காஃப்காவின் எழுத்தும் என் அன்றாட வாழ்வும்…


காஃப்காவின் எழுத்து எனக்குப் பிடிக்காது.  என் அன்றாட வாழ்வும் எனக்குப் பிடிக்காதது.  ஆனால் எனக்கு வேறு வழியில்லை.  இது என் மீது திணிக்கப்பட்டது.  இதிலிருந்து என்னால் விடுபட இயலாது.  எனக்குப் பிடித்தது போல் என் அன்றாட வாழ்வை அமைத்துக் கொள்வதற்கான வசதியும் வாய்ப்பும் எனக்கு இல்லை.  மார்க்கி தெ ஸாத் தன் வாழ்வின் பெரும் பகுதியை சிறையில் கழிக்க வேண்டியிருந்தது.  அதிலிருந்து மீள்வதற்கான வாய்ப்பு அவருக்கு இல்லை.  வான் காகின் வறுமையிலிருந்து மீள்வதற்கான வாய்ப்பு வான் காகுக்கு இல்லாதது போல என்று வைத்துக் கொள்ளலாம்.

என் ஒரு நாள் வாழ்வை ஆவணப்படமாகப் பதிவு செய்வதற்காக என் நண்பர் பாக்யராஜ் வேலூரிலிருந்து நேற்று இரவு வந்தார்.  அதற்கு முன்பாகவே அது பற்றிய தகவலைத் தெரிவித்திருந்தார்.  காலை நான்கு மணியிலிருந்து இரவு பத்து மணி வரை ஆவணப்படம் எடுக்கலாம் என்று இருக்கிறேன்.  இதை நான் காலை நான்கு மணியிலிருந்து காலை பத்து மணி வரையிலான ஃபோட்டோ ஷூட் என்று புரிந்து வைத்துக்கொண்டேன்.  அவர் வந்து சொன்ன பிறகுதான் எனக்கு விஷயம் விளங்கியது.  அதாவது, நான் படுக்கையிலிருந்து எழுந்து கொள்வதிலிருந்து இரவு உறங்கச் செல்லும் வரை. 

“ஆனால் இது என் விடுமுறைக் காலம்.  இப்போது நான் காலை ஏழு மணிக்குத்தான் எழுந்து கொள்கிறேன்” என்றேன்.  அப்படியானால் அதிலிருந்து தொடங்குவோம் என்றார்.

பன்னிரண்டுக்குப் படுத்து ஏழுக்கு எழுந்தேன்.  ஏழிலிருந்து தொடங்கி இரண்டு மணி வரை வீட்டு வேலை செய்து கொண்டேயிருந்தேன்.  ஒரு நிமிடம் கூட அமரவில்லை.  ஏழரையிலிருந்து எட்டே முக்கால் வரை நடைப்பயிற்சியும் கூட.  இரண்டு மணிக்கு வந்து ஒரு சிறிய ஸ்டூலில் அமர்ந்தேன்.  கால், இடுப்பெல்லாம் வலிக்கவில்லையா என்றார் பாக்யராஜ்.  இல்லை என்றேன் சிரித்துக்கொண்டே. 

அதற்குப் பிறகு குளியல், சாப்பாடு.  நேற்று நான் வைத்திருந்த மீன் குழம்பு இருந்தது.  ரசமும் சோறும் தருவித்துக்கொண்டேன்.  பாக்யராஜ் குடிக்க மாட்டார்.   புகைப்பழக்கமும் இல்லை.  பேச மாட்டார்.  கோபமும் வந்ததில்லை.  தான் ஒரு அதிர்ஷ்டசாலி என்று உங்கள் மனைவிக்குத் தெரியுமா என்றேன்.  தெரியாதே, கேட்டதில்லை என்றார்.  கேட்டுச் சொல்லுங்கள் என்றேன்.  பாக்யராஜ் சைவம்.  அதனால் அவருக்கு ஒரு சைவ சாப்பாடு வரவழைத்தேன்.  சீரகம் என்ற கடை.  உணவு நன்றாக இருந்தது என்றார்.

இந்த ஆவணப்படத்தைப் பார்த்தால் காஃப்காவின் எழுத்து போலவே இருக்கும் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை.  இப்படி ஒரு அன்றாட வாழ்வை எந்த ஒரு எழுத்தாளனும் வாழ்ந்திருக்கவில்லை என்று தோன்றிக்கொண்டே இருந்தது.  உலகின் மிக அபத்தமான அன்றாட வாழ்வு.  ஆனாலும் இந்த அபத்த வாழ்வின் ஊடே தான் மதியம் மூன்றிலிருந்து இரவு பத்து மணி வரை எழுதுவதற்கான நேரம் கிடைக்கிறது.  அது போதும்.  இந்த ஆவணப்படத்தைப் பார்க்க நேர்ந்தால் இந்த வார்த்தைகளுக்கான அர்த்தம் உங்களுக்குப் புரியும்.  இந்தப் படத்தை யாரேனும் விஷயம் தெரிந்த ஒருவர் எடிட் பண்ணினால் ஒரு எழுத்தாளனின் அன்றாட வாழ்வு குறித்த ஒரு உலகத் தரமான ஆவணப்படம் கிடைக்கும்.  இசையும் சேர்த்தால் கேட்கவே வேண்டாம்.