சென்ற மாதம் என் வீட்டிற்கு ஒரு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அந்த மிரட்டல் கடிதம் டைரக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸுக்கும் போனதால் போலீஸ் மற்றும் பாம் ஸ்க்வாடெல்லாம் வந்து வீடு முழுவதும் சோதித்தார்கள். பிறகு சில தினங்களுக்கு முன்பு அதேபோல் ஒரு மிரட்டல். அன்றைய தினம்தான் செங்கோட்டையில் வெடிகுண்டு வெடித்து பலர் மரணம். மீண்டும் பெரிய அளவில் பாம் ஸ்க்வாட் மற்றும் போலீஸ் வந்து வீடு பூராவும், குடியிருப்பு பூராவும் வெடிகுண்டுத் தேடல்.
இப்போது மூன்றாவது முறையாக இன்றும் அதே போல் வெடிகுண்டு மிரட்டல் வந்து மூன்றாவது முறையாக பாம் ஸ்க்வாட், போலீஸ் வந்து மீண்டும் தேடல் நடந்தது. கூடவே வெடிகுண்டைக் கண்டு பிடிக்கும் நாயும் வந்தது. இன்னும் இந்த மிரட்டல் கடிதம் எத்தனை முறை வரும் என்று தெரியவில்லை. போலீஸ் பாதுகாப்பு கேட்டு முதல்வருக்கு எழுதலாமா என்று பார்க்கிறேன்.
என் வீட்டுக்கு மிரட்டல் வந்தது போல் த்ரிஷா வீட்டுக்கும் மிரட்டல் போல. அதனால் ஒரு நண்பர் சொன்னார், ”சாரு நிவேதிதா என்ற பெயரைப் பார்த்து உங்களையும் நடிகை என்று நினைத்து விட்டார்களோ என்னவோ” என்று.
இதற்கு மேல் என்ன எழுதுவது என்று தெரியவில்லை. நான் ஒரு ஞானி போல் வாழ்பவன். எனக்கு புகழாசை, பணத்தாசை, அதிகார ஆசை எதுவும் கிடையாது. அதேபோல் மரண பயமும் கிடையாது. இது அனைத்தையும் துறந்தவன் நான். எனக்கு ஏதேனும் நேர்ந்தால் யாரும் அழ வேண்டாம். எப்போதும் மகிழ்ச்சியிலே திளைப்பவன் நான். எல்லோரும் எப்போதும் இன்புற்றிருங்கள்.