புகைப்படக் கலையின் சில அடிப்படைகளை பாண்டிச்சேரியில் கற்றுக் கொண்டேன். அதாவது, என்னென்ன செய்யக் கூடாது என்ற விஷயங்களை. புகைப்படக் கலை பற்றி எதுவுமே தெரியாத நான் சில ஆண்டுகளுக்கு முன்பு லெபனானில் என் ஐஃபோன் மூலம் எடுத்த சில புகைப்படங்களைப் பார்த்து விட்டு மிஷ்கின் “இது ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்டவை போல் இருக்கிறது” என்று சொன்னார்.



பொதுவாக என் நூல்களில் என் புகைப்படம் இடம் பெறுவதை நான் விரும்புவதில்லை. இருநூறு பிரதிகள் விற்கும் ஒரு அவலமான சூழ்நிலையில் எதற்குப் புகைப்படம் என்ற கைப்புணர்வே காரணம். ஆனாலும் சமகாலத்தில் வாழ்ந்த தமிழ் எழுத்தாளர்களின் புகைப்படங்களே இல்லாத நிலையில் நம் புகைப்படங்கள் கிடைக்க வேண்டும் என்ற கருத்தும் எனக்கு இருந்தது. உதாரணமாக, மிகச் சமீப காலத்தில் வாழ்ந்த கோபி கிருஷ்ணனின் புகைப்படங்கள் ஒன்றிரண்டுதான் உள்ளன. இந்த விஷயத்தில் மேற்கு உலகம் மிகவும் கவனமாக இருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கவிஞர்கள், சிந்தனையாளர்களின் சிற்பங்கள் கிடைக்கின்றன. அவற்றில் அவர்களின் உருவங்கள் அச்சு அசலாக வெளிப்படுகின்றன.
சமீபத்தில் நிகானோர் பார்ராவின் ஒரு கவிதைத் தொகுப்பை வாங்கினேன். அதன் அட்டைப் படத்தைப் பார்த்ததும் நாமும் அப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்யலாமே என்று தோன்றியது. வயதும் எழுபத்து மூன்று ஆகி விட்டது. இப்போது ஏன் தயங்க வேண்டும் என்று நினைத்தேன். பாண்டிச்சேரியில் எடுத்த புகைப்படங்கள் நன்றாக இருந்தாலும் அட்டையில் போடும் அளவுக்கு இல்லை.
அந்த நிலையில் பிரபு காளிதாஸை அணுகலாமே என்று தோன்றியது. அவரும் சம்மதித்தார். அதனால் நாளை காலை மெரினா கடற்கரையில் வைத்துப் புகைப்படங்கள் எடுக்கலாம் என்று திட்டமிட்டோம். இதற்கிடையில் பிரபு காளிதாஸ் அவர் எடுத்த சில புகைப்படங்களை அனுப்பி வைத்தார். உலகத் தரம் என்று சொல்ல வேண்டும். அந்தப் புகைப்படங்களை இங்கே வெளியிடுகிறேன். (நான் குறிப்பிடுவது பூனை இல்லாத இரண்டு புகைப்படங்கள். பூனையோடு இருப்பது ஹை ரெசெலூஷன் படம் இல்லை என்று நினைக்கிறேன்.)
சொர்க்கம், நரகம் மற்றும் ஒரு கால்ஃப் மைதானம் என்ற என் கவிதைத் தொகுப்புக்கு பிரபு காளிதாஸ் எடுக்கும் ஒரு புகைப்படத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பது என் விருப்பம். புத்தகம் புகைப்படத்துக்காகவே காத்திருக்கிறது. பார்ப்போம்.
பிரபு காளிதாஸின் தொலைபேசி எண்: 98402 37858
அவரது மின்னஞ்சல் முகவரி: prabhuphotography@gmail.com



