ஐரோப்பிய சினிமா: சில எதிர்வினைகள்

பின்வரும் கடிதத்தை எழுதியிருக்கும் ஈஷ்வர் ஃப்ரெஞ்ச் மொழியிலும் ஃப்ரெஞ்ச் இலக்கியத்திலும் நல்ல பாண்டித்யம் உடையவர். சில ஆண்டுகள் ஃப்ரான்ஸில் ஆசிரியராகப் பணி புரிந்தவர். இளைஞர். அவர் கடிதம்:

சாரு,

ஐரோப்பிய சினிமா குறித்த உங்களது பயிற்சிப்பட்டறை முடிந்த அன்று மாலையே எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன், ஆனால் தாமதமாகி விட்டது.

நான் ஐரோப்பாவில்  இரண்டாண்டுகள்  வாழ்ந்திருக்கிறேன் என்றாலும், உலகையே தன் கைக்குள் வைத்திருந்த, வைத்துக்கொள்ளத் துடிக்கும் இந்தச் சிறு கண்டத்தைப் பற்றி உங்கள் வகுப்பில்தான் புரிந்துகொள்ள முடிந்தது. ஐரோப்பாவில் எல்லாமே இருக்கிறது, இயங்குகிறது. ஒரு முனிசிபாலிட்டி அலுவலகத்திற்குப் போனால் வேலையை முடித்துக்கொண்டு உடனடியாகத் திரும்பலாம். ஒரு பேருந்து நிறுத்தத்திற்குப் போனால் சொன்ன நேரத்தில் பேருந்து வரும். அரசாங்கம் வேலை நேரத்தை வாரத்திற்கு நான்கு நாட்களாகக் குறைக்கிறது. நல்ல உணவு கிடைக்கிறது. மருத்துவ சேவைகளுக்கும் பஞ்சமில்லை. ஆனால், இத்தகைய சூழ்நிலையிலிருந்துதான் இன்று இணையம் முழுவதும் கொட்டிக்கிடக்கும் “பிரேக்டவுன்” வீடியோக்கள் அதிகம் வைரலாகின்றன. ரோட்டில் போன் பேசிக்கொண்டே சாதாரணமாக நடந்து போகும் ஒருவர் திடீரென போனைப் போட்டு உடைக்கிறார், நாக்கு அறுந்து விழுந்துவிடுவது போலக் கத்துகிறார், அலறுகிறார், அழுதுகொண்டே ஓடுகிறார். பொதுமக்கள் அப்படியே வெறித்துப் பார்க்கின்றனர்; முன்பெல்லாம் மும்முரமாக வீடியோவாவது எடுத்தார்கள், இப்போதெல்லாம் அதற்குக் கூடத் தெம்பில்லை போலிருக்கிறது. நானே சிலமுறை பார்த்திருக்கிறேன், பயங்கர அமானுஷ்ய அனுபவமாக இருக்கும். அதிலும், அகதிகளும், வீடற்றவர்களும், ஆப்பிரிக்க இனத்தவருமே பெரும்பான்மை ஐரோப்பிய சமூகத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஐரோப்பாவில் இருந்தாலும் எந்த வசதியும் கிடைக்கப்பெறாமல், அதன் கோர முகத்தை மட்டுமே பார்த்துப் பழகியவர்கள் அவர்கள். அதேபோல, அங்கே பெண்களுக்குப் பொதுவெளியில் எவ்வளவுக்கெவ்வள்ளவு பாதுகாப்பு இருக்கிறதோ, அவ்வளக்கவ்வளவு வீட்டிற்குள் ஆபத்து நிலவுகிறது. தந்தையராலும், கணவன்மாராலும் குடும்பத்தின் பிற ஆண்களாலும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாவது  கடுமையாக அதிகரித்துள்ளது. சமகால பிரெஞ்சு நாவல்களில், இன்செஸ்ட் நாவல்கள் என்று ஒரு வகைமையையே கொண்டுவந்துவிடலாம், அது ஒரு தனி ஜானராகவே உருவாகிவருகிறது.

இப்படியிருக்க, என்னதான் பணக்கார நாடுகள் நிறைந்த கண்டம் என்றாலும், ஐரோப்பிய சினிமா என்பது அங்கு என்ன இருக்கிறது என்பதைவிட, என்ன இல்லை என்பதைப் பற்றித்தான் கவலைப்படுகிறது என்றும், உணர்வுகளை அடக்கி அடக்கி வைத்திருக்கவேண்டியுள்ளதால் அங்கே உள்ளூர நிலவும் ஃபாஸிச மனோபாவம் பொதுவெளியிலும் வீட்டிற்குள்ளும் எப்படி உருவாகி வெடிக்கிறது என்றும் நீங்கள் விளக்கியது பெரும் திறப்பை அளித்தது. அதற்கு நீங்கள் குறிப்பிட்ட பிரெஞ்சு, ஜெர்மன் படங்கள் சிறப்பான உதாரணங்களாக அமைந்தன. அடுத்ததாக, இந்தப் பட்டறையிலிருந்து எனக்குத் தனிப்பட்ட முறையில் கிடைத்த பொக்கிஷம் யூகோஸ்லாவிய படங்கள், இயக்குனர்கள் பற்றிய அறிமுகம். இதுவரை, செர்பியா, போஸ்னியா போன்ற பெயர்களை மட்டும்தான் கேள்விப்பட்டிருக்கிறேன், இனி அந்த நாடுகளின் சினிமா, இலக்கியம், இசை என ஒரு புது உலகத்தை நெருங்கி அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதேபோல, நம் தமிழ்ச்சூழலில் பெரிதும் பேசப்படாத ஸ்வீடன், ஹங்கேரி, போலந்து நாடுகளின் திரைப்படங்கள் குறித்த அறிமுகமும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஐரோப்பிய சினிமாவின் அழகியலை அதன் திரை மொழி ஊடாக அணுகுவதால், பூகோள ரீதியாக ஐரோப்பாவைத் தாண்டி எடுக்கப்படும் படங்களும் ஐரோப்பிய சினிமாவின் அழகியலைக் கொண்டிருக்கமுடியும் என்பதற்கு ஏஞ்சலினா ஜோலி இயக்கிய படங்கள் நல்ல உதாரணம் என்று நினைக்கிறேன்.     

ஒவ்வொரு படத்திற்குமான அரசியல் மற்றும் வரலாற்றுப் பின்புலத்தை எடுத்துக்கொண்டு, அதை அதன் அழகியலோடு தொடர்புபடுத்தி  நீங்கள் பேசியது மிகவும் பிடித்திருந்தது. எல்லாவற்றுக்கும் மேல், உங்கள் படத்தேர்வின் அடிநாதமாக விளங்கிய தத்துவம். அது அதிகாரத்திற்கு எதிரான நிரந்தரப் போராட்டம். அதிகாரம் எந்த வடிவில் வந்தாலும், எவ்வளவு ஆரவாரம் செய்தாலும் அதை எதிர்க்கும் கலையின் மெல்லிய முணுமுணுப்புக்கு முன் பயந்து நடுங்கத்தான் செய்கிறது. அதையே உங்கள் எழுத்தும் காட்டுகிறது . உண்மையில், இந்தப் பட்டறையில் நீங்கள் போட்டுக்காட்டிய படங்களின் வாயிலாக உங்கள் எழுத்தின் சாராம்சத்தைத்தான் முன்வைத்திருக்கிறீர்கள்.
ஐரோப்பாவின் வசீகரம் அதன் பழமையான கட்டிடங்களிலும் செல்வத்திலும் மட்டுமில்லை, அதன் பனியிலும், குப்பைக் கூளங்களிலும், மயான அமைதியிலும்கூட இருக்கிறது. இதைப் புரிந்துகொண்ட யாருக்கும் தெரியும், அங்கே பைத்தியங்கள் மட்டுமே மனிதர்களாக இருக்க முடியும் என. தற்போது ‘நோ மெர்சி, நோ ஃபியூச்சர்’ படம்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். பைத்தியம் பிடித்துவிடுவதுபோல் இருக்கிறது, எனக்கும் அதுதான் வேண்டும்.

அன்பும் நன்றியும்,
ஈஷ்வர்.

உங்கள் கடிதம் என்னைக் கண் கலங்க அடித்து விட்டது ஈஷ்வர். அந்தப் பட்டறைக்கு வராதவர்கள் குறித்து இரக்கம் கொள்கிறேன். ஒரு தோழி வாய்ஸ் மெஸேஜ் அனுப்பியிருந்தாள். அடுத்த முறை பிரமாதமான முறையில் ப்ரமோஷன் வேலைகளைச் செய்யலாம் என்று. அப்படி ஒரு அடுத்த முறை வரும் என்று எனக்குத் தோன்றவில்லை.

இன்னொரு கடிதம். கடிதம் எழுதியிருக்கும் செந்தமிழ் அரசுத் தேர்வுக்காகப் படித்துக் கொண்டிருப்பவர். என் மாணவர்களில் முக்கியமானவர். தேர்ந்தெடுத்த திரைப்படங்களை இவருக்கும் சரவணனுக்கும்தான் அனுப்பிக்கொண்டிருந்தேன். சரவணனுக்கு அதில் நான் குறிப்பிடும் காட்சிகளை எடுத்து வைக்க. செந்தமிழுக்கு இது குறித்த செய்தியை சமூகத்துக்குத் தெரிவிப்பதற்காக.

ஹாய் சாரு,

ஐரோப்பிய சினிமா நிகழ்ச்சி குறித்து அடுத்த நாளே எழுதலாம் என்றிருந்தேன். தவிர்க்க முடியாத ஒரு வேலையில் இரண்டு நாளாக மாட்டிக்கொண்டதால் நேரம் கிடைக்கவில்லை. முதலில் இந்நிகழ்வில் கலந்து கொள்வதில் யோசனையாய் இருந்தேன். ஏனெனில், எனக்குத் திரைப்படங்களைப் பார்ப்பதில் கூட பெரிய ஆர்வமில்லை. எப்போதாவது ஒன்றிரண்டு பார்ப்பதுண்டு. அவ்வளவுதான். பின்னர் ஒரு புதிய அனுபவமாக இருக்கட்டுமே என்று கிளம்பி வந்துவிட்டேன். நிகழ்வைக் குறித்து எழுதுகையில் முதலில் கல்லூரி நிர்வாகத்தை குறிப்பிட்டே ஆகவேண்டும். மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். அரங்கில் அமர்ந்திருந்த மாணவர்களும் அமைதியாக அமர்ந்திருந்தினர். அது கொஞ்சம் பெரிய விஷயம். பங்கேற்பாளர்களை நிர்வாகத்தினர் விழுந்து விழுந்து கவனித்தனர்.

‘In the land of blood and honey’ திரைப்படத்தை நீங்கள் எனக்கு அனுப்பியிருந்தபோது, இயக்குநர் பெயர் ‘Angelina Jolie’ என்றிருப்பதைப் பார்த்து அவர் தானா என்று திரும்பத் திரும்ப உறுதிபடுத்திக் கொண்டேன், அவரா இப்படியெல்லாம் படம் எடுத்திருக்கிறார் என்று. இங்கே இருக்கும் சில சூப்பர்ஸ்டார்கள், லேடி சூப்பர்ஸ்டார்களை நினைத்தால் குமட்டிக்கொண்டு வருகிறது.

நீங்கள் குறிப்பிட்ட அனைத்துத் திரைப்படங்களையும் ‘Wihelm Reich’ ன் ‘The Mass Phycology of Fascism’ உடன் இணைத்துப் பார்க்கப் பார்க்க ஐரோப்பிய வாழ்வு குறித்த ஒரு சித்திரத்தை அளித்தது‌. சினிமா பயிற்சிப் பட்டறை என்றதும் அதன் தொழில்நுட்பம் சார்ந்து நிறைய கூறுவீர்கள் என்று நினைத்தேன். வந்திருந்தவர்களும் அவ்வாறு எண்ணியிருக்கலாம். என்னளவில் இப்பயிற்சிப் பட்டறையையை எப்படி எடுத்துக் கொள்வது என்று ஒரு மாதிரி புரிந்தது, ஒரு திரைப்படத்தை எப்படி அணுக வேண்டும் என்பதுதான் அது. ஒரு நல்ல திரைப்படத்தை வைத்து அதில் உள்ள கதாப்பாத்திரங்களின்‌ மூலம் அம்மக்களின் உளவியலை, அந்நிலத்தின் தத்துவங்களை அறிந்து கொள்வது‌. நீங்கள் ஐரோப்பிய சினிமாவை முன்வைத்துச் சொன்னீர்கள்‌. இதனை எந்த நிலத்தின் சினிமாவிற்கும் பொருத்திப் பார்க்கலாம். சினிமா ரசனையாளர்கள் நல்ல படத்தைக் கண்டுகொள்ளலாம். படைப்பாளர்கள் நல்ல படத்தை எடுக்கலாம். விமர்சகர்கள் போலித் திரைப்படங்களைக் கண்டெடுத்து தலையில் குட்டு வைக்கலாம்.

‘Contempt’ திரைப்படத்தைப் பற்றிப் பேசுகையில், ஒரு காட்சியில் ‘space’ ஐ எவ்வாறெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டீர்கள். ‘ஆன்மா இல்லாத வீடு’. சென்னையில் இருக்கும் பல அடுக்குமாடி கட்டிடங்களைக் காண்கையில் எனக்கு இப்படித் தோன்றும்‌. “இதையெல்லாம் ஒரு குடும்பம் இங்க வாழ போதுனு நெனச்சு கட்றானுங்களா இல்ல ஏதோ ஜெயில் கைதிங்களையோ பஞ்சம் பொழைக்க வந்தவங்களையும் அடச்சு வெக்க ஏதோ கொட்டடி கட்றானுங்களா” என்று. விலையைக் கேட்டால், நாலு கோடி அஞ்சு கோடி என்கிறார்கள். கொஞ்சம் கூட அழகியலோடு கட்டியிருக்க மாட்டார்கள். அங்கு வாழ்க்கை எப்படியிருக்கும்? நீங்கள் சொல்லும் போது அவைதான் என் நினைவிற்கு வந்தன.

நிகழ்ச்சிக்கு முன்னர் நான் பார்த்த இன்னொரு திரைப்படம் “The Tin Drum”. அது குறித்து மாலை அமர்வில் பேசினீர்களா என்று தெரியவில்லை. பேசியிருந்தீர்களென்றால் அதனைத் தவறிவிட்டது என் துரதிர்ஷ்டம். அந்தப் படமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது‌.

‘No Mercy No future’ திரைப்படத்தைப் பற்றி பேசுகையில், நாயகிக்கும் அந்தக் கறுப்பினத்தவருக்குமான கலவிக் காட்சியைக் குறிப்பிட்டீர்கள். நிகழ்ச்சிக்கு முன்னர் நீங்கள் அனுப்பிய திரைப்படங்களின் தகவல்களைச் சேகரிக்கையில், அது எந்தத் தளத்தில் இருக்கிறதென்று தேட வேண்டும். அப்பொழுது சில காட்சிகளைப் பார்ப்பேன். அந்தப் படத்தில் என் கண்ணில் முதலில் பட்டதே அந்தக் கலவிக் காட்சிதான். படுக்கையெல்லாம் ரத்தம் வழிந்தோடிக்கொண்டு பார்க்கவே கொடூரமாக இருந்தது. வன்புணர்வு காட்சி என்று நினைத்தேன்‌. ஆனால் அக்காட்சியைக் கவனித்தால் அப்பெண் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. ஏன் அப்படி இருக்கிறாள் என்று தெரிந்துகொள்ளவே அப்படத்தை முழுமையாகப் பார்த்தேன். அன்றிரவு தூங்கவில்லை. கண்டிப்பாக அப்படியொரு படம் தமிழில் வருமா என்று தெரியவில்லை.

ஐரோப்பிய சினிமா நிகழ்ச்சியில் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது – இந்த நிகழ்வில் பங்கெடுக்க முடிந்ததும், உங்களைச் சந்தித்துப் பேசியதும். இன்னும் நிறைய சொல்லவேண்டும் என்று நினைத்திருந்தேன். இதுவே நீண்டதாகிவிட்டது.

செந்தமிழ்