



பாண்டிச்சேரியில் உள்ள ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் நவம்பர் எட்டாம் தேதி நடந்த ஐரோப்பிய சினிமா குறித்த அறிமுக நிகழ்ச்சி காலை பத்து மணிக்குத் தொடங்கி மாலை ஆறரைக்கு முடிந்தது. என் வாழ்வில் நடந்த மறக்க முடியாத நிகழ்ச்சி. இதற்கு முழுக் காரணமாக இருந்தவர் அந்தக் கல்லூரியின் சேர்மனும் திண்டிவனத்தில் உள்ள தக்ஷசீலா பல்கலைக்கழகத்தின் வேந்தருமான திரு எம். தனசேகரன். அவர் தன் வரவேற்புரையில் தினமும் காலையில் எழுந்ததும் சாரு நிவேதிதா, ஜெயமோகன் இருவரின் தளங்களையும் வாசிப்பதுதான் முதல் வேலை என்று குறிப்பிட்டார். இதைத்தான் நான் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக எதிர்பார்த்திருந்தேன். இந்த நாட்டில் ஏதேனும் கலாச்சார மாற்றம் நடக்க வேண்டுமானால் முதலில் கல்வியாளர்கள் இலக்கியம் வாசிக்க வேண்டும்.


நான் இதுவரை என் நீண்ட கால எழுத்து வாழ்வில் தமிழ்நாட்டில் ஒரு ஐந்தாறு கல்லூரிகளில்தான் உரையாற்றியிருக்கிறேன். ஐந்தாறு என்பது கூட அதிகம்தான். இரண்டு அல்லது மூன்று. அவ்வளவுதான். அதிலும் ஒன்று, ஃப்ரெஞ்சுத் துறை. ஆனால் கேரளத்தில் நான் உரையாற்றாத கல்லூரியே இல்லை. போகாத ஊரே இல்லை. பெரும் திடலில் நடக்கும் அரசியல் கூட்டங்களில் கூட பேசியிருக்கிறேன். திருவனந்தபுரம் சினிமா கல்லூரியில் ஒரு வாரம் தங்கியிருந்து உலக சினிமாவைக் கற்பித்திருக்கிறேன். அதேபோல் கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் ஒரு வாரம் தங்கி உலக சினிமா குறித்த பயிற்சிப்பட்டறை நடத்தியிருக்கிறேன்.
அப்படி தமிழ்நாட்டிலும் நடப்பதற்கான தொடக்கத்தை திரு தனசேகரன் செய்திருக்கிறார். அவர் நினைத்ததை நடத்தி முடித்தவர் அக்கல்லூரியின் முதல்வர் டாக்டர் வி.எஸ்.கே. வெங்கடாசலபதி. அதற்குத் துணையாக இருந்து சேர்மனும் முதல்வரும் நினைத்ததையெல்லாம் செய்து முடித்தவர்கள் கல்லூரியின் பேராசிரியர்கள். இவர்கள் அனைவருக்கும் என் நன்றியை வார்த்தையால் தெரிவிப்பது சிரமம். அவர்களின் உபசரிப்பும் வரவேற்பும் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத அனுபவம். முதல் அனுபவம்.
இன்னும் என் நண்பர்கள் செய்த உதவியும் என்றென்றும் நினைவில் தங்கக் கூடியதாக இருந்தது. நான் கேட்கும் போதெல்லாம் திரைப்படங்களைக் கண்டு பிடித்துக் கொடுத்த ராஜேஷ் கருந்தேள், பிரபு காளிதாஸ், செந்தமிழ், ஸ்ரீ, ஸ்ரீராம். மற்ற உதவிகளைச் செய்த நண்பர்கள் குமரேசன், வேளச்சேரி குமரேசன், செல்வா, அட்வொகேட் சதீஷ், அப்துல், செக்கந்தர் என்று பலர் உண்டு. சித்த மருத்துவர் பாஸ்கரன் செய்த உதவிகளும் அநேகம். என் வலது கரமாகச் செயல்பட்டவர் காஞ்சீபுரம் ராஜா.
இந்த நிகழ்ச்சியில் பல திரைப்படங்களிலிருந்து காட்சிகளையும் காண்பிக்க வேண்டியிருந்தது. அந்தப் பணியை மிகச் சிறப்பாகச் செய்தவர் சரவணன் சிவன்ராஜா. அந்த வேலைக்காக அவர் சுமார் இரண்டு வார காலம் இரவு பகலாக உழைக்க வேண்டியிருந்தது. இவர்கள் அனைவருக்கும் என் நன்றி. பணம் செலுத்தி நேரில் வர முடியாமல் இருப்பவர்களுக்கு இன்னும் ஒரு வார காலத்தில் காணொலியின் இணைப்பு அனுப்பப்படும்.