
மதுபான விடுதியில்
மங்கலான வெளிச்சம்
பழைய மரமேசையை
ஒரு புத்தகத்தின் பக்கமாக மாற்றியது
எழுத்தாளர்களும் கலைஞர்களும் மட்டுமே
வந்து போகும் அந்த இடத்தில்,
அவளும் நானும் எதிரெதிரே.
என் கையில் வைன், பழமையின் பிரதிபலிப்பு
அவள் கையில் விஸ்கி, ஒரு மறைபொருளின் மணம்
காலம் ஒரு பிரமையின் கனவாக
கோப்பைகளில் தயங்கி நின்றது
என் வாழ்க்கையை எழுது என்றேன்
அது ஒரு விநோத நூலகத்தின்
தொலைந்து போன கையெழுத்துப் பிரதி
மோகினிக்குட்டி ஒரு கவியா
என் கதையை உருவாக்குமொரு கனவா
புன்னகையுடன்
விஸ்கியை மெல்ல அருந்தியபடி
ஒரு விநோதம் சொல்லென்றாள்.
அவள் கண்கள் அந்த இருளிலும்
ஒளி பூண்டிருந்தன
நான் சொன்னேன்:
ஏழெட்டு பெண்கள்
ஏழெட்டு ஆண்டுகள்
உடல்கள் ஒன்றையொன்று அறிய
முயற்சித்தன
ஆனால் முதல் முத்தம்—
அகவை எழுபதில்,
அந்தக் கணம்,
காலம் தன் முகத்தை மறந்தது
அந்த முத்தம்
ஒரு வாழ்நாளின் கதையைத் திறந்தது
ஆனால்
அந்தப் புத்தகம்
எந்த விநோத நூலகத்தில் இருக்கிறது?
மோகினிக்குட்டி மௌனமாகப் பார்த்தாள்
எழுதுகிறேன் என்றாள்.
பின்னர் மெல்லக் கேட்டாள்:
ஆனால் அந்த முத்தம் உண்மையா?
கண்ணாடியில் தோன்றி மறையுமொரு கனவா?
நீயும் நானும் இங்கே இருக்கிறோமா?
அல்லது
விநோத நூலகத்தில் தொலைந்து போன
பழைய கையெழுத்துப் பிரதியில்
எவரோ ஒருவரின் கற்பனைப் பாத்திரங்களா?
அல்லது
இந்த விடுதியை
இந்த மேசையை
இந்த வைனை
இந்த விஸ்கியை
வாசகன் தன் மனதில் உருவாக்குகிறானா?
விடுதியின் மங்கலான வெளிச்சம்
எங்கள் மேசையை ஒரு பிரமையாக மாற்றியது
முத்தம்
விநோத நூலகம்
பழைய மதுபான விடுதி
கண்ணாடியின் கனவு
அவள்
நான்
எது உண்மை
எது புனைவு
அவள் என்னை எழுதுவாளா?
விடுதி மூடும்போது
என் முன்னே இரண்டு காலியான
வைன் போத்தல்
எதிரே யாருமில்லை
ஆனால் ஒரு கோப்பை மட்டும்
அடியில் கொஞ்சம் மதுவுடன் இருந்தது
எடுத்து ருசித்தேன்
விஸ்கி
அந்த விஸ்கி
மோகினிக்குட்டியின் கதை
என் கதையின் இறுதி வாக்கியம்
வாசகன் கையிலிருக்கும்
இன்னும் எழுதப்படாதவொரு பக்கம்