எல்லோரும் இன்புற்றிருக்க ஓர் வாழ்வியல் கையேடு (குறுநாவல்)


(முன்குறிப்பு: ஒரு பின்நவீனத்துவ எழுத்தாளன் வாழ்வியல் கையேடெல்லாம் எழுதலாமா என்ற கேள்வி எழும்.  எழுதலாம்.  ஏனென்றால், இது ஒரு சமையல் குறிப்பு மாதிரியான கட்டுரை வடிவிலான கதை. ஒரு  User’s Manual.  இதைப் படித்தால் எப்படி வாழ வேண்டும், மகிழ்ச்சிக்கான வழிமுறைகள் என்ன என்பதைக் கண்டு கொள்ளலாம்.  இதை ஒரு பின்நவீனத்துவவாதி எழுதலாம்தானே?  இதில் வரும் பெயர்களைக் கொண்டு கிசுகிசு பாணியில் இதைப் புரிந்து கொண்டால் புரிந்து கொண்டவர்களுக்கே நஷ்டம்.  யாரொருவரும் துயருறக் கூடாது என்றும், எல்லோரும் இன்புற்றிருக்கவேயன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே என்றும் வாழ்பவன் நான்.  ஆனாலும் எனக்கு நடக்கும் விஷயங்களை நான் பதிவு செய்தாக வேண்டும்.  அதனாலேதான் இதை எழுதியிருக்கிறேன்.)

1.எக்ஸ் பதிப்பகமும் அடியேனும்…

அக்டோபர் ஏழாம் தேதி அன்று (2025) புவனேஸ்வரியின் ஃபேஸ்புக் பக்கத்தில் பின்வரும் குறிப்பைப் பார்த்தேன்.

“கண்ணாயிரம் பெருமாள்,  அவருடைய புத்தகங்களைப் பதிப்பிக்க எங்களிடம் தருகிறாரே தவிர, அவருக்கும் இந்தப் பதிப்பகத்துக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று சொல்லிச் சொல்லி எங்களுக்கு மடுத்து விட்டது.

அவருக்கு அனுப்பும் திட்டு மெயில்களில் எங்களையும் tag செய்வது, புத்தகம் தர மாட்டேன் என்று சொல்வது என்பதெல்லாம் போக, இப்போது ஆபீஸில் குண்டு வைத்திருக்கிறோம், காலி செய்து ஓடுங்கள் என்ற மிரட்டல் மெயில் வேறு.

சும்மா பிழைப்பற்று எழுதியிருக்கும் மெயில் என்று தெரிந்தாலும் இதை ரிப்போர்ட் செய்து விடுவோம் என்று 100க்கு கால் செய்தோம். அவ்வளவுதான்!

இரவு இரண்டு மணி வரை கிட்டத்தட்ட நூறு தொலைபேசி அழைப்புகள் வந்திருக்கும் போலீசாரிடமிருந்து. அதில் ஒருவர் ‘சந்தேகத்துக்குரிய பொருள் ஏதாவது பார்த்தா சொல்லுங்க’ என்றார். அப்போது மணி அதிகாலை ஒன்று.  கடைசியாக கமிஷனர் ஒருவர் கூப்பிட்டு விசாரித்தார்.

“ஒண்ணும் பிரச்சினையில்லையே? எங்கள் டிபார்ட்மெண்டிலிருந்து கூப்பிட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.”

“பிரச்சினையில்லை சார். ஆனா ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கலாமா? தப்பா நினைக்க மாட்டீங்களே?”

“சொல்லுங்க.”

“இப்படி இரண்டு மணிவரை உங்காளுங்ககிட்ட சொன்னதையே திரும்பத் திரும்ப சொன்னதுக்கு பதில் குண்டே வெடிச்சிருக்கலாம் சார்!”

கமிஷனர் சிரித்துவிட்டு “எங்களுக்கு எப்படியிருக்கும்னு நினைச்சுப் பாருங்க” என்றார்.

Jokes apart, our police are truly remarkable! Thanks??

இந்தப் பதிவுக்கு ஏகப்பட்ட பேர் புவனேஸ்வரியின் நகைச்சுவை உணர்வையும், பகடி கலந்த எழுத்தையும் பாராட்டிப் பின்னூட்டம் இட்டிருந்தார்கள்.  அதில் எனக்குப் பிடித்தது “Amazing humour sense!”

கேலியாகவும், கிண்டலாகவும், பகடியாகவும்தான் எழுதியிருக்கிறார் புவனேஸ்வரி.  ஆனாலும் ஆரம்பத்தில் இருந்த ஒரு வாக்கியம் என் நெஞ்சில் கத்தியாய்க் குத்தியது.    

அந்த வாக்கியம்: “கண்ணாயிரம் பெருமாள்,  அவருடைய புத்தகங்களைப் பதிப்பிக்க எங்களிடம் தருகிறாரே தவிர, அவருக்கும் இந்தப் பதிப்பகத்துக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று சொல்லிச் சொல்லி எங்களுக்கு மடுத்து விட்டது.”

இதில் பகடியா தெரிகிறது?  இங்கே பகடி பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது. 

எழுத்து என்பதே நெருப்பின் மீது நடப்பது போன்றது.  உதாரணமாக, காதலன் மீது காதலிக்குக் கோபம், வருத்தம்.  அந்தக் கோபத்தைத் தணிப்பதற்காக காதலன் காதலிக்கு ஒரு டெக்ஸ்ட் மெஸேஜ் அனுப்புகிறான்.  உடனடியாக அங்கே ஒரு ப்ரேக் அப் நடந்தே தீரும். ஏனென்றால், எழுத்து என்பதே நெருப்பு.  அதனால் அந்த டெக்ஸ்ட் மெஸேஜ் அவளுடைய கோபத்தை இன்னும் கிளறி விட்டு உறவையே முடித்து விடும். 

எழுத்துக்கே இந்த சக்தி என்றால் பகடி செய்வது இன்னும் சிரமமான காரியம்.  எழுத்து என்பது விமானம் ஓட்டுவது போன்றது.  அதீத கவனத்தைக் கோரும் ஒரு பணி.  இதில் பகடி என்பது எஞ்ஜின் முழுமையாகவே செயல்படாமல் போகும்போது விமானத்தைத் தரையிறக்கும் காரியம். 

அதனால்தான் புவனேஸ்வரியின் பகடி என் நெஞ்சில் கத்தி போல் இறங்கியது. 

இன்னொரு விஷயம், ”எக்ஸ் பதிப்பகத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, என் புத்தகங்களை அவர்கள் பதிப்பிக்கிறார்கள்; அவ்வளவுதான் எங்கள் உறவு” என்று நான்தான் சொல்ல வேண்டுமே தவிர அவர்கள் சொல்லக் கூடாது.  ஏனென்றால், அந்தப் பதிப்பகத்தின் வளர்ச்சி என் பெயரால் மட்டுமே நடந்தது.  இது ஊருக்கே தெரிந்த விஷயம்.

ஒரு உதாரணம் சொல்கிறேன்.  காலஞ்சென்ற திமுக தலைவர் அண்ணாதுரை ஒரு கூட்டத்தில் “என் உடன்பிறப்பு கலைஞர் கருணாநிதி மிகப் பெரும் திறமைசாலி.  நான் இல்லாமலேயே கூட இந்தக் கழகத்தை இந்த நாட்டின் மிகப் பெரும் இயக்கமாக, மிகப் பெரும் கட்சியாக வளர்த்தெடுக்கக் கூடிய தகுதி பெற்றவர்” என்று கூறுகிறார் என வைத்துக் கொள்வோம்.  உடனே கருணாநிதி அடுத்த கூட்டத்தில், “அறிஞர் அண்ணாவே சொல்லி விட்டார்.  இனிமேல் அவருக்கும் நம் கழகத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.  இனிமேல் கழக உடன் பிறப்புகள் யாவரும், வட்டச் செயலாளர், மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் என்னை என் இல்லத்தில் வந்து சந்திக்க வேண்டும்” என்று கூறுவாரா?  அப்படிக் கூறினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது புவனேஸ்வரியின் கூற்றும்.  

இன்னொரு உதாரணம். உயிர்மை பத்திரிகையை வளர்த்தது நான்கு பேர்.  அதை ஆரம்பித்த மனுஷ்ய புத்திரன்.  அவருக்குத் தூணாக இருந்தவர்கள் மூன்று எழுத்தாளர்கள்.  அந்த மூவரும் இல்லாவிட்டால் உயிர்மை இப்போதைய நிலைக்கு வந்திருக்க முடியாது.  இல்லையா?

இப்படி எக்ஸ் பதிப்பகத்துக்கு ஒரே தூணாக விளங்கியவன் கண்ணாயிரம் பெருமாள்.  புவனேஸ்வரியும், கோண்டி என்ற கோதண்டராமனும் பதிப்பகத்தின் செயல்பாட்டை முன்னிறுத்தியவர்கள்.

ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்.  எக்ஸ் பதிப்பகம் ஆரம்பித்த காலம்.  புத்தகங்களை வடிவமைத்துக் கொடுக்கும் சத்யனின் அலுவலகத்தில் நானும் கோண்டியும் புவனேஸ்வரியும் இருந்தோம்.  அப்போது நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் வந்தார்.  கொஞ்ச நேரத்தில் அவர் ஒரு பதிப்பாளர் என்று தெரிந்து கொண்டேன்.  பெயரைக் கேட்டேன்.  அதுவரை அந்தப் பெயரை நான் கேட்டதில்லை.  பதிப்பகத்தின் பெயரைக் கேட்டேன்.  அதுவரை அந்தப் பெயரை நான் கேட்டதில்லை.  எத்தனை புத்தகங்கள் பதிப்பித்திருக்கிறீர்கள் என்றேன்.  எண்ணூறோ தொள்ளாயிரமோ ஒரு நம்பர் சொன்னார். பதினைந்து ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கும் பதிப்பகம். அதிர்ச்சியாக இருந்தது.  நீங்கள் பதிப்பித்த, எல்லோருக்கும் தெரிந்த ஒருவர் பெயர் சொல்லுங்கள் என்று பணிவுடன் கேட்டேன்.  (அவர் புண்பட்டு விடக் கூடாது என்பதால் ஏற்பட்ட நிஜமான பணிவு.)  அ. மார்க்ஸின் அறுபது எழுபது நூல்களைப் பதிப்பித்திருப்பதாகச் சொன்னார்.  இந்தச் சம்பவம் புவனேஸ்வரிக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆக, எக்ஸ் பதிப்பகம் ஆரம்பித்த மூன்றே மாதத்தில் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதுமே தெரிய வந்தது யாரால்?  ஒரே ஆண்டில் காலச்சுவடு பதிப்பகத்தின் போட்டிப் பதிப்பகமாகவும் வந்தது எக்ஸ் பதிப்பகம்.  ஒரு சில ஆண்டுகளிலேயே ஜெயமோகனின் நண்பர்களும் விஷ்ணுபுரம் பதிப்பகத்தைத் தொடங்கினார்கள்.  இதற்கெல்லாம் யார் காரணம் ?  யார் முன்னுதாரணம்?  எக்ஸ் பதிப்பகத்துக்கு நான் முதுகெலும்பாய் விளங்கினேன் என்பதை ஊரே அறிந்திருக்க, அந்த விஷயம் புவனேஸ்வரிக்குத் தெரியாமல் போனது ஏன்?  அல்லது, தெரிந்தும் தெரியாதது போல் ஃபேஸ்புக்கிலும் மற்ற இடங்களிலும் பாவனை செய்ய என்ன காரணம்?

இப்போது ஏழெட்டு ஆண்டுகள் கடந்து, ஆலமரம் போல் நிலைத்து நின்ற பிறகு ”கண்ணாயிரம் பெருமாள்,  அவருடைய புத்தகங்களைப் பதிப்பிக்க எங்களிடம் தருகிறாரே தவிர, அவருக்கும் இந்தப் பதிப்பகத்துக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று சொல்லிச் சொல்லி எங்களுக்கு மடுத்து விட்டது” என்று சொன்னால் அது நன்றி கெட்டத்தனம் இல்லையா?  முதுகில் குத்தும் காரியம் இல்லையா?

இதை மற்றவர்கள் செய்யலாம்?  புவனேஸ்வரி செய்யலாமா?

அக்டோபர் எட்டாம் தேதி நான் சென்னையிலிருந்து பவானி சென்று கொண்டிருந்தேன். 

பத்தாம் தேதி புவனேஸ்வரிக்கும் எக்ஸ் பதிப்பகத்தின் பார்ட்னர் கோண்டி என்ற கோதண்டராமனுக்கும் பின்வருமாறு ஒரு மின்னஞ்சல் எழுதி அனுப்பினேன்.  அப்போது மணி: மதியம் 2.46.  அந்தக் கடிதம்:

Dear Bhuvaneshwari, dear Kothandaraman,

I am writing to seek your guidance and suggestions regarding a matter of concern.

Recently, Bhuvaneshwari mentioned that some writers are considering withdrawing their works from your publication due to my criticism of them on my blog. Additionally, I feel a little uneasy to hear that you are having trouble because of the name of your publication, as it is currently associated with my novel.

I value our collaboration and would like to understand your stance on continuing to publish my books. If you are willing to move forward, I will continue to send my manuscripts as usual. However, if you feel otherwise, please do not hesitate to let me know. I will respect your decision without any reservations, as my foremost principle is to avoid causing trouble for others. I would never want my writing to create difficulties for you.

Thank you for your time. I look forward to your response.

Perumal

மேற்கண்ட கடிதத்தை நான் கோண்டிக்கு மட்டும் வாட்ஸப்பிலும் அனுப்பினேன்.  ஐந்தே நிமிடங்களில் அவரிடமிருந்து கீழ்க்கண்ட செய்தி வந்தது:

“We don’t have any problem publishing your work sir.”

என்னுடைய விளக்கமான, மிகவும் பணிவான கடிதத்துக்கு ஒன்பதே வார்த்தைகளில் பதில். 

கோண்டியிடமிருந்து இப்படி ஒரு செய்தி வந்ததில் எனக்கு சற்றும் ஆச்சரியமில்லை.  ஏனென்றால், அவர் என் மீது கடும் கோபத்தில் இருந்துகொண்டிருந்தார்.  அதற்குப் பிறகு வருகிறேன். 

ஆனால் ஊரெங்கும், உலகெங்கும் – ஆம், உலகெங்கும் சென்று “கண்ணாயிரம் பெருமாள்தான் என் ஆசிரியர், கண்ணாயிரம் பெருமாள்தான் என் ஆசான், கண்ணாயிரம் பெருமாளால்தான் இலக்கியம் கற்றேன்” என்று சொல்லி வரும் என் மாணவி புவனேஸ்வரியிடமிருந்து ஒரு வார்த்தை பதில் இல்லை.  என்னை ஃபோனில் அழைக்க இயலாது.  சில மாதங்களுக்கு முன்னால் அவரோடு நடந்த ஃபோன் கலவரத்தில் என்னுடைய இரண்டு லட்ச ரூபாய் பெறுமானமான கண்ணாடியைத் தூக்கியெறிந்து உடைத்து விட்டேன்.  அது மட்டுமல்லாமல், இரண்டு தினங்கள் நெஞ்சு வலியால் துடித்தேன். நட்பை விட உயிர் முக்கியமாகத் தோன்றியதால் புவனேஸ்வரியின் ஃபோன் நம்பரை ப்ளாக் பண்ணி விட்டேன்.  வாக்குவாதத்தின் காரணம், சல்லிக்காசு பெறாதது.

ஆனால் இந்தக் கலவரத்துக்கு சில மாதங்களுக்கு முன்பாகவே புவனேஸ்வரியுடன் பேசுவதை சுத்தமாக நிறுத்தியிருந்தேன்.  காரணம்:  புவனேஸ்வரி ஃபுல்க்கா சென்னா செய்வதில் வல்லவர்.  எனக்கோ ஃபுல்க்கா சென்னா என்றால் உயிர்.  கடைகளிலோ நல்ல ருசியான ஃபுல்க்கா சென்னா கிடைப்பதில்லை.  கிடைத்தாலும் வெள்ளை சென்னாதான் கிடைத்தது.  எனக்கோ கறுப்பு சென்னாதான் பிடிக்கும்.  வெள்ளை சென்னா வசவசவென்று ருசியற்று இருக்கும்.  சில ஆண்டுகளுக்கு முன்னால், ஒருமுறை செய்து கொடுங்கள் என்றேன்.  இப்போது என் மகன் கல்யாணத்தில் படு பிஸியாக இருக்கிறேன், பிறகு செய்து தருகிறேன் என்றார்.  நானும் விட்டு விட்டேன். 

கல்யாணம் முடிந்து சில மாதங்கள் சென்று மீண்டும் கேட்டேன்.  செய்து தருகிறேன் என்றார்.  அதோடு அதை மறந்து விட்டார் என்று தோன்றியதால் சில மாதங்கள் சென்று மீண்டும் கேட்டேன்.  செய்து தருகிறேன் என்றார்.  அதோடு அதை மறந்து விட்டார் என்று தோன்றியதால் சில மாதங்கள் சென்று, சென்னா செய்வது எப்படி, நானே செய்து கொள்கிறேன் என்றேன்.  அது ஒரு தஞ்சாவூர் நக்கல்.  தஞ்சாவூர் நக்கலெல்லாம் கொங்கு தேசத்தவருக்குப் புரியாது என்பதால் சென்னா செய்முறையை செவ்வனே சொல்லிக் கொடுத்தார். 

அதோடு அந்த ஃபுல்க்கா சென்னா விஷயத்தை விட்டு விட்டேன்.  அதற்கு மேல் கேட்டு அவமானப்பட எனக்கு விருப்பம் இல்லை.  2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தன் சிறுகதைத் தொகுதி வருவதாகவும் அதற்கு நான் முன்னுரை தர வேண்டும் என்றும் கேட்டார்.  தருகிறேன், ஆனால் அதற்கு ஒரு விலை உண்டு என்றேன்.  என்ன என்றார்.  ஃபுல்க்கா சென்னா செய்து தர வேண்டும் என்றேன்.  நிச்சயம் என்றார்.  அதோடு அதை மறந்து விட்டார் என்று தோன்றியதால் சில தினங்கள் சென்று மீண்டும் கேட்டேன்.  அடடா, இன்றுதான் புத்தக விழா ஆரம்பிக்கிறது, பிறகு செய்து தருகிறேன் என்றார்.  அதோடு அதை மறந்தும் போனார்.  நானும் அவரோடு பேசுவதை சுத்தமாக நிறுத்தி விட்டேன்.  சுத்தமாக அவரை என் வாழ்விலிருந்து அப்புறப்படுத்தி விட்டேன்.

இங்கே இந்தக் கதைக்குக் கொஞ்சம் வெளியே போய் “முழுமை” என்ற விஷயத்தில் அல்லாடி விட்டு மீண்டும் வருவோம்.  காரணம் இருக்கிறது.  சமீபத்தில் பாண்டிச்சேரியில் ஒரு சினிமாப் பட்டறை நடத்தினேன்.  அதற்கு வந்திருந்த நண்பர்களில் ஒருவர் செக்கந்தர்.  மைசூரிலிருந்து வந்திருந்தார். 

நான் அநியாயத்துக்கு ஒரு காஃபி அடிக்ட்.  ஆனாலும் மூன்று காஃபிதான் குடிப்பேன்.  காலையில் இரண்டு.  மாலையில் ஒன்று.  மைசூரில் கிடைக்கும் கிங்ஸ் காஃபிதான் இந்த உலகின் மிகச் சிறந்த காஃபி என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம்.  அதிலும் காஃபிப் பொடியை வடிகட்டியில் வைத்து டிகாக்‌ஷன் எடுக்கும் முறை எனக்குக் கை கொடுப்பதில்லை.  சரியாக வராது.  அதனால் செக்கந்தர் என்னைச் சந்திக்க வரும்போதெல்லாம் மூன்று நான்கு டிகாக்‌ஷன் பாட்டில்கள் எடுத்து வந்து கொடுப்பார்.

குரியரில் அனுப்ப முடியவில்லை.  திரவமாக அனுப்ப முடியாதாம்.  பாண்டிச்சேரியில் சந்தித்த அவரிடம் காஃபி என்றேன்.  அவசரமாக வந்தேன், வாங்க முடியவில்லை; ஆனால் உங்களுக்கு இன்னும் இரண்டு நாளில் கிடைக்கும் என்றார்.

பாண்டிச்சேரி நிகழ்ச்சி முடிந்ததும் ஹொசூர் பக்கத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை என்ற ஊருக்கு அருகில் உள்ள வனத்தில் தங்கினேன்.  மைசூர் திரும்பிய செக்கந்தர் அங்கிருந்து நாலு பாட்டில் காஃபி டிகாக்‌ஷனை வாங்கிக் கொண்டு மைசூரிலிருந்து தேன்கனிக்கோட்டை வனத்தில் வந்து என்னைச் சந்தித்தார்.

தேன்கனிக்கோட்டையில் நான் சந்தித்த நண்பர் பாஸ்கரன்.  எப்போதும் தமிழ் சினிமாப் பாடல்களை சத்தம் போட்டுப் பாடிக்கொண்டிருப்பார்.  குளிர் பிய்த்துக்கொண்டு போனது.   ஆனாலும் சட்டை போட மாட்டார்.  பாரதிராஜாவைப் போல் அடிக்கடி ஆங்கிலத்தில் பேசுவார்.  அதிலும் பக்கத்தில் பெண்களைப் பார்த்து விட்டால் தமிழே வராது. 

அவர் அவ்வப்போது என்னிடம் கேள்விகள் கேட்பார்.  ஆமாம் சாரு, இந்த புத்தர் அத்தனை கஷ்டப்பட்டு ஞானத்தைக் கண்டு பிடித்தாரே?  அந்த ஞானம் என்றால் என்ன?

அதை விடுங்கள்.  பதில் அனைவருக்கும் தெரியும்.  மறுநாள் இன்னொரு கேள்வி கேட்டார் பாஸ்கரன்.

ஒரு மனிதன் முழுமை அடைவது எப்போது?

நான் சொன்ன பதில்: முழுமை என்பது அபத்தமான வார்த்தை.  முழுமை என்ற ஒன்றே இல்லை. 

ஆனால் எல்லோரும் இன்புற்றிருக்க சில வழிகள் உள்ளன.

யாரையும் ஒருபோதும் தொந்தரவு செய்யலாகாது.  யாரும் நம்மைத் தொந்தரவு செய்ய அனுமதிக்கலாகாது. 

எவர் மீதும் அதிகாரம் செலுத்தலாகாது.  யாரையும் நம் மீது அதிகாரம் செலுத்த அனுமதிக்கலாகாது.

இதோடு கூட, நம் வாழ்க்கை, பிறருக்குக் கொடுப்பதன் மூலமே அர்த்தம் பெறுகிறது. 

என் தோழி ஒருவர் அறுபது பூனைகளும் அறுபது நாய்களும் வளர்ப்பதை உதாரணமாகக் குறிப்பிட்டேன்.

அவருடைய உதாரணத்தையும் ஞாபகப்படுத்தினேன்.  பாஸ்கரன் தன் வருமானத்தில் பதினைந்து சதவிகிதத்தை தர்மம் செய்கிறார்.  சினிமா நடிகரைப் போல் ஏழைக் குழந்தைகளைப் படிக்க வைப்பது அல்ல அவர் தர்மம்.  படித்து முடித்து அந்தக் குழந்தைகள் செய்வது என்ன?  வீடு கட்டுவார்கள்.  படித்ததால் வரும் அந்தஸ்தை வைத்து வரதட்சணை வாங்குவார்கள்.  குழந்தைகளுக்கு சொத்து சேர்த்து வைத்து விட்டு செத்துப் போவார்கள்.  மிருகங்களுக்கும் இவர்களின் வாழ்க்கைக்கும் என்ன வித்தியாசம்?  இவர்களால் சமூகத்துக்கு எந்தப் பயனாவது உண்டா?

பாஸ்கரன், கண் தெரியாத, காது கேளாத, வாய் பேசாத அனாதைக் குழந்தைகளின் இல்லங்களுக்கும், பறவைகளின் சரணாலயத்துக்கும், இன்னும் இது போன்ற விஷயங்களுக்கும் தானம் செய்கிறார். 

இப்போது செக்கந்தர் கொண்டு வந்த காஃபி டிகாக்‌ஷனின் அர்த்தம் புரிகிறதா?  இங்கே நீங்கள் ஃபுல்க்கா சென்னா கதையைக் கோர்த்துக் கொள்ள வேண்டும்.

வாழ்வின் அர்த்தம், ஒரே சொல்: கொடுத்தல்.  

சரி, விஷயத்துக்கு வருவோம்.  என்னுடைய மின்னஞ்சலைப் படித்து, புவனேஸ்வரி அவருடைய ஃபோனிலிருந்து என்னை அழைக்க முடியாவிட்டால் வேறு ஃபோனிலிருந்து அழைத்திருக்கலாம்.  ஏன், கோண்டியின் ஃபோனிலிருந்தே அழைத்திருக்கலாம்.  அதெல்லாம் போகட்டும்.  என் மின்னஞ்சலுக்கு ஒரு பதில் மின்னஞ்சல் அனுப்ப முடியாதா?  அந்த அளவுக்கு எனக்குத் தகுதி இல்லையா?  அந்த அளவுக்குக் கூட புவனேஸ்வரி எனக்கு நன்றிக் கடன் படவில்லையா?  அதுவும் என் மின்னஞ்சல் எப்படிப்பட்டது?  ”நீங்கள் தொடர்ந்து என் நூல்களை வெளியிடும் நிலையில் இருக்கிறீர்களா?  இல்லையானால் வெளிப்படையாகச் சொல்லுங்கள், நான் வேறு பதிப்பகம் பார்த்துக் கொள்கிறேன்” என்று எழுதினால், ஒருத்தர் நோ ப்ராப்ளம் சார், நாங்கள் வெளியிடுகிறோம் என்கிறார்.  புவனேஸ்வரியோ பதிலே அனுப்பவில்லை. 

இருபது ஆண்டுகளுக்கு முன்னால் என்னால் வளர்ந்த ஒருவர்  “நான்தான் கண்ணாயிரம் பெருமாளுக்கு எக்ஸ் நாவலை எழுதிக்கொடுத்தேன்” என்று எழுதிய போது எப்படிப்பட்ட வலியை அனுபவித்தேனோ அதே வலியை புவனேஸ்வரியின் மௌனத்தின் மூலம் அனுபவித்தேன்.  இடுகாட்டில்தான் அப்படிப்பட்ட அமைதி நிலவும். 

அப்போது நான் பவானியில் இருந்தேன்.  உறங்க முடியவில்லை.  புவனேஸ்வரியின் உதாசீனத்தை என்னால் புரிந்து கொள்ளவோ, ஏற்றுக் கொள்ளவோ முடியவில்லை.  அதன் காரணமாக, இரவு ஒன்பதே முக்கால் மணி அளவில் புவனேஸ்வரியையும், கோண்டியையும் ஃபேஸ்புக்கில் ப்ளாக் பண்ணி விட்டு, “இனிமேல் என் புத்தகங்கள் எக்ஸ் பதிப்பகத்தின் மூலம் வெளிவராது; எந்தப் பதிப்பகத்திலிருந்து வரும் என்பதை விரைவில் அறிவிக்கிறேன்” என்று எழுதினேன்.

இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும்.  ஏற்கனவே நான் புவனேஸ்வரியின் மீது மிகுந்த வருத்தத்தில் இருந்தேன்.  அது பற்றி என் ப்ளாகிலும் ”புவனேஸ்வரிக்கு ஒரு கடிதம்” என்ற தலைப்பில் வெளியிட்டேன்.  அதைப் படித்த பிறகும் புவனேஸ்வரி மேற்கண்ட கடிதத்துக்கு பதில் எழுதாமல், கோண்டியை விட்டு ஒற்றை வரிக் கடிதம் எழுதக் காரணமாக இருப்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.  ஒருவன் உங்கள் மீது ஏற்கனவே வருத்தத்தில் இருக்கிறான்.  அதைப் பொதுவெளியிலும் எழுதுகிறான்.  அதற்கு உங்களிடமிருந்து சரியான பதில் இல்லை.  அந்தப் பிரச்சினை அப்படியே தொங்கலில் நிற்கிறது.  அதற்குள்ளாக புவனேஸ்வரியே இன்னொரு பிரச்சினையை ஃபேஸ்புக்கில் தொடங்குகிறார்.  அதற்கு நான் தனிப்பட்ட முறையில் பதில் எழுதுகிறேன்.  புவனேஸ்வரியோ பதிலே எழுதாமல் கோண்டியை விட்டு எழுதச் செய்கிறார்.  கோண்டி என்ன எழுதுவார் என்று புவனேஸ்வரியால் யூகிக்க முடியாதா?  அப்படியே இருந்தாலும் புவனேஸ்வரியால் எனக்கு ஒரு வார்த்தை பதில் எழுத முடியாதா?

ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம் தருகிறேன். 

ரஹ்மானின் மனைவி அன்றைய தினம் ரஹ்மானுக்கு விவாக ரத்து நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.  அது அன்றைய பத்திரிகைச் செய்தி. 

அன்றைய தினம் நான் ரஹ்மானை சந்திக்க இருந்தது.  ஒரு மெஸேஜ் அனுப்பினேன்.  ”இன்றைய சந்திப்பு சாத்தியமா?”  அதற்கு உடனடியாக ரஹ்மானின் பதில்: ”ஒரு பிரச்சினை ஓடிக் கொண்டிருக்கிறது.  சந்திப்பு தேதியை பின்னர் தெரிவிக்கிறேன்.”  அதாவது என் மெஸேஜ் கிடைத்த பத்து நிமிடத்தில் வந்த பதில் அது.

சென்ற மாதம் ரஹ்மான் பாஸ்டன் சென்றிருந்தார்.  பாஸ்டனில் அவர் மூலமாக எனக்கு ஒரு வேலை ஆக வேண்டியிருந்தது.  கேட்டேன்.  அரை மணி நேரத்தில் பதில்.  அந்த பதிலை அவருடைய மேனேஜருக்கும் அனுப்பி விவரம் கேட்டிருந்தார். 

ரஹ்மானைப் போல் பிஸியாக இருக்கும் நண்பர்களே என்னோடு இந்த அளவுக்கு நட்பைப் பேணுகிறார்கள் என்றால் எட்டு ஆண்டு காலம் என்னிடம் பாடம் பயின்ற ஒரு பெண்மணி என்னுடைய மிக முக்கியமான கடிதத்துக்கு பதிலே எழுதாமல் இருக்கிறார். 

அதிலும் ஒரு சில தினங்களுக்கு முன்புதான் அவர் மீது நான் இதே குற்றச்சாட்டை வைத்திருக்கிறேன்.  இதே குற்றச்சாட்டு. 

நான் ப்ளாகில் எழுதி, பின்பு நீக்கி விட்ட அந்தக் கடிதத்தை இங்கே தருகிறேன். 

Hi Perumal,

Just wanted to let you know that the novel that I have translated has been out for sales yesterday. Need your blessings! Thanks!

Bhuvaneshwari

Fri, Sep 26, 2:26 PM

ஹாய் புவனேஸ்வரி,

உங்கள் கடிதத்தைப் பொதுவெளியில் வெளியிட்டு பதில் சொல்வதற்கு என்னை அனுமதிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

பொதுவாக எனக்கு வரும் ஒரு கடிதத்தைக் கூட எழுதியவரின் அனுமதியின்றி நான் வெளியிடுவதில்லை.

ஆனாலும் அந்த விதியை இப்போது மீறுவதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு.

உங்கள் கடிதம் எனக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருந்தது.

விளக்குகிறேன்.

23 செப்டம்பர் மாலை நான்கு மணி அளவில் நீங்கள் மொழிபெயர்த்த அல்பேனிய நாவல் ஒன்று வெளிவந்திருக்கும் செய்தியை உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்த்தேன்.

உடனடியாக உணர்ந்தது முதுகில் சொருகிய கத்தி.

ஏன் என்று விளக்காமல் மேலே செல்ல முடியாது.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலே இருக்கும்.

தில்லியில் ஜனக்புரி என்ற பகுதியில் பொஸங்கிபூர் என்று ஒரு கிராமம் உள்ளது. (தில்லியில் ஊருக்குள்ளேயே கிராமமும் இருக்கும்.) அங்கே ஒரு அய்யங்கார் பையன் பழக்கமானான்.  குமுதம் விகடன் படித்துக்கொண்டிருந்தான்.  அவனுக்கு சர்வதேச இலக்கியமும், சர்வதேச சினிமாவும், நாடகமும், இசையும் இன்னும் என்னவெல்லாமோ கற்பித்தேன்.  மண்டி ஹவுஸில்தான் சினிமா, நாடகம் எல்லாம்.  சில தினங்கள் வருகிறேன் என்று சொல்லி விட்டு டிமிக்கி கொடுத்து விடுவான்.  ஏன் என்று கேட்டால், ஏதோ கவைக்கு உதவாத ஒரு பதில் சொல்வான்.  கன்னாபின்னா என்று திட்டுவேன்.  அப்புறம் அப்படிச் செய்ய மாட்டான்.  பதினைந்து ஆண்டுகள் ஆயிற்று

இருவருமே சென்னை வந்து விட்டோம்.  ஒருநாள் மது அருந்திக்கொண்டிருந்த போது பையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்துக் காண்பித்தான்.  அவன் எழுதிய சிறுகதைத் தொகுதி புத்தகமாக வந்திருந்தது.  மகிழ்ச்சி பொங்கியது எனக்கு.  பிரித்துப் பார்த்தால் சமர்ப்பணம் கோணங்கிக்கு என்று இருந்தது.   பக்கத்தில் இருந்த குடையை எடுத்துக் குத்தப் போனேன்.  குத்தியிருந்தால் படுகாயம் ஆகியிருக்கும்.  நான் கொஞ்ச நாள் சிறையில் இருந்திருப்பேன்.  ஸ்ரீரங்கத்துப் பையன்.  கேட்க வேண்டுமா?  ஒதுங்கி விட்டான்.  காயமில்லை.

கோணங்கியின் பெயர் பார்த்ததால் கோபம் இல்லை.  பதினைந்து ஆண்டுகளாக நான் கோணங்கியின் எழுத்தை விமர்சிக்கும்போதெல்லாம் பக்கத்தில் இருந்து ஜால்ரா அடித்தவன்.  அவன் கோணங்கியின் வாசகன் என்று ஒருமுறை கூட சொன்னவன் அல்ல.   அதனால்தான் கோபம்.

வளர்த்திக் கொண்டு போக விரும்பவில்லை.  இப்படி தொடர்ந்து ஒன்று மாற்றி ஒன்று வந்து கொண்டே இருக்கும்.  நான் யாருக்குப் பயிற்றுவிக்கிறேனோ அவர் என் முதுகில் குத்திவிட்டுப் போவார்.   திருதராஷ்ட்ரனுக்கு வேறு மாதிரி சாபம்.   உணவில் கை வைத்தால் உணவு புழுவாகி விடும்.  அதனால் த்ருதராஷ்ட்ரனுக்கு நூறு தட்டில் உணவு.  ஒவ்வொரு கவளம் எடுத்ததும் புழுவாக மாறிய தட்டு அப்புறப்படுத்தப்படும்.   எனக்கு இப்படி ஒரு சாபம்.  யாருக்குக் கற்பிக்கிறேனோ அவன் கையால்/ அவள் கையால் முதுகில் கத்திக் குத்து வாங்க வேண்டும்.

இந்த ஆண்டு ஜனவரியில் உங்கள் சிறுகதைத் தொகுப்பு வந்தது.  அந்த நூலை எனக்கு சமர்ப்பணம் செய்திருந்தீர்கள்.  மேலும், செல்லுமிடமெல்லாம் கண்ணாயிரம் பெருமாளே என் ஆசிரியர் என்று சொல்லி வருகிறீர்கள்.  இதற்கே ஒரு தில் வேண்டும்.  என் பெயரைச் சொன்னாலே எல்லோரும் உங்களைத் திட்ட ஆரம்பித்து விடுவார்கள்.

ஆனால் நீங்கள் மொழிபெயர்த்த அல்பேனிய நாவல் பற்றி நீங்கள் என்னிடம் ஆறேழு மாதங்களாக ஒரு வார்த்தை சொல்லவில்லை.  ஏதோ ஒரு ராணுவ ரகசியத்தைப் போல் முழுசாக மறைத்து விட்டீர்கள்.   மறைத்ததற்கு உங்களுக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம்.  ஆனால் அது அறம் அல்ல.  தர்மம் அல்ல.  ஏனென்றால், நம் மரபின்படி மாதா, பிதா, குரு, தெய்வம்.  தெய்வத்தையே குருவுக்கு அடுத்த இடத்தில் வைத்த மரபு.  இங்கே கணவனோ, மனைவியோ, மகனோ, மகளோ யாருமே இல்லை.  அப்படிப்பட்ட குருவிடம் நீங்கள் ராணுவ ரகசியம் காத்திருக்கிறீர்கள்.  ஆனால் இதுவரை நடந்தது என்ன?  உங்களுக்கு மட்டும் அல்ல.  பல நண்பர்களுக்கு அவர்களின் பிரதியை செப்பனிட்டுக்  கொடுத்திருக்கிறேன்.  இந்த வேலையில் சிறந்தவர் க்ரியா ராமகிருஷ்ணன்.  அவருடைய எடிட்டிங் மட்டும் இல்லாதிருந்தால் இமயம் இப்போது இருப்பது போல் சர்வதேச அளவில் சென்றிருக்க முடியாது.  இதை இமயமே சொல்லியிருக்கிறார்.  என் நண்பர் அமல்ராஜ் ஃப்ரான்சிஸ் எழுதிய பட்டக்காடு என்ற நாவலை எடிட் செய்து கொடுத்தேன்.  அதேபோல் உங்களுடைய சிறுகதைகள், பயணக் கட்டுரைகள் எல்லாவற்றையும் எடிட் செய்திருக்கிறேன்.  நீங்கள் என் நண்பர் என்பதால் அல்ல.  எல்லோருக்குமே செய்திருக்கிறேன்.  இன்றும் எனக்கு வரும் கடிதங்கள் அனைத்தையும் செப்பனிட்டுத்தான் வெளியிடுகிறேன்.  தமிழ் மேல் உள்ள ஆர்வம் மட்டுமே காரணம். அவ்வளவுதான்.  உங்களுக்காக விசேஷமாக செய்தது அல்ல.

நீங்கள் பயணக் கட்டுரை எழுத ஆரம்பித்ததும் நான் சொன்னேன், இதை நாவலாக எழுதுங்கள் என்று.  நீங்களும் சம்மதித்தீர்கள்.  நான்தான் ஆரம்பத்திலிருந்து எடிட் செய்தேன்.  அப்போது ஒரு மூத்த எழுத்தாளர் தானே முன்வந்து உங்கள் பயணக் கட்டுரையை எடிட் செய்து தருகிறேன் என்று சொல்கிறார். (பெண் என்றால் தொண்ணூற்றைந்து வயது மூத்த எழுத்தாளர் கூட எடிட் செய்து தருகிறேன் என்று முன்வருவார்கள்!  அந்த அளவுக்கு இந்திய சமூகம் காய்ந்து கிடக்கிறது, என்ன செய்ய!?)

அவர் அப்படிச் சொன்னதும் நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்?  என்னுடைய எல்லா கட்டுரைகளையும், கதைகளையும் கண்ணாயிரம் பெருமாள்தான் எடிட் பண்ணுகிறார், அதேபோல் இதையும் எடிட் பண்ணுகிறார் என்று சொல்லியிருந்தால் அவர் ஒன்றுமே சொல்லப் போவதில்லையே?  அவர் மிகவும் நல்லவராயிற்றே?  அப்படியா சரி என்றுதான் சொல்லியிருக்கப் போகிறார்.

ஆனால் உங்களிடம் ஒரு குணம் இருக்கிறது.  யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது.  எல்லோரிடமும் நட்பு பாராட்ட வேண்டும்.  அதனால் என்ன செய்தீர்கள்?  அவரிடம் சரி என்றீர்கள்.   எனக்கோ அவர் எழுத்து ஒரு வாக்கியம் கூடப் பிடிக்காது.  அவருக்கும் அப்படியே.  அவரும் நானும் எப்படி ஒரே பிரதியை எடிட் செய்வது?  மாட்டுக்கறி பிரியாணியும் பிஸிபெளா பாத்தும் ஒரே பாத்திரத்தில் சமைக்கப்பட்டது.  கடைசி வரை அந்தப் பாவப்பட்ட எழுத்தாளருக்கு அந்தப் பயணக் கட்டுரையை நானும் எடிட் பண்ணுகிறேன் என்று தெரியாது.  பயணக் கட்டுரை மட்டும் அல்ல, கடந்த ஏழு ஆண்டுகளாக நீங்கள் எழுதிய அனைத்தையும் எடிட் செய்து கொடுத்தவன் நான்.   உடனே சொல்லிக் காண்பிக்கிறேன் என்று குற்றம் சாட்டாதீர்கள்.  சொல்லிக் காண்பிப்பதற்கெல்லாம் இதில் எதுவுமே இல்லை.  உங்களுக்கு மட்டும் அல்லாமல் எத்தனையோ பேருக்கு எடிட் பண்ணிக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.  நீங்களும் மணிக்கணக்கில், நாள் கணக்கில் அமர்ந்து என்னுடைய நாவல் மொழிபெயர்ப்பில் உதவியிருக்கிறீர்கள். இப்படி பரஸ்பர உதவி எத்தனையோ நடந்துள்ள நிலையில், எப்படி இந்த அல்பேனிய நாவல் மொழிபெயர்ப்பு பற்றி என்னிடம் ஒரு வார்த்தை சொல்லாமல் மறைத்தீர்கள் என்பதுதான் என் சம்சயம்.  இது என்னைப் பெரிதும் அவமதிப்பதாக உள்ளது.  உங்கள் எழுத்தை எடிட் பண்ணுவதற்கு மூத்த எழுத்தாளர்கள் க்யூவில் நிற்கிறார்கள்.  ஆனால் இத்தனைக் காலம் எடிட் பண்ணின ஒருத்தருக்கு இதைச் சொல்ல வேண்டும் என்று கூடவா தோன்றாது? நாம் செய்யும் ஒரு காரியம் பற்றி எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.  ஆனால் இதுகாறும் அக்காரியத்தில் கூட நின்ற ஒருவரிடம் சொல்ல வேண்டுமா, இல்லையா?

இத்தனைக்கும் கடந்த ஆறேழு மாதங்களில் நாம் எத்தனையோ விஷயங்களுக்காகப் பேசியிருக்கிறோம்.  உங்கள் உறவினரின் பிறந்த நாள் அன்று காணொலியில் நான் அவருக்கு வாழ்த்து அனுப்பினேன். நீங்களும் உங்கள் தோழிகளும் எடுத்துச் செய்த ஒரு இலக்கிய விழாவுக்கு என்னால் முடிந்த மிகச் சிறிய உதவியைச் செய்தேன்.  இப்படி பல விஷயங்கள்.  ஆனாலும் உங்களுக்கு இந்த மொழிபெயர்ப்பு விஷயம் பற்றி ஒரு வார்த்தை என்னிடம் சொல்வதற்குத் தோன்றவில்லை?  காரணம், எடிட் பண்ணிக் கொடுப்பதற்கு க்யூவில் நிற்கும் மூத்த எழுத்தாளர்கள்? ஒருவர் குருவின் பாதம் பணிந்து வணங்குவது அல்ல குருவின் மீதான மரியாதை.  கொக்கரக்கோ அப்படியெல்லாம் செய்ததே இல்லை.  ஆனால் அவன் என்னை ஒருபோதும் அவமரியாதை செய்ததில்லை.   நீங்களோ தொடர்ந்து என்னை அவமதிக்கிறீர்கள் என்று நான் உணரும்படிச் செய்கிறீர்கள்.  எப்படி என்று சொல்கிறேன்.

என் எழுத்தை வாசிக்காதவர்களோடு நான் தொடர்பிலேயே இருப்பதில்லை.  அவர்களோடு நான் ஒரு வார்த்தை பேசுவதில்லை.   எழுத்து இல்லாவிட்டால் இசை.  ரஹ்மான் என் எழுத்தைப் படித்ததில்லை.  ஆனால் எங்களைப் பிணைப்பது இசை.  இப்படி ஏதாவது ஒன்று இருக்க வேண்டும். 

எனக்கு ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது.  என்னைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளில் மிக முக்கியமானவை மூன்று.  ஒன்று, அரூ இதழில் கொக்கரக்கோ எழுதியது.  இரண்டு, ஜெயமோகனின் கட்டுரை.  பிறழ்வெழுத்து என்ற வார்த்தை தமிழுக்கு அப்போதுதான் அறிமுகமாகிறது.  என் எழுத்தைப் புரிந்து கொள்ள இந்த இரண்டு கட்டுரைகளும் குறிப்பிடத் தகுந்தவை. மூன்றாவது, போகன் சங்கரின் கட்டுரை.  எனக்கு ஒரு புக்கர் பரிசு கிடைத்தால் கூட அதை விட முக்கியமானதாக இந்தக் கட்டுரை பற்றி நினைக்கிறேன்.  காரணம், என்னைப் பற்றியும் என் எழுத்து பற்றியும் நான் என்ன நினைக்கிறேனோ அதையே எழுதியிருக்கிறார் போகன் சங்கர்.  இது ஒரு நம்ப முடியாத விஷயம்.   நான் உங்களிடம் போகன் கட்டுரையைப் படித்தீர்களா என்று கேட்டேன்.  நேரமில்லை என்றீர்கள்.  அடுத்த வாரம் கேட்டேன்.  மறந்து விட்டேன் என்றீர்கள். மூன்றாவது வாரம் கேட்டேன்.  ஏதோ ஒரு காரணம்.; அப்புறம் விட்டு விட்டேன். 

இதைத்தான் அவமரியாதை என்கிறேன்.  என் எழுத்தையோ என்னைப் பற்றிய எழுத்தையோ படிக்காமல் இருப்பது ஒவ்வொருவரின் சுதந்திரம்.  அது பற்றிப் புகார் செய்ய எனக்கு எந்த உரிமையும் இல்லை.  ஆனால் அப்படிப்பட்ட ஒருவரோடு நான் தொடர்ந்து உரையாடிக்கொண்டிருந்தது உங்களோடு மட்டும்தான்.  ஒரே விதிவிலக்கு நீங்கள்தான்

காரணம், நீங்கள் சொன்ன ஒரு விஷயம்.  நான் என்னுடைய ப்ளாகில் எழுதுவது உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்றீர்கள்.  ஆகவே அதை நான் வற்புறுத்தவில்லை.   நமக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் எதையுமே நாம் செய்யக் கூடாது என்று நினைப்பவன் நான்.  ஆனால் என் எழுத்து ஒருவருக்கு மன உளைச்சல் ஏற்படுத்துகிறது என்றால், அவர் என் உலகில் இல்லை என்று பொருள்.

ஃபிடல் காஸ்ட்ரோ சொன்னதுதான். ”Within the revolution, everything; against the revolution, nothing.”  இதை எப்போது சொன்னார் என்றால், தொமாஸ் அலேயா  ஒரு திரைப்படத்தில் ஒரு பெண் கதாபாத்திரம் காஸ்ட்ரோவை பாஸ்டர்ட் என்று திட்டுகிறாள்.   இது பற்றி காஸ்ட்ரோவிடம் கேட்கப்பட்ட போது அவர் பலமுறை சொன்ன அந்த வாக்கியத்தை மீண்டும் சொன்னார்.  ஏனென்றால், தொமாஸ் அலேயா காஸ்ட்ரோவை எவ்வளவுதான் விமர்சித்தாலும் அவர் புரட்சிக்கு உள்ளே இருந்தார்.

கொக்கரக்கோ என்னை எவ்வளவு விமர்சித்தாலும் அவன் என் உலகின் உள்ளே இருக்கிறான்.   நீங்கள் என்னதான் என்னைப் பற்றி வெளியுலகில் புகழ்ந்து பேசினாலும், என் எழுத்து உலகில் நீங்கள் இல்லை.  அன்பு என்றால் என்ன, அதில் பொதிந்திருக்கும் வன்முறை எப்படிப்பட்டது என்று ஒரு கதை எழுதியிருந்தேன்.   அன்பு குறித்து எழுதப்பட்ட ஒரு ஆவணம் என்று அதைச் சொல்லலாம்.  ஆனால் அதை உங்களால் படிக்கவே முடியவில்லை என்றீர்கள்.  என் ப்ளாக் எழுத்து எல்லாமே உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.  அது போக, நான் எந்த மேடையில் பேசினாலும் பேசி முடித்ததும் “ஐ டோண்ட் லைக் யுர் ஸ்பீச்” என்பீர்கள்.  யாராவது ஓஷோவிடம் போய் அப்படிச் சொல்ல முடியுமா, சொல்லுங்கள்.  நீங்கள் அப்படிச் சொல்லும்போதெல்லாம் எனக்கு என்னை ஒருவர் செருப்பால் அடித்தது போல் இருக்கும்.  ஒருமுறை இருமுறை அல்ல, சுமார் இருபது முறை சொல்லியிருப்பீர்கள்.

புவனேஸ்வரி, நான் கடவுள்.  என்னை நீங்கள் விமர்சிக்க வேண்டுமானால் நீங்களும் கடவுளாக மாற வேண்டும்.  இங்கே கடவுள் என்ற வார்த்தையை சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்.  என்னைப் போல் படித்த, சினிமா பார்த்த ஒரே ஒருவரைத்தான் நான் பார்த்திருக்கிறேன்.  அது கேகே என்று அறியப்படும் கே.கே. ஸமன் குமர என்ற சிங்கள எழுத்தாளர்.   அப்படியிருக்கும்போது என்னிடம் பாடம் பயிலும் மாணவி ஒருவர் என்னிடம் அப்படி நடந்து கொள்ளலாகாது.  அதற்காக கமலின் நண்பர்கள் அவரிடம் ஜால்ரா அடிப்பது போல் எனக்கு ஜால்ரா அடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை.  கொக்கரக்கோவுக்கு நான் கிண்டலாக மாற்றுக் கருத்து மன்னார்சாமி என்று பட்டம் சூட்டியிருக்கிறேன்.  அந்த அளவுக்கு என்னுடன் மாற்றுக் கருத்து கொண்டவன்.  ஆனால் ’விதின் தெ ரெவலூஷன்’என் உலகுக்கு வெளியில் உள்ளவன் அல்ல.

என் தோழி ஒருவர் ஒரு அரசுத் தேர்வுக்குப் படிக்கிறாள்.  தினமும் பத்து மணி நேரம் படிக்க வேண்டும்.  அதற்கும் மேலாகக் கூட.   வாரம் ஒருமுறைதான் என்னோடு பேச முடியும்.  அப்போது கூட நான் அந்த வாரம் பூராவும் எழுதியதைப் படித்து விட்டு வந்தால்தான் பேசுவேன்.  இல்லாவிட்டால் படித்து விட்டு வா என்று பேச்சைத் துண்டித்து விடுவேன்.

பச்சைக்கண் பேரழகியை உங்களுக்குத் தெரியும்.   இருபத்திரண்டு வயது.  நட்பு மட்டும்தான்.  எனக்குப் பிடித்த சுருள் முடி.   தாமிரமும் வெண்சங்கும் சேர்ந்த நிறம்.  இரண்டு ஆண்டுகள் நட்பு.  ஆனால் எனக்கு உறுத்திக்கொண்டே இருந்தது ஒரு விஷயம்.  அவள் என் எழுத்து ஒன்றைக் கூட படிக்கவில்லை.  என்னுடைய ஒரு நாவலைக் கொடுத்தேன்.  ஆறு மாதம் கெடு.  ஆறு மாதமாகத் தொடர்பு கொள்ளவில்லை.  கெடு முடிந்து தொடர்பு கொண்டேன்.  ஒரு பக்கம் கூடப் படிக்கவில்லை.  நட்பைத் துண்டித்து விட்டேன்.   இப்படி ஒரு எழுத்தாளனை நீங்கள் இந்த உலகம் பூராவும் தேடினாலும் கண்டு பிடிக்க முடியாது.   (இப்படி ஒரு ஆண் இப்படி ஒரு பெண்ணோடு தொடர்பை வெட்டினால், அவள் உடனடியாக மீட்டூவில் போடுவாள்.   நல்லவேளை, நல்ல பெண்.  என்னை அப்படிப் பழி வாங்கவில்லை.)  சில ஆண்டுகளுக்கு முன்பு கூட என்னைத் தொடர்பு கொண்டு ஏதோ சந்தேகம் கேட்டாள். கூகிளில் தேடு, கிடைக்கும் என்று சொல்லித் துண்டித்து விட்டேன்.

அப்படிப்பட்ட நான், நீங்கள் என் எழுத்தைப் படிக்காமல் போனாலும் உங்களோடு மட்டுமே உரையாடிக்கொண்டிருந்தேன்.  நட்பு என்பது இரண்டு பக்கமுமாக இருக்க வேண்டும்.  நான் என்ன கேட்டேன், பணமா?  இல்லை.  மரியாதையா?  இல்லை.  என் எழுத்தைப் படித்தே ஆக வேண்டும் என்று நிபந்தனை விதித்தேனா?  இல்லை.  என்னை அவமதிக்காதீர்கள் என்று மட்டுமே கேட்டேன். அது நடக்கவில்லை.

இரண்டு விஷயங்கள்.  ஒன்று, நீங்கள் மட்டுமே ப்ளாகில் அதை நீக்குங்கள், இதை நீக்குங்கள் என்று சொல்லி வருபவர்.  நான் ஒரு எழுத்தாளரை விமர்சித்து எழுதுவேன்.  அவர் உங்களுடைய பெஸ்ட் செல்லராக, உங்களின் ஸ்டார் ரைட்டராக இருப்பார்.  நான் விமர்சித்ததும் அவர் உங்களுக்கு ஃபோன் செய்து, கண்ணாயிரம் பெருமாள் என்னைத் திட்டி விட்டார், நான் உங்களிடம் கொடுத்த புத்தகங்களைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன் என்பார்.  உடனே நீங்கள் என்னை அழைத்து ஓத்தாம் பாட்டு விடுவீர்கள்.  இப்படி எத்தனை முறை நடந்திருக்கிறது என்று எண்ணிப் பாருங்கள்.   நான் என்ன எக்ஸ் பதிப்பகத்தின் எடுபிடியா?  உங்களிடம் அனுமதி பெற்றுக்கொண்டுதான் நான் யாரையும் விமர்சிக்க வேண்டுமா?  அப்படி ஒரு எழுத்தாளர் உங்களை ப்ளாக்மெயில் செய்தால் ”கண்ணாயிரம் பெருமாள் உங்களைத் திட்டினால் அதற்கு நாங்கள் என்னய்யா செய்ய முடியும்?” என்று கேட்க வேண்டியதோ அல்லது வேறு விதமாகக் கையாள்வதோ உங்கள் பிரச்சினை.  நான் உங்களின் பதிப்பகச் செயல்பாடுகளில் ஏதாவது குறுக்கிடுகிறேனா?  அப்படியிருக்கும்போது என் எழுத்தில் ஏன் நீங்கள் குறுக்கிடுகிறீர்கள்?  நான் என்ன எழுத வேண்டும், என்ன எழுதக் கூடாது என்று தீர்மானிக்கும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா?  ஒரு எழுத்தாளனின் பணியில் குறுக்கிடும் உரிமை கடவுளுக்கே இல்லை என்பது என் வலுவான நம்பிக்கை.

இதுவரை என் வாழ்வில் வேறு யாருமே அப்படிச் சொன்னதில்லை.  மேலும் ஒரு அவதானம்.  நான் புவனேஸ்வரியை இரண்டு புவனேஸ்வரியாகப் பார்க்கிறேன்.  இப்போது – எக்ஸ் பதிப்பகம் ஆரம்பித்த பிறகு நான் பார்க்கும் புவனேஸ்வரியை – அதற்கு முன்பான ஏழு ஆண்டுகளில் ஒரு நாள் கூடப் பார்த்ததில்லை.  ஒரு நாள் கூட அந்த புவனேஸ்வரி என்னிடம் இப்படியெல்லாம் அத்துமீறியதே இல்லை.  இரண்டு, அடுத்தவனின் இடத்திலிருந்து கொஞ்சமாவது யோசியுங்கள்.

ஒருநாள் பெங்களூரில் ஒரு இலக்கியச் சந்திப்பு.  என் மொழிபெயர்ப்பாளரும், நானும், ஹார்ப்பர் காலின்ஸ் உதயனும் உரையாட வேண்டும்.   உரையாடலே எனக்கு வராது.  அதிலும் ஆங்கிலம் என்றால் கோய்ந்தா.  என்ன பேசுவது என்று ஒரே உதறல்.  காலை பத்து மணிக்கு நிகழ்ச்சி.  முதல் நாள் ரஞ்சித், கொக்கரக்கோ ஆகியோரைப் பார்க்க மாட்டேன் என்று சொல்லி விட்டேன்.  குடிக்க மாட்டேன் என்றும் சொல்லி விட்டேன்.   என்ன பேசப் போகிறேன் என்று என் நண்பர் ஒருவரிடம் பேசிக் காண்பிக்கிறேன்.  அப்போது புவனேஸ்வரியின் வாய்ஸ் மெஸேஜ்.  நள்ளிரவு பன்னிரண்டு மணி.  ஏதோ கருத்து முரண்பாடு.  ஏழெட்டு வாய்ஸ் மெஸேஜ்.

எல்லாவற்றையும் கேட்டேன்.

அடுத்த நாள் நன்றாகவே பேசினேன்.  அந்த ஏழெட்டு வாய்ஸ் மெஸேஜையும் கொக்கரக்கோவிடம் அடுத்த நாள் காண்பித்தேன்.   கேட்டு விட்டு மிரண்டு போனான்.  ”இவ்வளவையும் கேட்டு விட்டா நீங்கள் கூட்டத்துக்கு வந்தீர்கள்? நீங்கள் ஞானிதான்.   நானாக இருந்தால் கூட ஆடிப் போயிருப்பேன்” என்றான்.

பிறகு இன்னொன்றும் சொன்னான், இந்த வாய்ஸ் மெஸேஜ்களை இப்போதே அழித்து விடுங்கள்.  இதையெல்லாம் யாராவது கேட்டால் உங்களை ஒரு கொலைகாரன் போல் பார்ப்பார்கள், உங்களை அத்தனை கொடூரமானவனாக இந்த வாய்ஸ் மெஸேஜ்கள் சித்தரிக்கின்றன. 

சரி, அதன் பின்னணியையும் சொல்லி விடுகிறேன்.  அதை மட்டும் ஏன் விட வேண்டும்? 

நான் சுமார் முப்பது ஆண்டுகளாக என் நாவல்கள் ஏதேனும் ஒரு ஐரோப்பிய மொழியில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று முயன்று வருகிறேன்.  ஐரோப்பிய மொழி என்றால் செக் மொழியோ ஹங்கேரிய மொழியோ அல்ல.  நான் யோசிப்பது ஆங்கிலம், ஜெர்மன், ஃப்ரெஞ்ச், ஸ்பானிஷ்.  ஏனென்றால், நான் தமிழர்களுக்காக மட்டும் எழுதவில்லை.  எனக்கும் மற்ற தமிழ் எழுத்தாளர்களுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு.  என் எழுத்து சர்வதேச வாசகர்களுக்கானது.  ஒரு ரியூ முராகாமி மாதிரி.  இந்த மொழிபெயர்ப்பு எழவுக்காக ஒரு ஐம்பது லட்ச ரூபாயை இழந்திருக்கிறேன்.  ஒரு பெண் ஸ்பானிஷில் மொழிபெயர்ப்பாள்.  மூணு லட்சம் அழுவேன்.  கடைசியில் அது ஸ்பானிஷே இல்லை என்பார் பப்ளிஷர்.  இப்படியே ஒரு நாப்பது லட்சம் அம்பேல். கடைசி பத்து லட்சத்தில்தான் ரெண்டு நாவல்களைக் கொண்டு வர முடிந்தது. 

இந்த நிலையில் மனோஜ் என்ற நண்பர் என் நாவல் ஒன்றை ஃப்ரெஞ்சில் மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார்.  அவர் அலுவலகத்தில் பதினெட்டு மணி நேர வேலை பார்ப்பவர்.  நீண்ட விடுப்பு எடுத்துக் கொண்டு என் வேலையில் ஈடுபட்டிருந்தார்.  அதுவும் என்னிடமிருந்து பணம் வாங்காமல். 

உங்களிடம் ஒரு முப்பது வயது இளைஞர் ஏதோ ஒரு ஃப்ரெஞ்ச் மொழிபெயர்ப்புக்காக அணுகியிருக்கிறார்.  உடனே நீங்கள் மனோஜை அழைத்து இந்த மொழிபெயர்ப்பைச் செய்து தர முடியுமா என்று கேட்கிறீர்கள்.  “இல்லை, நான் கண்ணாயிரம் பெருமாளுக்காக மட்டும்தான் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருக்கிறேன்” என்கிறார் மனோஜ்.

புவனேஸ்வரி என்பவர் மட்டும் ஆண்பிள்ளையாக இருந்திருந்தால் நேரில் போய் நாலு அறை அறைந்திருப்பேன். 

என் வயது எழுபத்து மூன்று.  அரசாங்கமே அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களை மூத்த குடிமகன்கள் என அழைத்து சில சலுகைகளை வழங்குகிறது.  என்னிடம் வித்தை கற்றுக் கொண்ட நீங்கள் என்னைப் பீச்சாங்கையால் விலக்கி விட்டு, ஒரு முப்பது வயது இளைஞனுக்காக என் மொழிபெயர்ப்பாளரை அபகரிக்க நினைக்கிறீர்கள்.  வேறு என்ன அர்த்தம் சொல்லுங்கள்?

மூத்த குடிமகன் என்றால் என்ன?  சீக்கிரம் மேலே போகப் போகிறான்.  அதனால்தான் அவனுக்கு முன்னுரிமை, சலுகை எல்லாம்.  அதிலும் எனக்கு வயது எழுபத்து மூன்று.  என்னை அடித்துத் தள்ளி விட்டு முப்பது வயது இளைஞனுக்காக என் மொழிபெயர்ப்பாளரை அபகரிப்பதா?

இதை நான் ரத்தினச் சுருக்கமாக இரண்டு வாக்கியங்களில் கேட்டு உங்களுக்கு ஒரு வாய்ஸ் மெஸேஜ் அனுப்பினேன். 

அதற்குத்தான் அப்படி ஒரு ஏழெட்டு வாய்ஸ் மெஸேஜ்கள்.  அவை எப்படி இருந்தன தெரியுமா?  சந்திரமுகி படத்தில் ஜோதிகா பேய் பிடித்துக் கத்துவார் இல்லையா?  அதே குரலில் இருந்தன அந்த வாய்ஸ் மெஸேஜ்கள்.  எதற்குமே பயப்படாத கொக்கரக்கோவே அரண்டு போய், இதையெல்லாம் உடனடியாக அழித்து விடுங்கள் என்று சொன்னான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.  அதை யாரேனும் கேட்டால், என்னை ஒரு கொலைகாரன் என்றே நினைப்பார்கள் என்பதில் எனக்குச் சிறிதளவும் சந்தேகம் இல்லை. 

ஏனய்யா, நாற்பது ஆண்டுகளாக தெருத் தெருவாக நின்று மொழிபெயர்ப்பாளர்களுக்காக ஊம்பிக் கொண்டிருக்கிறேனே, எனக்கு எத்தனை வருத்தம் இருக்கும்?  அதையாவது கொஞ்சம் கவனித்திருக்க வேண்டாமா?  சரி, ஒருத்தனுக்கு மறுநாள் பரீட்சை மாதிரி ஒரு விஷயம் இருக்கிறது என்றால் கூட அதற்கு ஒரு வாய்தா கொடுக்க மாட்டீர்களா?  உங்கள் புதல்வன் என்றால் கூட இப்படித்தான் நடந்து கொள்வீர்களா?

இதெல்லாம்தான் ஒரு குருவுக்குத் தரும் மரியாதையா?

போகட்டும், மேலே ஆரம்பத்தில் உள்ள உங்கள் கடிதத்துக்கு வருவோம்.  உங்கள் மொழிபெயர்ப்பு நாவல் செய்தியை ஃபேஸ்புக்கில் செப்டம்பர் 23ஆம் தேதி மாலையில் பார்த்தேன்.  பின்வரும் குறிப்பை மறுநாளே (24ஆம் தேதி) என் ப்ளாகில் எழுதினேன்.  அந்தக் குறிப்பு கீழே:

பெருந்தேவியின் மொழிபெயர்ப்பு அற்புதமாக இருக்கும். அக்காமகாதேவியின் பாடல்களை பெருந்தேவி மொழிபெயர்த்திருக்கிறார். திரும்பத் திரும்ப அதை வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

இப்போது புவனேஸ்வரி ஒரு அல்பேனிய நாவலைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.  என் மாணவி என்பதில் எனக்குப் பெருமை.  ஆனால் என் மாணவர்களுக்கு நான் முதலில் போதிப்பது எனக்கு நன்றிக் கடன் படாதீர்கள் என்பதுதான்.  ஏறி வந்த ஏணியை எட்டி உதையுங்கள்.  கவலையே வேண்டாம்.  நீங்கள் ஏறி வந்த ஏணியிடம் குருபக்தி பாராட்ட வேண்டிய அவசியமே இல்லை.

இருந்தாலும் ஆச்சரியமாக இருந்தது.  என் மகனின் திருமணச் செய்தியை நான் ஃபேஸ்புக்கில் பார்த்துத் தெரிந்து கொண்டால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.  ஆறு மாதங்களாக புவனேஸ்வரியோடு என் புத்தகங்களைப் பதிப்பது குறித்துத் தொடர்பில் இருக்கிறேன். ஆனாலும் எனக்கு அந்தச் செய்தியை புவனேஸ்வரி சொல்லவே இல்லை என்பது ஆச்சரியம் தருகிறது. சொல்லாததற்கு அவருக்கு நியாயமான காரணங்கள் இருக்கும்.  அப்படித்தான் எப்போதுமே நடந்திருக்கிறது.

சொல்லப் போனால் ஹார்ப்பர் காலின்ஸோடு எனக்கு இன்னும் அதிகத் தொடர்பு இருப்பது போல் தெரிகிறது. 

ஜெய்ப்பூர் இலக்கிய விழாவின் அமைப்பாளர்கள் இருவர்.  அதில் ஒருவர் சஞ்ஜய் ராய்.  என் நண்பர்.  தன்னுடைய நூல் ஒன்று வருவதாக நேற்று இரவு எட்டு மணிக்கு மெஸேஜ் அனுப்பினார்.  There’s a ghost in my room.  நினைவுக் குறிப்புகள். இரண்டு பிரதிகளுக்கு முன்பதிவு செய்து விட்டு அதை சஞ்சய்க்குத் தெரிவித்தேன்.  நன்றி கூறி பதில் அனுப்பினார் நள்ளிரவு இரண்டே முக்கால் மணிக்கு.

அதேபோல் ஹார்ப்பர் காலின்ஸ் பதிப்பகமும் நேற்று மாலை சஞ்சய் ராய் நூல் பற்றி எனக்குத் தகவல் அனுப்பியது.  அப்படிப்பட்ட தகவல் பரிமாற்றம் கூட எனக்கும் எக்ஸ் பதிப்பகத்துக்கும், எனக்கும் புவனேஸ்வரிக்கும் இல்லை என்பதைத் தெரிவிக்கவே இத்தனை விவரமாக எழுதுகிறேன்.  ஆனாலும் இதில் எனக்கு வருத்தமில்லை.  ஆச்சரியம் மட்டுமே.”

மேற்கண்ட பதிவுக்கு புவனேஸ்வரியிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை.  அது குறித்து எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை.  ஏனென்றால், அவர்தான் என் ப்ளாகைப் படிப்பதே இல்லையே?  ஆனாலும் அவர் பெயரைப் போட்டு எழுதியிருப்பதால் யாராவது சொல்லியிருக்க மாட்டார்களா என நினத்தேன்.  இரண்டு மூன்று தினங்கள் ஆகியும் ஒன்றும் எதிர்வினை இல்லாததாலும், எம்டிஎம் அக்கப்போரினாலும் இந்த விஷயத்தை மறந்து போயிருந்தேன்.  பார்த்தால் நேற்று இப்படி ஒரு கடிதம்:

Hi Perumal,

Just wanted to let you know that the novel that I have translated has been out for sales yesterday. Need your blessings! Thanks!

Bhuvaneshwari

Fri, Sep 26, 2:26 PM

இந்தக் கடிதம் புவனேஸ்வரி அந்த அல்பேனிய நாவலை மொழிபெயர்க்கத் தொடங்கியவுடனே வந்திருந்தால் அது குருவுக்குத் தரும் மரியாதை.  புத்தகம் வெளிவந்து நாலைந்து தினங்கள் கழித்து, ஃபேஸ்புக்கில் போட்டு, அது பற்றி நான் எழுதி, அதன் பின் வந்தால் அதற்குப் பெயர் செருப்படி

எனக்கு ஒரு சம்சயம்.  நான் ப்ளாகில் எழுதியதைப் படிக்காமலேயேதான் புவனேஸ்வரி இந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறார் என்று நம்புகிறேன்.  படித்தும் படிக்காத மாதிரி பாவலா காட்டுவது கொங்கு நாட்டு மக்களின் பழக்கம் அல்ல.  கொங்கு மக்கள் கொஞ்சம் வெகுளி.  தஞ்சாவூர் மாதிரி அல்ல. என் பதிவைப் படித்து விட்டு, புவனேஸ்வரி இப்படி ஒரு கடிதத்தை எழுதியிருந்தால் அது தஞ்சாவூர்த்தனமே தவிர கொங்கு நாட்டு இயல்பு அல்ல.

கொக்கரக்கோவைக் கேட்டேன்.  சரியான பித்துக்குளி பெருமாள் நீங்கள், படித்து விட்டுத்தான் எழுதியிருக்கிறார் என்று சின்னப்பிள்ளைக்குக் கூடத் தெரியும்.  உங்களுக்குத்தான் தெரியவில்லை என்றார்.

சே, கொக்கரக்கோ எத்தனை கெட்டவர் என்று நினைத்துக் கொண்டேன்.   ஒரு மனுஷியைப் பற்றி இத்தனை விஷமமாகவா ஒருத்தர் நினைப்பார்? சே.

எப்படியிருந்தாலும் புவனேஸ்வரி கேட்ட ஆசீர்வாதம் பற்றி.  எனக்கு ஒரு பழக்கம், எது கேட்டாலும் கொடுத்து விடுவேன்.  இப்போது ஆசீர்வாதம்:

ஹரிச்சந்திரனின் கதை நாம் அறிந்தது. சத்தியத்தின் உருவம்.  எப்போதும் உண்மை. வாக்குறுதியை மீறாதிருத்தல். ஒரு நாள், விஸ்வாமித்ரர் அவரை சோதிக்க விரும்பினார். கனவில் வந்து, “உன் ராஜ்யத்தை எனக்கு தானம் செய்” என்று கேட்டார். ஹரிச்சந்திரன் உடனே ஒப்புக்கொண்டான். விழித்தபின், ராஜ்யத்தை விஸ்வாமித்ரருக்கு அளித்தான்

ஆனால் முனிவர், “தானத்துக்கு தட்சணை வேண்டும்” என்றார். அதற்காக ஹரிச்சந்திரன் தன் செல்வத்தை எல்லாம் விற்றான், போதாததால் தன்னையும், மனைவி சௌந்தரவல்லியையும், மகன் ரோஹிதாசுவையும் அடிமையாக விற்றான்.

காசியில் சுடுகாட்டில் வேலை செய்யும் அடிமையானான். ஒரு நாள், அவன் மகன் பாம்புக்கடியால் இறந்தான். மனைவி உடலை சுடுகாட்டுக்கு கொண்டு வந்தாள். ஹரிச்சந்திரன் அவளை அடையாளம் கண்டாலும், “கட்டணம் செலுத்து” என்று கூறினான். அவள் தன் சேலையின் ஒரு பகுதியை விற்க முயன்றாள். அப்போது, இந்திரன், விஷ்ணு உள்ளிட்ட தேவர்கள் தோன்றினார்கள். ஹரிச்சந்திரனின் சத்தியத்தால் ஈர்க்கப்பட்டு, அவனுக்கு ராஜ்யத்தைத் திருப்பி அளித்தார்கள். மகனை உயிர்ப்பித்தார்கள்.   ஹரிச்சந்திரனின் உள்ளத்தில் இருந்த சத்திய ஒளியால், எந்த மனித ஆசீர்வாதமும் இல்லாமலேயே இறையருள் அவனைத் தேடி வந்தது.

கதோபநிஷத்தில் வரும் நசிகேதனின் சுவாரசியமான கதையும் நாம் அறிந்ததே.

வாஜஸ்ரவஸ் என்ற முனிவரின் மகன் நசிகேதன். வாஜஸ்ரவஸ் ஒரு யாகம் செய்தபோது, பயனற்ற பொருட்களை தானமாக அளித்தார். இதைக் கண்ட நசிகேதன், தன் தந்தையிடம், “இது உண்மையான தானமா? நானும் தானமாக வேண்டுமா? யாருக்கு என்னை அளிக்கப் போகிறீர்?” என்று கேட்டான். கோபமடைந்த தந்தை, “எமனுக்கு உன்னைத் தருகிறேன்!” என்றார்.

நசிகேதன், தன் தந்தையின் வாக்கை சத்தியமாகக் கருதி, எமலோகம் சென்றான். எமன் அங்கு இல்லாததால், மூன்று தினங்கள் காத்திருந்தான். திரும்பி வந்த எமன், நசிகேதனின் உறுதியைக் கண்டு, “நீ மூன்று நாட்கள் காத்திருந்ததற்கு மூன்று வரங்கள் தருகிறேன்” என்றான்.

முதல் வரமாக, தன் தந்தையின் மனம் அமைதியடைய வேண்டினான் நசிகேதன். இரண்டாவது வரமாக, தேவர்களின் யாக அறிவை வேண்டினான்.   

கதோபநிஷத் முதல் அத்தியாயத்தின் மூன்றாம் வல்லி (வல்லி என்பது கொடி அல்லது பிரிவு என்பதைக் குறிக்கும்) (1.3) மற்றும் இரண்டாம் அத்தியாயம் (2.1 மற்றும் 2.2) ஆகியவற்றில் நசிகேதனுக்கும் எமனுக்குமான உரையாடல் மையமாக உள்ளது.

நசிகேதன், எமனிடம் மூன்றாவது வரமாக, “மனிதன் மரணத்திற்குப் பின் என்னவாகிறான்? ஆன்மாவின் உண்மை என்ன?” என்று கேட்கிறான்.

இந்தக் கேள்வி எமனை ஆச்சரியப்படுத்துகிறது, ஏனெனில் இது தேவர்களுக்கே புரியாத மர்மம். எமன், நசிகேதனை சோதிக்க, “வேறு வரங்களைக் கேள்—செல்வம், நீண்ட ஆயுள், அழகிய பெண்கள், அரசாட்சி என்று எதை வேண்டுமானாலும் தருகிறேன். ஆனால்; ஆன்மாவின் ரகசியத்தைக் கேட்காதே, இது மிகவும் கடினமானது” என்று கூறுகிறான்.

நசிகேதன் உறுதியாக பதிலளிக்கிறான்:

“ஓ எமனே, செல்வமும் ஆயுளும் தற்காலிகமானவை. அவை அழியக் கூடியவை. எனக்கு சத்தியத்தைத் தவிர வேறு எதுவும் வேண்டாம். ஆன்மாவின் உண்மையை விளக்கு.”

அவனது உறுதியையும், சத்தியத்துக்கான தேடலையும் கண்டு மகிழ்ந்த எமன், ஆன்மாவின் தன்மையை விளக்கத் தொடங்குகிறான்.

கதோபநிஷத் 2.2.18 

ந ஜாயதே ம்ரியதே வா கதாசித்நாயம் பூத்வா பவிதா வா ந பூய:அஜோ நித்ய: சாச்வதோऽயம் புராணோந ஹன்யதே ஹன்யமானே சரீரே ॥

ஆன்மா பிறப்பதும் இல்லை,இறப்பதும் இல்லை.அது உருவாக்கப்படுவதுமில்லை,அழிவதுமில்லை.அது நித்தியமானது, மாறாதது,எப்போதும் உள்ளது.உடல் அழிந்தாலும், ஆன்மா அழிவதில்லை.”

ஏகோ தேவ: ஸர்வபூதேஷு கூட:ஸர்வவ்யாபீ ஸர்வபூதாந்தராத்மாகர்மாத்யக்ஷ: ஸர்வபூதாதிவாஸ:ஸாக்ஷீ சேதா கேவலோ நிர்குணஸ்ச ॥

கதோபநிஷத் 2:2.12

ஒரே இறைவன் எல்லா உயிர்களிலும் மறைந்திருக்கிறான். அவன் எல்லாவற்றையும் வியாபித்தவன், எல்லா உயிர்களின் உள்ளே இருக்கும் ஆன்மா. அவன் செயல்களைக் கண்காணிப்பவன், எல்லா உயிர்களிலும் வசிப்பவன், சாட்சியாக இருப்பவன், தூய ஞானமானவன், குணங்களற்றவன்.

யதேவேஹ ததமுத்ர யதமுத்ர ததன்விஹம்ருத்யோ: ஸ ம்ருத்யுமாப்னோதி ய இஹ நானேவ பச்யதி ॥

கதோபநிஷத் 2.1.10

இங்கு (இவ்வுலகில்) உள்ளது அதுவே அங்கு (மறுலகில்) உள்ளது; அங்கு உள்ளது இங்கும் உள்ளது. ஆனால், இங்கு பலவாகப் பார்ப்பவன் மரணத்திலிருந்து மரணத்திற்கு (மீண்டும் மீண்டும் பிறப்பிற்கு) செல்கிறான்.

ஆகவே, புவனேஸ்வரி, மனித ஆசீர்வாதத்தால் அல்ல; உண்மையைத் தேடும் உள்ளத்தால் மட்டுமே மனிதன் மேன்மையுறுகிறான்.

இப்படிக்கு,

பெருமாள்

பின்குறிப்பு 1: ஏன் என் எழுத்தைப் படிக்காதவர்களோடு என்னால் நட்பு கொள்ள முடியவில்லை என்பதற்கு ஒரு முகாந்திரம் உண்டு.  முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு என் நண்பர் மணியோடு வாரம் இரண்டு முறை ஐந்து நட்சத்திர விடுதிகளுக்குச் சென்று விதேசி மது குடிப்பது வழக்கம்.  ஒரு பாட்டில் வெளியே 2500 ரூ. என்றால் உள்ளே ஒரு பெக் 2500 ரூ.  நான் ஆறு பெக் குடிப்பேன்.  மாதம் ஒரு லட்சம் செலவாகும்.  மணி கோடீஸ்வரர் என்பதாலும் பணத்தைப் பணமாகப் பார்க்க மாட்டார் என்பதாலும் அப்படி.  ஆனால் இந்தப் பணத்தை கையில் கொடுத்து விடுங்களேன் என்றால் உதை கிடைக்கும் என்பார்.  மணி ஒரு தினசரியின் ஆசிரியர்.  முதலாளியும் அவரே.  ஒருநாள் ஒரு செய்தி பற்றி விவாதம்.  எனக்கோ செய்தி தெரியவில்லை.  ஏன் என்றார்.  நான் செய்தித்தாளே படிப்பதில்லை என்றேன்.  நம் பத்திரிகை? என்றார்.  அதுவும்தான்.  சரி, படிக்காதே, வாங்குகிறாய் அல்லவா?  இல்லையே? டேய் முட்டாக்கூதி, எனக்காக மாதம் தொண்ணூறு ரூபாய் செலவு செய்ய முடியாதா என்றார். 

அதிலிருந்துதான் நானும் என் எழுத்தைப் படிக்காதவர்களோடு ஒட்டுறவு வைத்துக் கொள்வதில்லை என்று முடிவெடுத்தேன்.  அதுவாவது தொண்ணூறு ரூபாய்.  என் எழுத்து இலவசம்.  படிக்க அதிக பட்சம் பத்து நிமிடம்.  நமக்காக ஒரு பத்து நிமிடம் ஒதுக்க முடியாதவர்களோடு என்ன சகவாசம் என்ற வீம்புதான் இப்படிப்பட்ட என் முடிவுக்குக் காரணம்.

பின்குறிப்பு 2:  இதைப் படித்து விட்டு புவனேஸ்வரிக்கும் கண்ணாயிரம் பெருமாளுக்கும் சண்டை என்று திரித்தால் அவர்களுக்காக நான் பரிதாபப்படுவேன்.  இது என்னை நான் சுத்திகரிப்பு செய்து கொள்வதற்கான செயல்முறை.  நாம் அனைவருமே நசிகேதனாக மாற வேண்டும்.  செயல்முறை இந்தக் கதையில் உள்ளது.  இது கதையாக இருந்தாலும் இது ஒரு மேனிஃபெஸ்டோ.  நான் ஒரு அறப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறேன்.  எம்டிஎம்மைப் பாருங்கள்.  ஏன்யா கேணியில் நஞ்சைக் கலக்கிறாய் என்று கேட்டால், உடனே கண்ணாயிரம் பெருமாள் ஆபாசமானவன், அவன் மனம் அசிங்கம், வக்கிரம், அருவருப்பு என்று வசை வார்த்தைகளைக் கொட்டுகிறார்.  இதையேதான் நான் நாற்பது ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகிறேன்.  என்னடா இது அநியாயம் என்று தட்டிக் கேட்டால், ஐயோ கெட்டவன் வந்து விட்டான் என்று கூப்பாடு போடுகிறார்கள்.

***

இந்தக் கடிதம் ப்ளாகில் வெளியான பிறகு புவனேஸ்வரி கொக்கரக்கோவுக்கு ஒரு வாய்ஸ் மெஸேஜ் அனுப்பியிருந்தார். 

அதைக் கேட்ட போது இந்தக் கடிதத்தின் ஒரு வார்த்தையைக் கூட புவனேஸ்வரியினால் புரிந்து கொள்ள முயலவில்லை அல்லது புரியவில்லை என்று புரிந்து கொண்டேன்.  நேரமின்மையை விளக்கித்தான் அந்த வாய்ஸ் மெஸேஜ் இருந்தது.  ஆனால் என் கேள்விக்கு அவர் பதிலில் பதில் இல்லை.  ”ஃபேஸ்புக்கில் எழுத மட்டும் நேரம் இருந்ததா?”  இதுதான் என்னுடைய ஒரே கேள்வி. 

இன்னொன்று, புவனேஸ்வரி அவர் வழக்கப்படி என்னைத் திரும்பவும் கூண்டில் ஏற்றியிருந்தார்.  அவருக்கு எடிட் பண்ணிக் கொடுத்த எழுத்தாளரை நான் பொதுவெளியில் அசிங்கப்படுத்தி விட்டேன்.  (இதற்குப் பின்னால் வருகிறேன்.)

ஆனால் நான் சொல்ல வந்தது என்னவென்றால், இத்தனை வருத்தத்தோடு கடிதம் எழுதியிருக்கும் ஒருவனின் அடுத்த கடிதத்துக்குத்தான் புவனேஸ்வரி பதில் எழுதாமல் கோண்டியை விட்டு எழுதச் சொல்லியிருக்கிறார்.  என்னை அவர் எந்த இடத்தில் வைத்திருக்கிறார் என்று புரிகிறதா?  ஏற்கனவே வருத்தத்தில் இருக்கும் ஒருவனின் முக்கியமான பிஸினஸ் கடிதத்துக்குப் பதில் எழுதாமல் கோண்டியை விட்டு ஒற்றை வரி பதில் எழுதுவது எவ்வளவு பெரிய செருப்படி என்று புவனேஸ்வரிக்கு இந்த நிமிடம் வரை புரியவில்லை.  காரணம், புவனேஸ்வரியால் ஒருபோதும் அடுத்தவனின் காலணியில் நின்று பார்க்கவே முடியவில்லை.  அவர் அதற்குத் தயாராகவே இல்லை. 

இப்போது மீண்டும் பிரதான விஷயத்துக்கு வருவோம்.  என் புத்தகங்களைத் தொடர்ந்து எக்ஸ் பதிப்பகம் பதிப்பிக்குமா என்று கேட்டு நான் எழுதிய கடிதத்துக்கு புவனேஸ்வரியிடமிருந்து பதில் இல்லை. 

அன்றைய இரவு பவானியில் எனக்குக் காலை ஆறு மணி வரை உறக்கம் வரவில்லை.  கோண்டியின் ஒற்றை வரி செருப்படி தவிர வேறு எந்தச் செய்தியும் இல்லை. 

பதினோரு மணிக்கு எழுந்து தொலைபேசியைப் பார்த்தால் தெரியாத ஒரு எண்ணிலிருந்து இரண்டு மூன்று அழைப்புகள்.  பிறகு அதே எண்ணிலிருந்து ஒரு வாட்ஸப் செய்தி.  ”நான் புவனேஸ்வரி.  இது என் அலுவலகத் தொலைபேசி எண்.  உங்களை ஒரு பத்து நிமிடம் நேரில் சந்திக்க முடியுமா?”

என்ன தாமதம் பாருங்கள்!  ஊர் பற்றி எரிந்து முடிந்த பிறகு வருகிறது தண்ணீர் லாரி.  பொதுவாக என் ஃபேஸ்புக் பதிவுகளுக்கு ஏழு அல்லது எட்டு விருப்பக்குறிகள் வரும்.  ஆனால் மேற்கண்ட ’உறவு முறிவு’ பதிவுக்குத் தொண்ணூறுக்கும் மேற்பட்ட விருப்பக்குறிகள்!  எத்தனை பேர் இந்தப் பிரிவை விரும்பியிருக்கிறார்கள்! அதுவும் காரணமே தெரியாமல்! 

புவனேஸ்வரியை அவர் கொடுத்த எண்ணில் அழைத்தேன்.  ”உங்களால்தான் நாங்கள் வளர்ந்தோம்.  இது யாருக்குத் தெரியாது?  ஏன் இப்படி ஒரு கடிதம்?  இத்யாதி, இத்யாதி…”

“இந்த பதிலைத்தானே எதிர்பார்த்தேன்?  இது ஏன் நேற்றே வரவில்லை?”

“நான் ஒரு மீட்டிங்கில் இருந்தேன்.  கோண்டியிடம் ‘பெருமாளின் புத்தகங்களைப் போட நமக்கு நோ ப்ராப்ளம் என்று எழுதி விடு’ என்றேன்.  அவர் அப்படியே வார்த்தைக்கு வார்த்தை எழுதி விட்டார் போல…”

“ஏன், அவர் எனக்கு ஒரு ஃபோன் பண்ணியிருக்கலாமே?”

இதற்கு புவனேஸ்வரி சொன்ன பதில்: “இதை கோண்டியிடம் கேட்டேன்.  அவர் அதற்கு ‘ஏன் பெருமாள் எனக்கு ஃபோன் பண்ணிக் கேட்டிருக்கலாமே’ என்கிறார்.  மேலும், அவர் உங்களிடம் இனி ஒருபோதும் பேச மாட்டார்.  அவரை நீங்கள் பொதுவெளியில் எழுதி அசிங்கப்படுத்தி விட்டீர்கள்; உங்களால் அவர் மிகவும் hurt ஆகியிருக்கிறார்.  இருந்தாலும் நான் ஃபோன் பண்ணியிருக்கலாம்.  மன்னித்துக் கொள்ளுங்கள்…”

உடனே நான் ஃபேஸ்புக்கில் எழுதியிருந்த அறிவிப்பை நீக்கி விட்டு, ஸ்ரீராமிடம் புவனேஸ்வரியையும் கோண்டியையும் ஃபேஸ்புக்கில் அன்ப்ளாக் செய்யச் சொன்னேன்.  இருபத்து நாலு மணி நேரம் ஆகும் என்றார் ஸ்ரீராம்.

இருபத்து நான்கு மணி நேரம் கழித்து இருவரையும் அன்ப்ளாக் பண்ணினார் ஸ்ரீராம்.  (அதற்கு இருபத்து நான்கு மணி நேரம் கழித்து கோண்டியை மட்டும் மீண்டும் ப்ளாக் பண்ணினேன்.  இனிமேற்கொண்டு அவரோடு நான் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்வதாக இல்லை.  பதிப்பு சம்பந்தமாகக் கூட.)    

ஒருவேளை ஹைப்பர் சென்ஸிடிவான எனக்குத்தான் கோண்டியின் மெஸேஜ் அப்படி செருப்படியாகத் தோன்றுகிறதோ என்று ஒரு சந்தேகம் வந்து விட்டது.  சுமார் பத்து நண்பர்களுக்கும் சில எழுத்தாள நண்பர்களுக்கும் என் கடிதத்தையும், கோண்டியிடமிருந்து வந்த பதிலையும் அனுப்பி, நானாக ஒரு வார்த்தை கூட சொல்லாமல் கோண்டியின் பதில் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டேன்.

சுமார் இருபது பேர்.  இருபது பேருமே வார்த்தை பிசகாமல் ஒரே மாதிரி சொன்னார்கள்.  ”கோண்டி உங்களை செருப்பால் அடித்திருக்கிறார்.” ஒரே ஒரு நண்பர் மட்டும் ஆங்கிலத்தில் பதில் எழுதினார்.  அதுவுமே மற்றவர்கள் சொன்னதுதான்.  இதோ அது:   Not just being disrespectful… this is straight up insult hurled at you. 

புவனேஸ்வரி வருத்தம் தெரிவித்ததும் (மன்னிப்பு என்ற வார்த்தையை நான் பயன்படுத்த விரும்பவில்லை.  அதுகூட அடுத்த மனிதரைத் தாழ்த்துவதாகும் என்று நினைப்பவன் நான்) இந்த விஷயத்தை முழுசாக மறந்து விட முயன்றேன்.

மறந்தும் விட்டேன்.

ஆனால் திரும்பத் திரும்ப ஒரே விஷயம் என் மனதைக் கொத்திக்கொண்டே இருந்தது.  பத்தாண்டு காலத்துக்கு மேல் என்னிடம் பாடம் பயின்ற ஒரு பெண்மணி எப்படி என் கடிதத்தை இந்த அளவுக்கு உதாசீனப்படுத்தி என்னை அவமதிக்க முடியும்?  எனக்கு பதிலே தெரியவில்லை.  பிறகு ஃபேஸ்புக்கில் நான் ’உறவு முறிவு’ அறிவிப்பை வெளியிட்டவுடன் மட்டும் எப்படி அலுவலகத் தொலைபேசியிலிருந்து அழைத்து வருத்தம் தெரிவிக்க முடிந்தது?  ஒரு ரெண்டு வரி மின்னஞ்சலுக்குக் கூடவா நாம் தகுதியில்லாமல் போய் விட்டோம்?  மனம் கொந்தளிக்க ஆரம்பித்தது.   

ஏன் இப்படி புவனேஸ்வரி தொடர்ந்து என்னைப் பீச்சாங்கையால் தட்டி விடுகிறார்?  ‘தொடர்ந்து’ என்பதற்குப் பின்னால் விளக்கம் வரும்.   

கடைசியாக இருக்கட்டும் என்று வேறு இரண்டு நண்பர்களுக்கு என் கடிதத்தையும், கோண்டியின் ஒன்பது வார்த்தை பதிலையும் அனுப்பி கருத்து கேட்டேன்.  நான் எதுவுமே சொல்லவில்லை.  என் கடிதம், கோண்டியின் ஒன்பது வார்த்தை பதில். 

ஒரு நண்பருக்கு புவனேஸ்வரி ஃபேஸ்புக்கில் அப்படி என்னை உதறியெறிந்து எழுதியதே பிடிக்கவில்லை.  அவர் ஒரு சம்பவம் சொன்னார்.  ”காலச்சுவடு கண்ணனை எத்தனையோ பேர் கரித்துக் கொட்டுகிறார்கள்.  ஆனாலும் அவர் பதிப்பிக்கும் எழுத்தாளர்களின் விருப்பத்துக்குரியவராக இருக்கிறார்.  பெருமாள் முருகனுக்கு ஒரு சாதிச் சங்கம் வெளிப்படையாகவே கொலை மிரட்டல் விட்டது.  அந்தச் சாதி மக்களே கொந்தளித்தார்கள்.  கிட்டத்தட்ட ஸல்மான் ருஷ்டிக்கு ஏற்பட்ட நிலை.  பெருமாள் முருகன் “இனிமேல் நான் எதுவும் எழுத மாட்டேன். பெருமாள் முருகன் என்ற எழுத்தாளன் இறந்து விட்டான்.  இனி நான் முருகன்.  அவ்வளவுதான்.  என் புத்தகங்களை வாங்கியவர்கள் பதிப்பகத்துக்குப் புத்தகங்களைத் திருப்பி அனுப்பி, தொகையை வாங்கிக் கொள்ளுங்கள்” என்று அறிவித்த போது காலச்சுவடு கண்ணன்தான் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக இருந்தார்.  பெருமாள் முருகனின் பிரச்சினையை சர்வதேச அளவில் எடுத்துச் சென்றார்.  பெருமாள் முருகனுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்றுத் தந்தார்.  அதனால்தான் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் நடந்த ஒரு அமர்வில் பெருமாள் முருகன் காலச்சுவடு கண்ணனை கிட்டத்தட்ட ஒரு ஆழ்வார் பெருமாளைப் புகழ்வது போல் புகழ்ந்தார்.  ஆனால் உங்களால் வளர்ந்த புவனேஸ்வரியோ ஒரு அனாமதேய மிரட்டல் கடிதத்துக்கும், சில எழுத்தாளர்கள் புத்தகங்கள் தர மாட்டோம் என்று மறுப்பதற்கும் பயந்து கொண்டு  ‘கண்ணாயிரம் பெருமாளுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்று பயந்து ஓடுகிறார்; உங்களைக் கை விடுகிறார்.  சாதிச் சங்கத்தின் கொலை மிரட்டலுக்கே கண்ணன் பயப்படவில்லை” என்றார்.

சரி, இன்னொரு நண்பர்?  அவர் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு ஆண் நண்பர்.  பெண் இல்லை.  ஏன் சொல்கிறேன் என்றால் அவர் கடிதம் ஒரு பெண் எழுதியது போலவே உள்ளது.  அவர் பெயரை இங்கே சொன்னால், இந்தக் கதையின் அடிப்படையே மாறி அவர் மீது மையம் கொண்டு விடும் ஆபத்து இருக்கிறது.  அதனால் மட்டுமே அந்த நண்பரின் பெயரைத் தவிர்க்கிறேன். 

அந்த நண்பர் அனுப்பிய கடிதத்தைப் படித்து விட்டுத்தான் இப்போது இந்தக் கதையை எழுதிக்கொண்டிருக்கிறேன்.  அவர் மட்டும் இப்படி ஒரு கடிதம் அனுப்பியிருக்காவிட்டால், நான் இந்தக் கதையையே எழுதியிருக்க மாட்டேன். 

நண்பர் எனக்கு அனுப்பிய கடிதம்:  

Dear Perumal,

I was honestly taken aback by your message. You sound so distant—so formal—and I can’t help but feel there’s more behind your words. We’ve been through too much together for you to write to me like this. If something’s bothering you, I’d rather you just say it. As for the publication, you know very

well it wouldn’t be what it is without you. Your work has shaped its identity. If others are uncomfortable, that’s their issue—not ours. We stand by you.

But more than that, I hope this isn’t your way of quietly stepping away. If it is, please talk to me first. I’d rather face the discomfort than lose our friendship.

I didn’t copy Kondi on this reply deliberately. This feels personal, and I wanted to speak to you one-on-one. If you’re pulling away, I’d rather we face it than pretend.

If you are truly asking whether we wish to continue publishing your work, then let me be clear: yes, wholeheartedly. But more than that, I hope you are not quietly slipping away. If you are, please don’t. Or at least talk to me first.

Warm regards,

Bhuvaneshwari

நண்பரின் கடிதம் தமிழில்:  

அன்புள்ள பெருமாள்,

உங்கள் கடிதத்தை வாசித்ததும் சில நொடிகள் நான் மௌனத்தில் உறைந்து

நின்றேன்.  நீங்கள் சட்டென்று வெகுதூரத்தில் இருப்பது போல்

தோன்றுகிறது. ஏதோ ஒரு அந்நியரைப் போல் எழுதியிருக்கிறீர்கள்.

உங்கள் வார்த்தைகளுக்குப் பின்னால் இன்னும் சொல்லப்படாத ஏதோ ஒன்று

இருக்கிறது என உணர்கிறேன்.

நாம் இத்தனைக் காலம் ஒன்றாகச் சென்றோம், பல சிக்கல்களைச் சந்தித்தும் ஒன்றாகவே பயணித்தோம்; அந்த நெருங்கிய நட்புக்குப் பிறகும் நீங்கள் இப்படி எழுதுவீர்கள் என நான் எதிர்பார்க்கவில்லை.

மனதில் ஏதாவது நெருடலாக இருந்தால், தயங்காமல் சொல்லுங்கள்.

அதைச் சொல்லாமல் எங்களிடமிருந்து விலகிச் செல்ல வேண்டாம்.

பதிப்பகம் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் — அது இன்று

அடைந்திருக்கும் இடம் – அதற்கான காரணம் நீங்கள்தான். உங்கள் புத்தகங்களே எக்ஸ் பதிப்பகத்துக்கான அடையாளத்தைத் தந்தன.

சில எழுத்தாளர்கள் எங்களிடம் தங்கள் புத்தகங்களைப் பதிப்பிக்க புத்தகங்கள் தருவதற்குத் தயங்குகிறார்கள் என்றால் அது அவர்கள் பிரச்சனை; எங்களது அல்ல. நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்.

ஆனால் அதற்கும் மேலாக, நீங்கள் எங்களிடமிருந்து பிரிந்து செல்ல விழைகிறீர்களோ என்று எனக்குச் சற்று பயமாக இருக்கிறது —

அப்படியென்றால், தயவுசெய்து எனக்குத் தெரிவிக்காமல் அப்படிச் செய்ய வேண்டாம். நாம் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ளலாம், கடந்து செல்லலாம். ஆனால் ஒருபோதும் நம்முடைய நட்பை இழந்து விட முடியாது.

நான் இந்த பதிலில் கவனமாக கோண்டியைச் சேர்ப்பதைத் தவிர்த்துவிட்டேன்

இது என்னுடைய தனிப்பட்ட கடிதம். உங்களிடம் நான் நேரடியாகப் பேச வேண்டும் என்று நினைக்கிறேன்.

நீங்கள் உண்மையிலேயே — “என் புத்தகங்களைப் பதிப்பிக்க விரும்புகிறீர்களா?” என்று கேட்கிறீர்களானால், என் பதில் தெளிவானது:

ஆம், முழு மனதுடன் விரும்புகிறேன்.

ஆனால் அதற்கும் மேலாக, நீங்கள் எங்களை விட்டு விலகிச் செல்ல வேண்டாம் என்று அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.

அப்படியே ஒருவேளை நீங்கள் பிரிய நினைத்தாலும், முதலில் என்னுடன் பேசுங்களேன் ப்ளீஸ்.

அன்புடன்,

புவனேஸ்வரி.

புவனேஸ்வரி இப்படி ஒரு கடிதத்தைத்தான் எனக்கு எழுதியிருக்க வேண்டும் என்று என் நண்பர் நினைக்கிறார்.  நண்பர் வேறு எதுவும் கருத்தே சொல்லவில்லை.  இந்தக் கடிதத்தை மட்டுமே அனுப்பினார்.  இது புவனேஸ்வரி எனக்கு எழுதிய கடிதம் அல்ல.  என் கடிதத்தைப் பார்த்ததும் அடித்துப் பிடித்துக்கொண்டு புவனேஸ்வரி இப்படி எனக்கு எழுதியிருக்க வேண்டிய கடிதம்.  ஊர், உலகமெல்லாம் போய் கண்ணாயிரம் பெருமாள் என் ஆசிரியர் என்று சொல்வதல்ல குரு பக்தி.  மேலே சொன்னதுதான் குருவின் மீதான மரியாதை.  கேட்டால் மீட்டிங்கில் இருந்தேன் என்று பதில்.  ஏன், இருபத்து நான்கு நேரமுமா நடந்தது அந்த மீட்டிங்?  என் மீது மிகுந்த கோபம் கொண்டிருக்கும் ஒருவரிடம் கொடுத்தா பதில் எழுதச் சொல்வீர்கள்?  அதுவும் எப்படி?  வீ டோண்ட் ஹாவ் எனி ப்ராப்ளம் பப்ளிஷிங் யுவர் வொர்க், சார்.  என்னய்யா பதில் இது?

தொடர்ந்து உங்கள் குருவை அவமானப்படுத்திக்கொண்டே இருப்பீர்கள்?  தொடர்ந்து குரு உங்களை மன்னித்துக்கொண்டே இருக்க வேண்டும், இல்லையா?  எந்த ஊர் நியாயம் இது?

குரு என்றால் யார்?

ஒரு மனிதன் பிறக்கிறான்.  கல்வி கற்கிறான்.  சம்பாதிக்கிறான்.  மனைவி, குழந்தை, குழந்தையின் படிப்பு, முதுமை, இறப்பு. 

இங்கே நடுவில் வரும் குரு மட்டுமே அவனுக்கு அல்லது அவளுக்கு ஞானத்தை வழங்குகிறான்.  தன் மாணவனை ஞானத்தின் பாதையில் செலுத்துகிறான்.  இதற்கு அவன் எந்தக் கட்டணமும் வாங்குவதில்லை.  எந்தப் பிரதிபலனும் இல்லை.  அவன் எதிர்பார்ப்பது வெறும் மரியாதை. 

பார்ப்பு என்றால் பட்சி.  பட்சிகளுக்கு இரு பிறப்பு.  ஒன்று, முட்டையாக.  இரண்டாவது, குஞ்சாக.  இப்படி உங்களுக்கு இரு பிறப்பை வழங்குபவனே குரு.  அதாவது, தாய் உங்களை முதலாகப் பிரசவிக்கிறாள்.  குரு உங்களை இரண்டாவதாகப் பிரசவிக்கிறான்.  இரண்டாவது பிறப்பைத் தருகிறான்.  அதனால்தான் அந்தணன் என்றால் அறவோன் என்றான் மகாகுரு.  ஆக, உங்களுக்கு அறத்தை வழங்கியவன் குரு.  உங்களை அறவோனாக ஆக்கியவன் குரு. 

அதிலும் என் விஷயத்தை எடுத்துக்கொண்டால், நான் பட்டினி கிடந்து பெற்ற ஞானத்தையே உங்களுக்கு இலவசமாக வழங்குகிறேன்.  தியாகராஜரைப் போல் பிச்சையெடுத்து வாழ்கிறேன். 

அந்த குருவை அவமதிக்கிறீர்கள்.

ஆனால் மன்னிப்பும் கேட்கிறீர்கள்.

தொடர்ந்து இதுவேதான் நடக்கிறது.

புவனேஸ்வரி தொடர்ந்து என் மீது வைக்கும் குற்றச்சாட்டு என்ன?  “நீங்கள் என் நண்பர்களை, எங்கள் பதிப்பகத்துக்குப் புத்தகம் கொடுக்கும் எழுத்தாளர்களைப் பொதுவெளியில் போட்டு அடிக்கிறீர்கள்.  அசிங்கப்படுத்துகிறீர்கள். 

எனக்கு எடிட் பண்ணிக் கொடுத்ததற்காக அந்த மூத்த எழுத்தாளரை பொதுவெளியில் போட்டு எப்படியெல்லாம் அசிங்கப்படுத்தினீர்கள்?  பாவம், அவர் என்ன தப்பு செய்தார்?  இருபது வயதுப் பையனுக்கெல்லாம் எடிட் பண்ணிக் கொடுக்கிறார்.  எனக்கு எடிட் பண்ணிக் கொடுத்தது தப்பா?  அவர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்?”

என் பதில்: அந்த எழுத்தாளருக்கு புவனேஸ்வரி என் மாணவி என்று தெரிந்திருக்க வேண்டும்.  தெரியும்.  புவனேஸ்வரியின் கட்டுரைகளை, கதைகளை கண்ணாயிரம் பெருமாள்தான் எடிட் பண்ணிக் கொடுக்கிறார் என்பதும் தெரியும்.  தெரிந்தும் நான் எடிட் பண்ணிக் கொடுக்கிறேன் என்று சொல்வது யோக்கியமான செயல் அல்ல.  முதல் தவறு.

அப்படியே அவர் சொல்லியிருந்தாலும், புவனேஸ்வரி அவரிடம் கண்ணாயிரம் பெருமாள் எடிட் பண்ணிக்கொண்டிருக்கிறார் என்று சொல்லியிருக்க வேண்டும்.  சொல்லவில்லை.  நானும் எடிட் பண்ணுகிறேன்.  அவரும் எடிட் பண்ணுகிறார்.  ஒரே உறையில் ரெண்டு கத்தி.  அதுவும் எப்படி?  அவர் எனக்கு எதிரான பள்ளியைச் சேர்ந்தவர்.  அதாவது, ஒரே நூலை ஒரு பஜ்ரங் தள் ஆளும் ஒரு இடதுசாரித் தீவிரவாதியும் சேர்ந்து எடிட் பண்ணுவதைப் போல. 

அப்படியும் இது பற்றி நான் ஒன்றுமே எழுதவில்லை.  ஒரு வார்த்தை எழுதவில்லை.  ஆனால், புவனேஸ்வரி மொழிபெயர்த்த அல்பேனிய நாவல் வந்திருப்பதை நான் ஃபேஸ்புக்கில் பார்த்துத் தெரிந்து கொண்டேன்.  அப்போதும் நான் எதுவும் எழுதவில்லை.  ஒரே ஒரு வாக்கியம் எழுதினேன்.  என் மகன் திருமணச் செய்தியை நான் ஃபேஸ்புக்கில் பார்த்தா தெரிந்து கொள்ள வேண்டும் என்று.  ஃபேஸ்புக்கில் செய்தி வந்த பிறகு புவனேஸ்வரியிடமிருந்து இது குறித்து ஒரு கடிதம் வந்தபோதுதான் நான் பொதுவெளியில் எழுதினேன்.  புவனேஸ்வரியின் ஒரே பதில்: உங்களிடம் தெரிவிக்க எனக்கு நேரம் இல்லை. 

என் கேள்வி: ஃபேஸ்புக்கில் உங்கள் பக்கத்தில் எழுத மட்டும் நேரம் இருந்ததா?  இதுநாள் வரை உங்களுக்கு எடிட் பண்ணிக் கொடுத்தவனுக்கு – ஊர் உலகமெல்லாம் நீங்கள் பறை சாற்றும் உங்கள் ஆசானிடம் சொல்ல உங்களுக்கு ஒரு நிமிடம் கிடைக்கவில்லையா? 

இதோடு நூற்றுக்கு மேற்பட்ட முறை புவனேஸ்வரி என்னைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிய விஷயம்:  நான் எல்லோரையும் பொதுவெளியில் போட்டு அசிங்கப்படுத்துகிறேன்.

தெளிவாக பதில் சொல்கிறேன்.  முதலில் உங்கள் நண்பர் கோண்டி.  அவர் எனக்கு தியாகராஜா நாவலை நான் எப்படி எழுத வேண்டும் என்று பாடம் எடுக்கிறார். பதினைந்து நிமிடம்.  தனிப்பட்ட முறையில்தான் சொன்னார்.  நான் அதைப் பொதுவெளியில் எழுதி அவரை அசிங்கப்படுத்தினேன்.  முதலில் இது குறித்து எழுதும்போது நான் அவர் பெயரைக் கூட  குறிப்பிடவில்லை. (இப்போது கோண்டி என்றால் யார் என்று கண்டு பிடித்து விடலாம்.  ஆனால் முதல் முறை எழுதிய போது நான் அவரை “ஒரு நண்பர்” என்றே குறிப்பிட்டிருந்தேன்.  ஒரு நண்பர் என்பது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.  நான் யாரைக் குறிப்பிடுகிறேன் என்று யாராலும் அறிய இயலாது.  ஆனால் அவருக்குப் புரியும்.  அவர் கடுமையாகப் புண்பட்டார்.  என்னோடு ஒருபோதும் பேச மாட்டார்.  பேச விரும்பவில்லை.  அவர் செய்தது சரி.  கண்ணாயிரம் பெருமாள் அவரைப் பொதுவெளியில் அசிங்கப்படுத்தி விட்டான்.

என் பதில்:  ஒரு பெண்ணை ஒருவன் ஒரு தனியறையில் வைத்து யாருக்கும் தெரியாமல் பாலியல் பலாத்காரம் செய்து விட்டான்.  அவள் அது பற்றி அவனிடம் தனிப்பட்ட முறையில்தான் கேட்க வேண்டும்.  பொதுவெளியில் போட்டு அசிங்கப்படுத்தக் கூடாது. 

இது எப்படி நியாயம்?  மீட்டூவில் பெண்கள் என்ன செய்தார்கள்?  தனி அறையில் நடந்த விஷயத்தைத்தானே பொதுவெளியில் போட்டு சம்பந்தப்பட்ட நபர்களை வெளியே கொண்டு வந்தார்கள்.  தனியறையில் நடந்ததை தனியறையிலேவா நியாயம் கேட்டார்கள்?  அவர்களிடம் போய் நீங்கள் “தனிப்பட்ட முறையில் நடந்ததை பொதுவெளியில் போட்டு சம்பந்தப்பட்டவர்களை அசிங்கப்படுத்துகிறீர்களே?” என்று கேட்பீர்களா? 

பாலியல் பலாத்காரமும் இதுவும் ஒன்றா என்று நீங்கள் கேட்கலாம்.  பாதிக்கப்பட்ட எனக்கு அது ஒன்றுதான். 

நான் ஒரு எழுத்தாளன்.  எனக்குப் பாடம் எடுக்க யார் உங்கள் நண்பர் கோண்டிக்கு உரிமை அளித்தது?  அவர்தான் என்னை அசிங்கப்படுத்தினார்.  என் மீது அவர் செலுத்திய வன்முறை அது என்று ஏன் உங்களுக்குப் புரிய மாட்டேன் என்கிறது?  தனிப்பட்ட முறையில்தான் செய்தார்.  ஆனால் அது வன்முறை.  ஒரு ஆள் என்னிடம் பணம் கடன் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டான்.  யாருக்குமே தெரியாது.  நான் பொதுவெளியில் அது பற்றி எழுதினால் அவனை நான் பொதுவெளியில் போட்டு அசிங்கப்படுத்தியதாக அர்த்தமா? 

எப்போது பார்த்தாலும் எனக்கு அறிவுரை சொல்கிறார் உங்கள் நண்பர் கோண்டி.  அந்த அதிகாரத்தை அவருக்குக் கொடுத்தது யார்?  இதை என் மீது செலுத்தப்படும் வன்முறை என்று கருதுகிறேன்.  அதனால் பொதுவெளியில் போட்டு அசிங்கப்படுத்துகிறேன்.  அப்போது கூட பெயரைக் குறிப்பிட்டதில்லை.  இப்போதுதான் பெயரைக் குறிப்பிடுகிறேன்.

என்னிடம் கை கட்டி ஞானம் கேட்க வேண்டிய ஒரு பொடியன் எனக்கு அறிவுரை வழங்கினால் அது என்னை வன்கலவி செய்வதற்குச் சமம்.  ஃபூக்கோவைப் படித்த புவனேஸ்வரிக்கு அதிகாரம் பற்றித் தெரியாதா?  என் மீது அதிகாரம் செலுத்த உங்கள் நண்பர் கோண்டி யார்?

நான் யார் வம்புக்காவது போகிறேனா?  யாரைப் பற்றியாவது நானாக ஏதாவது எழுதியிருக்கிறேனா?  தூங்கும் நாய் மீது கல்லெறிகிறீர்கள்.  நாய் குரைக்கிறது. 

நான் செய்வது வெறும் எதிர்வினை மட்டுமே என்பதை ஏன் புவனேஸ்வரி ஒருபோதும் புரிந்து கொள்ள மறுக்கிறார்?  நானாக இதுவரை ஒருவரைப் பற்றிக் கூட பொதுவெளியில் எழுதி அசிங்கப்படுத்தியதில்லை.  அவர்கள் என்னைத் தனிப்பட்ட முறையில் அசிங்கப்படுத்துகிறார்கள்.  அதை நான் பொதுவெளியில் எழுதுகிறேன்.  அவ்வளவுதான். 

ஆரம்பத்திலிருந்தே நீங்கள் இதைத்தான் சொல்லிக்கொண்டு வருகிறீர்கள் புவனேஸ்வரி. 

சமகாலத் தமிழ் இலக்கியத்தின் ஒரே உச்சம் பாலகுமாரன் என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டார் கோண்டி.

நான் உடனே அதற்குப் பொதுவெளியில் எதிர்வினை செய்தேன்.  கோண்டியும் அவர் வீட்டுப் பாட்டியிடம் அதைச் சொல்லவில்லை.  அவரும் பொதுவெளியில்தான் சொன்னார்.

பாலகுமாரன்தான் உச்சம் என்றால் நீங்கள் பாலகுமாரனையே பதிப்பித்துக் கொள்ள வேண்டியதுதானே?  என்ன மயிருக்கு கண்ணாயிரம் பெருமாளின் எண்பது தொண்ணூறு புத்தகங்களைப் பதிப்பித்து நிலைபெற்றீர்கள்? அப்படி நீங்கள் பாலகுமாரனை மட்டும் பதிப்பித்திருந்தால் மாம்பலத்தில் உள்ள பெயர் தெரியாத நூற்றுக்கணக்கான பதிப்பகங்களில் ஒன்றாகவோ அல்லது பாக்கெட் நாவல் அசோகன் போலவோ ஆகியிருப்பீர்கள்? ஆக, பாக்கெட் நாவல் அசோகன் மாதிரி ஆகியிருக்க வேண்டிய உங்களையும் கோண்டியையும் காலச்சுவடு கண்ணனுக்குப் போட்டியாக உருவாக்கிய என்னை வைத்துக்கொண்டு, “கண்ணாயிரம் பெருமாளுக்கும் எங்களுக்கும் சம்பந்தமே இல்லை” என்கிறீர்கள்?

பாலகுமாரன் முந்நூறு புத்தகங்களை எழுதியிருக்கிறார்.  ஆனால் அவர் பெயர் இலக்கிய உலகில் யாராலும் சொல்லப் படுகிறதா? 

நீங்கள் பதிப்பகம் நடத்துகிறீர்கள்.  நீங்கள் தனியாள் அல்ல.  உங்கள் அபிப்பிராயங்கள் என்னை அவமானப்படுத்தினால் நான் அதை எழுதத்தான் செய்வேன்.  பாலகுமாரன் எழுதியது இலக்கியமே அல்ல என்பது எங்கள் கட்சி. 

நான் கோண்டியை அசிங்கப்படுத்தி விட்டேன் என்று நான்கு ஆண்டுகளாக சொல்லிச் சொல்லி என்னை அடித்துக்கொண்டிருக்கிறீர்கள்.  இதுவரை அதை நீங்கள் ஐநூறு முறை சொல்லியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.  நான் ஏன் இதுவரை உங்கள் அடிகளுக்குப் பதில் சொல்லவில்லை என்றால், உங்களுக்கு என் பதில் புரியாது.  ஒருமுறை சொன்னேன்.  புரியவில்லை.  விட்டு விட்டேன்.   

மனுஷ்ய புத்திரனை பெரும் அளவுக்குப் பிரபலம் ஆக்கியவர் சுஜாதா.  சுஜாதாவின் புத்தகங்களை வெளியிடுபவர் மனுஷ்ய புத்திரன்.  ஆனால் அவர் ஒருபோதும் சுஜாதாதான் தமிழ் இலக்கியத்தின் உச்சம் என்று சொன்னதில்லையே?

ஒருமுறை ஒரு பேட்டியில் எனக்குப் பிடித்த புத்தகம் உபபாண்டவம் என்று மனுஷ் குறிப்பிட்ட போது, ”ஏன், ஒரு பதிப்பாளராக, ஒரு வாசகனாக, ஒரு நண்பனாக, உங்களுக்கு என் நாவல் எக்ஸ் பிடிக்கவில்லையா? ஏன் அந்தப் பெயரைச் சொல்லவில்லை?” என்று பொதுவெளியில்தான் எழுதினேன்.  உடனே ”என்னை நீங்கள் பொதுவெளியில் அசிங்கப்படுத்தி விட்டீர்கள்” என்று மனுஷ்ய புத்திரன் குதிக்கவில்லையே? 

நான் உங்களோடு எதுவும் விவாதிக்காமல், எதுவும் பேசாமல் அமைதி காத்தேன்.  ஏனென்றால், உங்களுக்கு என் எழுத்து மன உளைச்சலைத் தருகிறது.  என் பேச்சும் மன உளைச்சலைத் தருகிறது.  மன உளைச்சல் தரும் எந்த விஷயத்திலும் ஈடுபடக் கூடாது என்பது என் மாணவர்களுக்கு நான் அளிக்கும் முதல் பாடம்.  அதனால் அமைதி காத்தேன். 

நீங்கள்தான் அந்த அமைதியை உடைத்து என்னை அழைத்து “இசை விமர்சகரை நீங்கள் உங்கள் வழக்கப்படி பொதுவெளியில் போட்டு அசிங்கப்படுத்தி விட்டீர்கள்” என்று குற்றம் சாட்டினீர்கள்.

என் தரப்பைக் கேட்கவே உங்களுக்குப் பொறுமை இல்லை.

தியாகராஜாவை எழுத கண்ணாயிரம் பெருமாளிடம் என்ன இருக்கிறது என்று அவர் உங்களிடம் கேட்ட போதே நீங்கள் என் சார்பாக, என் மாணவியாக அவரிடம் வாதித்திருக்க வேண்டும்.  சண்டை போட்டிருக்க வேண்டும்.

’கண்ணாயிரம் பெருமாள் பற்றி அப்படிச் சொல்ல நீங்கள் யார்?  ஏன் அவரால் எழுத முடியாது?’ என்று நீங்கள்  கேட்டிருக்க வேண்டும்.  உங்களுக்கு எல்லோரும் வேண்டும்.  யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது.  கேட்கவில்லை.  விவாதிக்கவில்லை.  என்னிடம் வந்து என்னை அடிக்கிறீர்கள்.  என்னைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறீர்கள்.  எனக்குக் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துகிறீர்கள்.  என் தரப்பு நியாயத்தைக் கேட்கக் கூட உங்கள் செவிகள் தயாராக இல்லை. 

இசை விமர்சகரின் குதர்க்கப் பேச்சால் நான் காயப்பட்டேன்.  இடுப்புக்குக் கீழே அடிபட்டது போல உணர்ந்தேன்.  மருந்தைச் சாப்பிடும்போது குரங்கை நினையாதே கதையாகப் போய் விட்டது.  தியாகராஜா நாவலின் ஒவ்வொரு வார்த்தையை எழுதும்போதும் குரங்கு ஞாபகம் வருகிறது.  தனிப்பட்ட முறையில் என் மீது நடந்த பாலியல் பலாத்காரம் என்றே கருதினேன்.  தனிப்பட்ட முறையில் என் முகத்தில் உமிழப்பட்ட எச்சில்.  நான் பொதுவெளியில் எழுதினேன்.  ஏன் ஐயா, ஒருவருக்கும் தெரியாமல் என்னை வன்கலவி செய்வீர்கள்.  ஆனால் நான் அதைப் பொதுவெளியில் எழுதக் கூடாதா?

நான் யார் வம்புக்கும் போவதில்லை.  பிறகு ஏன் என் மீது கல்லெறிகிறீர்கள்?  பிறகு ஏன் கண்ணாயிரம் பெருமாள் பொதுவெளியில் அசிங்கப்படுத்துகிறார் என்று நூறு முறை என்னை சவுக்கால் அடிக்கிறீர்கள்?

உதாரணம் சொல்லுங்கள்.  நிரூபியுங்கள்.  நான் யாரையாவது முதல் முதலாகத் தாக்கி எழுதியிருக்கிறேனா?  ஒரு சம்பவம் சொல்லுங்கள்.  என்னை முழுசாக மாற்றிக் கொள்கிறேன்.

இன்னொரு விபரீதம் என்னவென்றால், குறைந்த பட்சம் அந்த இசை விமர்சகர் என்னைப் பற்றிச் சொன்னதையாவது நீங்கள் என்னிடம் சொல்லி மித்ரபேதம் செய்யாமல் இருந்திருக்கலாம்.  அதையும் செய்து விட்டு, அது பற்றி நான் எதிர்வினை செய்தால் அதற்கு என்னைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறீர்கள்?  என்னதான் செய்வது நான்?

சமீபத்தில் ஒருநாள் புவனேஸ்வரி மிகுந்த காட்டத்துடன் என்னிடம் சொன்னார், ”யாராவது உங்களைப் பற்றி ஏதாவது பேசி விட்டால் போதும், அவரை இடுப்புக்குக் கீழே அடித்து உண்டு இல்லை என்று துவம்சம் செய்து விடுகிறீர்கள்.”

ஏன், இதையே போய் மீட்டூ பெண்ணிடம் சொல்லுங்களேன், எவனாவது உன் முலையைத் தொட்டு விட்டான் என்றால் போதும், அவனைப் போட்டு உண்டு இல்லை என்று துவம்சம் செய்து விடுகிறாயே, பெண்ணே?

என்னய்யா இது?  ஒரு கருப்புக் கண்ணாடி அணிந்து கொண்டு புத்தக விழாவுக்குப் போகிறேன்.  அதை வைத்து புவனேஸ்வரியின் நண்பர் – பிரபல எழுத்தாளர் சங்கர் ராம் – அரை மணி நேரம் விடாமல் என்னை உடல் கேலி செய்து அழ வைக்கிறார், ஆனால் நான் அது பற்றி எழுதக் கூடாதா? 

அரை மணி நேரம் கேலி செய்தார் இல்லையா, அவருக்கு சமமாக என்னால் பேச முடியவில்லை.  என்ன செய்வது என்று தெரியவில்லை.  கடும் கோபம் வருகிறது.  அடித்து விடுவேன்.  அவ்வளவுதான்.  பேச்சுக்கு அடி.  பேச்சுக்குப் பேச்சு எனக்குத் தெரியாது.  சரி, இங்கே நிற்க வேண்டாம் என்று கழிப்பறைக்குச் செல்கிறேன்.  அப்போது கூட அந்த எழுத்தாளர் என்னைப் பார்த்து, நையாண்டியாகச் சிரித்துக்கொண்டே, “பார்த்துப் போங்க பெருமாள், தடுமாறி விழுந்துடப் போறீங்க, டார்க் க்ளாஸ் போட்ருக்கீங்க” என்று நக்கல் பண்ணுகிறார். 

உடல் கேலியோடு விஷயம் முடியவில்லை.  திரும்பி வந்து என் வாசகர்கள் வாங்கும் புத்தகங்களில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தேன்.  நான் பொதுவாக வாசகர்களின் பெயரைக் கேட்டு அதையும் எழுதித்தான் என் கையெழுத்தைப் போடுவேன்.  ஒரு வாசகரின் பெயர் எனக்குப் புரியவில்லை.  சுத்தமாகப் புரியவில்லை.  மீண்டும் மீண்டும் கேட்டேன்.  புரியவில்லை.  அவர் தன்னுடைய அடையாள அட்டையை எடுத்துக் காண்பித்தார்.  நான் அந்த அட்டையை என் முன்னால் வைத்து ஒவ்வொரு எழுத்தாகப் பார்த்து எழுதி என் கையெழுத்தை இட்டேன்.

உடனே சங்கர் ராம், இதுவரை என்னை உடல் கேலி செய்து கொண்டிருந்தவர், என்னை நெருங்கி வந்து நக்கலாகச் சிரித்தபடி, “என்ன பெருமாள், புத்தகத்தில் கையெழுத்துப் போடுவதானால் அவர்களின் ஆதார் கார்டைப் பார்த்துத்தான் போடுவீர்களா?”

நான் என்ன பதில் சொல்ல முடியும்?  எனக்குப் பேச வராது.  மாமா வேலை பார்ப்பவன் எப்படி சிரிப்பானோ அப்படிச் சிரித்து வைத்தேன்.

இதைப் படிக்கும் வாசகர்களும், சக எழுத்தாளர்களும் ஒருக்கணம் இதைப் படிப்பதை நிறுத்தி விட்டு நான் விவரித்திருக்கும் சம்பவங்களைக் கண் முன்னே ஓட்டிப் பாருங்கள்.

பத்து வயதில் ஆரம்பித்தது இந்தக் கதை.  கையில் கித்தாரோடு அலைவேன்.  சேரிப் பையன்கள் என்னைக் கல்லால் அடிப்பார்கள்.  சூத்தாட்டி என்பதே  பட்டப் பெயர்.  கோசா என்பார்கள்.  கோசா என்றால் ஆண் உடம்பில் பெண் தன்மையோடு இருப்பவன்.  இப்போதைய திருநங்கை.  பிறகு பதினெட்டு வயதில், ரவிச்சந்திரன் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராகப் பணிபுரிந்த ஃபரீது காக்காவிடம் குத்துச்சண்டை பயின்று, ஜிம்முக்கெல்லாம் போய் உடம்பில் திமிர் ஏறிய பிறகு, என்னை உடல் கேலி செய்பவர்களை அடிக்க ஆரம்பித்தேன்.  சிலருக்குக் கை கால் உடைந்தது.  ஏற்கனவே ஊரில் என் தாய் மாமாக்கள் இரண்டு பேர் பிரபலமான ரவுடிகள்.  எப்போது பார்த்தாலும் வெட்டுக்குத்து, ரத்தக் களறிதான்.  ஒருநாள் எங்கள் ஊர் இன்ஸ்பெக்டர் தன் வீட்டுக்கு வந்து என்னைப் பார்க்கச் சொல்லி ஒரு போலீஸ்காரரை அனுப்பினார். ஊரறிந்த வாத்தியார் பையன், அதுவும் நீ நன்றாகப் படித்து நல்ல பேர் எடுத்தவன், இப்போது இப்படி ரவுடியாகத் திரியலாமா, இங்கே இருந்தால் இந்த ஊர்க்காரன்கள் உன்னை உன் மாமன்கள் மாதிரியே ரவுடியாக்கி விடுவான்கள், நீ உடனடியாக வெளியூர் கிளம்பு என்றார்.  அப்புறம் வெளியூர் வந்துதான் ரவுடியாகாமல் தப்பினேன். ம்ஹும்.  அப்படியும் சொல்ல முடியாது.  இலக்கிய உலகில் நுழைந்ததும் ரவுடிப்பட்டம் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தது.  இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

ஐம்பது ஆண்டுகளாக என்னைக் கேலி செய்து கொண்டும், அவமதித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.  திருப்பித் திட்டினால் ரவுடி.  இடுப்புக்குக் கீழே அடித்துக் காலி பண்ண நினைக்கும் காவாலி. 

ஒரு வகையில் பார்த்தால் அதுவும் உண்மைதான் என்று தோன்றுகிறது.  என்னை வன்கலவி செய்ய வரும் ஆணின் சாமானை அறுத்து வறுத்துத் தின்னும் ஒரு பெண்ணின் நிலையில்தான் இருக்கிறேன்.  உன்னைக் காபந்து பண்ணிக் கொள்ள நினைத்தால் என்னை வன்கலவி செய்யாதேடா, பாஸ்டர்ட். 

ஒரு பத்திரிகை ஆசிரியர் கண்ணாயிரம் பெருமாள் ஒரு திருடன் என்று எழுதினார்.  நீதிமன்றத்தில் ஒரு பத்து லட்சத்தைக் கட்டி, ஒரு கோடி ரூபாய்க்கு மானநஷ்ட வழக்குப் போடலாமா என்று நினைத்தேன்.  அப்புறம்தான் ‘அப்படிச் செய்தால் அந்த நபர் ஹீரோ ஆகி விடுவார்’ என்று அந்த எண்ணத்தைக் கைவிட்டேன்.  இந்த வரிசையில்தான் புவனேஸ்வரியின் நண்பர் சங்கர் ராம் வருகிறார். 

நான் பட்ட அவமரியாதையை புவனேஸ்வரி என் மாணவி என்ற முறையில் அப்போதே கண்டித்திருக்க வேண்டும்.  புவனேஸ்வரி அந்தக் காரியத்தை ஒருபோதும் செய்ய மாட்டார்.  அவர் யாரையும் பகைத்துக் கொள்ள மாட்டார்.  அவர் ஜெயலலிதாவுக்கும் நண்பராக இருப்பார், கருணாநிதிக்கும் நண்பராக இருக்க விரும்புவார். 

மேலும், சங்கர் ராம் எக்ஸ் பதிப்பகத்தின் பெஸ்ட் ஸெல்லர்.  என்ன செய்ய முடியும்?

இதை நான் பொதுவெளியில் எழுதுவதா, வேண்டாமா?

என்னைத் தனிப்பட்ட முறையில், தனியறையில் வைத்து வன்கலவி செய்கிறார் ஒருத்தர்.  அதை நான் காவல் நிலையத்தில் புகார் வைப்பேனா, இல்லையா?  பொதுவெளியில் எழுதுவேனா, இல்லையா?  கோவில்பட்டியில் ஒரு எழுத்தாளர் தன் வீட்டுக்கு வரும் நண்பர்கள் தூங்கும் போதெல்லாம் அவர்கள் வாயில் தன் ஜனன உறுப்பை வைத்து இன்பம் துய்த்திருக்கிறார்.  முப்பது பேர் புகார் செய்தார்கள்.

அந்த எழுத்தாளர் வந்து “நான் தனிப்பட்ட முறையில் செய்ததை நீங்கள் ஏன் பொதுவெளியில் சொல்லி என்னை அசிங்கப்படுத்துகிறீர்கள்?” என்று கேட்டால் அது எத்தனை அயோக்கியத்தனம்?

இப்படித்தான் புவனேஸ்வரி என்னைத் தனிப்பட்ட முறையில் அசிங்கப்படுத்துபவர்களையெல்லாம் விட்டு விட்டு, என்னை ஃபோனில் அழைத்து, “பொதுவெளியில் அசிங்கப்படுத்தி விட்டீர்கள், உங்களை ஏதாவது சொல்லி விட்டால், இடுப்புக்குக் கீழே அடித்துக் கொன்று விடப் பார்க்கிறீர்கள்” என்று ஏதோ என்னைக் கொலைகாரன் ரேஞ்ஜுக்குக் கீழே போட்டு மிதித்துக்கொண்டிருக்கிறார்.   

அப்போதெல்லாம் நான் மிகவும் கீழ்மையாகவும் புழுப் போலவும் உணர்கிறேன்.  அந்த அளவுக்கு புவனேஸ்வரி என்னை ஒரு கிரிமினல் போல சித்தரித்துப் பேசுகிறார்.  வேறு யாராவதாக இருந்தால் அவன் தன்னைக் கிரிமினல் என்றே நினைத்துத் தற்கொலை செய்து கொண்டு விடுவான்.

இத்தனைக்கும் நான் சங்கர் ராமை அன்றைய தினம் எதுவுமே சொல்லவில்லை; எந்த வகையிலும் அவரை நான் துன்புறுத்தவில்லை, எரிச்சல் மூட்டவில்லை.  நான் பாட்டுக்குப் புத்தகங்களில் கையெழுத்துப் போட்டுக்கொண்டிருந்தேன். 

நான் பட்ட அவமானத்தை, பெயர் குறிப்பிடாமல் எழுதினால் அதற்காக புவனேஸ்வரியும் சேர்ந்து என்னை அடிக்கிறார். 

இப்போது பெயரையும் குறிப்பிட்டு விட்டேன்.  சங்கர் ராம்தான் அந்த எழுத்தாளர்.  சங்கர் ராம் எல்லோருக்கும் இனியவர்.  அவர் இருக்கும் இடமே மகிழ்ச்சியாலும் சிரிப்பாலும் நிறைந்திருக்கும்.  யார் வம்புக்கும் போக மாட்டார்.  யாரையும் நிந்திக்க மாட்டார்.  எந்த இலக்கிய சர்ச்சையிலும் ஈடுபட மாட்டார்.  தான் உண்டு, தன் எழுத்து உண்டு என்று இருப்பவர்.  அதனால்தான் அந்தச் சம்பவத்தைப் பற்றி எழுதும்போது அந்த எழுத்தாளர் நல்லவர் என்று குறிப்பிட்டேன்.  ஆனாலும் அவர் ஏன் என்னிடம் அப்படி நடந்து கொண்டார்?  என் தலையில் ஓத்த விதி!  (என் நண்பர் மணி இதை TOV என்று சுருக்கமாகக் குறிப்பிடுவார்.)

அதனால்தான் திருதராஷ்டிரன் கதையைச் சொன்னேன்.  அவன் உணவைத் தொட்டாலே அடுத்த கவளம் புழுவாகி விடும்.  ஒவ்வொரு கவளத்துக்கும் ஒவ்வொரு தட்டு. 

அதனால்தான் தோன்றுகிறது, வள்ளலாராகவே இருந்தாலும் என்னைக் கத்தியால் குத்தி விடுவார் என்று.   என் TOV அப்படி.

சங்கர் ராம் செய்தது முதல் தவறு.  இரண்டாவது தவறு, புவனேஸ்வரி அதைத் தட்டிக் கேட்காதது.  இரண்டையும் புரிந்து கொள்கிறேன்.  ஆனால் இதைப் பொதுவெளியில் எழுதிய போது புவனேஸ்வரி என்னிடம் வந்து என்னைக் குற்றம் சாட்டியது மன்னிக்க முடியாத தவறு.  யார் பாதிக்கப்பட்டவனோ அவன் கொட்டையில் மிதித்துக் கொல்லும் செயல்.  ஆனால் புவனேஸ்வரி என்ன சொல்கிறார்?  உங்களை யாராவது எதாவது சொன்னால், அவரைத் தீர்த்துக்கட்டி விட்டுத்தான் மறு வேலை பார்க்கிறீர்கள்.  ஆகக் கடைசியில், அடி வாங்கியவனுக்குக் கொலைகாரன் பட்டம்!

எப்பேர்ப்பட்ட நியாயம் பாருங்கள்!  இதேதான் செப்டம்பர் மாதம் வரை தொடர்ந்தது.  இசை விமர்சகரை நான் விமர்சித்து எழுதியதும், புவனேஸ்வரியிடமிருந்து ஃபோன்.  வழக்கம் போல் எனக்குக் கொலைகாரன் பட்டம். 

இதில் இன்னொரு பிரச்சினை என்னவென்றால், தூங்கிக் கொண்டிருக்கும் என் மீது கல்லெறிபவர் அத்தனை பேரும் பிராமணர்.  இதைச் சொன்னால் ”ஐயோ போச்சு, ஐயோ போச்சு, கடைசியில் சாதியையும் இழுத்துத் திட்டுகிறான்!!!” என்பீர்கள்.   (என் பிராமண நண்பர்கள் என்னைத் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது.  யோகா குரு சௌந்தர், என் மைத்துனர் ரங்க ராமானுஜம், என் பதினைந்து ஆண்டுக் கால நண்பரும் புவனேஸ்வரியின் கணவருமான வாசன், என் இனிய நண்பரும் வாசகர் வட்டத்தின் முக்கியஸ்தருமான செல்வகுமார் போன்றவர்கள் பிராமணர்கள்தான்.  ஆனால் அடக்கத்தின் எடுத்துக்காட்டுகள்.  சம்ஸ்கிருதத்தில் விநயம் என்பார்கள்.  அடக்கம் என்பதை விட விநயத்தில் லயம் கூடி வருகிறது. 

விநயம் என்பதற்கு ஒரு உதாரணம் தருகிறேன்.  எனக்கு உரிமையான விஷயங்களைக் குறிப்பிடும்போது என், நான் போன்ற வார்த்தைகளையே பயன்படுத்துவதில்லை. வேண்டுமானால் என் நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள்.  நான் எழுதும் இணையதளம் பற்றிக் குறிப்பிடும்போது கூட ”நம் இணையதளத்தில்” என்றே எழுதும் பழக்கம் உள்ளவன் நான்.  சமீபத்தில் இந்தப் பிரச்சினை பற்றி புவனேஸ்வரியின் கணவரிடம் பேசிய போது அவர் எக்ஸ் பதிப்பகத்தின் பெயர் வரும் போதெல்லாம் நம் பதிப்பகம் நம் பதிப்பகம் என்றே குறிப்பிட்டார்.  இத்தனைக்கும் அவர் புவனேஸ்வரியின் கணவரே தவிர, எக்ஸ் பதிப்பகத்துக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  அவர் என்னிடம் சொல்கிறார், நம் பதிப்பகம், நம் பதிப்பகம் என்று. 

எக்ஸ் பதிப்பகம் தொடங்குவதற்கு முன் புவனேஸ்வரி, கோண்டி, நான் மூவரிடையே எங்கள் உங்கள் என்ற வார்த்தைப் பிரயோகமே வந்ததில்லை.  நாம், நம்முடைய என்றுதான் போகும்.

ஆனால் எக்ஸ் பதிப்பகம் தொடங்கிய அடுத்த நொடியிலிருந்தே புவனேஸ்வரியும் கோண்டியும் எங்கள் உங்கள் என்று என்னைப் பிரித்துப் பேச ஆரம்பித்து விட்டார்கள்.  மூச்சுக்கு முந்நூறு முறை எங்கள் பதிப்பகம் என்றே குறிப்பிடுவார்கள்.  நம் பதிப்பகம் என்ற சொல்லை என் செவிகள் கேட்டதே இல்லை.

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் நான் பாண்டிச்சேரியில் வசித்த போது இங்கே இன்று என்ற பத்திரிகை பெங்களூரிலிருந்து வந்து கொண்டிருந்தது.  வணிக எழுத்துக்கு எதிரான ஒரு இடைநிலைப் பத்திரிகை.  அதில் நான் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தேன்.  மாதம் இரண்டு முறை வரும்.  அதில்தான் நான் ஜான் பால் சார்த்தரின் இண்ட்டிமஸி என்ற குறுநாவலை மொழிபெயர்த்தேன்.  தொடராக வந்தது. 

ஒரு ஐம்பது பிரதி என் முகவரிக்கோ ரவிக்குமாரின் முகவரிக்கோ வரும்.  (இப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் – விடுதலைச் சிறுத்தை கட்சி செயலாளர்).  அப்போது அவரிடம் ஒரு பழைய சைக்கிள்தான் இருந்தது.  அதில் அந்த ஐம்பது பிரதிகளையும் வைத்துத் தள்ளிக்கொண்டு போய் ஒவ்வொரு கடையாக பிரதிகளை விற்பனைக்கு வைப்போம்.  விற்காத பழைய பிரதிகளை எடுத்துக்கொண்டு வருவோம்.

இதைப் படிக்கும் வாசகர்களுக்கும், சக எழுத்தாளர்களுக்கும் கண்ணீர் மல்க சொல்லிக் கொள்கிறேன்.

எக்ஸ் பதிப்பகத்துக்காக நான் யேசு சபை ஊழியனைப் போல் செயல்பட்டேன்.  எக்ஸ் பதிப்பகத்துக்குப் புத்தகம் தாருங்கள் என்று நான் கேட்காத எழுத்தாளர்களே தமிழ்நாட்டில் இல்லை.  இரா. முருகன், கார்ல் மார்க்ஸ், லட்சுமி சரவணகுமார், தியோடர் பாஸ்கரன், ஜெயமோகன், சரவணன் சந்திரன், பிரபு காளிதாஸ், பிரபு கங்காதரன், அய்யனார் விஸ்வநாத், நேசமித்ரன், வளன் அரசு, பெருந்தேவி, கருந்தேள் ராஜேஷ், உயிர்மை செல்வி, அமிர்தம் சூர்யா, வாஸ்தோ, செந்தில்குமார் (தோக்யோ) என்று சுமார் நூறு பேரிடம் கேட்டிருக்கிறேன்.  ஒருமுறை அல்ல, பல முறை.  கிட்டத்தட்ட மதமாற்றம் செய்ய முயலும் மதவாதியைப் போல் நடந்து கொண்டிருக்கிறேன்.  ஏன், மனுஷ்ய புத்திரனிடமே கேட்டிருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.  தமிழ்நாட்டில் எக்ஸ் பதிப்பகத்துக்காக நான் புத்தகம் கேட்காத ஒரே ஆள், காலச்சுவடு கண்ணன்தான்.  மற்ற அனைவரிடமும் கேட்டு விட்டேன்.  சமகால எழுத்தாளர்களிடம் மட்டுமல்லாமல், காலமாகி விட்ட எழுத்தாளர்களையும் தொடர்பு கொண்டேன்.  மீடியம் என்று நினைத்து விடாதீர்கள்.  அவர்களின் வாரிசுகள் மூலம் அதை நிறைவேற்றினேன்.  ந. சிதம்பர சுப்ரமணியனின் புதல்வர் சுந்தரம் ஒரு உதாரணம்.  அதேபோல் சி.சு. செல்லப்பாவின் புதல்வர் மூலமாக செல்லப்பாவின் நூல்கள். 

ஒரு சமயம் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் எக்ஸ் பதிப்பகத்துக்குப் புத்தகங்கள் கொடுக்கச் சொல்லி கேட்டேன்.  கொடுத்தால் நம் நட்பு கெட்டுப் போகும், வேண்டாம் என்றார்.  அப்படியா என்று கோபித்துக் கொண்டு அவரோடு ஓரிரண்டு ஆண்டுகள் பேசாமலேயே இருந்தேன்.  அப்புறம் அந்த விஷயம் மறந்து போனதும் சேர்ந்து கொண்டோம்.  இப்போது கூட இந்த விஷயத்தை எனக்கு ஞாபகப்படுத்தியவர் ஒரு நண்பர்தான். 

இந்த விஷயத்தில் நான் சாம, தான, பேத, தண்டம் என்ற நான்கு உபாயங்களையும் பயன்படுத்தியிருக்கிறேன்.  வளன் அரசு என் வளர்ப்பு மகன் என்பதால் அவனிடம் மட்டும் தண்டத்தையும் பயன்படுத்தினேன்.   

ஏன், இப்போது என்னை அவமதித்திருக்கும் இசை விமர்சகரிடம் கூட பல முறை கேட்டேன்.  அது மட்டுமல்ல, இத்தனை கலவரத்துக்குப் பிறகும், இத்தனை அவமதிப்புக்குப் பிறகும் மிகச் சமீபத்தில் கவிஞர் ஆசையிடமும், செல்வகுமாரிடமும் அவர்களின் கவிதைத் தொகுதியை எக்ஸ் பதிப்பகத்திற்கே கொடுங்கள் என்று சொன்னேன். 

இன்னொரு சம்பவம் சொல்கிறேன்.  மஹாபாரதத்தின் பதினெட்டு பர்வங்களுக்கும் தமிழ் உரைநடையில் மொழிபெயர்ப்பு இல்லை என்று கருதப்படுகிறது.  ஆனால் ம.வி. ராமானுஜாசாரியார் என்ற தமிழ் வித்வான் தொகுப்பாளராக இருந்து பல சம்ஸ்கிருத – தமிழ் அறிஞர்களை மொழிபெயர்ப்பாளர்களாக அமர்த்தி முழு மஹாபாரதத்தையும் (பதினெட்டு பர்வங்கள்) தமிழில் 1930-1940களில் கும்பகோணத்தில் “ஸ்ரீ மஹாபாரதம் பிரஸ்” மூலம் கொஞ்சமும் சுருக்காமல் உரைநடையில் கொண்டு வந்தார்.  இதற்காக அவர் தன் சொத்து முழுவதையும் விற்றார். 

இந்தப் பதினெட்டு நூல்களில் ஒருசில என்னிடம் இருந்தன.  இதை புவனேஸ்வரியிடமும் கோண்டியிடமும் தெரிவித்து இதைத் தமிழில் கொண்டு வரச் சொன்னேன்.

தமிழ்ப் பதிப்பு உரிமையை வேறு ஒரு பதிப்பகம் வைத்திருந்தது.  ஆனால் அவர்களிடம் அத்தனை பணம் இல்லை.  லட்சக்கணக்கில் செலவாகும்.  நான் அந்தப் பதிப்பக நண்பரிடம் பேசினேன்.

வாக்குக் கொடுத்து விட்டேனே என்றார்.

வாக்கை மீறுங்கள் என்றேன். 

அது தர்மம் இல்லையே என்றார்.

தர்மத்தை மீறுங்கள் என்றேன்.

என்ன பெருமாள் இது?  நீங்களா இப்படிப் பேசுவது? என்றார். 

நீங்கள் இந்தப் பிரசுரத்தைக் கொண்டு வரவே முடியாது.  அனுமதி வாங்கி வைத்துக்கொண்டு சும்மாவே இருந்தால் அது வியாசனுக்குச் செய்யும் அநீதியில்லையா என வாதிட்டேன்.  வியாசன் தமிழ்நாடு முழுமைக்கும் செல்ல வேண்டும்.  அது எக்ஸ் பதிப்பகத்தால் மட்டுமே முடியும்.  எனவே நீங்கள் கொடுத்த வாக்கை வியாசனுக்காக மீறுங்கள்.  வியாசனுக்காக தர்மத்தை மீறுங்கள்.  இந்த இடத்தில் தர்மத்தை மீறுவதுதான் தர்மம் என்றேன்.

தொகுதிகள் எக்ஸ் பதிப்பகம் மூலம் வந்தன. 

ஆனால் கோண்டி இது எல்லாம் தன்னால்தான் நடந்தது என்று நம்புகிறார்.  ஆனால் புவனேஸ்வரிக்குத் தெரியும்.  தெரிந்தும்தான், ”கண்ணாயிரம் பெருமாள் அவருடைய புத்தகங்களைப் பதிப்பிக்க எங்களிடம் தருகிறாரே தவிர, அவருக்கும் இந்தப் பதிப்பகத்துக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று சொல்லிச் சொல்லி எங்களுக்கு மடுத்து விட்டது” என்று எழுதுகிறார்.  அந்தப் பதிவின் மற்ற பகுதிகளில் தெரியும் பகடி பற்றி Amazing humour sense என்று பின்னூட்டம் இடுகிறார் இன்னொரு எழுத்தாளர்!  புவனேஸ்வரியின் பதிவின் ஆரம்பத்தில் நடந்திருக்கும் கத்திக்குத்து பற்றி பின்னூட்டம் போட்ட எழுத்தாளருக்குக் கவலையே இல்லை!  காரணம், கத்திக்குத்து இன்னொருத்தனுக்குத்தானே விழுகிறது, நமக்கென்ன?

நாம், நம்முடைய என்ற வார்த்தைகள் எக்ஸ் பதிப்பகம் தொடங்கிய க்ஷணமே புவனேஸ்வரியிடம் எங்கள், உங்கள் என்று மாறியது பற்றிச் சொன்னேன் இல்லையா?

இதற்கு ஒரு பாரம்பரியக் கதை உண்டு.  யுதிர்ஷ்ட்ரனிடம் ஒரு சொத்துத் தகராறு வந்தது.  அண்ணன் தம்பிக்குள் சண்டை.  ஆனால் வித்தியாசமான சண்டை.  சொத்தைப் பிரித்துக் கொண்ட பிறகு தம்பியின் நிலத்தில் ஒரு தங்கப் புதையல் கிடைத்தது.  சொத்தைப் பிரித்துக் கொண்டாலும் தங்கப் புதையல் அண்ணனுக்குத்தான் சேர வேண்டும் என்கிறான் தம்பி.  இல்லை, தம்பியின் நிலத்தில் கிடைத்ததால் அது தம்பிக்குத்தான் உரியது என்கிறான் அண்ணன்.

யுதிர்ஷ்ட்ரனுக்கே புரியவில்லை.  தலை சுற்றியது.  ஐவரில் ஞானவானான சகாதேவனிடம் கேட்டான்.  நாளை வரச் சொல்லுங்கள் என்றான் சகாதேவன்.

சகோதரர்கள் சென்ற பிறகு என்ன தம்பி விசேஷம் என்று கேட்டான் யுதிர்ஷ்ட்ரன்.  நாளை சொல்கிறேன் என்றான் தம்பி.

மறுநாள் இரண்டு பேரும் அடிதடியோடும் வெட்டுக் குத்தோடும் வந்து சேர்ந்தார்கள்.  புதையல் எனக்குத்தான் என்றான் அண்ணன்.  என் நிலத்தில் கிடைத்ததால் புதையல் எனக்குத்தான் என்றான் தம்பி. 

புதையலைப் பாதியாய்ப் பிரித்துக் கொள்ளும்படி தன் தம்பியிடம் யோசனை கேட்டு நீதி வழங்கினான் யுதிர்ஷ்ட்ரன். 

இருவரும் போன பிறகு தம்பியைப் பார்த்தான் யுதிர்ஷ்ட்ரன்.  நேற்றோடு துவாபர யுகம் முடிந்து இன்று கலியுகம் தொடங்குகிறது.  அதனால்தான் ஒருநாள் பொறுக்கச் சொன்னேன் என்றான் சகாதேவன்.

அதே மாதிரிதான் எக்ஸ் பதிப்பகம் தொடங்கும் முதல் நாள் வரை நாம், நம்முடைய என்று இருந்த சொல்லாடல் எக்ஸ் பதிப்பகம் தொடங்கிய க்ஷணமே எங்கள், உங்கள் என்று மாறியது.   

சரி, இப்போது மீண்டும் பிராமணர் – அபிராமணர் பிரச்சினைக்கு வருவோம்.  நான் எதையும் பொதுமைப்படுத்தவில்லை.  என் அனுபவத்தை மட்டுமே உங்கள் முன் வைக்கிறேன்.   இதுவரை அ-பிராமணர் ஒருத்தர் கூட என் மீது கல்லெறிந்ததில்லை.  காரணம், பிராமணர்கள் சிலருக்கு இன்னமும் இருக்கும் அகங்காரம் என்று நினைக்கிறேன்.  உறுதியாகத் தெரியவில்லை.  இல்லாவிட்டால் என்னிடம் வந்து தியாகராஜா நாவலை நான் எப்படி எழுத வேண்டும் என்று ஒரு பொடியர் பதினைந்து நிமிடம் பாடம் எடுப்பாரா?  நான் கேட்டேனா?  கேட்டிருந்தால் ஒரு ஏழு வயதுச் சிறுவன் கூட எனக்குப் பாடம் எடுக்கலாம், நான் கை கட்டிக் கேட்கக் கூடிய அளவுக்கு அடக்கம் கொண்டவன்.

இப்போது கூடப் பாருங்கள்.  புவனேஸ்வரியின் மீது மிகுந்த கருணையுடன் இந்தக் கதையை இன்னும் ஒரு மாதம் கழித்துத்தான் என் தளத்தில் வெளியிடுவேன்.  ஏனென்றால், புவனேஸ்வரி இப்போது ஐரோப்பியப் பயணத்தில் இருக்கிறார்.  அவருக்கு இந்த நேரத்தில் நான் மன உளைச்சல் தர விரும்பவில்லை.  அவர் இந்தியா திரும்பிய பிறகே இந்தக் கதை வெளிவரும்.  இதை நான் அக்டோபர் பதினாறாம் தேதி எழுதிக்கொண்டிருக்கிறேன்.

ஆனால் புவனேஸ்வரியிடம் இந்தக் கருணை இல்லை.  அதனால்தான் மறுநாள் எனக்கு மிக முக்கியமான இலக்கிய நிகழ்ச்சி இருப்பது தெரிந்தும் அத்தனை வாய்ஸ் மெஸேஜ் அனுப்பி என்னை சீரழிக்க முடிவு செய்தார்.   

ஆனால் என்னிடம் கருணை உண்டு.  புவனேஸ்வரியின் ஐரோப்பியப் பயணத்தின்போது இந்தக் கதையை வெளியிட்டு அவருக்கு மன உளைச்சல் தர மாட்டேன்.  எந்த வகையிலும் தொந்தரவு செய்ய மாட்டேன்.  ஆனால் புவனேஸ்வரி எனக்குச் செய்தார் என்பதை அவருக்கு ஞாபகப்படுத்துகிறேன். 

இப்போதும் சொல்கிறேன்.  புவனேஸ்வரி என்னிடம் வருத்தம் தெரிவித்த பிறகு நான் அமைதியடைந்தேன்.  ஆனால் என் நண்பர் புவனேஸ்வரியாக மாறி புவனேஸ்வரி எனக்கு எப்படி எழுதியிருக்க வேண்டும் என்று எழுதிய கடிதமே என்னை இந்தக் கதையை எழுத வைத்தது. 

திரும்பவும் சொல்கிறேன்.  மீட்டிங்கில் இருந்தேன் என்றார் புவனேஸ்வரி.  இருபத்து நாலு மணி நேர மீட்டிங்கா அது? ஒரு ரெண்டு நிமிடம் அனுமதி வாங்கி எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருக்க வேண்டாமா?  என்னால் காயப்பட்டு என்னோடு பேசவே விருப்பப்படாத ஒருத்தரிடம் கொடுத்தா மெஸேஜ் அனுப்புவார்கள்?  அந்த மெஸேஜை நான் ஏழு ஜென்மாவிலும் மறக்க முடியுமா?  We have no problem publishing your books sir.  ஆஹா, புவனேஸ்வரிக்கு சரிவர பிஸினஸ் கூட செய்யத் தெரியவில்லையே?

தொடர்ந்து இப்படித்தான் என்னைப் பீச்சாங்கையால் ஒதுக்கி விடுகிறார் புவனேஸ்வரி.  இது என் சுய மரியாதைக்கு சவாலாக இருக்கிறது. 

இங்கே இன்னும் சில விஷயங்களை புவனேஸ்வரிக்கு ஞாபகப்படுத்துகிறேன்.  அவர் நினைக்கலாம்.  ’நாம் பெருமாளுக்கு ஃபோன் செய்து மன்னிப்புக் கேட்ட பிறகும் இப்படி என்னை – எங்களை – பொதுவெளியில் போட்டு அசிங்கப்படுத்துகிறாரே, இது எந்த வகையில் நியாயம்?’

ஏன் இந்தக் கதையை எழுதினேன் என்றால், என்னால் இன்னமும் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை.  புரிந்து கொள்ளவே முடியவில்லை.  என் புத்தகங்களை வெளியிடும் எக்ஸ் பதிப்பகத்தின் உரிமையாளர்களான புவனேஸ்வரிக்கும் கோண்டிக்கும் நான் ஏன் அப்படி ஒரு கடிதம் எழுதினேன்?  புவனேஸ்வரி ஃபேஸ்புக்கில் அவருடைய பக்கத்தில் கண்ணாயிரம் பெருமாள் தன்னுடைய பதிப்பகத்துக்கு எத்தனை இடைஞ்சலாக இருக்கிறார் என்று எழுதியதால்தானே எழுதினேன்? அதற்கு முன்பே கூட இசை விமர்சகர் பற்றி நான் எழுதியதைக் கண்டித்து புவனேஸ்வரி எனக்கு ஃபோன் செய்து “பொதுவெளியில் அவரை அசிங்கப்படுத்தி விட்டீர்கள்” என்று அவர் வழக்கப்படி குற்றம் சாட்டிய போது சொன்னார், “எங்களுடைய பெஸ்ட் செல்லர்ஸையெல்லாம் நீங்கள் கண்டபடி ப்ளாகில் எழுதி அசிங்கப்படுத்துகிறீர்கள். அவர்கள் தங்கள் புத்தகங்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகச் சொல்கிறார்கள்.  அதனால் பதிப்பகத்தின் பெயரையே மாற்றிக் கொள்ளலாமா என்று கூட யோசிக்கிறோம்.”

இதைக் கேட்ட பிறகுதான் நான் அப்படி ஒரு தனிப்பட்ட கடிதம் எழுதினேன்.  ’உங்களுக்குப் பிரச்சினை என்றால் வெளிப்படையாகச் சொல்லுங்கள், விலகிக் கொள்கிறேன்.  நான் யாருக்கும் பிரச்சினை கொடுக்க விரும்பாத மனிதன்’ என்பதே அதன் சாராம்சம்.  இஸ்லாமியர் வழக்கத்தில் ஹராம் என்பார்கள்.  ஒருத்தர் வீட்டில் அவருக்குப் பிடிக்காமல் தங்கினால் ஹராம். அழையா விருந்தாளி.  அதனால்தான் அப்படி வெளிப்படையாகக் கேட்டேன்.  புவனேஸ்வரி பொதுவெளியில் எழுதினார்.  என்னிடம் அதையே தொலைபேசியிலும் சொன்னார்.  நான் பொதுவெளியில் எழுதவில்லை.  புவனேஸ்வரிக்கும் கோண்டிக்கும் தனிப்பட்ட முறையில்தான் எழுதிக் கேட்டேன்.    

அதற்குத்தான் புவனேஸ்வரி பதிலே எழுதவில்லை.  மட்டுமல்லாமல், மளிகைக் கடை நடத்துவதற்கும் பதிப்பகம் நடத்துவதற்கும் வித்தியாசமே இருக்கக் கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தோடு வாழும் கோண்டியிடம் சொல்லி நோ ப்ராப்ளம் என்று தெரிவிக்கச் சொல்லியிருக்கிறார்.  என் மீது புவனேஸ்வரிக்கு இருக்கும் மரியாதையைப் பாருங்கள்!  அப்புறம் கூட பெருமாளுக்கு என்ன எழுதினீர்கள் என்று கோண்டியிடம் கேட்க முடியவில்லை.  எனக்கு ஒரு வார்த்தை எழுத முடியவில்லை.  ஃபேஸ்புக்கில் நான் உறவு முறிவு அறிவிப்பு போட்ட பிறகு வருகிறது தொலைபேசி அழைப்பு. 

ஒரு மளிகைக்கடை முதலாளி நோ ப்ராப்ளம் என்று எழுதலாம்.  ஒரு பதிப்பாளர் அப்படி எழுதலாமா?

நான் புரிந்து கொள்ள விரும்புகிறேன்.  ஏன் என்னைத் தொடர்ந்து அவமதிக்கிறீர்கள்?  இத்தனைக்கும் நான் உங்கள் மீது மிகுந்த வருத்தத்தில் இருந்தேன்.  புவனேஸ்வரிக்கு ஒரு கடிதம் என்று ஒரு கடிதம் எழுதி பொதுவெளியில் வெளியிட்டேன்.  பிறகு கொக்கரக்கோ எடுக்கச் சொன்னதால் அதை நீக்கினேன்.  ஏன் நீக்கச் சொன்னார் என்றால், நீங்கள் அவருக்கு அனுப்பிய வாய்ஸ் மெஸேஜில் என் கடிதத்தில் ஒரு வார்த்தையைக் கூட நீங்கள் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை என்றார்.  மீண்டும் மீண்டும் என் மீதுதான் குற்றச்சாட்டு. 

அந்தக் கடிதத்துக்குப் பிறகும் நீங்கள் என்னுடைய தனிப்பட்ட கடிதத்துக்கு ஒரு வார்த்தை பதில் எழுதாமல் உங்கள் பிஸினஸ் பார்ட்னரை விட்டு நோ ப்ராப்ளம் என்று எழுதச் சொன்னீர்கள் என்றால் என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?  மன்னிப்பு அல்ல பிரச்சினை.  என் கேள்விக்கு பதில் வேண்டும். 

இன்னொரு சம்பவத்தைச் சொல்கிறேன்.  இந்தியாவிலேயே நம்பர் ஒன் பதிப்பகம் அது.  அதன் உரிமையாளருக்கு நேற்று ஒரு மின்னஞ்சல் எழுதினேன்.  அவர் ஃப்ராங்ஃபர்ட் புத்தக விழாவில் இருக்கிறார்.  இரவு எட்டு மணிக்கு எழுதிய என் மின்னஞ்சலுக்கு நள்ளிரவில் பதில் எழுதியிருக்கிறார். அதிலும் நான் எழுதியது என்னுடைய ஒரு புத்தகப் பிரசுரம் பற்றியதுதான்.  ஆனால் உங்களுக்கு எழுதியதோ என் இலக்கிய வாழ்வின் அதி முக்கியமான கடிதம்.  நீங்களோ ‘நான் மீட்டிங்கில் இருந்தேன்’ என்கிறீர்கள்.  உங்கள் பிஸினஸ் பார்ட்னரோ என்னை செருப்பால் அடித்திருக்கிறார்.  என் கடிதத்தையும் அவர் பதிலையும் இருபது பேருக்கு அனுப்பினேன்.  இருபது பேருமே அது எனக்குக் கிடைத்த செருப்படி என்கிறார்கள்.  

கடைசியாக ஒன்று.  என் கவிதை நூல் எக்ஸ் பதிப்பகம் மூலம் வெளி வந்தது.  உங்களிடமிருந்தோ உங்கள் பிஸினஸ் பார்ட்னர் கோண்டியிடமிருந்தோ ஒரு வார்த்தை இல்லை.  ஃபோன் செய்து கேட்டேன். கோண்டி புத்தக விழாவில் இருக்கிறேன் என்றார்.  உங்களைக் கேட்டேன்.  உடல் நலம் சரியில்லை என்றீர்கள்.  பிறகு இருவரும் ஃபேஸ்புக்கில் செய்தி வெளியீட்டீர்கள்.  வெறும் அட்டைப் படம்.  விலை குறித்த விவரம். 

ஆனால் உங்கள் ஆஸ்தான எழுத்தாளரின் புத்தகத்துக்கோ ஒரே வான வேடிக்கை.  ஆரவாரம்.  நீங்கள் அந்தப் புத்தகத்துக்கு ஒரு மதிப்புரையே எழுதி விட்டீர்கள்.  இதோ அந்த மதிப்புரை:

“இந்த நாவலுக்குத் தொடங்கும் இடமும் கிடையாது, முடியும் இடமும் கிடையாது. அத்தியாயத்துக்கொரு காதல் வந்தாலும் இது காதல் கதையல்ல. தனது பதிநான்காவது வயதைக் கடக்கும் ஒரு சிறுவனின் ஓராண்டுக் கால அனுபவங்களின் ஊடாக, ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் வாழ்ந்த ஒரு குறிப்பிட்ட தலைமுறைப் பெண்களின் சரித்திரத்தைப் பேசுகிற நாவல் இது.

ஆசிரியரின் எழுத்தில் எப்போதும் ஊடாடும் நகைச்சுவை, அதன் உச்சத்தை இதில் கண்டிருக்கிறது.” 

நானும் என் கவிதைகளில் எந்த அளவுக்கு உச்சத்தைத் தொட்டிருக்கிறேன், எந்தெந்த உலக மகாகவிகளைத் தாண்டியிருக்கிறேன் என்று என் கவிதைத் தொகுப்பு பற்றி எத்தனையோ கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.  அதில் ஒரு நாலு வரியைக் கூட எடுத்துப் போட்டிருக்கலாம்.  அல்லது, அந்த நூலின் பின்னட்டைக் குறிப்பை (அது ஒரு கவிதை) எடுத்துக் கொடுத்திருக்கலாம். 

எழுத்தாளர்களுக்குள் பாரபட்சம் பார்க்கிறீர்கள்.  ஓரவஞ்சனை செய்கிறீர்கள்.  இது உங்கள் பிஸினஸுக்கு ஏற்றதல்ல.  இது பற்றிப் பல எழுத்தாளர்கள் என்னிடம் வருத்தம் தெரிவித்தார்கள்.  யாரும் உங்களிடம் சொல்ல மாட்டார்கள்.  நான்தான் எப்போதும் பலியாடு. 

இனிமேல் இது குறித்து ஒரு வார்த்தை எழுத மாட்டேன்.  என் புத்தகங்களை உங்கள் பதிப்பகத்துக்கே கொடுத்துக் கொண்டிருப்பேன், நீங்கள் போதும் என்று சொல்லும் வரை.  

கடைசியாக ஒரு வார்த்தை: இந்தக் கதையை நான் வெறுமனே என் கணினியில் எழுத்துகளாகத் தட்டச்சு செய்யவில்லை.  என் குருதியினால் எழுதினேன் என்று புரிந்து கொள்ளுங்கள்…

2, சத்தியத்தின் பாதை

இந்தக் கதையின் மேற்கண்ட அத்தியாயத்தை எனக்கு மிக நெருங்கிய நண்பர்கள் ஐவருக்கு அனுப்பினேன்.  முதல் இருவர் அற்புதம் என்றார்கள்.  திரும்பத் திரும்பப் படித்ததாகச் சொன்னார்கள்.  இன்னொரு நண்பர் – அமெரிக்காவில் வசிப்பவர் – புவனேஸ்வரி எப்படி கடிதம் எழுதியிருந்திருக்க வேண்டும் என்ற கடிதத்தை அனுப்பியவர் – ”பொதுவாக நீங்கள் அடித்தால் அது நாக் அவ்ட்டாக இருக்கும்.  ஆனால் இதில் நீங்கள் அந்த அளவு கடுமை காட்டவில்லை.  அது நல்லதுதான்.  அதைத்தான் நானும் விரும்பினேன்.  நீங்கள் புவனேஸ்வரியை காயப்படுத்த விரும்பவில்லை என்று நன்றாகவே தெரிகிறது.  அது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது.”

இன்னும் இருவர்.  ஒருவர் பெண்.  அவரோடு அதிகம் பேசுவதில்லை.  அந்தக் காலத்துப் பேனா நட்பு மாதிரி.  இப்போது அதை வாட்ஸப் நட்பு என அழைக்கலாம்.  அவர் வாட்ஸப்பில் வாய்ஸ் மெஸேஜ் அனுப்பினார்.  ஆண் நண்பர் என்னைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினார்.  என்ன ஆச்சரியம் என்றால் இருவரும் ஒரே வார்த்தையைச் சொன்னார்கள்.  இருவருக்கும் ஒருவரை ஒருவர் தெரியாது.  ”இது கதை அல்ல; கடிதம்.  அதுவும் அன்புக் கடிதம்.”  இருவரும் சொன்ன வார்த்தைகள்.  தோழி ஆங்கிலத்தில் சொன்னார்.  தோழர் தமிழில்.  நண்பரிடம் சொன்னேன், “அசிங்கம், அசிங்கம், ஒரு  நட்பை இப்படிக் கொச்சைப் படுத்தாதீர்கள்.” 

நண்பர் சொன்னார், “சேச்சே, நான் உதாரணம்தான் சொன்னேன்.  வேண்டுமானால் புனித உதாரணம் தருகிறேன்.  ஒரு சவலைப் பிள்ளை தன் அம்மாவிடம் சென்று “நீ என்னை கவனிப்பதே இல்லை” என்று அழுது புலம்புவது போல் உள்ளது உங்கள் கடிதம்.  நீங்கள் இந்த த்வனியில் ஒருபோதும் எழுதியதில்லை.  மிஷ்கின் பற்றி எழுதியதில் கூட தீ பறந்தது.  இதிலோ உங்களைப் பார்த்துப் பரிதாபமே ஏற்படுகிறது.  இந்தக் கடிதத்தை வெளியிட்டால் உங்கள் இமேஜ் பாதிக்கப்படும்.  ஏனென்றால், நீங்கள் இன்று நிற்கும் இடமே வேறு. 

இன்னொரு உதாரணமும் தருகிறேன்.  செல்வப் பெருந்தகை என்பவர் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்தார்.  பிறகு காங்கிரஸுக்குச் சென்று விட்டார்.  இப்போது திமுக, காங்கிரஸ், சிறுத்தை, கம்யூனிஸ்ட் எல்லாம் கூட்டணி.  இந்தத் தருணத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு பேட்டி கொடுத்து, ‘செல்வப் பெருந்தகை கம்யூனிஸ்டுகளையே பாராட்டிக் கொண்டிருக்கிறார், என்னைப் பற்றி ஒரு வார்த்தை பேசுவதில்லை” என்று புலம்பினால் எப்படி தமாஷாக இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது நீங்கள் வருத்தப்படுவதும்.  நீங்கள் ஒருபோதும் இப்படித் தலைகுனிந்து நான் பார்த்தது இல்லை. 

இன்னொரு விஷயம்.  நீங்கள்தான் புவனேஸ்வரியை உங்கள் மாணவி உங்கள் மாணவி என்று மூச்சுக்கு முந்நூறு முறை சொல்கிறீர்கள்.  ஆனால் அவர் ஒருமுறைகூட கண்ணாயிரம் பெருமாள் என் ஆசிரியர் என்று சொன்னதில்லை.   காரணம், உங்கள் பெயரைச் சொன்னால் அவரது பதிப்பக வியாபாரம் பாதிக்கப்படும். 

உங்களுக்கு முகஸ்துதி பிடிக்காது, மனதில் பட்டதை மட்டுமே பேச வேண்டும் என்று நீங்கள் கற்பித்திருப்பதாலும், அதை நீங்கள் பின்பற்றுவதாலும் மட்டுமே இப்படி வெளிப்படையாகப் பேசுகிறேன்.  உங்களால் ஒப்புக்கொள்ள முடியாவிட்டாலும் நான் வெளிப்படையாகப் பேசுவதை நீங்கள் விரும்புவீர்கள் என்பதால் இப்படிப் பேசுகிறேன்.

நம்முடைய வாசகர் வட்டத்தைச் சேர்ந்த நண்பர்களைத் தவிர வேறு யாரும் உங்களை பொதுவெளியில் நண்பர் என்று சொல்லிக் கொள்வதோ என் ஆசிரியர் என்று சொல்வதோ சாத்தியமே இல்லை. ஏனென்றால், உங்களை இங்கே எல்லோரும் சன்னி லியோன் மாதிரிதான் நினைக்கிறார்கள்.  எங்களுக்குத் தெரியும், நீங்கள் யார் என்று.   ஆனால் பொதுவெளியில் எழுத பயந்து கொண்டு உங்களிடமும் தனிப்பட்ட நண்பர்களிடமும் ’கண்ணாயிரம் பெருமாள் என் ஆசிரியர்’ என்று சொல்பவர்கள் உங்கள் மாணவரே அல்ல.  ஒன்றிரண்டு பேர் பொதுவெளியிலும் அதைச் சொல்கிறார்கள்தான்.  ஆனால் இவர்கள் அனைவரும் – அதாவது, உங்களை ‘ஆசிரியர்’ என்று சொல்பவர்கள் – உங்களை அவர்களுக்கு ஏற்றாற்போல் வார்த்தெடுக்கவே  முயற்சிக்கிறார்கள்.  புவனேஸ்வரியின் பிரச்சினை இதுதான்.  இந்த வார்த்தெடுக்கும் முயற்சிக்கு எதிராகத்தான் நீங்கள் ஏழு ஆண்டுகளாக மல்லுக்கு நின்று கொண்டிருக்கிறீர்கள்.  அதை வைத்து ஒரு நாவலையும் எழுதினீர்கள். 

உங்களிடமிருந்து கற்றுக் கொண்ட நாங்கள் – உங்கள் சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் – ஒருபோதும் உங்களை ஆசிரியர் என்று சொல்ல மாட்டோம்.  நீங்கள் எங்கள் தோழன். ஆசிரியன்தான் செத்து விட்டானே? Not only the author, the teacher is also dead.  ரொலாந் பார்த் சொல்வது அதைத்தானே?  ஏனென்றால், ஆசிரியன் – மாணவன் என்கிற போது அங்கே அதிகாரம் வந்து விடுகிறது.  உங்கள் முதல் பாடமே அதிகாரத்தை ஒழித்துக் கட்டு என்பதுதான் இல்லையா?

இன்னொரு விஷயம்.  பெண்களின் மனதில் புகுந்து எக்ஸ் நாவலை எழுதிய உங்களால் பெண்களிடம் உள்ள ஒரு குணாம்சத்தைக் கண்டு கொள்ள முடியவில்லையா?  எந்தப் பெண்ணுமே ஆணின் கண்களோடு, ஆணின் மனதோடு ஒரு விஷயத்தைக் கூட பார்ப்பதில்லை, உணர்வதில்லை.  அப்படியான ஒரு பெண்ணைக் கூட இதுவரை நான் கண்டதில்லை.  உயிரைக் கூட தருவார்கள்.  ஆனால் நம்முடைய கண்களின் மூலமாக அவர்களால் பார்க்கவே முடியாது.  அது அவர்களின் மரபணு குணாம்சம் என்று நினைக்கிறேன்.  ஆனால் நாம் மட்டும் இருபத்து நான்கு மணி நேரமும் அவர்களின் மனதிலிருந்து பார்க்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.  பார்க்கவில்லையானால் டிப்ரஷனில் விழுந்து விடுவார்கள்.  அந்த எழவையும் நாம்தான் கவனித்தாக வேண்டும். 

நீங்கள் சொன்ன ஒரு உதாரணத்தையே சொல்கிறேன்.  ஒரு ஆண்டுக்கு முன்பு என்று நினைக்கிறேன்.  புவனேஸ்வரியின் வார்ப்பட முயற்சியில் நீங்கள் திமிறியதால் இருவருக்கும் முட்டிக் கொண்டது.  இனி உங்களோடு பேச்சே சாத்தியமில்லை என்று குட்பை சொல்லி விட்டார் புவனேஸ்வரி.  மூன்று மாதமோ ஆறு மாதமோ கழித்து ஜெயமோகனின் ப்ளாகில் புவனேஸ்வரியின் கடிதம் ஒன்று.

ஏதோ ஒரு பழைய புத்தகம்.  மிகப் பழைய புத்தகம்.  அதை எக்ஸ் பதிப்பகத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.  ”இந்தப் புத்தகம் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள், அறிந்து கொள்கிறோம்” என்று மிக விநயமாக ஜெயமோகனிடம் கேட்டிருந்தார் புவனேஸ்வரி.  ஒரு குருவிடம் ஒரு சிஷ்யை பாடம் கேட்கும் த்வனி வெளிப்படையாகவே தெரிந்தது.  நாம் அப்போது கோவாவில் இருந்தோம். 

உங்களுக்கு நெஞ்சு வலி வந்து விட்டது. 

காரணம் கேட்ட போது மறுநாள் சொன்னீர்கள்.  அந்தப் பழைய புத்தகத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்தியதே நீங்கள்தான்.  அந்தப் புத்தகத்தை அரும்பாடுபட்டு கிடைக்கச் செய்த நண்பரும் உங்கள் தூண்டுதலில்தான் செய்தார். 

அந்தப் புத்தகம் வெளிவந்ததே உங்களுக்குத் தெரியாது.  புவனேஸ்வரி உங்களிடம் அதைத் தெரிவிக்கவில்லை.  அவர்தான் உங்களிடம் பேச மாட்டாரே?  கோண்டியை விட்டு விடுவோம்.  அவரது உலகில் கண்ணாயிரம் பெருமாள் என்ற நபரே கிடையாது. 

கோண்டியை ஃபோனில் அழைத்து இதையெல்லாம் சொல்லி புவனேஸ்வரியை விமர்சிக்கிறீர்கள்.  கோண்டியோ திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்.  புவனேஸ்வரி செய்ததில் என்ன தவறு சார்?

ஒரு கட்டத்தில் சலித்துப் போன நீங்கள் பேச்சை நிறுத்திக் கொள்கிறீர்கள்.

அடுத்த காட்சிதான் சுவாரசியமானது. 

புவனேஸ்வரி உங்களை அழைத்து தான் செய்ததில் எந்தத் தவறும் இல்லையென்றும், நீங்கள் கோண்டியை அழைத்துத் தன்னைத் திட்டியதுதான் கொடுஞ்செயல் என்றும் உங்களிடம் விளக்கி, நீங்கள் உங்கள் கொடுஞ்செயலை உணர்ந்து புவனேஸ்வரியிடம் மன்னிப்புக் கேட்கிறீர்கள். 

இதில் கண்ணுக்குப் புலனாகாத நடிகர் கோண்டி.  புவனேஸ்வரி தயங்கியிருக்கிறார்.  கண்ணாயிரம் பெருமாளோடு சில மாதங்களாகப் பேசுவதில்லை.  இப்போது இதைப் பார்த்தால் கோபப்படுவார் என்று சொல்லியிருக்கிறார்.  கோண்டியின் நோக்கமே மித்ர பேதம்தானே?  இதில் ஒரு தவறும் இல்லை என்று மூளைச்சலவை நடந்திருக்கிறது.

புவனேஸ்வரி என்ன, கோண்டியின் தலையாட்டி பொம்மையா?  இல்லை.  ஏற்கனவே நான் சொன்னபடி பெண்களால் ஒருபோதும் ஆணின் கோணத்திலிருந்து பார்க்கவே முடியாது.

ஆனால், புவனேஸ்வரிக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது, நீங்கள் கோபப்படுவீர்கள் என்று.  ஆனாலும் பிரச்சினை இல்லை.  நீங்கள் கோபப்பட்டால் அதற்கு மேல் பத்து மடங்கு எதிராளி கோபப்பட்டால் நீங்கள் மன்னிப்புத்தானே கேட்பீர்கள்?  அந்தப் பாதுகாப்பு இருக்கிறது.  கவலை வேண்டாம்.

ஆனால் புவனேஸ்வரி உங்களிடம் கேட்ட கேள்விதான் கதையை சுவாரசியப்படுத்துகிறது. 

ஜெயமோகனின் நெருங்கிய நண்பரான செல்வேந்திரன் மட்டும் உங்களுக்கு – கண்ணாயிரம் பெருமாளுக்குக் – கடிதம் எழுதவில்லையா?

அதே கேள்வியை வந்து நீங்கள் என்னிடம் கேட்டு புவனேஸ்வரியை நியாயப்படுத்தி, நீங்கள் கேட்ட மன்னிப்பையும் நியாயப்படுத்தினீர்கள்.

ஏன் பெருமாள், நீங்கள் யோசிக்கவே மாட்டீர்களா?  ஃப்ரெஞ்ச் தத்துவத்தில் மட்டும்தான் உங்கள் மூளை வேலை செய்யுமா?  செல்வேந்திரன் என்ன ஜெயமோகனுடன் சண்டை போட்டு, இனி உங்கள் முகத்திலேயே முழிக்க மாட்டேன் என்று சபதம் போட்டு விட்டு வந்தா உங்களுக்குக் கடிதம் எழுதுகிறார்? செல்வேந்திரனுக்கும், உங்களுக்குக் கடிதம் எழுதும் ஜெ.வின் நண்பர்களுக்கும் ஜெயமோகன்தான் என்றுமே ஆசான்.  நீங்கள் ஆசானின் நண்பர்.  அது தவிர, செல்வேந்திரன் உங்களை சூஃபி என்று எழுதியிருக்கிறார்.  எப்படி எழுத முடியும்?  உங்களுடைய ஒரு புத்தகத்தைப் படித்து விட்டு அந்த முடிவுக்கு ஒருவர் வர முடியுமா?  உங்களுடைய முக்கியமான புத்தகங்களை அவர் படித்திருக்க வேண்டும்.  இல்லையா?   அப்படி ஜெயமோகனின் எந்தப் புத்தகத்தையாவது புவனேஸ்வரி படித்திருக்கிறாரா?  கோண்டி எழுதலாம்.  அவர் ஜெயமோகனின் வாசகர் அல்ல.  பக்தர். அதுதான் நியாயமும் கூட.   

ஆனால் இதே மாதிரியான ஒரு சூழ்நிலையில் கொக்கரக்கோ என்ன செய்தார்?  அவருக்கும் உங்களுக்கும் ஏதோ மனஸ்தாபம்.  ஆறு மாதங்களுக்கு மேலாக நீங்கள் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. அப்போது கொக்கரக்கோ தன்னுடைய ஒரு புத்தகத்தை வெளியிடுகிறார்.  ஜெயமோகனையும் உங்களையும் அழைத்து அந்த வெளியீட்டை நடத்துகிறார்.  நீங்களும் ஜெயமோகனும் ஒரே மேடையில் அமர்ந்து பேசியது அதுதான் முதல்.  கொக்கரக்கோவும் நீங்களும் பேசிக் கொள்வதில்லை.  உடனே அவர் ஜெயமோகனை அழைத்து அந்த விழாவை நடத்தவில்லையே?  வித்தியாசம் புரிகிறதா? 

சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன் பெருமாள், புவனேஸ்வரி உங்களது நெடுநாளைய நண்பர்.  கோண்டியோடும் சில ஆண்டுகள் நீங்கள் நெருக்கமாகப் பழகியிருக்கிறீர்கள்.  அவரும் நண்பர்.  அவ்வளவுதான்.  இருவரும் என்றுமே உங்களது மாணவர்களாக ஆவது சாத்தியமே இல்லை.  கோண்டி பற்றி எனக்கு அதிகம் தெரியாது.  ஆனால் புவனேஸ்வரியின் இயங்குதளமே வேறு. 

சிந்தனைப் பள்ளி என்பதை விட்டு விட்டு, லௌகீகமாகப் பார்த்தால், புவனேஸ்வரி எல்லோருடனும் நட்பாக இருக்க விழைகிறார்.  விரும்புகிறார்.  இலக்கிய உலகில் அது சாத்தியமே இல்லை.  எல்லோரிடமும் கெட்ட பெயர்தான் எடுக்க வேண்டி வரும். 

அதனால் நீங்கள் இனிமேல் யாரையும் இவர் என் மாணவி, இவர் என் மாணவர் என்று சொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

உங்களுடைய இந்தக் கடிதத்தை வெளியிடாதீர்கள்.  உங்கள் மதிப்பு இதனால் குறையும் என்பதில் எனக்குத் துளியும் சந்தேகமில்லை.

***

நண்பர் பேசியதில் குறிப்பிடப்பட்டிருக்கும் எழுத்தாளர் கிருத்திகா.   கிருத்திகா அவர் காலத்தில் எழுத்தாளர்களின் எழுத்தாளர் எனக் கருதப்பட்டவர்.  அல்லது, அப்படி ஒரு தோற்றம் எனக்குள் ஏற்பட்டிருக்கலாம்.  அவர் எழுத்து என்னைக் கொஞ்சமும் ஈர்க்கவில்லை.  அதனால் அவரை நான் ’முன்னோடி எழுத்தாளர்கள்’ என்ற என்னுடைய நூலில் சேர்க்கவில்லை.  ஆனால் சி.சு. செல்லப்பாவின் ”எழுத்து” காலத்திய முன்னோடி எழுத்தாளர்களின் அத்தனை எழுத்தையும் தமிழ்நாட்டில் ஒரே ஒரு பதிப்பகம் பதிப்பு உரிமை வாங்கி வைத்திருப்பதால், அந்தப் பட்டியலில் விடுபட்டிருந்த கிருத்திகாவை மட்டுமாவது எக்ஸ் பதிப்பகம் வெளியிட வேண்டும் என்று விரும்பினேன். 

புவனேஸ்வரியிடம் சொன்னேன்.  புவனேஸ்வரிக்கு கிருத்திகா என்ற பெயரை அறிமுகப்படுத்தியது அடியேன்தான்.  நான் சொல்லித்தான் கிருத்திகா என்ற பெயரையே அவர் கேள்விப்படுகிறார். 

அதற்குப் பிறகு புவனேஸ்வரி எனக்கு குட்பை சொல்கிறார்.  மூன்று மாதம் ஆகிறது.  ஜெயமோகனின் தளத்தில் புவனேஸ்வரியின் கடிதம் வெளியாகிறது. 

அந்தக் கடிதம் இங்கே:

அன்புள்ள ஜெ,

கோவைப் புத்தகக் கண்காட்சியில் நேற்று எக்ஸ் அரங்கத்துக்கு நீங்கள் வந்திருந்தபோது கிருத்திகாவின் படைப்புகளை நாங்கள் வெளியிட்டிருப்பதைக் கண்டு அவரைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தீர்கள். ஆனால் பலர் தொடர்ச்சியாக உங்களிடம் பேச வந்ததால் உங்கள் பேச்சு தடைபட்டுப்போயிற்று. மேலோட்டமாக அவர் யார் என்பது தெரிந்தாலும் அவருடைய படைப்புகளைப் பற்றி உங்கள் கருத்துகளைத் தெரிந்து கொள்ள ஆசை.

நன்றி!

புவனேஸ்வரி

ஜூலை 30, 2023.

மேற்கண்ட கடிதத்தில் என்னைப் பற்றிய பிரஸ்தாபமே இல்லை என்பதை கவனியுங்கள். ”மேலோட்டமாக அவர் யார் என்பது தெரிந்தாலும் அவருடைய படைப்புகளைப் பற்றி உங்கள் கருத்துகளைத் தெரிந்து கொள்ள ஆசை.”

கிருத்திகாவின் பெயரை அறிமுகப்படுத்தியதே நான்.  மறுபதிப்பு செய்யுங்கள் எனத் தூண்டியது நான்.  ஆனால் அது பற்றி எனக்கு ஒரு தகவல் கூட இல்லை.  கிருத்திகாவின் நூல்கள் எக்ஸ் பதிப்பகம் மூலமாக வெளிவந்திருப்பதை நான் அறிந்து கொண்டதே ஜெயமோகன் தளத்திலிருந்துதான்.  வாஸ்தவத்தில் எனக்கு ஒரு கடிதம் எழுதி, கிருத்திகாவின் நூல்கள் வந்து விட்டன, உங்களுக்குப் பிரதி அனுப்பவா என புவனேஸ்வரி கேட்டிருக்க வேண்டும்.  அல்லது, ஜெயமோகனுக்கு எழுதும்போதாவது எனக்கு ஒரு தகவல் கடிதம் எழுதியிருக்கலாம். 

இதே மனோபாவம்தான் என்னுடைய கடைசிக் கடிதத்தை கோண்டியிடம் கொடுத்து பதில் எழுதச் சொன்னது வரை புவனேஸ்வரியிடம் தொடர்கிறது அதனால்தான் என் வாசகர் வட்ட நண்பர்கள் புவனேஸ்வரியிடமிருந்து விலகி நிற்கிறார்கள்.

புவனேஸ்வரி ஜெயமோகனுக்கு எழுதிய கடிதத்தின் லிங்க்கை சுமார் நூறு பேர் எனக்கு அனுப்பியிருந்தார்கள்.  இதிலிருந்து என்ன தெரிகிறது?  அந்த அளவுக்கு என் நண்பர்கள் மற்றும் என் வாசகர்கள் புவனேஸ்வரியின் மீது வருத்தத்தில் இருக்கிறார்கள்.

ஏன் என்ற கேள்வி இங்கே முக்கியமானது.

புவனேஸ்வரி என்னைத் தொடர்ந்து அவமதித்துக் கொண்டிருப்பதை அவர்கள் கவனிக்கிறார்கள்.  கண்ணாயிரம் பெருமாள் இப்படி ஒருவரால் அவமதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது அவர்களை கோபப்படுத்துகிறது.  அதுதான் காரணம். 

மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறேன்.  ஜெயமோகனுக்குக் கடிதம் எழுதியதால் கண்ணாயிரம் பெருமாள் கோபித்துக் கொண்டார் என்றே இந்தப் பிரச்சினையை புவனேஸ்வரியும் கோண்டியும் புரிந்து கொண்டார்கள். 

தமிழின் மிக முக்கியமான ஒரு எழுத்தாளருக்கு ஒரு பதிப்பாளர் கடிதம் எழுதுவதில் எனக்கு என்னய்யா பிரச்சினை?  நான் பரிந்துரை செய்த புத்தகம் வெளிவந்த தகவலையே நான் ஜெ. தளத்திலிருந்து தெரிந்து கொண்டேன் என்பதுதானே பிரச்சினை? 

ஜெயமோகனும் நானும் இரண்டு வேறுபட்ட சிந்தனைப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள்.  தொடங்கியவர்கள் என்று கூட சொல்லலாம்.  தத்துவம் மற்றும் சிந்தனை சார்ந்து எங்களுக்குள் கடுமையான கருத்து மோதல்களும் விவாதங்களும் நடந்திருக்கின்றன.  ஆனால் இலக்கியம் தெரியாத மரமண்டைகள்தான் இதை “எழுத்தாளர்களுக்குள் சண்டை” என்று புரிந்து வைத்திருக்கின்றனர். 

மற்றபடி ஜெயமோகனும் நானும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பதை என் நண்பர்களும் அவர் நண்பர்களும் அறிவார்கள்.  ஒருமுறை “நான் இறந்து போனால் ஜெயமோகனால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் ஒருசில தினங்களாவது மனப்பிறழ்வில் மூழ்குவார்” என்று எழுதியிருக்கிறேன்.

ஒரு முறை நான் ஜப்பான் சென்றிருந்த போது ஜெயமோகனின் ஜப்பானிய நண்பரிடம் “சாருவுக்கு ஜப்பானிய உணவும் ஜப்பானிய மதுவும் மிகவும் பிடித்தமானது, அவரை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்” என்று வாட்ஸப் செய்தி அனுப்பியிருந்ததை அந்த நண்பர் எனக்குக் காண்பித்தார்.  அப்படிப்பட்ட ஒரு நண்பருக்கு புவனேஸ்வரி கடிதம் எழுதினால் கோபித்துக் கொள்வேனா?  கோபத்தின் காரணம் அது அல்ல. 

சரி, ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்ப சூழ்நிலையில் கடிதம் எழுத நேர்ந்திருந்தாலும் புத்தகம் வந்த விவரத்தை நான் ஜெயமோகனின் தளத்திலிருந்து தெரிந்து கொண்டிருந்திருக்கக் கூடாது. 

ஆக, எனக்கு நிரந்தரமாக குட்பை சொல்லி விட்டு, ஜெயமோகனுக்குக் கடிதம் எழுதினால், அதுவும் நான் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தில், எனக்கு எப்படி இருக்கும்?

நம்பிக்கைத் துரோகம் என்று தோன்றியது.  இரண்டு தினங்கள் நெஞ்சு வலியால் துடித்தேன். 

கவனியுங்கள்.  புவனேஸ்வரியின் செயல்பாடுகளில் காண்பது ஒரே விதமான patten. அவர் மொழிபெயர்த்த அல்பேனிய நாவலா?  ஃபேஸ்புக்கில் தெரிந்து கொள்.  பெருமாள் பரிந்துரை செய்த புத்தகமா?  ஜெயமோகன் தளத்தில் தெரிந்து கொள்.  புத்தகங்களைத் தொடர்ந்து போடுவீர்களா என்ற சந்தேகமா?  மளிகைக்கடை போல் பதிப்பகம் நடத்த விரும்பும் கோண்டியிடம் பதில் போடச் சொல்லியிருக்கிறேன்.  எனக்கு இம்பார்ட்டெண்ட் மீட்டிங் இருக்கிறது.  ஒரே pattern.  மாற்றமே இல்லை. 

ஆனால், புவனேஸ்வரியும் கோண்டியும் நான் கோபப்பட்டதே தவறு என என்னிடம் நிறுவியதால் நான் புவனேஸ்வரியிடம் மன்னிப்புக் கேட்க நேர்ந்தது.    

இந்த இடத்தில்தான் செல்வேந்திரன் எனக்கு எழுதும் கடிதத்துக்கும் புவனேஸ்வரி ஜெ.வுக்கு எழுதிய கடிதத்துக்குமான வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.  ஜெ.வுக்கு எழுதியது தவறல்ல.  எனக்கு குட்பை சொல்லி விட்ட நிலையில், எனக்குத் தகவலே கொடுக்காமல், ஜெ.வுக்கு எழுதியதே தவறு.  மற்றபடி நானே ஜெயமோகனுக்குக் கடிதம் எழுதுபவன்தான்.  க்ரேடில் ஆஃப் ஃபில்த் பற்றி நான் அவருக்கு எழுதிய கடிதமும், அதற்கு அவர் எழுதிய அற்புதமான பதிலும் நண்பர்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.  பிச்சைக்காரன் கூட அவ்வப்போது ஜெ.வுக்குக் கடிதம் எழுதுபவர்தான்.  கணினி வருவதற்கு முன்பு ஜெ.வும் நானும் ஒருவருக்கொருவர் அஞ்சல் மூலமாகக் காகிதக் கடிதம் எழுதிக்கொண்டிருந்தோம்.  என் மகனின் திருமணத்துக்குக் கூட வரவே முடியாத ஒரு சூழலில் இருந்த ஜெயமோகன் எப்படியோ பெருமுயற்சி எடுத்து வந்து சேர்ந்தார். 

இத்தனையும் ஏன் சொல்கிறேன் என்றால், ஏதோ புவனேஸ்வரி ஜெயமோகனுக்குக் கடிதம் எழுதி விட்டதால் கண்ணாயிரம் பெருமாள் கோபித்துக் கொண்டார் என்று புவனேஸ்வரியும் கோண்டியும் இதைப் புரிந்து கொண்டதால்தான். 

யாரும் யாருடைய சுதந்திரத்திலும் குறுக்கிடக் கூடாது என்பதை ஒரு மதக் கோட்பாட்டைப் போல் பின்பற்றி வருபவன் நான்.  எனவே புவனேஸ்வரியின் சுதந்திரத்தில் நான் ஒருபோதும் குறுக்கிட மாட்டேன்.  அதிலும் என்னிடம் குட்பை சொல்லி விட்டுப் பிரிந்த ஒருவரின் சுதந்திரத்திலா குறுக்கிடுவேன்?

இதை வாசிக்கும் நண்பர்களிடம் நான் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்.  இந்தப் பிரச்சினையில் நான் புவனேஸ்வரி மீது வருத்தப்பட்டது நியாயமா, இல்லையா?

நியாயம் இல்லையெனில் சொல்லுங்கள், நான் என் கருத்தை மாற்றிக் கொள்கிறேன்.

ஏனென்றால், நான் சொல்வதையே புரிந்து கொள்ளாமல் புவனேஸ்வரியும் கோண்டியும் தாங்கள் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.  கடைசியில் நான்தான் மன்னிப்புக் கேட்டேன். 

மீண்டும் இப்போது நண்பர் பேசிய விஷயங்களைத் தொடுவோம்.   அநேகமாக அவர் சொன்ன எல்லாவற்றிலும் உடன்படுகிறேன்.  இரண்டு விஷயங்களைத் தவிர.  அதற்கு மட்டும் என் மறுப்பைத் தெரிவிக்கிறேன்.

முதலில், நானே போய் நட்புக்கு மன்றாடுகிறேன் என்ற புகார். 

இல்லை. 

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்.

இதுவே என் வாழ்வின் தாரக மந்திரம்.

என் முதல் தேவை பணம்.  பயணத்துக்காக.  பணம் இல்லை.  வருத்தம் இல்லை.  ஏமாற்றம் இல்லை. 

இரண்டாவது விருப்பம், என் எழுத்து சர்வதேச அளவில் செல்ல வேண்டும்.  காரணம், நான் ஹருகி முராகாமியை விட சிறந்த எழுத்தாளன்.

அது நடக்கவில்லை.  வருத்தம் இல்லை.  ஏமாற்றம் இல்லை.

ஆனாலும் எல்லா எழுத்தாளர்களையும் ஆட்டுவிக்கும் ஓர் உணர்வு, தனிமை.

அதிலிருந்து ஒரே ஒரு மனிதன் என்னைக் காப்பாற்றுகிறார்.  அவர், அரியக்குடி ராமானுஜ அய்யங்கார்.  அவர் அளவுக்குக் குரல் இனிமையும் உணர்வெழுச்சியும் ராக ஆலாபனையில் ஆழமும் கொண்ட ஒருவரை என்னால் காண முடியவில்லை.  இவர் தவிர செம்மங்குடி சீனிவாச ஐயர், டாக்டர் எஸ். ராமனாதன், முசிறி சுப்ரமணிய ஐயர் போன்றவர்களும் என் தனிமையுணர்வைப் போக்குவதில் பெரும் பங்கு உண்டு.  என் ரசனையின் அடிப்படைகள், குரல் இனிமை, ஆலாபனையில் ஆழம். 

என் கவலையில்லாத் தன்மைக்கு இன்னொரு முக்கியக் காரணம், எனக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும் ஏதோ கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி என்னை அதிலிருந்து மீட்டெடுத்து விடுகிறது.  சமீபத்தில் ஒரு பெரிய பணப் பிரச்சினை.  சம்பந்தமே இல்லாமல் ஒரு நண்பர் வந்து என்னைக் காப்பாற்றி விட்டார்.  கொஞ்சமும் எதிர்பாராமல் நடந்த ஒரு அதிசயம் அது.  இப்படித்தான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. 

ஆகவே, என் அடிப்படைப் பிரச்சினைகளுக்கே கவலைப்படாத நானா போய் நட்புக்கு மன்றாடுவேன்?  நண்பர்களைக் காயப்படுத்த விரும்ப மாட்டேன்.  அதனால் மன்றாடுவது போல் தோன்றலாம்.  அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது.

ஆனால், எனக்கு நடக்கும் எல்லா விஷயங்களையும் எழுதிக்கொண்டிருக்கிறேன்.  அதனால் என் இமேஜ் பாதிக்கப்படுவது பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ள மாட்டேன். 

கற்பனையாக ஒன்றைச் சொல்கிறேன்.  இந்தக் கதையில் புவனேஸ்வரி என்ற பெயருக்குப் பதிலாக வளன் அரசு என்று வைத்துக் கொள்ளுங்கள்.  வளன் என்ன செய்வான்?  என்னைத் தொடர்பு கொண்டு, “அப்பா, இந்த அளவுக்கு உங்களைப் புண்படுத்தியிருக்கிறேனா?  அறியாமல் செய்த பிழை, என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.  இதிலிருந்து நான் பாடம் கற்றுக் கொள்கிறேன்.  இனி இப்படி நடக்கவே நடக்காது.  அதற்கு நான் உறுதியளிக்கிறேன்” என்று சொல்வான்.

இப்படி நடந்திருக்கிறது.  அவன் செய்த சில காரியங்கள் – பத்து ஆண்டுகளுக்கு முன்னால் – எனக்குத் துன்பமாக இருந்ததால் – இத்தனைக்கும் அவன் அதையெல்லாம் என் மீதான அதீதமான அன்பினால் செய்தது – அதைக் கண்டித்து, திட்டி, அவன் பெயரையே போட்டு என்னுடைய ஒரு நாவலில் எழுதினேன். 

உடனே அவன் “பொதுவெளியில் என்னை அசிங்கப்படுத்தி விட்டீர்கள், இனி உங்களோடு எந்தப் பேச்சு வார்த்தையும் இல்லை” என்று குட்பை சொல்லி விட்டு ஓடி விடவில்லை.  ஜெயமோகனுக்குக் கடிதம் எழுதி, இனிமேல் நீங்கள் எனக்கு சொல்லிக் கொடுங்கள் என்று கட்சி மாறவில்லை.  மாறாக, இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டேன் அப்பா என்றான்.  அதன் காரணமாக அவன் இப்போது வந்து அடைந்திருக்கும் இடம் நமக்குத் தெரியும்.

இன்னொரு அதிசயம்.  உங்கள் யாராலுமே நம்ப முடியாத அதிசயம்.  என் மனைவி என்னுடைய ஒரு நாவலைப் படித்தால் என்னை விவாகரத்து செய்து விடுவாள் என்றே முழுமையாக நம்பினேன்.  எதேச்சையாக என்னுடைய கணினியில் இருந்த அந்த நாவலை முழுமையாகப் படித்து விட்டாள்.  நான் அப்போது பவானி சென்றிருந்தேன்.  திரும்பியதும் நான் நினைத்த எதுவும் நடக்கவில்லை.  வருத்தம் தெரிவித்தாள்.  எந்த உயிருக்கும் கடுகத்தனை கூட இம்சை செய்து விடக் கூடாது என்பதை தர்மமாக நினைத்து வாழும் நானா உனக்கு இத்தனை இம்சை கொடுத்திருக்கிறேன் என்று வருந்தினாள்.  அது மட்டுமல்ல.  தியாகராஜா நாவலுக்காக நான் ராப்பகலாகப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  அதனால் சற்று களைப்பாகத் தெரிந்தேன்.  அதைப் பார்த்து விட்டு, அந்த நாவலை தான் படித்து விட்டதால்தான் நான் மன உளைச்சலில் இருக்கிறேன் என்று நினைத்து இரண்டு நாட்கள் என்னிடம் வந்து வந்து “ஏன் களைப்பாக இருக்கிறாய்?  நான் உன்னைத் துன்பப்படுத்தி விட்டேனா?” என்று திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தாள். 

என்னிடமும் ஒரு நிபந்தனை விதித்தாள்.  இனிமேல் என்னைப் பற்றி எழுதக் கூடாது என்றாள்.  சம்மதித்தேன்.  இப்போது என் ப்ளாகின் தீவிர வாசகி ஆகி விட்டாள். அதனால்தான் நானும் கவிதை எழுதுவதை முழுசாக நிறுத்தி விட்டேன்.

அவள் என்னை சகித்துக் கொண்டதன் அடிப்படைக் காரணம், விஷயங்களை என் காலணியில் நின்று பார்க்க முயற்சித்தாள்.  புரிந்து கொண்டாள்.

ஆனால் புவனேஸ்வரியினால் என்னுடைய அந்தக் குறிப்பிட்ட நாவலை வாசிக்கவே முடியவில்லை.  அவரால் கண்ணாயிரம் பெருமாளின் இடத்திலிருந்து பார்க்கவே விருப்பமில்லை.  முடியவும் இல்லை.  அதேபோல் என் ப்ளாகையும் படிக்க முடியவில்லை.  ஆனால் என் மனைவி இப்போது என் தீவிர வாசகியாகி விட்டாள். 

இதிலிருந்து நான் புரிந்து கொண்டது என்னவென்றால், வாழ்வில் மகிழ்ச்சியைக் காண்பவர்களை எந்தத் துன்பமும் எதுவும் செய்ய முடியாது என்பதைத்தான். 

இறுதியாக, இத்தனை நடந்த பிறகு, இனிமேல் எக்ஸ் பதிப்பகத்துடன் உணர்வு ரீதியான ஒட்டுறவு வைத்துக் கொள்ள மாட்டேன்.  ஆனால், அவர்கள் விரும்பும் வரை என் நூல்கள் அந்தப் பதிப்பகத்தின் மூலமாகவே வரும்.  அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.  எக்ஸ் பதிப்பகத்தின் பெஸ்ட் செல்லர் ஒருவர் என் நெருங்கிய நண்பர்.  ஃபேஸ்புக்கில் புவனேஸ்வரியின் குறிப்பைப் பார்த்ததும் தன் புத்தகங்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளப் போகிறேன் என்று சொன்னார்.  அதைத் தடுத்து விட்டேன்.  புவனேஸ்வரி என்னைப் பீச்சாங்கையால் தள்ளி விடுவதை விட்டுவிட்டுப் பார்த்தால் புவனேஸ்வரியும் கோண்டியும் அடிப்படையில் மிகுந்த நேர்மையாளர்கள்.  அவர்கள் தங்கள் எழுத்தாளர்களுக்கு உரிய ராயல்டியைக் கொடுக்கும் விதத்தைப் பார்த்தாலே அது தெரியும்.  நண்பரும் புரிந்து கொண்டார்.

கடைசியாக ஒன்று.  என் கடிதத்துக்கு புவனேஸ்வரி மட்டும் கோண்டியை விட்டு எழுதச் சொல்லாமல் தானே ஒரு கடிதம் எழுதியிருந்தால் இந்தக் கதையை எழுதியிருக்க வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது.  ஆனால் அது அத்தனை சுலபமான காரியம் அல்ல.  மனிதர்களின் மனோபாவம் மாற வேண்டும்.  அவ்வளவுதான். 

இதையும் ‘கண்ணாயிரம் பெருமாள் என்னைப் பொதுவெளியில் போட்டு அசிங்கப்படுத்தி விட்டார்’ என எடுத்துக் கொண்டால் பிறகு மீட்சியே இல்லை. 

3. ஹௌலேபெக்

ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் எக்ஸ் பதிப்பகத்தின் பெஸ்ட் செல்லர் எழுத்தாளரான சங்கர் ராமும் நானும் மேடையில் அருகருகே அமர்ந்திருந்தோம்.  என்ன படித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றோ அந்த மாதிரி என்னவோ ஒன்றைக் கேட்டார் பெஸ்ட் செல்லர். நான் மிஷல் வெல்பெக்கின் Atomised என்றேன்.  கண்ணிமைக்கும் நேரத்தில் அது வெல்பெக் இல்லை, ஹௌலேபெக் என்றார் பெஸ்ட் செல்லர். 

எனக்கு செருப்பால் அடி வாங்கியது போல் இருந்தது என்று சொன்னால் பலரும் என்னைத் திட்டுகிறார்கள். 

விளக்குகிறேன்.  நான் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக தமிழ் எழுத்தாளர்கள் அந்நிய மொழி எழுத்தாளர்களின் பெயர்களில் குளறுபடி பண்ணுவது பற்றி விமர்சித்து எழுதிக்கொண்டிருக்கிறேன்.  அந்த விஷயத்தில் நான் ஒரு பேர் போன ஆள்.

ஒரு உதாரணம் தருகிறேன்.  ஒரு இலக்கிய மேடையில் பாரதி மணி பேசிக்கொண்டிருக்கிறார்.  பெரிய அரங்கம் அது.  நான் கடைசி வரிசையில் அமர்ந்திருந்தேன்.  நான் இருந்தது பாரதி மணிக்குத் தெரியாது.

பேச்சின் இடையே அவர் போர்ஹே என்றார்.  உடனே அவருக்கு என் ஞாபகம் வந்து விட்டது.  ஆ, கண்ணாயிரம் பெருமாள் இங்கே இருந்தால் என்னைத் திட்டுவார், இங்கே வந்திருக்கிறாரா என்று தெரியவில்லை.  அவர் போர்ஹேஸ் என்றுதான் சொல்ல வேண்டும் என்பார் என்றார் பாரதி மணி.  இப்படி இலக்கியத்துக்கு வெளியே உள்ள ஒரு நாடக/சினிமா நடிகருக்குக் கூட பெயர் உச்சரிப்புக்கும் எனக்கும் உள்ள தொடர்பு தெரிகிறது. 

யாரோதான் ஆரம்பித்து வைத்தார்கள், போர்ஹே என்று.  கடைசி எழுத்தை உச்சரிக்கக் கூடாது என்ற விதி ஃப்ரெஞ்சில்தான் உண்டு.  அதுவும் எல்லா வார்த்தைகளுக்கும் வராது.  ஆனால் இங்கே உள்ள அரைகுறைகள் அதை எடுத்து போர்ஹேஸில் போட்டது.  ஸ்பானிஷ் மொழியின் அழகே அந்த மொழியில் (தமிழைப் போலவே) எல்லா எழுத்தையும் உச்சரிக்க வேண்டும் என்பதுதான்.  ஃப்ரெஞ்சிலோ ஆங்கிலத்திலோ இல்லாத ஒரு அழகு அது.  அது பற்றி ஸ்பானிஷ் மொழிக்காரர்களுக்குப் பெருமையும் உண்டு.  அங்கே போய் கை வைக்கிறான் தமிழ் எழுத்தாளன்.  போர்ஹேஸைக் கொலை செய்து போர்ஹே என்கிறான்.

சீலேயை நீங்கள் சிலி என்று சொல்லலாம்.  அது அனுமதிக்கப்பட்டது.  அது ஆங்கில உச்சரிப்பு.  ஆனால் போர்ஹேஸை போர்ஹே என்று சொன்னால் கட்டி வைத்து உதைக்க வேண்டும்.

இப்படியெல்லாம் நான் ஐம்பது ஆண்டுகளாகப் போராடி வருவது பெஸ்ட் செல்லர் சங்கர் ராமுக்குத் தெரியாதா, என்ன?  என்னிடம் வந்து ஹௌலேபெக் என்கிறார். 

எனக்கும் ஃப்ரெஞ்சுக்கும் உள்ள தொடர்பு பற்றியும் ஐம்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கிறேன்.  ஃப்ரெஞ்ச் சிந்தனையாளர்களைத் தமிழ்ச் சூழலில் அறிமுகப்படுத்தியதில் எனக்குப் பெரும் பங்கு உண்டு.  ஃபூக்கோவின் பிரேதத்தைத் தமிழ்நாட்டுத் தெருக்களில் இழுத்துக்கொண்டிருக்கிறார் கண்ணாயிரம் பெருமாள் என்று கூட எழுதும் அளவுக்கு என் பெயர் ஃப்ரெஞ்ச் சிந்தனையாளர்களோடு சம்பந்தப்பட்டிருக்கிறது.  பல முறை ”நான் தமிழில் எழுதிக்கொண்டிருக்கும் ஃப்ரெஞ்ச் எழுத்தாளன்” என்று சொல்லி வருகிறேன்.  இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய எக்ஸ் நாவலிலேயே ரொலாந் பார்த்தை கதாபாத்திரமாக்கியவன் நான்.  முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய என் முதல் நாவலின் பெயரே ஃப்ரெஞ்ச் மொழியிலிருந்து எடுத்ததுதான்.

என்னிடம் வந்து உச்சரிப்பு சொல்லிக் கொடுக்கிறார் பெஸ்ட் செல்லர்.  எனக்குக் கோபம் வருமா, வராதா?  இந்தத் திமிர்தான் உங்களுக்கெல்லாம் எங்கிருந்து வருகிறது என்று கேட்கிறேன்.  சங்கர் ராம் ஒரு பிராமணர் என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது.  இல்லை, பிராமணர் என்று சொன்னால் அதில் அய்யங்காரும் வந்து விடும்.  அய்யங்கார்களெல்லாம் ரொம்பவும் சூட்டிகை.  இப்படியெல்லாம் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ள மாட்டார்கள்.  அய்யர்கள்தான் இம்மாதிரி வேலைகளைச் செய்வது. 

ஒரு உதாரணம்.  ஒரு கணிதப் பேராசிரியர் Annals of Mathematics, Journal of the American Mathematical Society (JAMS) போன்ற ஆய்வுப் பத்திரிகைகளில் கணிதம் பற்றி ஆய்வுக் கட்டுரைகள் எழுதுபவர்.  அவரிடம் போய் ப்ளஸ் டூவில் கணிதத்தில் ஃபெயில் ஆன ஒருத்தர் போய் அவர் பேச்சில் திருத்தம் சொன்னால் எப்படி இருக்கும்?  அவர் வேண்டுமானால் சிரித்து விட்டுப் போய் விடுவார்.  என்னால் அப்படிப் போக முடியாது.  ஏனென்றால், இந்த அளவு நுண்ணுணர்வு கூட இல்லாதவர்கள்தான் இங்கே பெஸ்ட் செல்லர் எழுத்தாளர்களாகக் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். 

நடமாடுங்கள்.  எனக்கு ஆட்சேபணையே இல்லை.  என்னிடம் வந்து ஏன் ஐயா டார்ச்சர் கொடுக்கிறீர்கள்?

மேலும் ஒன்று.  உச்சரிப்புக்கு என்று ஒரு தேவதை இருந்தால் அது நான்தான்.  என்னைப் போல் தமிழை உச்சரிக்க தமிழ்நாட்டில் இன்னும் ஒரே ஒருவர்தான் இருக்கிறார்.  அவர் வைரமுத்து.  நான் மேடையில் நின்று கவிதை படித்தால் கவிதையின் கடவுள் வந்து கவிதை படிப்பது போல் இருக்கும்.

நான் சும்மா ’விட்டு அடிக்கிறேன்’ என்று உங்களுக்குத் தோன்றினால் யூட்யூபில் கிடைத்தால் என் கவிதை வாசிப்புகளைக் கேட்டுப் பாருங்கள்.  மனுஷ்ய புத்திரன், நேசமித்ரன், மற்றும் என் கவிதைகளை அப்படி நான் வாசித்திருக்கிறேன்.

ஒருமுறை எக்ஸ் நாவலிலுள்ள கவிதைகளை ஒரு விழாவில் வாசித்தேன்.  சி. மோகன் கொஞ்சம் தாமதமாக வந்தார்.  ஆனாலும் நான் வாசித்துக் கொண்டிருந்த போது வந்து விட்டார்.  முடிந்ததும் ஏன் தாமதம் என்றேன்.

நீங்கள் வாசிக்கும்போது தேன் ஆறு பொங்கி ஓடி எங்கு பார்த்தாலும் நடக்க முடியாமல் வழுக்குகிறது; நான் அதில் விழுந்து விழுந்து எழுந்து வந்ததால் தாமதம் என்றார்.  பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் அது.

அவர் விளையாட்டாகச் சொன்னாலும் அது சீரியஸாகவும் சொன்னதுதான் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். 

தமிழில் ழ எழுத்தை உச்சரிப்பது எப்படி சிரமமோ அதேபோல் சிரமமானது ஃப்ரெஞ்சின் R எழுத்தும்.  அதை உச்சரிக்கும்போது அதற்கு முன்னால் கொஞ்சமாக வாயிலிருந்து ஹெச் ஒலி வர வேண்டும்.  பாரிஸ் அல்ல, பாஹ்ரி.  அதற்காக ஒரேயடியாக ஹெச்சை அழுத்தக் கூடாது.  சில யூட்யூபர்கள் பாரிஸ் நகரின் தெருவில் செல்லும் ஃப்ரெஞ்சுக்காரர்களை அழைத்து ஆர் வரும் வார்த்தைகளை சொல்லச் சொல்லி அதை விடியோ எடுப்பார்கள்.  இரண்டு எழுத்து என்பதால் பாஹ்ரியைக் கூட சரியாகச் சொல்லி விடுவார்கள்.  ஆனால் ஒரே வார்த்தையில் இரண்டு ஆர் வந்தால் தொலைந்தது.  உளறிக் கொட்டுவார்கள். (உ-ம்: Contrepartie, நாலு ஆருக்கு Réfrigérateur) ஆனால் எத்தனை ஆர் வந்தாலும் நான் மிகச் சரியாக உச்சரிப்பேன்.

சரி, ஸ்பானிஷ் எனக்குப் படிக்கத் தெரியும்.  பேசத் தெரியாது.  பேசினால் புரிந்து கொள்ள முடியும். 

ஆனால் ஸ்பானிஷை நான் படித்தால் என் உருவத்தைப் பார்க்காமல் குரலை மட்டும் கேட்டால் ஸ்பானிஷ்தான் என் தாய்மொழி என்று சொல்லி விடுவார்கள்.  அந்த அளவுக்குத் துல்லியமாக ஸ்பானிஷ் படிப்பேன்.

என்னிடம் வந்து வெல்பெக்கை ஹௌலேபெக் என்று மாற்றி சொல்லித் தருகிறார் பெஸ்ட் செல்லர். 

இது அதிகாரத்தின் வெளிப்பாடு.  உன்னை விட எனக்கு நன்றாகத் தெரியும் என்ற அகங்காரத்தின் வெளிப்பாடு.  அது கூடத் தவறு அல்ல.  ஆனால் எதுவுமே தெரியாமல் உளறக் கூடாது அல்லவா?  நான் ஃப்ரெஞ்சில் ஆறு சான்றிதழ் படிப்புகளையும் ஏன் முடித்திருக்கக் கூடாது?  வாய்ப்பு இருக்கிறதுதானே?  சராசரி லும்பன்கள் இப்படி இருந்தால் பிரச்சினை இல்லை.  எழுத்தாளர்களே இப்படி இருப்பதால்தான் இப்படிப் பொதுவெளியில் போட்டு அசிங்கப்படுத்துகிறேன். 

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு என் நண்பர்கள் அனைவரும் சங்கர் ராம் பற்றிப் பேச்சு வரும்போதெல்லாம் ஹௌலேபெக் என்றே அழைக்கத் தொடங்கி விட்டார்கள். 

ஓ, சங்கர் ராம் ஏன் ஹௌலேபெக் என்று சொல்கிறார் என்று சொல்ல மறந்து விட்டேன்.  மிஷல் வெல்பெக்கின் ஸ்பெல்லிங்: Michel Houellebecq!  

4.  Finale!

பாரதம் மாதிரி இது தொடர்ந்து கொண்டே போகும் போலிருக்கிறது. 

மகேஷை என் வாசகர் வட்ட நண்பர்கள் யாருக்கும் தெரியாது.  ஆனால் என் நெருங்கிய நண்பர்.  குடிப் பழக்கத்தை நிறுத்தி விட்டதால் நானும் அவரும் குடித்ததே இல்லை.  இன்னொரு காரணம், நான் சென்னையில் குடிப்பதில்லை.  அவரும் என்னோடு வெளியூர் வந்ததில்லை.  ஆனாலும் மாதம் ஒருமுறை மதிய உணவுக்கு சந்தித்துக் கொள்வோம். அவர் மலையாளி என்றாலும் சைவம்.  ஆனாலும் பெரும்பாலும் என்னை அசைவ உணவு விடுதிகளுக்குத்தான் அழைத்துச் செல்வார்.   எல்லாமே எனக்குப் பிடித்த உணவாகவே இருக்கும்.  ஜப்பான், தாய்லாந்து, மத்திய கிழக்கு நாடுகளின் உணவு.  ஒருநாள் என்னை ஒரு பிரபலமான சைவ உணவகத்துக்கு அழைத்துச் சென்றார்.  அடையாறில் உள்ள ஹம்சா.  அப்போது நான் சாந்தோமில் இருந்தேன்.

உணவகத்தை நடத்துபவர் அவர் நண்பர் என்பதால் அங்கே தயாரிக்கப்படும் அத்தனை வகையும் வந்தன.  துரதிர்ஷ்டவசமாக எனக்கு எதுவுமே பிடிக்கவில்லை.  எதுவுமே உப்பு சப்பு இல்லாமல் இருந்தன.   சொன்னேன்.  அதை மறுநாள் என் தளத்தில் எழுதவும் செய்தேன்.

மகேஷ் என்னை ஃபோனில் அழைத்து ஹஹ்ஹஹ்ஹா என்று சிரித்து விட்டு, அடுத்த முறை உங்களுக்குப் பிடித்த மாதிரி ஒரு உணவகம் செல்வோம் என்றார். 

அவர் ஒன்றும் “என்னைப் பொதுவெளியில் போட்டு அசிங்கப்படுத்தி விட்டீர்கள்” என்று பத்து நிமிடம் ஓத்தாம் பாட்டு விடவில்லை.  அடுத்தடுத்த முறை எனக்குப் பிடித்த உணவகங்களே சென்றோம்.

ஹம்சாவில் சாப்பிடும்போதே இந்த உணவு  என் மனைவிக்கு ரொம்பவும் பிடிக்கும், அவளை இங்கே அடிக்கடி அழைத்து வர வேண்டும் என்றும் சொன்னேன். 

சில மாதங்களில் நாங்கள் சாந்தோமிலிருந்து வீடு மாற்றிய போது எங்கள் வீடு அந்த ஹம்சா உணவகத்துக்கு நேர் எதிரே அமைந்திருந்ததைக் கண்டேன்.  நான் நினைத்தது போலவே ஹம்சா உணவு என் மனைவிக்கு மிகவும் பிடித்திருந்தது.  அவளுக்கு ஒத்துக் கொள்ளவும் செய்தது.  விலைதான் மற்ற இடங்களை விட மூன்று மடங்கு அதிகம். 

இது ஒரு சம்பவம்.

அடுத்த சம்பவத்தை இணைய தளத்தில் முன்பு எழுதியபடி அப்படியே தருகிறேன். 

”ஒருநாள் கோண்டி மற்றும் புவனேஸ்வரியுடன் நிர்வாணா என்ற உணவகத்துக்கு மதிய உணவுக்காகச் சென்றிருந்தேன். இருவரையும் சந்தித்து, இருவரோடும் உணவு உண்டு ஒரு ஆண்டு இருக்கும் என நினைக்கிறேன். சவேரா ஓட்டலில் உள்ள மால்குடி உணவகம் செல்லலாம் என்ற முடிவில் இருந்தோம். மால்குடியில் மதுவுக்கு அனுமதி உண்டு.  மால்குடி சென்றால் இரண்டு கிளாஸ் வைன் அருந்தலாம் என்று நினைத்தேன். இரண்டு கிளாஸ் அருந்தினால் வீட்டில் தெரியாது. அதற்கு மேல் ஒரு ஸ்பூன் உள்ளே போனால் கூட வீட்டுக்குத் தெரிந்து விடும். வீட்டுக்குத் தெரிந்தால் கார்த்திக் சுப்பராஜின் மஹான் படத்தில் வருவது போல் ஆகி விடும். அட்டகாசமான அந்தப் படம் ஏன் ஓடவில்லை என்று தெரியவில்லை. ஆனால் இரண்டு கிளாஸ் மட்டும் என்றால் வீட்டில் தெரியாது.

போகும் வழியில் கோண்டி நிர்வாணா போகலாம் என்றார். சென்னையில் ஆகச் சிறந்த சைவ உணவகம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கோண்டியும் அதன் காரணமாகத்தான் சவேராவை மாற்றினார். பொதுவாக என் பழக்கம் என்னவென்றால், இதிலெல்லாம் என் கருத்தையே தெரிவிப்பதில்லை. ஏனென்றால், எனக்கென்று இதிலெல்லாம் கருத்தே இருப்பதில்லை. சவேரா என்றால் சவேரா. நிர்வாணா என்றால் நிர்வாணா. க்ரீம் செண்டர் என்றால் க்ரீம் செண்டர். சரவண பவன் என்றால் மட்டுமே மனநிலை பாதிக்கப்பட்டவனாக மாறி விடுவேன்.

ஆனால் பாருங்கள், சென்னையில் இரண்டு இடங்களைத் தவிர வேறு எங்குமே சைவ உணவு நன்றாக இருப்பதில்லை. ஒரு இடத்தில் ஒரு சாப்பாடு நாலாயிரம் ரூபாய். பார்க் ஷெரட்டன். இன்னொரு இடம் தி. நகர் பாட்டி வீடு. அங்கே ஆயிரம் ரூபாய். பாட்டி வீட்டுச் சாப்பாடு பிரமாதமாக இருக்கும் என்றாலும் அந்த நேரத்தில் அது என் ஞாபகத்தில் வரவில்லை. வந்திருந்தாலும் சென்றிருக்க முடியாது. புவனேஸ்வரிக்கு மாலையில் ஒரு நடன நிகழ்ச்சி இருந்தது. அவரே ஆடுகிறார் என்பதால் அடிக்கடி அபிநயம் பிடித்தபடி இருந்தார். உலகில் உள்ள எல்லா பெண்களுமே இப்படித்தான் வினோதமான ஜீவிகளாக இருப்பதால் பெண்கள் விஷயத்தில் நான் ஆச்சரியப்படுவதையே நிறுத்தி விட்டேன்.

இப்படியாக நிர்வாணா போனோம். எனக்கு சைவ உணவும் அசைவம் அளவுக்குப் பிடிக்கும். ஒரு முள்ளங்கி சாம்பார், அல்லது, சௌசௌ, அல்லது பூசணிக் காய் சாம்பார், கத்தரிக்காய் காரக் குழம்பு, தக்காளி ரசம், பாகல் பிட்ளை, இன்னும் நாலைந்து காய்கறிகள், ஆவக்காய் ஊறுகாய், நீர் மோர் எல்லாம் இருந்தால் ஜமாய்த்து விடுவேன். இல்லாவிட்டால், வட இந்திய ஸ்டைல். இந்த நிர்வாணாவில் எல்லாமே ஒரு மாதிரி மையமாக இருந்தது. அங்கேயும் இல்லை. இங்கேயும் இல்லை. உப்பு, புளிப்பு, காரம் எதுவுமே இல்லை. எல்லாமே சப்பென்று இருந்தது. சரி, இனிமேல் இங்கே வர வேண்டாம் என்று நினைத்துக் கொண்டேன்.

வெளியே வந்த பிறகு கொஞ்சம் இங்கே வாங்க சார் என்றார் கோண்டி. நிர்வாணாவுக்குப் பின்னால் ஒரு மளிகைக்கடை மாதிரி இடத்தில் இருபது வகை பொடி, இருபது வகை ஊறுகாய் என்று அமர்க்களமாக இருந்தது. எனக்குப் பிடித்த பூண்டு ஊறுகாய், இட்லி மிளகாப் பொடி, மாகானிக் கிழங்கு ஊறுகாய், மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ் என்று ஏராளமாக வாங்கிக் கொடுத்தார்.

இருபத்தைந்து வயதில் மாகானிக் கிழங்கு ஊறுகாய் சாப்பிட்டிருக்கிறேன். பிறகு அவ்வப்போது என் மனைவி போடுவாள். அவள் போடாத ஊறுகாயே இல்லை. அவள் ஒரு ஊறுகாய் நிபுணர். இது தவிர நான் நல்லவிதமான மாகானிக் கிழங்கு ஊறுகாயே சாப்பிட்டதில்லை. இப்போதுதான் நிர்வாணா கடையில் சாப்பிட்டேன். உலகத் தரம். இதுவரை நான் சாப்பிட்ட மாகானிக் கிழங்கு ஊறுகாயிலேயே இதுதான் முதல் தரம். மாகானிக் கிழங்கு ஊறுகாய் போடுவது மிகவும் கடினம். ஒன்று, கிழங்கு முற்றினதாக இருக்கும். அப்படி இருக்கக் கூடாது. அல்லது, மோரில் உப்பு அதிகமாகி விடும். இந்த நிர்வாணா மாகானிக் கிழங்கு ஊறுகாய் எந்த விதத்திலும் சோடை போகவில்லை. அற்புதமாகத் தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த ஊறுகாயை அ-பிராமணர்களால் சாப்பிட முடியாது. கரப்பான் பூச்சி நாற்றம் வருவதாகச் சொல்வார்கள். பிராமணர்களில் சிலரே அப்படிச் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள பிராமணர், கிறிஸ்தவராக மாறிய பிராமணர் போல மாகானிக் கிழங்கு ஊறுகாய் பிடிக்காத பிராமணரையும் ஒரு தனிப் பிரிவில் சேர்க்க வேண்டியதுதான்.

மாகானிக் கிழங்கு ஊறுகாய் சாப்பிடாத மனிதர்கள் சாபம் வாங்கியவர்களே ஆவர்.”

இந்தக் கதையில் என்ன பிரச்சினை?  நிர்வாணா சாப்பாடு எனக்குப் பிடிக்கவில்லை என்பதைப் பதிவு செய்தேன்.  அதே சமயத்தில் அங்கே கிடைக்கும் ஊறுகாய் வகைகளைப் பற்றி ஒரு பத்தி பாராட்டி எழுதியிருக்கிறேன். 

இதற்கு புவனேஸ்வரியிடமிருந்து கிடைத்தது பாருங்கள் ஒரு ஓத்தாம் பாட்டு! “கோண்டி எத்தனை ஆசை ஆசையாக அங்கே உங்களை அழைத்துப் போனார்? உங்களுக்காக எவ்வளவு செலவு செய்கிறார்? அவரைப் போய் இப்படிப் பொதுவெளியில் போட்டு அசிங்கப்படுத்தினால் உங்களோடு யார் பழகுவார்கள்?  தனிமை தனிமை என்கிறீர்கள்.  நீங்கள் கடைசி வரை தனிமையிலேயே வாழ வேண்டியதுதான்.  ஒருத்தர் கூட உங்கள் பக்கம் நெருங்க மாட்டார்கள்.  ஜெயமோகனைப் பாருங்கள்.  அவர் நண்பர்களை எப்படி ஆதூரத்துடன் அரவணைத்துக் கொள்கிறார்?  அவர் நடந்தால் அவர் கூட இருபது பேர் நடக்கிறார்கள். உங்களிடமோ ஒருத்தர் கூட இல்லை.  கோண்டி மாதிரி ஒருவர் நெருங்கி வந்தாலும் இப்படிப் பொதுவெளியில் போட்டு அசிங்கப்படுத்தி விடுகிறீர்கள்.  அவர் எவ்வளவு தூரம் வருத்தப்பட்டிருப்பார்? இது நியாயமா?  தர்மமா?”

இப்படியே ஒரு பதினைந்து நிமிடம். 

அடப்பாவிகளா!  அது என்ன கோண்டி நடத்தும் ஓட்டலா?  அப்படியிருந்தால் நான் அப்படி எழுதியிருக்க மாட்டேன்.  ஏனென்றால், அவர் தயாரிக்கும் படங்கள், டிவி சீரியல்கள் எது பற்றியும் நான் ஒரு வார்த்தை கூட இதுவரை விமர்சித்து எழுதியதே இல்லை.  கோடிக்கணக்காகப் பணம் போட்டு எடுக்கிறார்.  என் நண்பர்.  அதை நான் எப்படி விமர்சிக்க முடியும் என்ற அறவுணர்வுதான் காரணம்.  ஆனால் யாரோ ஒருத்தர் நடத்தும் உணவகத்தை விமர்சித்தால் கோண்டிக்கு என்ன பிரச்சினை?

இப்படியேதான் என் எழுத்தை முன்வைத்து எனக்குப் பழி வந்து கொண்டே இருந்தது. 

எல்லோரையும் திட்டுகிறேன் என்பதுதான் பழி. 

இந்தத் திட்டு விஷயம் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும்.  அஜிதன் திருமணத்துக்குச் சென்றிருந்தேன்.  அங்கே என்னைப் பார்த்த கௌதம் மேனன் கை கொடுத்து விட்டு “இப்போது என்னை என்ன சார் திட்டியிருக்கீங்க?” என்று கேட்டார்.  சிரித்து விட்டுப் போய் விட்டேன்.

ஒரு பொது இடத்தில் ஒரு நடிகையைப் பார்த்தேன்.  முகமன் சொன்னார். அவர் ஒரு தீவிர இலக்கிய வாசகி.  தி. ஜானகிராமன் பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருப்பதாகச் சொன்னேன்.  “அவரை என்னான்னு திட்டியிருக்கீங்க?” என்றார்.  சிரித்துக் கொண்டேன். 

அவர் கேட்டதன் காரணம், கமல்ஹாசனின் ஒரு படத்தைக் கடுமையாக விமர்சித்து நான் ஒரு கட்டுரை எழுதியதுதான்.  கமல் எவ்வளவு வருத்தப்பட்டிருப்பார் என்று சொல்லி என்னை ஒரு பத்து நிமிடம் திட்டினார் நடிகை. அது நடந்து பல ஆண்டுகள் இருக்கும்.  அதை இன்னமும் மனதில் வைத்திருக்கிறார்.

என் நண்பர் ஒருவரின் புதல்வனை அவனுடைய பத்து வயதிலிருந்து எனக்குத் தெரியும்.  பதினேழு வயதில் கல்லூரிப் படிப்புக்கு வெளியூர் போய் விட்டான்.  ஐந்து ஆண்டுகள் கழித்துப் பார்த்தேன்.  இருபத்திரண்டு வயது.  இடையில் சந்திக்கவில்லை.  கொஞ்ச நேரம் பேசி விட்டுக் கிளம்பும் போது, “அங்கிள், தயவுசெய்து என்னைத் திட்டி எதுவும் எழுதி விடாதீர்கள்” என்றான்.  எனக்கு செருப்பால் அடி வாங்கியது போல் இருந்தது.  அடப்பாவி, என் எழுத்தில் ஒரு அட்சரம் கூடப் படித்ததில்லை.  என் நண்பரின் மகன், அவ்வளவுதான்.  அவன் அப்படிச் சொல்கிறான்.  ஏன்டா, வர்றவன் போறவனையெல்லாம் திட்டி எழுதுவதுதான் என் வேலையாடா என்று நினைத்துக் கொண்டேன்.  சொல்லவில்லை. 

சமீபத்தில் பாருங்கள்.  ஒரு நெருங்கிய நண்பர்.  ஐந்து ஆண்டுகள் கழித்து எதேச்சையாக சந்திக்க நேர்ந்தது.  “என்ன சார், இப்படி இளைத்துப் போய் விட்டீர்கள்?” என்றார்.  அது உண்மைதான்.  நிஜமாகவே இளைத்துத்தான் போயிருந்தேன்.  ”பார்த்தாலே தெரிகிறது, அதனால் கேட்டேன், நாளைக்கே என்னைத் திட்டி எழுதி விடாதீர்கள்” என்றார்.

திரும்பவும் செருப்படி.  ”என்ன ஷுகரா சார், இப்படி இளைத்து விட்டீர்கள்?” என்று கேட்டால்தான் திட்டி எழுதுவேன். 

ஆனாலும் திட்டித்தான் எழுதினேன்.  இப்படி அனாவசியமாக என்னை ரவுடி போல் சித்தரித்ததற்காக. 

இதைப் போன்றதுதான் புவனேஸ்வரி சொல்லும் குற்றச்சாட்டும்.  பொதுவெளியில் போட்டு அசிங்கப்படுத்துகிறீர்கள்.

அது அசிங்கப்படுத்துவது அல்ல.  அது ஒரு துப்புரவுப் பணி.  மனிதர்களின் அழுக்கைத் தூய்மைப்படுத்துகிறேன்.

வளன் அரசுவை பெயர் போட்டுத்தான் திட்டினேன்.

அது பாடம் என்று எடுத்துக் கொண்டான்.  இப்போது அவன் எங்கே இருக்கிறான்?  யூதாஸ் என்ற அவனுடைய நாவல் சர்வதேசத் தரம் வாய்ந்தது என்று எழுதினேன்.  அந்த இடத்தில் இருக்கிறான் வளன். 

பின்குறிப்புகள்:

இந்தக் கதையைப் படித்த ஸ்ரீராம் பின்வருமாறு ஒரு குறிப்பை அனுப்பினார்:

முழுதும் படித்தேன்.  Very emotional.

Warm hugs. Much love.

உங்கள் ஐம்பது வருட எழுத்தின் செய்தி என்ன என்று இந்தக் கதையைப் படிக்கும் எவரும் புரிந்து கொள்ளலாம்.

அது சக உயிரின் மேல் தீரா அன்பும் கருணையும் வாத்ஸல்யமும், அடுத்த மனிதனின் சுதந்திரத்துக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவமும்,

இன்னோரு உயிரைத் துளியும் காயப்படுத்தாமல் இருக்க நீங்கள் எடுத்துக்கொள்ளும் எத்தனிப்புகளும்.

உங்கள் மனைவி உங்கள் நாவலைப் படித்ததும் அதற்கு அவர் கொடுத்த எதிர்வினையும் எங்களுக்கு எல்லாம் இன்ப அதிர்ச்சி.

ஸ்ரீராம்

இந்தக் கதையைப் படித்த வளன் என்னிடம் சொன்னான்.  “அப்பா, நீங்கள் ஜீஸஸ் போன்றவர்தான்.  சந்தேகமே இல்லை.  ஒரே ஒரு வித்தியாசம்.  நீங்கள் ஜாலி ஜீஸஸ்.”

இத்தனைக்கும் ஜீஸஸை உயிர் மூச்சாய் சுவாசிப்பவன் வளன்.

இதைப் படித்த ராஜேஷ் (கருந்தேள்) எழுதியது:

”இப்படியெல்லாம் யாராவது என்னிடம் பேசினால் அல்லது செய்திருந்தால், வாழ்க்கை முழுதும் நினைத்து நினைத்து முட்டுச்சந்தில் அமர்ந்து அழும் அளவு மண்டை நிறைய Mental Traumaவை அள்ளி வழங்கிவிடுவேன். அதன்பின் யாரைப் பார்த்தாலும் பயம் வந்து மூலையில் ஒடுங்கிவிடவேண்டியதுதான்.”

”மொத்தம் 41 பக்கங்கள். உங்களின் அற்புதமான, படிக்கும்போது அத்தனை pleasure கொடுக்கக்கூடிய மிக மிக முக்கியமான கதைகளில் இது ஒன்று. (நீங்கள் உங்கள் பிரச்னையை எழுதியிருக்கும்போது படிக்கையில் அது திரும்பத்திரும்பப் படிக்கவைக்கிறது என்பதன் irony பற்றி உங்களுக்கே தெரியும்).”

***

இந்தக் கதையை புவனேஸ்வரி எப்படி வாசிப்பார் என்பதும் எனக்குத் தெரியும்.  என்னால் அவரது காலணியில் நின்று பார்க்க முடியும்.

புவனேஸ்வரி: ஆக, வளன் மாதிரி, ஸ்ரீராம் மாதிரி உங்களுக்கு ஜால்ரா அடித்தால் திட்ட மாட்டீர்கள்.  கேள்வி கேட்டால், பொதுவெளியில் போட்டு அடிப்பீர்கள்.  அப்படித்தானே?

அடியேன்:  இல்லை.  இப்படி ஒரு பதில் வரலாம் என்று யோசித்து கொக்கரக்கோவிடம் கேட்டேன்.  ”கொக்கரக்கோ, நான் எழுதிக்கொண்டிருக்கும் ஒரு நாவலுக்கு நீங்கள் நான் கேட்காமலேயே கொஞ்சம் யோசனை சொல்லலாம் என்று நினைக்கிறீர்கள்.  என்ன பண்ணுவீர்கள்?  சொல்வீர்களா?  சொன்னால் திட்டுவேன் என்று உள்ளேயே அமுக்கி விடுவீர்களா?”

கொக்கரக்கோ: உங்களிடம் பேச என்ன பயம் பெருமாள்?  ஆனால், த்வனியும் தோரணையும்தான் முக்கியம்.  முதலில், நான் உங்களுக்கு யோசனை சொல்ல நேர்ந்தால், நீங்கள் நின்று கொண்டும், நான் உட்கார்ந்து கொண்டும் இருந்தால் முதலில் எழுந்து நின்று விடுவேன்.  உட்கார்ந்த நிலையில் பப்புக்குப் போவது பற்றிப் பேசலாம்.  இலக்கியம், அதிலும் உங்களுக்கு யோசனை என்று வரும்போது எழுந்து விடுவேன்.  அதுவும் நீங்கள் நின்று கொண்டிருப்பதால்.  பிறகு சொல்வேன்.  பெருமாள், நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் நாவல் பற்றி எனக்குக் கொஞ்சம் யோசனை இருக்கிறது.  சொல்லலாமா என்று அனுமதி கேட்பேன்.  குரலில் பணிவு இருக்க வேண்டும்.  அது மிக மிக முக்கியம்.  நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்?  சொல்லுங்கள் என்றுதானே சொல்வீர்கள்?  சொல்வேன்.  இதெல்லாம் ரொம்ப சாதாரணமாக இருக்கிறது கொக்கரக்கோ, இதை நான் பயன்படுத்த மாட்டேன் என்று சொல்வீர்கள்.  பிறகு இது பற்றி எழுதுவதற்கோ, மன உளைச்சல் கொள்வதற்கோ உங்களுக்கும் இடம் இல்லை.  இது குறித்து வருத்தம் கொள்ள எனக்கும் இடம் இல்லை.  உங்களுடைய பழைய ஒரு நாவல் விஷயத்தில் இது நடந்திருக்கிறதே?  நாங்கள் பத்து பேர் சேர்ந்து அந்த நாவலிலிருந்து இது இதைத் தூக்க வேண்டும் என்று சொன்னோம்.  நீங்கள் அதைத்தான் இன்னும் விரிவாக்கி எழுதுவேன் என்று சொல்லி அதைச் செய்தும் காண்பித்தீர்கள்.  ஆக, இதிலெல்லாம் பிரச்சினையே இல்லை.  கோண்டி உங்களிடம் அப்படிச் சொல்லவில்லையே?  அவருக்கு உங்கள் இடமும் தெரியவில்லை.  அவருடைய இடமும் தெரியவில்லை.  முட்டாள்தனமாகப் பேசுகிறீர்கள் என்று அவரிடம் சொல்வதற்கான திறப்பும் அவரிடம் இல்லை.  எங்களிடம் இருக்கிறது.  அதுதான் வித்தியாசம்.  த்வனி மற்றும் தோரணை.   அந்த இரண்டும்தான் முக்கியம். 

***

அவ்வளவுதான்.  இதற்கு மேல் சொல்ல எதுவுமில்லை.

(இந்தக் குறுநாவல் 14442 வார்த்தைகள் கொண்டது. இதற்கான விலை அல்லது நன்கொடையை நீங்கள் அனுப்பி வைத்தால் நன்றி உடையவன் ஆவேன். விவரம் கீழே:

ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்: ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai