ஐந்தாறு புதிய புத்தகங்கள்

இன்றுதான் திடீரென்று ஞானோதயம் ஏற்பட்டு, கொலைவெறியில் எழுதிக்கொண்டிருந்த அனாடமி ஆஃப் டிஸொனன்ஸ் நாவலை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து விட்டு, ஸ்ரீராம் எடிட் பண்ணிக் கொடுத்திருந்த, பத்து ஆண்டுகளுக்கு முன் நான் எழுதியிருந்த சிறுகதைகளைப் படித்துக்கொண்டிருக்கிறேன். எல்லாமே ராஸ லீலா நாவலின் அத்தியாயங்களைப் போல் இருக்கின்றன. பொறுமையாகத் தொகுத்தால் இரண்டு புதிய நாவல்கள் கிடைத்திருக்கும். பரவாயில்லை. என் கட்டுரைத் தொகுப்புகளே சிறுகதைகள் போன்றவைதான். சிறுகதைகள் நாவலின் வெவ்வேறு அத்தியாயங்கள். இஞ்சி சுக்கு கடுக்காய் என்ற கட்டுரைத் தொகுப்பை சரி பார்த்து பதிப்பகத்துக்கு அனுப்பி விட்டேன்.

இப்போது மாயமான் வேட்டை என்ற சிறுகதைத் தொகுப்பை சரி பார்த்துக் கொண்டிருக்கிறேன். இப்படியே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புத்தகமாகப் பார்த்து பதிப்பகத்துக்கு அனுப்பி விடுவேன். பத்து புத்தகமாவது அனுப்ப வேண்டும்.

இப்படி கடைசி நேரத்தில் கொடுத்தால் புத்தக விழாவுக்கு வெளிவருமா என்று தெரியாது. எப்போது வருகிறதோ அப்போதுதான் எனக்குப் புத்தக விழா.

கதைகளைப் படிக்கப் படிக்கப் பேரின்பம் பொங்குகிறது. உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும் என்று நம்புகிறேன். வாசிப்பின் இன்பம் என்ற விஷயத்தில் நான் ஒரு உச்சம் என்று தோன்றியது.

இடையே நடந்த கலவரத்தினால் எந்தப் பதிப்பகம் என்று கேட்க நினைக்கிறீர்களா? என் இறுதி நாள் வரை ஸீரோ டிகிரி பதிப்பகம்தான். சந்தேகம் இல்லை. என் மன உளைச்சல் காலத்தில் ஜெயமோகனும் நற்றிணை யுகனும் எனக்குக் கொடுத்த ஆதரவு என் வாழ்வில் மறக்க முடியாதது. எக்காரணம் கொண்டும் பதிப்பகத்தை மாற்றாதீர்கள் என்றார் ஜெ. எந்தக் காலத்திலும் பதிப்பகத்தை மாற்றாதீர்கள், இது என் சித்தப்பனுக்கு நான் இடும் உத்தரவு என்றார் நற்றிணை யுகன். எத்தகைய அற்புதமான நண்பர்கள்…