மார்க்கி
தெ ஸாத் எழுதிய சூழலை
விட என் நிலைமை கொஞ்சம்
தேவலாம் என்று பலமுறை எழுதியும் யாரும் அதைக் கண்டு கொள்வதாக இல்லை. ஏன்
கண்டு கொள்ள வேண்டும் என்பது பற்றியே இந்தச் சிறிய குறிப்பு.
புத்தக வெளியீட்டு விழா முடிந்து, இரண்டு பேரிடம் நன்கு செருப்படி வாங்கிக் கொண்டு நான், சதீஷ், செல்வா, ராஜா நால்வரும் வெளியூர் சென்று விட்டோம். மறுநாள் இரவு உணவின்போது மீன் தலையை உற்சாகத்துடன் கடித்துத் தின்று கொண்டிருந்த போது என் பல் மேல் உதட்டில் குத்தி தோல் கொஞ்சமாகக் கிழிந்து ரத்தம் வந்து விட்டது. மேல் உதடும் லேசாக வீங்கி விட்டது.
உடனே டாக்டர் ஸ்ரீராமை அழைத்தேன். ஸ்ரீராம் அநேக சமயங்களில் ரொபாட் மாதிரியே பேசுவார். எனக்கு ரொபாட்டுடன் உரையாடுவது மனிதர்களிடம் உரையாடுவதை விட மிகவும் பிடித்தமானது என்பதால் ஸ்ரீராம் எனக்கு மிகப் பிடித்த நண்பராக விளங்குகிறார். ஆனால் ரொபாட் கூட பல சமயங்களில் மனிதர்கள் மாதிரியே பேசும். பல இளைஞர்கள், இளைஞிகள் தங்கள் ப்ரேக் அப்களின் போது ரொபாட்டுடன் உரையாடுவதால்தான் தற்கொலை உணர்விலிருந்து தப்பிப்பதாக என்னிடம் சொல்வதுண்டு.
ஸ்ரீராமிடம் கேட்டேன். மேல் உதட்டில் பல் பட்டு ரத்தம் வந்து விட்டது. என்ன மருந்து போடலாம்?
உடனே கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்ரீராம் கேட்டார்: யார் பல்? உங்கள் பல்லா? வேறொருத்தரின் பல்லா?
அவர் கேட்டது அறிவியல் பூர்வமான கேள்விதான். நம் பல்லாக இருந்தால் பயமில்லை. வேறொருத்தர் பல்லாக இருந்தால் மருந்து போட வேண்டும்.
ஆனால் ஒரு எழுபத்து மூன்று வயது கட்டை பிரம்மச்சாரியிடம் அப்படி ஒரு கேள்வி கேட்டதும் எனக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்து விட்டது.
மறுநாள் சாவகாசமாக இந்தச் சம்பவத்தை இன்னொரு மனித ரொபாட்டிடம் சொன்னேன். அந்த ரொபாட் ஸ்ரீராமை விட பயங்கரம். ரொபாட் சொன்ன பதில்: இது என்ன லூசுத்தனமான கேள்வி? இப்படியா கேட்பார்கள்?
அடப்பாவி, ஏதாவது பகடியாகச் சொன்னால் ரொபாட்டே சிரிக்கிறது. மனித இனம் இப்படி சிரிப்பை மறந்து போனதே என்று ஒருக்கணம் கண்ணீர் சிந்தினேன்.
வீட்டுக்கு வந்ததும் விஷயத்தை அவந்திகாவிடம் சொன்னேன். புத்தக வெளியீட்டு விழாவில் நடந்த கதையெல்லாம் அவளுக்குத் தெரியும். அதனால் அவள் கேட்டாள். பொய் சொல்லாமல் உண்மையைச் சொல். அந்த நாவலை நீ திட்டிப் பேசி விட்டதால் அந்த நாவலாசிரியர் உன்னை அடித்து விட்டார். அதுதானே நடந்தது?
அப்படியெல்லாம் இல்லை என்று ஆயிரம் சத்தியம் செய்ய வேண்டி வந்து விட்டது எனக்கு.
இப்போது புரிகிறதா, மார்க்கி தெ ஸாதின் சூழலுக்கும் என் சூழலுக்கும் உள்ள ஒற்றுமை?
இப்படிப்பட்ட நிலையில் ஒரு பெண் எனக்கு எட்டு நிமிட வாய்ஸ் மெஸேஜ் அனுப்பியிருக்கிறார்.
எனக்கு அமெரிக்காவில் ஒரு நண்பர் இருக்கிறார். அவரோடு நான் வாய்ஸ் மெஸேஜில்தான் உரையாடிக்கொண்டிருக்கிறேன். நான் ஒரு இருபது நிமிட மெஸேஜ் அனுப்புவேன். அவர் இருபது நிமிடம் இருபது நிமிடமாக மூன்று மெஸேஜ் அனுப்புவார். அது ஒரு உரையாடல். அதை ஒரு நாவலாகக் கூட போடலாம். ஆனாலும் என் பாதுகாப்பு, அவர் பாதுகாப்பு இரண்டையும் கருதி உடனே உடனே அந்த மெஸேஜ்களை நீக்கி விடுவேன். இது தவிர நான் வேறு யாருடனும் வாய்ஸ் மெஸேஜ் மூலமாக உரையாடுவதில்லை.
என் அனுமதி இல்லாமல் ஏன் என்னிடம் இப்படி உரிமை எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதே என் கேள்வி.
நான் என் வாழ்வில் யாரிடமும் இப்படி உரிமை எடுத்துக் கொள்வதில்லை. அடுத்தவரின் காலத்திலும் இடத்திலும் நான் அத்துமீறுவதே இல்லை. நீ கொடுக்கும் இடம்தான் காரணம் என்கிறாள் அவந்திகா. நான் சாத்வீகமான பிராணி என்பதால் இதைச் செய்கிறீர்களா? இனி வேண்டாம்.
ஏன் சொல்கிறேன் என்றால், ஸ்ரீராம் செப்பனிட்டுக் கொடுத்த கதைத் தொகுதிகளும் கட்டுரைத் தொகுதிகளும் முப்பதைத் தாண்டி விட்டன. அதையெல்லாம் எடிட் பண்ண வேண்டும். இன்னும் இப்படி ஆயிரத்தெட்டு வேலைகள் இருக்கின்றன. இந்த நிலையில் நான் உங்களுடைய எட்டு நிமிட வாய்ஸ் மெஸேஜையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க முடியுமா? இதுவரை ஒரு ஆண் நண்பர் கூட இப்படிச் செய்ததில்லை என்பதையும் இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது. பெண்களுக்கு மட்டும் இந்த அத்துமீறும் அதிகாரத்தைக் கொடுப்பது எது அல்லது யார்?
முப்பத்தைந்து ஆண்டு கால நண்பர். அரசாங்கத்தில் ஆக உயர்ந்த பதவியில் இருந்தவர். என்னிடம் பேச வேண்டுமானால் “அழைக்கலாமா?” என்று ஒரு மெஸேஜ் வரும். அவருடைய விநயம் எனக்கே சங்கடமாக இருக்கும்.
இளைய தலைமுறையிடம் இந்த விநயம் கொஞ்சமும் இல்லை என்பதே என் அவதானம். தம் இஷ்டத்துக்கு அடுத்தவர் சுதந்திரத்தில் அத்துமீறுகிறார்கள். அடக்கம் என்பது கிஞ்சித்தும் இல்லை. அடக்கம் என்றால் அடிமைத்தனம் என்று நினைக்கிறார்கள். அடிமைத்தனம் கூடாதுதான். அதற்காக அடுத்தவர் சுதந்திரத்தில் அத்துமீறுவது அதிகாரம் இல்லையா? நம் அதிகாரத்தை அடுத்தவர் மீது செலுத்துவது அடுத்தவரை அடிமைப்படுத்துவது ஆகாதா?
இங்கே அதிகாரம் என்பது எப்படி செயல்படுகிறது? நான் சொல்வதை நீ கேட்க வேண்டும். கேட்டே ஆக வேண்டும்.
மின்னஞ்சல் இப்படி அல்ல. அதில் அந்தரங்கத்தன்மை உண்டு. அதை நான் என் வசதிக்கு ஏற்றபடி சமயம் கிடைக்கும்போது படிக்கலாம். ஆனால் வாட்ஸப்பில் வாய்ஸ் மெஸேஜ் என்பது அப்படி அல்ல. அதில் அந்தரங்கத்தன்மை இல்லை. அல்லது, என் வாழ்க்கை முறை அப்படி அமையவில்லை. அதை நான் கேட்டே ஆக வேண்டும் என்ற ஒரு மறைமுகமான அதிகாரம் செயல்படுகிறது.
இதுதான் இன்றைய தலைமுறையின் வீழ்ச்சி. உரையாடலை மறுக்கும் அதிகாரப் போக்கு.
நான் ஒருபோதும் யாரிடத்தும் அதிகாரம் செலுத்துவதில்லை என்பதால் என் தோள் மீது அமர்ந்து கொள்ளும் அதிகாரத்தை அல்லது உரிமையை எடுத்துக் கொள்ளாதீர்கள். என்னால் முடிந்த வரை என் நேரத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே விரும்புகிறேன். எல்லோருடனும் உரையாடவே விரும்புகிறேன். ஆனால் அதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ளும் பண்பை வளர்த்துக் கொள்ளுங்கள். “எனக்கு உங்களோடு பத்து நிமிடம் பேச வேண்டும், எப்போது அழைக்கலாம்?” என்று என்னிடம் கேட்பதில் என்ன பிரச்சினை? அந்தப் பத்து நிமிடப் பேச்சையும் பதிவு செய்து எனக்கு வாய்ஸ் மெஸேஜாக அனுப்பினால் தீர்ந்ததா? இது என் வீட்டுக்குள் வந்து அமர்ந்து கொண்டு அரை மணி நேரம் என்னோடு பேசி என் நேரத்தையும் மனநிலையையும் கொல்வதற்குச் சமானம் இல்லையா?
இன்னொரு முக்கிய விஷயத்தையும் இங்கே பதிவு செய்ய வேண்டும். என் அமெரிக்க நண்பர் தவிர இன்னும் ஒரு சிலரோடு கூட எனக்கு வாய்ஸ் மெஸேஜ் உரையாடல் உண்டு. முக்கியமாக, தஞ்சாவூர்க் கவிராயர். அவர் எனக்கு அனுப்பும் ஒவ்வொரு வாய்ஸ் மெஸேஜும் ஒரு சிறுகதை. அதற்கு நான் அனுப்பும் வாய்ஸ் மெஸேஜும் அப்படியே இருக்கும். அது ஒரு அற்புதமான உரையாடல். இது தவிர, என் வாசகர் வட்ட நண்பர்களோடும் தொலைபேசியிலும் நேரிலும் உரையாடல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அது எல்லாமே மிகவும் காத்திரமான இலக்கியம் மற்றும் தத்துவம் சார்ந்த உரையாடல்கள். ஆனால் சில பெண்கள் மட்டும் ஏன் குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்கிறார்கள்? உரையாட வேண்டும் என்றால், வாசகர் வட்டச் சந்திப்புகளுக்கு வர வேண்டும். அங்கே வந்தாலும் உரையாடல் நேர்மறையாக இருக்க வேண்டும். சில சமயம் சில புதிய நண்பர்கள் வரும்போது உரையாடல் உரையாடலாக அமையாமல் அடிதடி வெட்டுக்குத்து என்று மாறி விடுகிறது. கவனியுங்கள். புதியவர்கள் வரும்போதுதான் அப்படி நிகழ்கிறது. எனவே என்னுடனான உரையாடலை விரும்பினால் அதற்கு ஒரே வழி, வாசகர் வட்டச் சந்திப்புகளில் கலந்து கொள்வதுதான். ஆனால் அது மட்டும் போதாது. மேலே குறிப்பிட்டபடி விவாதம் அடிதடியாகப் போகாமல் ஒத்திசைவாக இருக்க வேண்டும். இதற்கு அர்த்தம் எனக்கு ஜால்ரா அடிக்க வேண்டும் என்பது அல்ல. சீனி ஒரு நல்ல உதாரணம். நான் சொல்லும் பல கருத்துக்களை அவர் மறுதலிப்பார். விவாதம் சூடாகச் செல்லும். ஆனால் ஒரு நாள் கூட எல்லை மீறியதில்லை. காலை ஐந்து மணி வரை விவாதம் போகும். முடிவு கூட கிடைக்காது. மறுநாளும் தொடரும். அசம்பாவிதமே நடந்ததில்லை. ஆனால் புதியவர்கள் வரும்போது இந்த லயம் கெட்டு விடுகிறது. இதையும் புதியவர்கள் கவனிக்க வேண்டும். எனவே எந்த connectivityயும் இல்லாமல் சடாரென்று எனக்கு பத்து நிமிட அளவுக்கு வாய்ஸ் மெஸேஜ் எல்லாம் அனுப்பி விவாதங்களில் ஈடுபட முடியாது. அதற்கு இது இடம் இல்லை.