றியோ உங்களுக்கு என்ன தெரியும்? குடி அடிமையா நூற்று இருபது நூல்களை எழுத முடியும்? முந்தாநாள் ஒரு மாலை நேரத்தில் நாலாயிரம் வார்த்தைகளைத் தட்டச்சு செய்தேன். இந்த உலகிலேயே இந்த அளவுக்கு வேகமாக எழுதக் கூடிய ஒரே ஒரு மனிதர்தான் இருக்கிறார். ஜெயமோகன். இதெல்லாம் உலக சாதனை. அப்படிப்பட்ட என்னிடம் வந்து அளவாகக் குடியுங்கள் என்று ஒருவர் சொல்லலாமா? எனக்கு அறிவுரை சொல்ல நீங்கள் யார், உங்களுக்கு என்ன தகுதி என்று கேட்கிறேன்.
வேறு எழுத்தாளர்கள் இப்படியெல்லாம் எழுத மாட்டார்கள். ஏனென்றால், அவர்களிடம் யாரும் வைத்துக் கொள்வதில்லை. என்னிடம் வைத்துக் கொள்கிறார்கள். அதனால் திட்டி எழுத வேண்டியிருக்கிறது.
அசோகமித்திரனைத் திட்டி எழுதினேனா? நாற்பது ஆண்டுப் பழக்கம்.
நகுலனைத் திட்டினேனா?
எந்த எழுத்தாளரை நான் திட்டி எழுதியிருக்கிறேன்?
நண்பர்களை எடுத்துக்கொண்டால், ஸ்ரீராம், செல்வகுமார், சீனி, ராஜா, குமரேசன், வளன், சுரேஷ் ராஜமாணிக்கம், கருந்தேள் ராஜேஷ் எல்லோரும் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேல் நட்பு. இப்போதைய நண்பர்கள் குமரேசன், கற்பகம், பாஸ்கரன், செக்கந்தர், தோக்யோ செந்தில் என்று எல்லோருமே இனிமையானவர்கள். க்ரானைட் துறையில் ஒரு பாஸ்கரன் உண்டு. கூட்டத்தில் பெண்கள் இருந்தால் ஆங்கிலத்தில் பேசுவார். கிண்டலாக சுட்டிக் காண்பித்தேன். இப்போது எப்போதுமே ஆங்கிலத்தில் பேசுகிறார்.
யோகா சௌந்தர் சரியாகவே சொல்லியிருக்கிறார். சாரு திட்டுகிறார் என்பது ஒரு வதந்தி.
நுண்ணுணர்வு உள்ளவர்களை நான் ஒருபோதும் திட்டியதில்லை. நுண்ணுணர்வு இல்லாதவர்கள் பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. ஆனால் நுண்ணுணர்வு இல்லாத தன்மையை என் மீது உரசி விடக் கூடாது. அவ்வளவுதான்.
யோகா சௌந்தர் பற்றி ஒரு விஷயம் சொல்ல வேண்டும். என் நண்பர் ஒருவர் அவரிடம் யோகா பயில்கிறார். இரண்டு மாதம் ஆயிற்று. கட்டணம் பற்றிக் கேட்டால் பிறகு சொல்கிறேன் என்றிருக்கிறார் சௌந்தர். அதன் பிறகு வற்புறுத்திக் கேட்ட போது ஒரு காரணம் சொல்கிறார். சிலர் மூன்று மாதத்துக்குப் பிறகு வகுப்புக்கு வருவதில்லை. முதலிலேயே பணத்தை வாங்கினால் பிறகு அவர்கள் நிற்கும்போது அவர்களுக்கு அந்தப் பணம் நஷ்டம்தானே? அதனால் மூன்று மாதத்துக்குப் பிறகும் தொடர்ந்து வந்தால் கட்டணம் வாங்குவேன்.
ஆனால் காலம் எப்படி இருக்கிறது? ஒரு ஆண்டுக்கான கட்டணத்தை முதல் நாளே பெற்றுக்கொண்டு விடுவார்கள். கட்டணம் கட்டியவர் நாலு நாள் கூட போக மாட்டார். அநேக உடற்பயிற்சிக் கூடங்களிலும், நடனம் மற்றும் விதேசி மொழி வகுப்புகளிலும் நடப்பது இதுதான். இப்படிப்பட்ட காலகட்டத்தில்தான் கட்டணம் பற்றி வேறு விதமாக யோசிக்கிறது ஒரு மனம்.
யோகா பயிலுங்கள். அதில் அவர் யோக நித்ரா என்று ஒரு யோகத்தைக் கற்பிக்கிறார். உங்கள் மன உளைச்சல், பொருமல் எல்லாமே பறந்து போகும்.
யோகா குரு சௌந்தரின் எண்: 99529 65505