என்னிடம் உரையாடும் மைனா
பட்சியினம்தானென்றாலும்
நல்ஞானமும்
நேர்கொண்ட பார்வையுமுண்டு
இன்று வந்து கேட்டது:
’பெண்களுக்கேன் பிராணிகளைப் பிடிக்கிறது?’
ஆயுள் முழுதும்
பெண்களுடனே இருந்தும்
அந்த வேற்றுக்கிரக ஜீவிகளைப்
புரிந்து கொள்ள முடிந்ததில்லை
யென்றேன்
’அது ஒன்றுமில்லை
பிராணிகள் கேள்வி கேட்பதில்லை’
யோசிக்கத் தொடங்கிய என்னை
இடைமறித்து
‘நீயும் பிராணிதான்’
எனச் சொல்லிப் பறந்தது