வேண்டுதல்

நேற்று ராஜேஷ் வந்தான்
எடை குறைக்க பேலியோ 
டயட்டில் இருக்கிறானாம்
எடையை ஏன் குறைக்க வேண்டும்
எனக் கேட்க நினைத்துக் 
கேட்கவில்லை
கேள்வி கேட்பது அவளுக்குப் 
பிடிக்காதென்பதால்
கேள்வியையே துறந்து விட்டேன்

குடிக்கத் தொடங்கினோம்
அவன் பியர்
நான் வழக்கம் போல் சீலே வைன்

ரெண்டு கோப்பை போனதும்
எனக்குப் பைத்தியம் பிடித்திருப்பதைச்
சொன்னேன்
சிரித்தபடி என்ன பைத்தியம் என்றான்
‘OCD பைத்தியம்
எல்லா நேரமும் ப்ளூ டிக் யோசனை’
‘தெரியுமே, கவிதையில் படித்தேனே’
‘அது இல்லை தம்பி,
ப்ளூ டிக்கை மறைத்ததன் காரணத்தை
மறைத்ததே ஓசிடி ஆயிற்று’
‘இதுவும் தெரியுமே, கவிதையில் படித்தேனே’

‘உன்க்கு ஒரு வழி சொல்கிறேன்
வாட்ஸப்பில் க்ரூப் உண்டாக்கி
அவளைச் சேர்
க்ரூப்பில் ப்ளூ டிக் வந்தே தீரும்’

சொன்னபடி செய்தேன்
ப்ளூ டிக் வந்தது
ஆஹா ஆஹா ஆஹா

ஆனால்
காலையில் ப்ளூ டிக் 
மீண்டும் மறைந்தது

மீண்டும் க்ரூப் உருவாக்கி 
அவளைச் சேர்த்தேன்

உடனே அழைத்தாள்
‘நேற்று என்னை க்ரூப்பில்
சேர்த்தாய், எக்ஸிட் ஆனேன்
இப்போது மீண்டும் க்ரூப்பில் 
சேர்த்தாய்
மீண்டும் எக்ஸிட் ஆனேன்
ஏன் இப்படி?’

ஆ, திருடனைத் தேள் கொட்டிவிட்டது
ஏதோ ஓர் காரணம் சொல்லித் தப்பினேன்
அப்போதுதான் தெரிந்தது
க்ரூப்பில் சேர்த்தால் அவளுக்குத் தெரியும்
என்பது

ராஜேஷைத் தொடர்பு கொண்டேன்
ஆமாம் என்றவன்
இன்னொன்று சொன்னான்
‘ப்ளூ டிக்கை மறந்து விடு
நானுமே ப்ளூ டிக்கை மறைத்து விட்டேன்
மனிதத்தொல்லை தாங்க முடியவில்லை’

இறைவரே 
நோபல் வேண்டாம்
புக்கர் வேண்டாம்
ப்ளூ டிக் பற்றி எழுதுவது
இதுவே கடைசியாய் இருக்க 
அருள் புரிவாய்…