நான் மதுவின் மயக்கத்தில் இருக்கும்போது மரணச் செய்தியை கேள்விப்பட்டால் மிகவும் பாதிக்கப்பட்டு விடுகிறேன். அப்படிக் கிடைத்த முதல் மரணச் செய்தி சுஜாதா குறித்தது. நானும் மணியும் கவுண்டமணியும் கலங்கரை விளக்கத்தின் கீழே நின்று பேசிக்கொண்டிருந்தோம். நான் கடும் போதையில் இருந்தேன். மணி வேறோர் நண்பரிடம் ஏதோ பிஸினஸ் பேசிக்கொண்டிருந்ததால் நானும் கவுண்டமணியும் கலங்கரை விளக்கத்தின் எதிரே போய் நின்று ஏதோ அளவளாவிக்கொண்டிருந்தோம். யாரோ சுஜாதாவின் மரணச் செய்தியை என்னிடம் தெரிவித்தார். அடுத்த க்ஷணம் அந்த மரணச் செய்தியைத் தெரிவித்த என் கைபேசியை தரையில் வீசி அடித்தேன். அது சிமெண்ட் தரை. கைபேசி தெறித்து விழுந்தது. கவுண்டமணி இதை ஒட்ட வைத்து விடலாம் என்று சொல்லிக்கொண்டே அதையெல்லாம் ஒவ்வொன்றாகப் பொறுக்கி எடுத்துக் கொடுத்தார். ஞாபகம் இருக்கிறது. இத்தனைக்கும் சுஜாதாவை நான் ஒருபோதும் இலக்கியவாதி என்று நினைத்ததில்லை. ஆனால் அவர் எழுத்தின் ரசிகன் நான். இப்போதும். இலக்கியமாகா விட்டால் என்ன? அவர் எழுத்தில் வாசிப்பின் இன்பம் உண்டு. அந்த வாசிப்பு இன்பம் எனது நெருங்கிய நண்பரான பாலகுமாரனிடம் எனக்கு என்றுமே இருந்ததில்லை. பாலா எனது இனிய நண்பர். சுஜாதா பழகுவதற்கே தகுதியில்லாத மனிதர். ஆனால் பாலாவின் மரணம் என்னை பாதிக்கவில்லை. சுஜாதாவின் மரணம் எனக்கு அகால மரணமாக இருந்தது.
அடுத்த மரணம் எனது இனிய நண்பர் ப்ரியா கல்யாணராமன். என் எழுத்தைக் கொண்டாடிய ஆள். அவர் அளவுக்கு என் எழுத்தைக் கொண்டாடிய ஒரு வெகுஜன ஊடக நண்பரை நான் கண்டதில்லை. கடும் போதையில் இருந்தேன். அப்போது நான் ஒரு பைத்தியத்தைப் போல் நடந்து கொண்டேன். அப்போது என் உடன் இருந்த ஒரு தோழி என் பைத்திய நிலையை விடியோ எடுத்து அடுத்த நாள் அனுப்பினாள். நான் அப்போது அவளைத் திட்டிய திட்டை யார் மீதும் இன்று வரை பிரயோகித்தது இல்லை. அதில் ஒரு வாக்கியம் ஞாபகம் இருக்கிறது. நான் கரமைதுனம் செய்யும் போது அதை விடியோ எடுத்து எனக்கே அனுப்பி வைப்பாயா நாயே? நான் ஒரு துக்கத்தில் இருக்கிறேன். போதை வேறு. அப்போது நான் இருக்கும் பைத்திய நிலையை விடியோ எடுத்து எனக்கே அனுப்புவதெல்லாம் உலகிலேயே கடைந்தெடுத்த கயவாளித்தனம் என்றேன். அந்த விடியோவை நான் சில நொடிகளே பார்த்தேன்.
ஸோரோவின் மரணமும் எதிர்பாராதது. மூன்று மாதம் முழுப்பைத்தியமாக அலைந்தேன். அவந்திகா வீட்டை மாற்றினாள்.
சார்வாகனின் மரணம் எதிர்பார்த்தது. ஆனாலும் என் உயிரே போய் விடும் என்ற நிலைக்கு ஆளானேன்.
இன்று அப்படி ஒன்றும் போதை இல்லை. இரண்டு நண்பர்களை மால்குடி உணவகத்தில் சந்தித்தேன். இருவரும் ஊருக்குக் கிளம்புகிறார்கள். இவர்களை ஏன் நான் சந்தித்தேன் என்று வருந்திய தருணம் அது. ஏனென்றால், அவர்களைப் பிரிவது அத்தனை துக்கத்தைத் தருகிறது. இருவரும் நிதானமானவர்கள். எனக்கும் நிதானத்துக்கும் வெகுதூரம். ஒரு ஜேகப்ஸ் க்ரீக் ஆர்டர் செய்தேன். மூன்று கோப்பை அருந்தினேன். பொதுவாக பத்து கோப்பை அருந்துபவன் நான். வான்கோழிக் கறி கொஞ்சம் சாப்பிட்டேன்.
வீடு திரும்பினேன். பத்தரை மணி. கார்ல் மார்க்ஸ் சென்னை வருவதாகச் சொல்லியிருந்தார். நாளை மட்டும்தான் அவரைச் சந்திக்க முடியும். செவ்வாய் அன்று முடியாது. புதன்கிழமை அவந்திகா துபயிலிருந்து திரும்புகிறாள். செவ்வாய்க்கிழமை வைன் அருந்தினால் புதன்கிழமை அத்தனை தெளிவாக இருக்க முடியாது. எனவே, நாம் சந்திப்பதாக இருந்தால் நாளை மட்டுமே அது சாத்தியம் என்பதை கார்லிடம் சொல்ல வேண்டும்.
அழைத்தேன். சென்னையிலிருந்து ஊருக்குத் திரும்பி விட்டேன் என்றார். அதிர்ச்சியாக இருந்தது. சென்னை வந்தது அவர் நண்பர்களைச் சந்திப்பதற்காக. ஆனால் சரவணனின் தலையில் விதி வேறு விதமாக ஓத்து விட்டது. சரவணன் செத்து விட்டான். கார்ல் மார்க்ஸின் மிக நெருங்கிய நண்பன். அவன் பணி புரிந்தது சென்னையில். ஊர் கும்பகோணம்.
அதனால் அவனது உடலை கும்பகோணம் எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு கார்லிடம்.
அடடா, அவன் வயது என்ன முப்பது இருக்குமா என்றேன். சரவணனை நானும் சில முறை சந்தித்தித்திருக்கிறேன். இல்லை, ஐம்பது என்றார் கார்ல்.
என்ன காரணம்?
மரணத்துக்கெல்லாம் காரணம் இருக்க முடியுமா?
இல்லை, இப்படி திடீரென்று கிளம்புவதென்றால் ஒரு காரணம் இருக்கத்தானே வேண்டும்?
வேறு என்ன, குடிதான். குடிப்பது. சரியாக சாப்பிடுவதில்லை.
ஆ, நானும்தான் குடிக்கிறேன். சரியாகவே சாப்பிடுவதில்லை…
இல்லை, இல்லை. உடம்பை சரியாகப் பாதுகாக்கவில்லை.
சரி, என்ன காரணத்தினால் செத்தார்?
கார்டியாக் அரெஸ்ட்.
திருமணம் ஆனவரா?
ஆமாம், குழந்தைகளும் இருக்கின்றன.
சரி, அப்படியானால் நீங்கள் சென்னை வரும்போது நாம் சரவண பவனில் சந்தித்து தயிர் வடை சாப்பிடலாம்.
சேசே, ஒயின் சாப்பிடலாம்.
ஓ மை காட். எனக்கு விவாகரத்து ஆவதற்கா? சரவண பவனிலேயே சந்திப்போம். இன்னொரு விஷயம் கார்ல். எனக்கு உங்களிடம் ஒரு விஷயம் சோல்ல வேண்டும். ஒரு மணி நேரம் ஆகும். இப்போது வேண்டாம். இன்னொரு நாள் சொல்கிறேன்.
ஆமாம். இப்போது வேண்டாம். இன்னொரு நாள் கேட்கிறேன்.
உரையாடல் முடிந்தது.
மால்குடியிலிருந்து கொண்டு வந்திருந்த ஜேகப்ஸ் க்ரீக்கில் இன்னும் இரண்டு கோப்பைக்கான வைன் மீதமிருக்கிறது. எடுத்து கோப்பையில் ஊற்றியிருக்கிறேன்.