ஒரு கேள்வியும் பதிலும்…

நீங்கள்ஒரு முக்கியமான விவரத்தை உங்கள் ஆதங்கத்தை வெளிக்காட்டும்போது கூறவில்லை.They paid your royalty promptly unlike many others…

V Balasubramanian

பதில்: அவர்கள் பண விஷயத்திலும் ராயல்டி விஷயத்திலும் மிக மிக நேர்மையானவர்கள் என்பதை ஊரே அறியும். என் பிரச்சினையெல்லாம் ஆரம்ப நாளிலிருந்து என் தோளின் மீது அமர்ந்து சவாரி செய்து, மிகப் பெரிய இடத்தை அடைந்த பிறகு, ”சாரு நிவேதிதாவுக்கும் எங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை, அவர் நூல்களை வெளியிடுகிறோம், அவ்வளவுதான்” என்று அவர்கள் என்னை disown செய்வது பற்றித்தான்.

எங்கள் ஊரில் ராமசாமி என்று ஒரு பெரியவர் இருந்தார். மனைவி இல்லை. தானே தனியாளாக இருந்து தன் ஒரே மகனைப் படிக்க வைத்தார். கொத்தனார் வேலை. அவரேதான் சமைப்பார். இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளவில்லை. மகன் படித்துப் பெரிய ஆளாகி, இன்னொரு மதத்தில் சேர்ந்து பணக்கார வீட்டுப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு அப்பனை disown செய்து விட்டான். அவர் மாறிய மதத்தின் அர்த்தமே அன்பு என்பதுதான். அந்த மதம் பெற்ற அப்பனை நடுத்தெருவில் விட்டு விடு என்று சொல்லவில்லை. ராமசாமிக்கு வயதாகி விட்டது. கொத்தனார் வேலை பார்க்க வலு இல்லை. வீடு வீடாகப் பிச்சை எடுத்தார். ராப்பிச்சைக்கு மட்டும் எங்கள் வீட்டுக்கு வந்து “பார்வதி, ராமசாமி வந்துருக்கேம்மா” என்று குரல் கொடுப்பார். அம்மா ரத்தக் கண்ணீர் விட்டபடி அவரைத் திண்ணையில் அமர வைத்து சோறு போடுவார்கள்.

எனக்கு அந்த நிலைமை இல்லை. என்னை என் நண்பர்களும் வாசகர்களும் ஒரு சக்ரவர்த்தியைப் போல் வைத்திருக்கிறார்கள். ஆனால் disown செய்தவர்களைப் பற்றிக் கவலையுறுகிறேன். ஆச்சரியமடைகிறேன். அவ்வளவுதான்.