வன்மதுவை ரசித்து அருந்தும்
யுவதிகள் சொற்பம்
நானே மென்மது குடிப்பவன்தான்
இறையருளோ
பிரார்த்தனையின் பலனோ
மோகினிக்குட்டி வன்மதுப் பிரியை
சாத்தியெடுப்பாள் விஸ்கியை
கொடுப்பினை என்னவென்றால்
குடித்தால் அவள் காதலும் அன்பும்
தயையும் அருளும் பொங்கி வழியும
அதனாலே நாங்கள் அடிக்கடி
செல்லுமிடம் மதுக்கூடம்
அங்கே ஒரு பிரச்சினை
மோகினியைக் காண்பது
ஆடிக்கொரு முறை அமாவாசைக்கொரு முறை
சமயங்களில் உருவமே மாறியிருப்பாள்
அருகே அமர்ந்தால்
எதிரே உட்கார் என்பாள்
எதையும் எவரிடமும் எதிர்பார்க்காதே
எதிர்பார்த்தால் ஏமாற்றம்
ஏமாற்றம் மன உளைச்சல்
மன உளைச்சல் சுயவதை
நானொரு சுயநேசி என்பதால்
எதிர்பார்ப்பை ரத்து செய்வேன்
ஆனால் விதிக்கு ஒரு விலக்கு வைத்து
ஒருநாள்
மாட்டேனென்றேன்
பைத்தியமா நீ
பக்கத்தில் உட்கார்ந்தால்
தலையை ஒரு பக்கம் திருப்பிப்
பார்த்தபடி இருக்க வேண்டும்
கழுத்து வலிக்கிறது
எதிரே அமர்ந்தால் பிரச்சினையில்லை
என்றாள்
எதிரே அமர்ந்தால்
அவளுக்கும் எனக்குமான தூரம்
நிலவுக்கும் எனக்குமான தூரம்போல்
காண்கிறது