அந்த வீட்டில் ஆறு குழந்தைகள்
மூணு பெண் மூணு ஆண்
அன்றாடங்காய்ச்சி
அப்பன் உழைப்பாளி
அம்மையும் உழைப்பாளி
இருந்தும் ஒரு வேளைதான்
வயிறார முடிந்தது
மறு வேளை பசித்தால்
கிடைத்தது தண்ணீர்
காலை நீராகாரத்தில்
கைவிட்டு அளைந்தால்
பருக்கைகள் ரெண்டு கிடைக்கும்
ஆனாலும் அம்மையின் நம்பிக்கை மங்கவில்லை
பாலும் தேனும் இந்த வீட்டில் பொங்குமென்பாள்
மாதாமாதம் அதிகாலை நாலு மணிக்கே
வாசலில் வந்து நின்று குடுகுடுப்பை அடித்து
எல்லோரையும் எழுப்பி
நல்ல காலம் பாடும்
குடுகுடுப்பைக்காரனின் குரல்தான்
அம்மையின் நம்பிக்கை ஒளி
மூத்தவன் தில்லி செல்வான்
அடுத்தவளுக்கு அரசாங்க உத்தியோகம்
மூன்றாமவனுக்குப் பட்டாளத்துப் பணி
நான்காமவள் செல்வந்தர் மருமகள்
ஐந்தாமவன் வணிகத்தில் கொழிப்பான்
ஆறாமவள் மருத்துவப் பணி
பக்கத்தில் பெருமாள் கோவில்
’ராமம்’ போட்ட குருக்கள்
ஜோதிடர்
ஒருநாள் ஜாதகம் பார்த்தார்
மூத்தவன் சட்டைக்காரியோடு ஓடுவான்
அடுத்தவள் கீழ்சாதியை மணப்பாள்
மூன்றாமவனுக்கு அல்பாயுசு
நான்காமவள் உதவ மாட்டாள்
ஒருத்தனோடு ஓடிப் போவாள்
ஐந்தாமவனும் அல்பாயுசு
ஆறாமவள் வேசியாவாள்
மறுநாள் தூக்கில் தொங்கிய அம்மையை
அடுத்த வீட்டுப் பெண் காப்பாற்ற
கண்ணீரில் கத்தினாள்
’அந்த அய்யன் என் நம்பிக்கையைக் கொன்று போட்டான்’
‘அய்யர் இல்லம்மா, அய்யங்கார்’ என்றான் மூத்தவன்.
‘அந்தாண்ட போடா, அயோக்கியப் பயலே’ என
கடுப்பில் உறுமினாள் அம்மை
காலம் உருண்டு ஓடியது
காலம் எப்படி உருளும், ஓடும்
எனக் கேட்காதீர்
கவிதைக்குப் பொய்யழகு
குருக்களும் குடுகுடுப்பையும்
சொன்னது நடந்தது
மூத்தவன் தில்லியில் பதவி பெற்று
ஆங்கிலோ இந்தியப் பெண்ணை மணந்தான்
அடுத்தவள் கீழ்சாதிக்காரனை மணந்து
அரசுப்பணியில் அமர்ந்தாள்
மூன்றாமவன் பட்டாளத்தில் மரித்து
தேசியக் கொடியோடு வந்து சேர்ந்தான்
நான்காமவள் வீட்டை விட்டு ஓடி
செல்வந்தனை மணந்தாள்
ஐந்தாமவன் வணிகத்தில் கொழித்து
அம்மைக்கும் அப்பனுக்கும்
பணத்தை வாரி இறைத்து
புற்றுநோயில் மடிந்தான்
ஆறாமவள் கொஞ்ச காலம்
வேசியாய்ப் பணி செய்து
பின்பு செவிலியானாள்
அம்மை சொன்னபடி வீட்டில்
பாலும் தேனும் ஓடியது
ஆனாலும்
யாரும் சொல்லாதபடி
அம்மை தன் எண்பதாம் அகவையில்
தூக்கில் தொங்கினாள்
பெரிய வீடு
வெகுதொலையில் அடுத்த வீடு
காப்பாற்ற யாருமில்லை
நிழல் நெய்த பட்டுத்திரையில்
எரியும் விளக்கின் ஒளியும்
அணையும் இருளின் சாபமும்
ஒரு கணத்தில் ஒன்றாகி
சூன்யத்தின் மௌனத்தில் தொங்கியது.