எனது இறுதி நாளில் கலந்து கொள்ளத் தடை செய்யப் பட்டவர்கள்

என் இறுதி நாளில் கலந்து கொள்ளத் தடை செய்யப்பட்டவர்கள் என்று சொல்வதற்கு எனக்கு உரிமை இருக்கலாம். ஆனால் அதை செயல்படுத்துவதற்கு எனக்கு வாய்ப்பு இல்லை அல்லவா?

பாலகுமாரனை எல்லோருக்கும் ஒரு எழுத்தாளனாகத்தான் தெரியும். ஆனால் அதை மீறி அவருடைய ஒரு தன்மை எனக்கும் அவருடைய நெருங்கிய நண்பன் ஜெகனுக்கும் தெரியும். பாலா எங்களிடம் தன்னுடைய இறுதி நாளைத் தெரிவித்தார். அதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருந்தன. இல்லை பாலா, இன்னும் சில ஆண்டுகள் நீங்கள் இருக்க வேண்டும் என்றேன். ஏனென்றால், அவரிடம் ஒரு நாவல் திட்டம் இருந்தது. அதை முடிக்க அவருக்கு ஐந்து ஆண்டுகள் தேவை. இல்லை சாரு, நேரம் நெருங்கி விட்டது, நானே நினைத்தாலும் அதை மாற்ற முடியாது என்றார். அவர் சொன்ன மாதத்தில் அவர் விடை பெற்றார்.

சார்வாகன் நாஸ்திகர். அடுத்த தீபாவளியை நான் பார்க்க மாட்டேன் என்றார். இல்லை சார், நீங்கள் சொல்வதற்கு நிறைய உள்ளது, நீங்கள் சொல்லுங்கள், நான் எழுதுகிறேன் என்றேன். இல்லை சாரு, people don’t deserve my stories, நான் கிளம்புகிறேன் என்றார். என் உடம்பு தளர்ந்து விட்டது, தாங்க மாட்டேன்.

ஆன்மீகமெல்லாம் இல்லை. விஞ்ஞான ரீதியாகச் சொன்னார். நடந்தது.

எனக்கு ஆன்மீகம், விஞ்ஞானம் எதுவும் கிட்டவில்லை. சோதிடத்தை நம்புகிறேன். நான்கு சோதிடர்கள் நான்கு வெவ்வேறு கால கட்டத்தில் நான்கு வெவ்வேறு இடங்களில் வைத்து என் ஆயுளை கணித்தார்கள். நால்வரும் சொன்னது ஒரே வருடம். இன்னும் காலம் இருக்கிறது. நெடுங்காலம் இருக்கிறது.

ஆனால் நான் விடை பெறும் நாளில் என் பூதவுடலைக் காண, பூத உடலுக்கு மரியாதை செலுத்த சிலர் வரக் கூடாது என்று விரும்புகிறேன்.

ஒரு பெண்மணி என்னிடம் நூற்றுக்கணக்கான முறை பெரும் அழுகையுடன் சொல்லி விட்டார், நீங்கள்தான் என் வாழ்வில் பெரும் துக்கத்தைக் கொடுத்தவர்.

என் வாழ்வில் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய அவமானம். ஏனென்றால், அவருக்குத்தான் நான் எனது வாழ்வின் மிகப் பெரிய பொக்கிஷங்களை அளித்தேன். மேலும், யாருக்கும் துக்கத்தை அளிக்கக் கூடாது என்பதை என் உயிர் மூச்சாகக் கொண்டிருப்பவன் நான். ஒரு மருந்துக் கடை வைத்திருக்கிறேன். அதில் அமிர்தமும் உண்டு, நஞ்சும் உண்டு. நஞ்சை விலை கொடுத்து வாங்கிச் சென்றவர் அவர்தான். அது நஞ்சு, உங்களைக் கொன்று விடும் என்று எச்சரித்தும் திரும்பத் திரும்ப வாங்கிச் சென்றவர் அவர். நான் பொறுப்பு அல்ல. ஆனால் என் வாழ்வில் மிகப் பெரும் துயரத்தை அளித்தவர் நீங்கள் என்று என் மீது குற்றம் சாட்டுகிறார். ஒரு முறை அல்ல. நூறு முறை. உங்களால் எனக்குத் தற்கொலை உணர்வே மேலிடுகிறது என்று கூட சொல்கிறார்.

என் உயிரை விட முக்கியமானது என் எழுத்து. அது பற்றி என் வாழ்நாளின் மிக முக்கியமான ஒரு கடிதத்தை அவருக்கு எழுதினேன். பதிலே இல்லை. இதை விட ஒரு அவமானத்தை என் வாழ்வில் நான் கண்டதில்லை.

அந்தப் பெண்மணியிடம் ஒரு நற்பண்பு உண்டு. யாருடைய இறுதி நாளின்போதும் அவர் அங்கே ஆஜர் ஆகி விடுவார். அதை அவர் ஒரு கடமையாகக் கொண்டிருக்கிறார். அந்தப் பண்பு என் போற்றுதலுக்குரியது. அது அந்த மனிதனுக்கு நாம் செய்யும் ஓர் உயர்ந்த பட்ச மரியாதை. ஆனால் அவர் என் இறுதி நாள் அன்று என் உயிரற்ற சடலத்துக்கு மரியாதை செலுத்தக் கூடாது. காரணம், நான் அவர் வாழ்வில் அதிக பட்ச துயரத்தை அளித்தவன். அதுவும் தவிர, என் வாழ்நாளின் மிக முக்கியமான ஒரு கடிதத்துக்கு பதில் எழுதாதவர்.

இன்னொருவர். எனக்கு மிகப் பெரிய உதவிகள் செய்திருக்கிறார். ஆனால் அதையெல்லாம் நான் அவருக்கு நான் அளித்த ஞானத்தின் காணிக்கை என எடுத்துக் கொண்டேன். ஆனால் அவரோ அவர் எனக்குச் செய்த உதவி என்று நினைத்தார். என்னிடமிருந்து தனக்கு எதுவுமே கிடைக்கவில்லை என்று கண்டார். நான் நன்றி மறந்தவன் என மதிப்பிட்டார். அவரும் என் இறுதி நாளில் என்னைக் காணக் கூடாது. உயிரோடு இருக்கும் போது என்னை மதிக்காதவர் நான் இறந்த பிறகு என்னைக் காண அனுமதி இல்லை. இத்தனைக்கும் நான் அவரை மன்னித்து சந்திக்க முடியுமா என்று கேட்டேன். வேலை இருக்கிறது சார் என்றார். அடுத்த வாரம் கேட்டேன். அப்போதும் அதே பதில். மூன்றாவது முறை கேட்டேன். அப்போதும் அதே பதில். உயிரோடு இருக்கும்போது சந்திக்க நேரம் இல்லாதவர் உயிர் பிரிந்த பிறகு என்னைச் சந்திக்க அனுமதி இல்லை.

இந்த நண்பர் என் வாழ்வின் மிக முக்கியமான ஒரு கடிதத்துக்கு மிக அவமானகரமான பதிலை எழுதினார். அந்த அவமதிப்பை என்னால் என்றுமே மறக்க இயலாது.

இன்னொருவர். எனக்குப் பிரியமானவர். அவரைப் பற்றி வாரம் ஒருமுறையாவது எழுதி விடுவேன். அவருக்கும் என் மீது பிரியம் உண்டு என நம்பினேன். விஷ்ணுபுரம் விருது எனக்கு அளிக்கப்பட்ட போது ஒரு வார்த்தை வாழ்த்து சொல்லவில்லை. கோபத்துடன் அவருக்கு ஃபோன் போட்டுக் கேட்டேன். ஏதோ ஒரு சப்பைக் காரணம் சொன்னார். வாட்ஸப்பில் பெஸ்ட் விஷஸ் என்று ரெண்டு வார்த்தை சொல்ல முடியாத அவரும் என் இறுதி நாளில் என் பூதவுடலைக் காணத் தகுதி இல்லாதவர்.

இந்தப் பட்டியலில் இன்னும் சிலர் உண்டு. ஒருவர் சமீபத்தில் இறந்து விட்டார். இன்னொருவர் கலந்து கொள்ள மாட்டார். அவரை விட்டு விடலாம்.

என் எழுத்தை விமர்சிக்கலாம். ஆனால் ராஸ லீலாவைப் படித்தால் சாருவுக்கு செக்ஸில் அனுபவமே இல்லை என்று தெரிகிறது என்று எழுதிய ஷோபா சக்தியும் கலந்து கொள்ள அனுமதி இல்லை. நான் இறந்த பிறகு என்னைப் பாராட்டி எழுதினால் ஆவியாக வந்து அவரைப் பாடாய்ப் படுத்துவேன். அவர் நாஸ்திகர். இது பற்றி அவர் கவலை கொள்ள மாட்டார். அது பற்றி எனக்கு அக்கறை இல்லை. ஆனால் அவர் என் உயிரற்ற உடலைக் காணக் கூடாது.

இன்னும் சிலர் உண்டு. பிறகு எழுதுகிறேன்.