ஆசார்ய தேவோ பவ!


குருவை தெய்வமாகக் கருது. மேற்கண்ட ஸ்லோகத்தின் பொருள்.  தைத்திரீய உபநிஷதத்தில் வருகிறது.  குருவை தெய்வமாகக் கூட நினைக்க வேண்டாம்.  குருவை பைத்தியம் என்று சொல்லிக் கல்லால் அடிக்கக் கூடாது.  அடித்தால் என்ன ஆகும் என்று மஹாபாரதம் இப்படிச் சொல்கிறது:  ஸ குலஹீனஸ்ஸ்யாத் பாக்யமேவ ந ச ச்ரேயஸ் ஜஹாதி ஹி.   இதன் அர்த்தத்தை நான் சொல்லக் கூடாது.  இத்தனை எதிர்மறையாக எல்லாம் என் வாயிலிருந்தோ கரங்களிலிருந்தோ வார்த்தைகள் வராது. 

இந்தக் காலத்தில் எழுத்தாளன்தான் குருவின் ஸ்தானத்தில் இருப்பவன்.  அதனால்தான் உலகம் பூராவும் எழுத்தாளனைக் கொண்டாடுகிறார்கள். எத்தனையோ பேர் என்னுடைய எழுத்தினால் தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டு மகிழ்ச்சியோடு இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.  எத்தனையோ ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கை என் எழுத்தினால் இன்பமயமாகியிருக்கிறது. 

பாலன் நாயர் என்று ஒரு ஜோதிடர் இருந்தார்.  அவருக்குக் கிடைத்த பொருளைக் கொண்டு ஒரு கோவிலே கட்டியிருக்கிறார்.  சென்னையில் உள்ள வேங்கைவாசல் என்ற இடத்தில் இருந்தார்.  அவரை இரண்டு முறை சந்தித்திருக்கிறேன்.  பெரிய பெரிய அரசியல்வாதிகளின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் அவரிடம் வந்து சோதிடம் கேட்டுச் செல்வார்கள்.  ஏன் பெண்கள் என்கிறேன் என்றால், தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பெரியார் கோட்பாட்டை நம்புபவர்கள். 

நான் சந்தித்த போது பாலன் நாயருக்கு வயது எண்பதுக்கு மேல் இருக்கும்.  எனக்கு அறுபது வயது.  என்னை அவர் வீட்டின் தோட்டத்தைத் தாண்டி, தெரு வாசல் வரை வந்து வழியனுப்புவது வழக்கம்.  எத்தனை பெரிய செல்வாக்கான மனிதராக இருந்தாலும் இருந்த இடத்திலிருந்து வணக்கம் சொல்லி அனுப்புவதே அவர் வழக்கம் என்று எனக்குத் தெரியும் என்பதால் என்னை வாசல் வரை வந்து வழியனுப்பும் காரணத்தை அவரிடமே கேட்டேன்.  உங்களை மதிப்பது சரஸ்வதிக்கு நான் செய்யும் மரியாதை என்று கூறினார். 

ஆனால் திருமிகு அம்பி அவர்கள் என்னை விக்கிபீடியா எழுத்தாளர் என்று கூறுகிறார்.  காரணம் திருமிகு அம்பி அவர்களுக்கு சரஸ்வதி என்றால் யார் என்று தெரியாது.  அதாவது, இலக்கியம் தெரியாது.  இலக்கியம் தெரியாவிட்டால் மூடிக்கொண்டு கிடக்க வேண்டும்.  கருத்து சொல்லக் கூடாது.  எவனோ ஒரு எழுத்தாளன் தியாகராஜர் பற்றி எழுதினால் உனக்கு ஏன் பொத்துக்கொண்டு வருகிறது?

ஏனென்றால், திருமிகு அம்பி அவர்கள் ஒரு சாதி வெறியர்.  அதனால்தான் அபிராமணர்கள் ஒரு சங்கீத மேதை பற்றி எழுதக் கூடாது என்கிறார்.  இதை நான் சென்ற மாதம் வரை கூட நம்பவில்லை.  ஏதோ ஒரு நிரட்சர குட்சி உளறுகிறது என்றே விட்டு விட்டேன்.  நிச்சயமாக திருமிகு அம்பி அவர்கள் சாதி வெறியர் என்றே நினைக்கவில்லை.  ஆனால் அவர் என்னை சங்கீதத்தில் ஒன்றும் தெரியாதவன் என்று சொல்லியிருப்பதைப் பார்த்துத்தான் அவர் ஒரு தீவிரமான சாதி வெறியர் என்று கண்டு பிடித்தேன். 

அதாவது, பஞ்சரத்னா கீர்த்தனை என்று சொல்லக்கூடாதாம்.  பஞ்சரத்ன கீர்த்தனை என்றுதான் சொல்ல வேண்டுமாம்.  பஞ்சரத்னா கீர்த்தனை என்று விக்கிபீடியாவில்தான் போட்டிருக்கும்.  இந்த எழுத்தாளர் விக்கிபீடியாவைப் பார்த்து எழுதுகிறார்.  அதனால் இவர் விக்கிபீடியா எழுத்தாளர்.  போட்றா அருவாளை!  ஆள் செத்தானா, இருக்கானா, பார்?

திருமிகு அம்பி அவர்களுக்கு இந்தக் கீழ்சாதிக்காரன் சொல்லிக் கொள்வது என்னவென்றால், எனக்கு சங்கீதமே தெரியாது.  எனக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.  தியாகராஜர் ஸ்ரீராமனை நேரில் தரிசித்தார்.  ஒரு முறை அல்ல, மூன்று முறை.  ஒருமுறை தியாகராஜரின் தமையன் அவரை அடித்து விட்ட போது தியாகராஜர் மயக்கமடைந்து விழுந்து விட்டார்.  அப்போது ஸ்ரீராமன் தான் வந்து தியாகராஜரைத் தொட்டுத் தூக்கிக் கொண்டு போய் பக்கத்து வீட்டில் விட்டார்.  பக்கத்து வீடு தியாகராஜர் வீடு.  இன்னொரு முறை ஒரு முதியவராக சீதாபிராட்டியுடனும் அனுமனுடனும் வந்து தரிசனம் கொடுத்தார்.  தியாகராஜர் கோபித்தார்.  வருத்தமடைந்தார்.  முதல் முறை வந்த போது எனக்குப் பிரக்ஞை இல்லை.  இரண்டாம் முறை வந்த போது உன்னை ஒரு முதியவர் என்று நினைத்து விட்டேன்.  நீ ஸ்ரீராமன் என்றே எனக்குத் தெரியாது.  நீ நீயாகவே வர வேண்டும்.  அதை நான் பார்க்க வேண்டும்.  வந்தார். 

இதை தியாகராஜர் எழுதியிருக்கிறார்.  இதை என்னுடைய கற்பனை என்று நினைக்காதீர்கள் என்றும் எழுதியிருக்கிறார். 

அதேபோல் நாரதரும் தியாகராஜருக்கு தர்ஸனம் கொடுத்திருக்கிறார். அப்போது தியாகராஜருக்கு ஸ்வரார்ணவம் என்ற நூலைக் கொடுத்தார்.  இசையின் ரகசியங்களை விளக்கும் இந்த நூல் சிவன் பார்வதியுடன் நிகழ்த்திய உரையாடல். இதை சிவன் பார்வதிக்கு அளித்து பார்வதி நாரதருக்கு அளித்தது.  இந்த நூலைப் படித்து முடித்ததும் நூல் காணாமல் போய் விட்டது. 

இதெல்லாம் என் வாழ்வில் நடந்தது என்கிறார் தியாகராஜர்.  தமிழின் முதல் ஆட்டோஃபிக்‌ஷன் எழுத்தாளர்.  நான் நம்புகிறேன். 

இந்த நம்பிக்கை ஒன்றுதான் என்னுடைய தியாகராஜர் நாவலின் ஆதாரம்.  

ஒரு சிங்களப் பெண்ணை ஒரு பப்பில் சந்தித்தேன்.  அதுதான் முந்நூறு பக்க நாவல் பெட்டியோ. 

கற்பனையில் நான் கோடி பக்கம் எழுதுவேன்.  எழுதுவது நான் அல்ல.  லா.ச.ரா. சொல்வது போல் சரஸ்வதி. 

நான் என்ன சங்கீத ஆராய்ச்சி நூலா எழுதுகிறேன்?  நான் எழுதுவது நாவல்.  நாவல் என்பது இலக்கியம்.  சங்கீதம் அல்ல.  திருமிகு அம்பி அவர்களே, உங்களுக்கு இலக்கியம் தெரியாவிட்டால் அதற்கு நான் என்ன செய்வேன்?  ஏன் என்னை நோண்டுகிறீர்? 

திருமிகு அம்பி அவர்களே, உங்களை சாதி வெறி பிடித்தவர் என்று கூறினேன்.  ஏன் தெரியுமா?  எனக்குத் தெரியும், உனக்குத் தெரியாது என்று நினைப்பதே சாதி வெறி.  பஞ்சரத்ன கீர்த்தனைகள் கூட தெரியவில்லை, தப்பாக எழுதியிருக்கிறார், அதையும் பஞ்சரத்னா கீர்த்தனை என்கிறார்.  ஏனென்றால் விக்கிபீடியாவில் பஞ்சரத்னா என்றுதான் இருக்கிறது. 

இதுதான் சாதி வெறி.  பஞ்சரத்ன கீர்த்தனைகள் கூடத் தெரியாதவன் தியாகராஜர் பற்றி எழுதுகிறான்.  இதுதான் சாதி வெறி.  ஒரு குறிப்பிட்ட சாராரைத் தொடக் கூடாது என்று தீண்டாமையை வகுத்தீர்கள் அல்லவா?  ”இவனுக்குப் பஞ்சரத்ன கீர்த்தனைகள் தெரியவில்லை.  முட்டாள்.  இந்த விக்கிபீடியா முட்டாள் எப்படி தியாகராஜரைப் பற்றி எழுதலாம்?”  இது சாதி வெறிதானே?

திருமிகு அம்பி அவர்களின் (உடன் பிறவா) தமக்கை சில தினங்கள் முன்பு எனக்கு ஃபோன் செய்து என்னைக் காட்டமாகத் திட்டினார்.  ஏன் எங்கள் அம்பி சொன்னதில் என்ன தப்பு?  ஒரு எழுத்தாளர் தியாகராஜர் பற்றி நாவல் எழுதக் கூடாது என்று நினைக்கக் கூடாதா?  அப்படிச் சொல்வதற்கு எங்கள் அம்பிக்கு உரிமையில்லையா?

உரிமை இல்லை.  தீண்டாமை ஒழிப்புச் சட்டப்படி குற்றம்.  ஒருத்தனைத் தொடக் கூடாது என்று உங்களுக்குத் தோன்றக்கூட செய்யலாம்.  ஏனென்றால், அந்த எண்ணம் உங்கள் மனதுக்குள் இருக்கிறது.  வெளியே தெரிந்தால்தான் தண்டனை.  எனவே ஒரு எழுத்தாளன் இன்னது எழுத வேண்டும், இன்னதை எழுதக் கூடாது என்று சொல்ல எந்த நாய்க்கும் உரிமை இல்லை.  (நான் ஒரு நாய் நேசன்.  நாய்கள் மன்னிக்கவும்!)  இது சங்கீத சமாச்சாரம், இதை இவன் எழுதக் கூடாது என்றால், அந்தக் காலத்துத் தீண்டாமைதான்.  கிரிக்கெட் ஒரு கட்டத்தில் பிராமணர்களின் வசம் இருந்தது.  அந்த மாதிரிதான் இதுவும்.  திருமிகு அம்பி அவர்கள் இன்னமும் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே இருக்கிறார் போல் தெரிகிறது.  கொஞ்சம் அக்ரஹாரத்தை விட்டு வெளியே வந்து பாருங்கள் திருமிகு அம்பி அவர்களே!

இன்னொரு விஷயம்.  120 நூல்களை எழுதிய ஒருத்தனை விக்கிபீடியா எழுத்தாளன் என்கிறீர்களே, இது கோவணம் கட்டிய ஒரு சந்நியாசியை செருப்பால் அடிப்பது போன்ற செயலுக்குச் சமம்.  அதனால்தான் மேலே இரண்டு ஸ்லோகங்களைக் கொடுத்திருக்கிறேன்.  ஆச்சாரியார்களை அவமதிக்காதீர்கள் என்று.  அவமதித்தால் என்ன நடக்கும் என்று மஹாபாரதத்தின் அனுஷாஸன பர்வம் கூறுகிறது. 

மேலும் ஒன்று, நான் தியாகராஜா நாவலை தமிழில் எழுதவில்லை.  ஆங்கிலத்தில்தான் எழுதுகிறேன்.  ஆங்கிலத்தில் அ, ஆ என்பதற்கு எழுத்துக்கள் இல்லை.  Pancharatna Kritis என்றுதான் எழுதியிருக்கிறேன்.  இப்படித்தான் படித்துக்கொண்டும் இருக்கிறேன்.  நான் படிப்பது அனைத்தும் ஆங்கிலத்தில்தான்.  தமிழில் அல்ல.  அதனால்தான் ஆனாவா, ஆவன்னாவா என்ற வித்தியாசம் தெரியவில்லை.  உடனே தூக்கிக் கொண்டு வருகிறீர்கள், சாதித்திமிர் விளக்குமாற்றை!  உங்களையெல்லாம் என்னதான் செய்வது?

அதனால்தான் சொன்னேன், பிராமணர்களுக்கு ஒரு வசதி இருக்கிறது என்று.  உங்களுக்கு சங்கீதத்தில் இஷ்டம் இல்லை என்றாலும் உங்கள் செவிகளில் சிறு பிராயத்திலிருந்தே பஞ்சரத்ன கீர்த்தனைகள் விழுந்திருக்கும்.  எனக்கு கல்லக்குடி கொண்ட கருணாநிதி என்ற கீர்த்தனைதான் விழுந்தது.  அந்தக் கீர்த்தனையையும், மச்சானைப் பாத்தீங்களா, எலந்தபயம் எலந்தபயம் எலந்தபயம், செக்க செவந்த பயம், தேனாட்டம் இனிக்கும் பயம், எலந்தப் பயம் பழுத்திருந்தா, எடுத்து எடுத்து கடிக்கலாம், ஊற வச்சும் துண்ணலாம் என்பது போன்ற கீர்த்தனைகளைக் கேட்டு வளர்ந்தவன்.  எனக்கு எப்படித் தெரியும், பஞ்சரத்ன கீர்த்தனையா, பஞ்சரத்னா கீர்த்தனையா என்று,   சொல்லுங்கள் திருமிகு அம்பி அவர்களே?

ஒரு எழுத்தாளன் பிழை விட்டால் அதைச் சுட்டிக் காட்டலாம்.  ஆனால் அதில் விநயம் இருக்க வேண்டும்.  ஆனால் நீங்கள் இடுப்புக்குக் கீழே அடித்துக் கொல்லப் பார்க்கிறீர்கள்.  அத்தனை வெறி, அத்தனை வன்மம்.  காரணம் என்ன தெரியுமா?  உங்களைப் போன்ற நாகரீக கனவான்கள் காட்டும் நாகரிகம் எல்லாம் வெறும் வேஷம்.  உள்ளுக்குள் இருப்பது ஓநாயின் வன்முறை.  இதை நான் சொல்லவில்லை.  மாஸ் ஸைக்காலஜி ஆஃப் பாஸிஸம் என்ற நூலில் வில்ஹெம் ராய்க் என்ற உளவியலாளர் சொல்கிறார்.

ஃபாசிசம்  என்பது சாதாரண மத்தியதர வர்க்கத்தினரின் உளவியல் முரண்பாடுகளால் (அதிகார ஆசை + கட்டுப்படுத்தப்பட்ட அடக்கம்) தூண்டப்பட்டது. இவர்களே வன்முறையை செயல்படுத்துபவர்கள். மதக் கலவரங்கள் போன்றவற்றிலும், பொருளாதார/சமூக நெருக்கடியில் இந்த “சாதாரண” மக்கள் தங்கள் உளவியல் தேவைகளை வன்முறை மூலம் தீர்க்கிறார்கள், ஏனெனில் அது அவர்களின் அடக்கப்பட்ட ஆக்ரோஷத்தினை வெளிப்படுத்துகிறது.

மேலும் ஒரு விஷயம்.  ஒரு ஆங்கிலேயர் சங்க இலக்கியத்தில் பெரும் புலமை பெற்றவர்.  சங்க இலக்கியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.  ஆனால் ங்கோத்தா என்ற வார்த்தையை ங்கோத்த என்றே உச்சரிக்கிறார்.  தா வர மாட்டேன் என்கிறது.  அதற்காக அவருக்குத் தமிழ் தெரியவில்லை என்று சொல்ல முடியுமா?  பல ஆயிரம் உர்தூ கஸல்களைக் கேட்கிறேன்.  ஆனால் உர்தூ தெரியாததால் உச்சரிப்பில் சில தவறுகளைச் செய்கிறேன்.  அதற்காக கஸல் தெரியாது என்று அர்த்தமா?  நான் படிப்பதே ஆங்கிலத்தில்தானே?  அதனால்தான் பஞ்சரத்னா கீர்த்தனைகள் என்று குறிப்பிட்டேன். 

மேலும், திருக்குறள் கீர்த்தனைகளை சஞ்சய் சுப்ரமணியம் பாடுகிறார்.  பெருமாள் முருகன் இயற்றிய அதி அற்புதக் கீர்த்தனைகளை டி.எம். கிருஷ்ணா பாடுகிறார். ஒருமுறை கமல்ஹாசன் குறிப்பிட்டார், தியாகராஜர் பிச்சை எடுத்தார் என்று. அங்கெல்லாம் போய் நொட்ட வேண்டியதுதானே திருமிகு அம்பி அவர்களே?  மாட்டீர்கள்.  ஏனென்றால், அதெல்லாம் பெரிய இடம்.  அல்லது, அதற்கு வேறு காரணம் இருக்கிறதா? ஆனால்  எழுத்தாளன் இளிச்சவாயன், எப்படி வேண்டுமானாலும் போட்டுத் தாக்கலாம், எவனும் கேட்க மாட்டான், இல்லையா?

என் நண்பர்கள் கேட்கிறார்கள், இம்மாதிரி சில்லறைகளையெல்லாம் ஏன் பொருட்படுத்தி எழுதுகிறீர்கள் என்று.  எழுத்தாளனை அவமதித்தால் அது சரஸ்வதியை அவமதிப்பது போல.  அதனால்தான் பொருட்படுத்துகிறேன்.