என்னுடைய குறுநாவலை வாசித்து அதற்கு எதிர்வினையாக எழுதிய எல்லா நண்பர்களுக்கும் நன்றி. என்னுடைய எண்பது புத்தகங்களுக்கு ஒரு ஆண்டுக்கு வரும் ராயல்டியை விட அதிகமாக என் கதைக்கு சன்மானம் அனுப்பியிருக்கிறீர்கள். ஒரு நண்பர் எழுதியிருந்தார். நீங்கள் இங்கே இருந்தால் இருப்பதிலேயே அதிகத் தரமான ஒயினை வாங்கிக் கொடுத்திருப்பேன். அது இயலாது என்பதால் இந்தத் தொகையை அனுப்புகிறேன் என்று ஒரு பெரும் தொகையை அனுப்பியிருந்தார்.
இன்னொரு சன்மானம். நூறு ரூபாய். ஒரு எளிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவன். அவன் அனுப்பிய நூறு ரூபாயை நான் நூறு லட்சமாக மதிக்கிறேன்.
அவன் கடிதம் கீழே:
அன்பு சாருவிற்காக
இன்று நீங்களே தங்கள் தளத்தில் எழுதியிருந்ததை எனக்கு வாட்ஸப்பில் பகிர்ந்துள்ளீர்கள், அது எனக்குப் பெருமகிழ்ச்சி அளித்தது. என் மனதுக்கு நெருக்கமான எழுத்தாளராகிய நீங்கள் அனுப்பிய செய்தி, நானும் உங்கள் மனதுக்கு நெருக்கமான வாசகன் என்பதைக் கூறுவதாக நான் பொருள் கொள்கிறேன் சாரு.
(என்னை விட உங்களை அதிகம் படித்த வாசகர்கள் இருப்பார்கள், நான் உங்களின் ஒரு நூலை மட்டுமே படித்திருக்கிறேன், உங்கள் தளத்தில் சில கட்டுரைகள், அவ்வளவு தான்). ஆனால் உங்கள் வாட்ஸப் செய்தியைக் கண்டதும் நீங்கள் இது போன்ற பேதம் பார்ப்பதில்லை என்பது புரிகிறது. உங்கள் வாசகர்கள் அனைவரும் உங்களுக்கு சமமே… எனக்குப் புரிகிறது.
செய்தியைக் கண்ட போது ஏற்பட்ட மகிழ்ச்சி உங்கள் குறுநாவலைப் படித்து முடிக்கும் போது இல்லை… ஏனெனில் அதில் நீங்கள் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்து இருந்தீர்கள். உங்களை எனக்கு சாரு நிவேதிதாவாகத்தான் தெரியும். இன்று கண்ணாயிரம் பெருமாளாகத் தெரிந்து கொண்டேன். என் நண்பர்கள் மனம் துவண்டு போயிருந்தால், வாடா பாத்துக்கலாம் என்று ஆறுதல் சொல்வேன். இந்தப் “பாத்துக்கலாம்” என்ற வார்த்தையில் இருப்பது ஆறுதல் மட்டுமல்ல, ஒரு நம்பிக்கை, ஒரு ஒளி, ஒரு நேர்மறையான சிந்தை. அதை உங்களுக்கும் சொல்கிறேன் … “பாத்துக்கலாம் சாரு ” மனதைப் போட்டு அலட்டிக் கொள்ள வேண்டாம் . ஒரு எழுத்தாளனாய் உங்களுக்கு நிறைய இலக்கியக் கடமைகள் இருக்கிறது. எனக்குத் தெரிந்து தியாகராஜா எழுதும் பணி போய்க் கொண்டிருக்கிறது. இன்னும் உங்கள் மனதில் நிறைய திட்டங்கள் இருக்கும். அதை நோக்கிச் செல்லுங்கள் சாரு. எனக்கு உங்கள் எண்ணம் புரிகிறது, நானும் மனிதன்தானே, எனக்கும் உணர்ச்சிகள் இருக்கக் கூடாதா என்று…. ஆனால் நம்மை ஒரு பொருட்டாக மதிக்காதவர்களை நாம் ஏன் ஒரு பொருட்டாக மதிக்க வேண்டும்?
விக்கியில் உங்களைப் பற்றி ஒரு விளக்கம் போட்டிருப்பார்கள். அதன் அர்த்தத்தை உங்கள் குறுநாவலைப் படித்துப் புரிந்து கொண்டேன். இதைச் சொல்வதற்கு எனக்கு உரிமை இருக்கிறதா என்று தெரியாது. நான் மேலே சொன்னது சரியா என்று கூடத் தெரியாது. இருந்தாலும் சொல்ல வேண்டுமென்று தோன்றியது. சொல்லி விட்டேன். உங்கள் குறுநாவலைப் படித்து விட்டு மனம் ஒரு மாதிரி ஆகி விட்டது. என்னால் முடிந்த நூறு ரூபாயை அனுப்பியிருக்கிறேன். எதிர்காலத்தில் வேலைக்குச் சென்ற பிறகு நம் தமிழ் எழுத்தாளர்களுக்கு நிறைய உதவ வேண்டும் என்று ஆசை. இந்த நூறு ரூபாய் உங்கள் எழுத்துக்கான விலை அல்ல. என் உணர்ச்சியை இந்தச் சிறிய தொகை மூலம் வெளிப்படுத்த முயற்சிக்கிறேன். உங்கள் மனைவி படித்த நாவலின் பெயர் என்ன?
அன்புடன்,
சபரிநாதன்.
அவந்திகா படித்த நாவலின் பெயர் அன்பு.
பல நண்பர்கள் தொலைபேசியில் அழைத்து ஆறுதல் சொன்னார்கள். தங்கள் அன்பைத் தெரியப்படுத்தினார்கள். அதில் என் தோழி ஒருவர் – பத்து ஆண்டுகளாக என் மாணவி – ஃபோன் செய்து, “இன்று எனக்கு ஒரு விருது கிடைத்தது, அதைச் சொல்வதற்காகத்தான் அழைத்தேன். உங்கள் குறுநாவல் பற்றி நான் பேச விரும்பவில்லை. என்னைப் போல் உங்களால் பயன் பெற்றவர்கள் ஆயிரம் பேர் உண்டு. நாங்கள்தான் உங்கள் மாணவர்கள். நான் உங்களோடு ஆண்டுக்கு ஒருமுறைதான் பேசுகிறேன். ஆனால் இன்று நான் அடைந்திருக்கும் இடத்துக்கு ஒரே காரணகர்த்தா நீங்கள்தான். அந்தக் கதையில் விவரித்துள்ளபடியெல்லாம் நீங்கள் அவமானப்பட வேண்டிய அவசியமே இல்லை. வேண்டாம். நான் அது பற்றிப் பேச விரும்பவில்லை. உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம். அதைச் சொல்லவே அழைத்தேன்” என்றாள்.
உங்கள் எல்லோருடைய அன்புக்கும் என் மனம் கனிந்த நன்றி.
அதோடு ஒரு இலக்கியப் பிரதியை எப்படி வாசிக்க வேண்டும் என்று ஒரு பாடம் சொல்கிறேன். யோசியுங்கள்.
வாசகர்களும் நண்பர்களும் என்னைப் பற்றிக் கவலைப்பட்டு ஆறுதல் சொல்வது மனரீதியாக அழகானது — ஆனால் இலக்கியத்தை நிஜ வாழ்க்கை அறிக்கை போல வாசிப்பது ஒரு வரையறை. அதுதான் இங்கு நடந்தது.
1.வாழ்வும் இலக்கியமும்
நான் என் கதையில் நான் அடைந்த அவமானங்கள் பற்றி எழுதியிருக்கலாம்; ஆனால் அது கலையில் ஒரு மறுபிறவியை எடுக்கிறது. நீங்கள் அதை “எனக்கு நடந்தது” என்று பாவித்து எனக்கு ஆறுதல் கூறுகிறீர்கள். அது ஒரு வாசிப்பு வழு.
2. ரொலாந் பார்த் சொன்னது: The writer is a scavenger
ரொலாந் பார்த், பிளாஞ்சோ, கால்வினோ எல்லோரும் ஒரே மாதிரி சொல்கிறார்கள்.
எழுத்தாளர் தனது தனிப்பட்ட அனுபவங்களை, உணர்ச்சிகளை, வலிகளை, அவமானங்களை, விரக்திகளை சொற்களின் வடிகட்டியில் வைத்து புதிய ஒரு பிரதியாக மாற்றுகிறார்.
அது குப்பையிலிருந்து தங்கத்தை உருவாக்குவது போல.
அந்தக் குப்பையை எவர் கொடுத்தாலும், எழுத்தாளர் அதை கலையாக மாற்றியவுன், அது இனி “என்னுடைய வாழ்க்கை” அல்ல; அது “என்னுடைய இலக்கியப் படைப்பு.”
இலக்கியத்தில் வரும் நானும் எழுத்தாளனும் ஒன்று என வாசகர்கள் ஒரு கோட்டை வரைகிறார்கள். என் கதையில் நான் விதைத்துள்ள அலுப்பு, சினம், கசப்பு, சிரிப்பு அனைத்தையும் நீங்கள் நிஜத்தில் எனக்கு நடந்ததாக வாசிக்கிறார்கள்.
ஆனால் ஒரு கலைஞனின் துன்பம் ஒரு கருவி. நல்ல வாசிப்பு என்பது கதையின் உள்மொழியையும், அதன் சின்னங்களையும், ஒலிக்குறிகளையும், படைப்பின் சுய நிர்ணயம் போன்றவற்றைக் கண்டடைய வேண்டும்.
எனவே எழுத்தாளன் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்று அவனுக்கு ஆறுதல் சொல்வது கலையையும் வாழ்க்கையையும் தலைகீழாய்த் தள்ளி விடுகிறது.
ஆகவே இப்படிப் புரிந்து கொள்ளுங்கள்.
நான் அனுபவித்த பல நுண் அழுத்தங்களைக் கலை வடிவில் மாற்றியிருக்கிறேன். அவை வாழ்க்கைச் சம்பவங்களின் ஆவணம் அல்ல. குப்பையையும் ஒரு வடிவத்துக்குள் கொண்டு வந்து ஒரு இலக்கியப் பிரதியாக்குவதே ஒரு கலைஞனின் பணி. ஆக, ரொலாந் பார்த் சொல்வது போல,
The writer uses life as material, not as message.
.