பரவசத்தின் எதிரொலிகள்


இரவின் துடிப்பில்
ஒரு பாடலின் விம்மலில்
சிங்களப் பெண் நயநதினி முணுமுணுத்தாள்
அவள் குரல்
தொலைவில் மறைந்த போரின் நிழல்
இரவு முழுதும் ஒரு பாடலைக் கேட்டாள்
கொல்லப்பட்ட தந்தை
தற்கொலையில் மாண்ட தாய்
அவர்கள் முகங்கள் இசையின் நெய்யப்பட்டு
கனவாகி மூச்சை முட்டியது
திரும்பத் திரும்பக் கேட்டு
விடியலின் விளிம்பில்
சுவாசத்தின் நூலை அறுக்க முயன்றாள்
ஆனால் உயிர் எப்படியோ மீண்டது

அவள் சொன்னாள்:
’இசை வெறும் ஒலியல்ல
எலும்பை எரிக்கும் ஞாபகம்
அப்போது எனக்கு அது விளங்கவில்லை

பின்னர் ஒரு பாடல் என்னைப் பற்றியது
ஆயிரம் முறை ஒலித்து என்னை ஆட்கொண்டது
காலை நடையில்
வெயில் பொங்கும் பகலில்
இரவின் மென்மையில்
அது என் நரம்புகளை மீட்டுகிறது
அது வெறும் இசையா?
வெறும் பாடலா?
இழப்பின் பாரம்
நிழலின் தாகம்

ஆயுள் முழுதும் தேடிய முத்தம்
நண்பர்கள் கதைகதையாய்ச் சொன்னார்கள்
சினிமாவில் பார்த்தேன்
கதையில் படித்தேன்
ஸென் நதிக்கரையில் கண்கூடாய்க் கண்டேன்
எனினும் கனவாகவே இருந்தது
அகவை எழுபதில் திடீரென
நடுங்கும் வெள்ளத்தில் கிடைத்தது
முதல் முத்தம்
இதயம் விம்மி
வெடித்து
தெறித்து
பரவசத்தில் பறந்து
மெய்மறந்து…
அந்த முத்தத்தின் போதையை
இந்தப் பாடல் தருகிறது

காமத்தின் கண்ணாடி
முதல் வெறி
முதல் பரவசம்
திரும்பத் திரும்பக் கேட்கிறேன்
மயக்கத்தில்
மூழ்கி
மூழ்கி
மூழ்கி…

முடிவில்
அந்தப் பாடலை
முதல் முத்தம் தந்தவளுக்கு
அனுப்பித் தந்தேன்
சில தினங்கள் கடந்து
கேட்டாயா என்றேன்
நேரமில்லை என்றாள்